காந்திஜி இரயிலில் மட்டுமே பயணம் செய்தார். அதுவும் பெரும்பாலும் மூன்றாம் வகுப்புப் பயணமாகவே இருக்கும். மக்களுடன் தன்னை அவர் இணைத்துக் கொண்ட விதம் அப்படி.
அவர் வருவதைத் தெரிந்து கொண்டு எல்லா புகை வண்டி நிலையங்களிலும் அவருடைய தரிசனத்திற்காக கட்டுப்பாடு செய்யவே கடினமானதான மக்கள் கூட்டம் கூடி விடும். அப்படிப்பட்ட ஒரு சமயத்தில் ஒரு சிறிய புகைவண்டி நிலைய அதிகாரிக்கு காந்திஜி தன்னைஅழைப்பதாகக் கேட்டதுமே தலைகால் புரியாத சந்தோஷம்.
அவரைக் கண்டதுமே காந்திஜி தன் உதவியாளர் வி.கல்யாணத்தைக் காட்டி “ இவருக்கு ஒரு பயணச்சீட்டுக்கான பணத்தைப் பெற்றுக் கொண்டு அதை வழங்கவும். என் பயணத்தை ஏற்பாடு செய்தவர்கள் அவர் உடன் வருவதை அறியார்கள்” என்று கேட்டுக் கொண்டார். அந்த அதிகாரியோ “உலகமே கொண்டாடும் உங்களிடம் பயணச்சீட்டுக் கேட்க முடியாது “என்று மறுத்தார். அதற்கு காந்திஜி “ நீங்கள் உங்கள் கடமையிலிருந்து தவறுகிறீர்கள். நான் உங்கள் மேலதிகாரிகளிடம் புகார் கொடுக்க நேரிடும்” என்று பயமுறுத்தியதும் திரு கலியாணத்திற்கான பயணச்சீட்டு வழங்கப்பட்டது.
இன்று 96 வயதாகும் திரு V கல்யாணம் காந்திஜியின் கடைசி நான்கு வருடங்கள் அவருடைய தனி உதவியாளராக இருந்தவர். 1944 -ல் ஆங்கில அரசாங்கத்தில் ரூ.250 மாத சம்பள வேலையை உதறிவிட்டு காந்திஜியிடம் உதவியாளராக சேர்ந்தார். “என்னால் அறுபது ரூபாய் மட்டுமே கொடுக்க முடியும்” என்று காந்திஜி சொன்னதற்கு “ ஆசிரமத்தில் எனக்கு உணவும் உடையும் மட்டும் போதும். நான் சேவையாகவே இதை செய்கிறேன்” என்று வார்தா வில் உள்ள சேவாக்கிராமத்தில் சேர்ந்து கொண்டார்.
“ அவருக்கு வரும் கடிதங்களை பிரித்து அடுக்கி வைப்பது, பின்னர் அவர்
சொல்லும் பதில்களை குறிப்பெடுத்து தட்டச்சு செய்வதே எனக்கிடப்பட்ட கடமையாக இருந்தது. நான் எத்தனையோ முறை தவறுகள் செய்த போதிலும் அவர் ஒரு போதும் என் மீது கோபம் கொண்டது இல்லை. பொறுமையாகத் திருத்துவார். பிறர் மனம் நோகப் பேசுவதையே அஹிம்சைக்கு எதிரானது என்பதை உறுதியாக எண்ணிய மகான் அவர். நாட்கள் கூடக் கூட அவர் மேலான மதிப்பு கூடிக் கொண்டே போனது” என்கிறார் சென்னையில் வசிக்கும் திரு கல்யாணம்.
இன்றும் தனது 96 ஆவது வயதில் சுறுசுறுப்பாக தனது தேவைகளை தானே கவனித்துக் கொண்டு துணி துவைப்பது, சமையல் செய்வது, காய்கறிகளை விளைவிப்பது மட்டுமன்றி சுற்றுச் சூழலை தூய்மையாக வைத்துக் கொள்வதில் அவர் காட்டும் அக்கறை அவருடைய ஆசிரமப் பணியின் தொடர்ச்சிதான்.
’ஒருவன் தனது தேவைக்கு மீறி சேமிப்பது தேவையற்றது அதை பங்கிட்டு உண்ண வேண்டும்’ என்ற கொள்கையை உறுதியாகக் கடைபிடிக்கும் அவர் தனது மாதாந்திர ஓய்வு தொகையான ரூ.பத்தாயிரத்தில் ஒன்பதாயிரத்தை அனாதை இல்லங்களுக்கும் பிற சேவா காரியங்களுக்கும் நன்கொடையாகக் கொடுத்து விடுகிறார்.
எல்லோரும் திரு கல்யாணத்தை போல் வாழ்ந்து விட்டால் ஒரு பொற்காலமே மலர்ந்து விடும்.
இது ரேடியோ சாயி-ல் இன்று வெளியான ஒரு கட்டுரையின் சிறு பகுதியே. முழுக் கட்டுரையையும் படிக்க “ Story of Gandhiji;s Secretary -Mr V Kalyanam...."
[Pics : Thanks to Radiosai]
-------------------------------------------------------------------
இன்று காந்தி ஜெயந்தி . இந்திய வரலாற்றை மாற்றியமைத்த அந்த மகானுக்கு அர்ப்பணம்
3 comments:
//எல்லோரும் திரு கல்யாணத்தை போல் வாழ்ந்து விட்டால் ஒரு பொற்காலமே மலர்ந்து விடும்.//
நல்ல மனிதரைப்பற்றி தகுந்த சமயத்தில் சொன்னது அருமை.
தன் தேவைக்கு மீறி சேமிக்கும் மக்கள் நிறைந்த நாட்டில் தன் ஓய்வு ஊதியத்தில் தனக்கு போக பெருமபகுதியை அனாதை இல்லங்களுக்கு பிற சேவா காரியங்களுக்கும் கொடுப்பது அறிந்து அவரை வணங்க சொல்கிறது.
வணக்கங்கள் ஐயா.
உண்மையான காந்தீயவாதி கல்யாணம் அவர்கள்.
அவர்களைபபற்றி தெரிந்து கொள்ள உதவிய உங்களுக்கு மிகவும் நன்றி.
நன்றி கோமதி மேடம். நான் நான்கைந்து முறை காந்திஜியின் பிறந்த இல்லத்திற்கு போர்பந்தரில் விஜயம் செய்துள்ளேன். அப்போது எடுத்த புகைப்படம் அல்லது சலனப்படம் ஏதேனும் ஒன்றை காந்தி அஞ்சலியாக வலையேற்றம் செய்ய எண்ணித் தேடினேன். மனதிற்கு ஏற்ற வகையில் கட்டுரை அமையாமல் போகவே முயற்சியை கைவிட எண்ணிய பொழுது திரு கல்யாணத்தைப் பற்றிய அற்புதமான ஆங்கிலக் கட்டுரை கண்ணில் பட்டது. பலருக்கும் தெரியட்டும் என்று இறைவனாகவே அதை கண்ணிற்பட வைத்தான் போலும்!!
யாவும் அவன் செயல். _/\_
Post a Comment