இதன் முதல் பகுதியில் நீரியல் வளர்ப்பு எனப்படும் ஹைட்ரோபானிக்ஸ் முறையில் தாவரங்களை வளர்ப்பதன் மேன்மைகளைச் சொல்லி அதில் என் ஆரம்ப அனுபவங்களை பகிர்ந்து கொண்டேன்.
அதைப்பற்றி தெரிந்து கொள்ள.....
இதை எழுதி ஐந்து ஆண்டுகள் ஓடிவிட்டன. நான் என் பரிசோதனைகளை சிறிய அளவில் நடத்திக் கொண்டிருந்தாலும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு எதையும் சாதிக்கவில்லை. என் வீட்டு மாடியில் மழைநீர் சேகரிப்பு, Green House 130 சதுர அடி என சில முஸ்தீபுகளை செய்து கொண்டு தீவிரமான முயற்சியில் இறங்குவதற்கு இவ்வளவு காலம் பிடித்தது.
க்ரீன் ஹவுஸ் ஏன் தேவைபடுகிறது என்றால் திறந்த வெளியில் அதிக காற்று மழை அடிக்கடி பாதிப்பு ஏற்படுத்துவதால் நமக்கு சரியான முடிவுக்கு வரமுடியாமலே பரிசோதனை கெட்டுப் போய் விடுகிறது.குறைந்த இடத்தில் அதிகப்பயிர் என்னும் படியான தொழில்நுட்பத்தை க்ரீன்ஹவுஸ்-னுள் புகுத்திப் பார்க்க- Tower Cultivation எனப்படும்- நெட்டையான குழாய்களில் வளர்க்கும் முறையை இணையத்தின் மூலம் வாங்கி என்னுடைய புதிய சோதனைகளை இந்த வருடம் மே மாதக் கடைசியில் ஆரம்பித்தேன்.
இது நம் கோவில்களில் உள்ள கொடிமரத்தை நினைவுபடுத்துவதால் கொடிமரக்குழாய் வளர்ப்பு என்றே பெயரிடுவோம்.
கொடிமரக் குழாயின் அடிப்பாகத்தில் உள்ள சிறிய நீர் இறைப்பான் ( submersible pump) நீரை மேலிருந்து -உட்புறத்தில்-வடிய செய்வதால் நீரின் சுழற்சியில் செடிகளுக்கு தேவையான நீர் (அதன் மூலம் ஊட்டச்சத்து) மற்றும் பிராணவாயு தொடர்ந்து கிடைக்கிறது. ஐந்தரை அடி உயரமுள்ள குழாய்களில் 32 செடிகளுக்கு இடம் அளிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டிருக்கிறது. இதன் செயல்முறையை பல டியூப் சானல்களில் காணலாம்.
இதிலுள்ள பம்பு தொடர்ந்து வேலை செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை. செடிகளின் வேர்களில் எப்போதும் ஈரம் இருந்து கொண்டே இருக்க வேண்டும். அதனால் நான் 'இரண்டு நிமிடம் இறைப்பு' 'பத்து நிமிடம் ஓய்வு' என்ற சுழற்சி முறையை ஒரு Timer மூலம் நடைப்படுத்தினேன்.
மிக மிக திருப்திகரமாக வேலை செய்து வருகிறது. 18 வாட்ஸ் பம்பு ஒரு நாள் முழுதும் இந்த சுழற்சியில் ஓடினால் ஆகும் மின் அளவு 72 Wh. அதாவது இரண்டு வாரங்களுக்கு ஒரு யூனிட் மின்சாரம் செலவாகும்.
மேலும் க்ரீன் ஹவுஸ் உள்ளேயே இருப்பதால் பூச்சித் தாக்குதல் அறவே இருக்கவில்லை. ஆவியாகும் தண்ணீரை இரண்டு மூன்று நாட்களுக்கு ஒருமுறை அளவு பார்த்து நிரப்பவேண்டும். இது ஒரு நாளைக்கு 2 லிட்டருக்கும் குறைவாகவே இருந்தது. மாதம் ஒன்றிற்கு 70 முதல் 80 லிட்டர் அளவிலேயே தேவைப்பட்டது. இதற்கு நான் சேமித்து வைத்திருக்கும் மழைநீரையே முழுவதுமாக பயன்படுத்தினேன்.
தாவரங்களுக்குத் தேவையான ஊட்டச்சத்து கரைசல் ஒரு லிட்டருக்கு 300 லிருந்து 400 மிகி மட்டுமே. 15 லிட்டர் கரைசலுக்கு தேவைப்படும் NPK கூட்டு உரத்தின் அளவு 6.00 முதல் 10 கிராம் மட்டுமே. இதில் வீணாய் போகிறது என்ற பேச்சுக்கே இடமில்லை. ஒரு மாதத்திற்கு 100 லிட்டர் என்று வைத்துக் கொண்டாலும் 40 கிராம் உரத்திற்கான விலை ரூபாய் ஐந்திற்கும் குறைவே. இப்படியாக எப்படிப் பார்த்தாலும் சிக்கனமான வளர்ப்பின் பயனை உணர முடிந்தது.
ஒரே சமயத்தில் எட்டு விதமான செடிகளை கொடிமரக் குழாயில் வளர்க்க ஆரம்பித்தேன். அதில் கீரை வகைகள் இரண்டு மூன்று வாரங்களுக்குள்ளேயே வளர்ந்து அறுவடைக்கு வந்துவிட்டன. அதற்குள் தக்காளி சாமந்தி போன்றவை கிளை பிரிந்து இலைகள் பெரியனவாகி வேறு செடிகளை வளரவிடாமல் தடுத்து விட்டன. கீழே உள்ள தொகுப்பில் அவற்றின் வளர்ச்சியைக் காணலாம்.
2 comments:
ஹைட்ரோபானிக்ஸ் முறையில் தாவரங்களை வளர்ப்பதன் மேன்மைகளைச் புரிந்து கொண்டேன்
உங்கள் தோட்டம் அருமை.
நன்றி கோமதி மேடம்.
தங்களுக்கு ஜிமெயிலில் ஒரு தனிமடல் அனுப்பி இருந்தேன். இன்னும் பார்க்கவில்லையா?
Post a Comment