இன்னும் பத்து நாட்களில் புது வருடம் பிறக்கப் போகிறது.
இந்த 2022 -ஐ எதுவும் பதிவே போடாமல் கழித்தாயிற்று.
கற்கை நன்றே என்று வலைப்பூவிற்கு பெயர் வைத்து, புதிதாகக் கற்றதை எதையாவது பகிர்ந்து கொள்ள வேண்டாமா? இல்லாவிட்டால் எதுவும் கற்றுக் கொள்ளவில்லை என்று ஆகிவிடுமே என்ற கவலை தொத்திக் கொண்டது.
என்னுடைய -ஹைட்ரோபானிக்ஸ் போன்ற- கற்றுக் கொள்ளும் முயற்சிகள் பலவும் இன்னமும் அரைகுறையாய் தொடர்வதால் அவற்றைப் பற்றி எதையும் எழுத முடியாத நிலை.
இன்று 'சொல்லாடல்' புதிரை விடுவிக்க முயலும் போது தான் ஏன் இதைப்பற்றிய பதிவு போடலாமே என்று தோன்றியது.
'சொல்லாடல்' என்னும் தமிழ் புதிரை கடந்த சில மாதங்களாக நான் என் சகோதர சகோதரியுடன் தொடர்ந்து விடுவித்து வருகிறேன். இது ஆங்கில மொழிக்கான WORDLE என்ற தினம் ஒரு 'சொல்லை' கண்டு பிடிக்கும் விளையாட்டின் தமிழ் வடிவம். இதை வடிவமைத்திருக்கும் கணினி நிபுணர் திரு முகிலன் முருகன், மலேசியத் தமிழர்.
மிகவும் பாராட்டிற்குரிய தமிழ் சேவை.
சொல்லாடல் பற்றிய மேலும் விவரங்களை செல்லியல் வலைப்பூவில் படிக்கலாம்
இதில் ஆங்கிலத்தை விட ஒரு படி மேலே சென்று 'பொது' மற்றும் 'இலக்கியம்' என்று இரு பிரிவுகளை ஏற்படுத்தி சொற்களை தேடி அறிந்து கொள்வதை சுவாரஸ்யமாக்கி இருக்கிறார்.
தற்போது விகடன் போன்ற பல பத்திரிக்கைகளும் சிற்சில மாற்றங்களுடன் இந்த விளையாட்டை ஆரம்பித்துள்ளன.
ஒரு நாளைக்கு ஒரு புதிர் மட்டுமே. புதிரை எட்டு முயற்சிகளுக்குள் விடுவிக்க வேண்டும். விடுவித்த பின் அதற்கான பொருளையும் புள்ளிவிவரங்களையும் நமக்கு திரையில் தெரிவிக்கிறது.
ஒவ்வொரு முயற்சியின் புள்ளிவிவரம் அவரவர் கணினி அல்லது அலைபேசியில் சேமிக்கப்படுவதால் நாம் ஒரே உபகரணத்தை தொடர்ந்து பயன்படுத்த வேண்டும். கீழே என்னுடைய முயற்சிகளின் புள்ளி விவரத்தைப் பார்க்கலாம்.
இந்த விவரத்தின்படி என்னுடைய 158 முயற்சிகளில் 99 விழுக்காடுகள் தீர்வு கண்டிருக்கிறேன். அவற்றில் 43 மற்றும் 46 முறைகள் மூன்றாவது நான்காவது முயற்சியிலேயே தீர்வு செய்ய முடிந்திருக்கிறது.
No comments:
Post a Comment