ஊரடங்கு உத்தரவு இருபத்தியொரு நாட்களுக்கு வந்தாச்சு. கண்ணிற்குப் புலப்படாத கொரானா
வைரஸ் வல்லரசுகளை மண்டியிட வைத்துள்ளது.
யாவரிடமும் எட்டி நின்று பழகும்படி அரசாங்கம் வேண்டுகோள் விடுக்கிறது. எப்படி நடந்து கொள்ள வேண்டும் அல்லது கூடாது என்பது
பற்றி நூற்றுக்கணக்கான தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்படுகின்றன.
பல நாட்டு அதிபர்களும் ‘இந்திய’ முறை வணக்கத்தை வணக்கத்துடன் ஏற்றுக் கொள்வதே சிறந்தது
என்று பரிந்துரைக்கிறார்கள்.
இதற்கு இன்றைய நவீனப் பெயர் பொது விலகல்
அல்லது சமூக விலகல் ( Social
distancing). “எட்டி-நில்” என்றும் வைத்துக் கொள்ளலாம்.
ஆனால் எப்படிப் பார்த்தாலும் இந்த சொற்றொடர்கள்
ஆங்கிலத்தில் உள்ள அந்த உணர்வை சரியாகப் படம் பிடிக்கவில்லை என்றே தோன்றுகிறது.
சமூக விலகல் : சமூகத்திலிருந்து விலகி நிற்க என்பதாகப்
பொருள் தொனிக்கிறது
எட்டி-நில் என்பதில் நீ வேண்டாதவன்
என்ற பொருள் தொக்கி நிற்கிறது
அப்படியானால் சரியான உணர்வை பிரதிபலிக்க
வேண்டுமானால் சாலையில் வண்டியோட்டும் போது பயன்படுத்தப்படும் Defensive driving என்கிற
சொற்றொடரின் கோணத்திலிருந்து பார்க்கலாம்.
தன்னைப் பாதுகாத்துக் கொள்வது முக்கிய
நோக்கம் ஆதலால் அதையொட்டி ஒரு பெயரை யோசிக்கலாம்.
சில வருடங்களுக்கு முன் - சோப்பு விளம்பரமோ
அல்லது பற்பசை விளம்பரமோ நினைவில்லை- விளம்பரத்தில் அவர்கள் அடிக்கடி காட்டிய படம் ஒரு “பாதுகாப்பு வளையம்”.
கொரானோ போன்ற தொத்து வைரஸ்களிலிருந்து
நம்மை காப்பாற்றிக் கொள்ள வேண்டுமானால் ஒரு தற்காப்பு வளையத்தை நம்மைச் சுற்றி நாமே
வகுத்துக் கொள்ள வேண்டும். அதை ஆறடி தூரம்
என்று நிபுணர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.
அதைவிடக் குறைவானால் அது தொத்து என்னும் இடர் தரும் தூரமாகும். எனவே "இடர் அடி காக்க" என்பதாக எச்சரிக்கைக் கொள்ளலாம். சுருக்கமாக இடரடி காப்போம்.
இதை சுய வேலி என்றோ அல்லது
தனி அரண் என்றோ அழைக்கலாம். அப்படி குறிப்பிடும்
போது வேறு எந்த வகையிலும் தவறாக புரிந்து கொள்ள முடியாது.
Maintain social distance = இடரடி விலக்கு ; சுய வேலிக்குள் இருங்கள்.
இப்போது கடைகளில் ஒருவரோடு ஒருவர் தொட்டுக்
கொள்ளாமல் இருக்கும் பொருட்டு முன்னெச்சரிக்கை
நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ஆனாலும்
நம் எச்சரிக்கையில் நாம் ஒரு சுயவேலி அமைத்துக் கொண்டால் அதற்குண்டான இடைவெளி விட்டு நடமாடினால் சிறந்த தற்காப்பு
ஓட்டுனராகலாம்.
எவ்வகை இடர் வரினும் சம்பந்தர் பெருமான் அருளிய திரு நீற்றுப்பதிகம் அதைப் போக்கக் கூடியது. அது எல்லா வகை நோய்களினின்றும் காப்பாற்ற வல்லது என்பது அடியார்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.
கூன்பாண்டியனின் தீராத வெப்பு நோய் சமணர்களால் தீர்க்க முடியாதிருந்தது. அப்போது இப்பதிகத்தை ஓதி சிவபெருமானை துதி செய்து அவனுக்கு திருநீறு வழங்கினார். மன்னனது நோயும் நீங்கி சம்பந்தப் பெருமானின் பாதங்களைத் தொழுதார்.
கூன்பாண்டியனின் தீராத வெப்பு நோய் சமணர்களால் தீர்க்க முடியாதிருந்தது. அப்போது இப்பதிகத்தை ஓதி சிவபெருமானை துதி செய்து அவனுக்கு திருநீறு வழங்கினார். மன்னனது நோயும் நீங்கி சம்பந்தப் பெருமானின் பாதங்களைத் தொழுதார்.
கொரோனாவின் இடர் களைய, நம்பிக்கையுள்ளவர்கள், இப்பதிகத்தை சொல்லி திருநீற்றையணிந்தால் தம்மைச் சுற்றி ஒரு பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்திக் கொண்டவராவார்கள்.
முதற்பாடல் மட்டும்
மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தரமாவது நீறு துதிக்கப்படுவது நீறு
தந்திரமாவது நீறு சமயத்திலுள்ளது நீறு
செந்துவர் வாய் உமைபங்கன் திரு ஆலவாயான் திருநீறே
உலகம் ஒரு கடினமான கால கட்டத்தைக் கடந்து கொண்டிருக்கிறது. விரைவிலேயே அந்த இறைவன் அருளால் யாவரும் நல்ல வண்ணம் மீள, வாழப் பிரார்த்திப்போம்.
திருச் சிற்றம்பலம்.
1 comment:
இடர்களைதல் பதிகங்களை பாடி வருகிறோம் வீட்டில்.
உலக நன்மைக்கு வேண்டிக் கொள்கிறோம்.
தியானத்திலும் தியான முடிவில் வேண்டிக் கொள்கிறோம்.
இறைவன் அருளால் யாவரும் நல்லவண்ணம் மீள,வாழப் பிராத்திப்போம்.
வாழ்க வையகம், வாழ்க வளமுடன்.
படம் நன்றாக இருக்கிறது இப்படி எல்லா இடங்களிலும் கடைபிடித்தல் நல்லது.
Post a Comment