Tuesday, April 14, 2020

சீனர்தம் சீதனம் -தீருமோ துயரம்?

அனைத்து வாசகர்களுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்து

காலையிலிருந்து ஒரு நச நசப்பு. "சீனர்தம் சீதனம்" என்ற வார்த்தை மீண்டும் மீண்டும் மனதை அரித்துக் கொண்டே இருந்தது. அதன் காரணமாகவோ என்னவோ புத்தாண்டு வாழ்த்து சொல்லலாம் என்று முயலுகையில் இந்த சீனத்து சீதனத்திலிருந்து விடுதலை கிடைக்க பிரார்த்திப்பதே இன்றைய கட்டத்தில் பொருத்தமாகும் என்று தோன்றியது.

அதைத் தொடர்ந்து எழுந்ததுதான் இந்தக் கவிதை.

பின்னர் இதை வாட்ஸ் அப், டிவிட்டர் யாவற்றிலும் பகிர்ந்து கொண்டாயிற்று. என்னுடைய வலைப்பூ வாசகர்களுக்காக  இங்கும் வலையேற்றுகிறேன்.
சார்வரி ஆண்டில் அனைத்து குழப்பங்களும் மறைந்து உலகம் மீண்டும் சகஜ நிலைக்கு வருவதாக.

சார்வரியில் தீருமோ துயரம்

கலக்கத்தில் பிறக்குதே சார்வரி
கலக்கத்தை போக்கிடு ஈஸ்வரி

சீனர்தம் சீதனம் என சீண்டும் உலகம்-தம்
சீமைக்குள் வரவிடவும் காட்டுமே தயக்கம்

‘சீமானே எட்டி நில்லு’ ஆச்சுதே மந்திரம்
சீக்காளி ஆகாமல் தப்பிடவே தந்திரம்

மூடிய முகங்கள், மூடிய கோவில்கள்
மூடாத ஒரே இனம் காட்சி ஊடகங்கள்

ஊரடங்கி உயிரடங்கி கிடக்கையிலே
ஊடகங்களில் செவி கிழியக்  கூச்சலே

கொரோனா- கொரோனா- கொரோனா !!

அகந்தையிலே அழிவை தேடும் மனிதருக்கு
புகட்டுவேன் பாடம் என வந்தாயோ ? 

மமதையிலே மனம் போன போக்கில் சென்றவனை
மண்ணுக்குள் உன் இடம் தூரமில்லை என்றாயோ ?

மனித நேயம் மலரவும் இது தருணம் 
மக்களின் பசி யாம் அறிந்திட நீ ஒரு காரணம்

உழவனுக்கு சந்தை இல்லை
உழைப்பவனுக்கு வேலை இல்லை
தினக்கூலி இல்லாமல்
தின்பதற்கும் ஏதுமில்லை

கையில் காசிருந்தும் கடைகளில்லை- பாவம்
வாங்கித் தின்ன உணவகம் திறப்பதில்லை

ஏழையின் பாடு பெரும் பாடு 
போக்கிடு நீயும்  -சார்வரியே ! 

போதும் போதும் விகாரி தந்த பாடமே
போதாது எம் சேமிப்பு, வீட்டில் முடங்கிடவே

தீர்வொன்றை தந்திடு, சுலபமாய் குணமாக்கிட
மருந்தொன்றை அளித்திடு, மனக்கிலேசம் போக்கிட 
மாரியை பொழிந்திடு பாரெங்கும் செழித்திட 
வாழிய வையகம் வாழிய வாழியவே

2 comments:

கோமதி அரசு said...

//தீர்வொன்றை தந்திடு, சுலபமாய் குணமாக்கிட
மருந்தொன்றை அளித்திடு, மனக்கிலேசம் போக்கிடு
பாரெங்கும் செழித்திட மாரியை பொழிந்திடு
வாழிய வையகம் வாழிய வாழியவே//

கவிதை மிக அருமை.


ஈஸ்வரி உன் கருணை வேண்டி நிற்கிறோம், கருணை காட்டு அம்மா.

மக்கள் பல ஊர்களிலிருந்து வர முடியாமல் கஷ்டப்படுகிறார்கள். விளைந்த பொருட்களை விற்பனை செய்ய வழியில்லை. வசந்த காலத்தில் இயற்கை அள்ளி தந்தவை அனுபவிக்க முடியாமல் அனைத்தும் வீணாகி போகிறது.

புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

KABEER ANBAN said...

நன்றி கோமதி மேடம்.
தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்து. சோதனையான காலமிதுவும் கடந்து போகும். கவனமாக இருக்கவும். வணக்கம்