அறிந்தவை- அறியாதவை
படலம்
”கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக” என்பது வள்ளுவர் வாக்கு. அதையே ஆங்கிலத்தில் சொல்வதானால் “Practice before you Preach” என்று சொல்லலாம்.
சூரிய சக்தியில்
இருசக்கிர வண்டி மின்னூட்டம் பற்றி வாய்கிழிய பேசி என்னப் பிரயோசனம்? அடுத்தவர்களுக்கு
உபதேசம் போதும், உன்னளவில் முடியக் கூடியதை நீ செய்திருக்கிறாயா என்று உள்மனம் குத்த
என் வீட்டு மின்சக்தித் தேவைக்கு சூரிய தகடுகளை நிறுவிட முடிவு செய்தேன். ”An
ounce of performance is better than promise of an acre”
அதாவது அரசாங்கத்தை
நம்பாமல் என் வீட்டு மாடியிலேயே எங்களுக்கு வேண்டிய மின்சாரத்தை உற்பத்தி செய்து கொள்வது.
பிரச்சனையின் முதல்
கட்டம், வீட்டாரை ஒப்புக் கொள்ள வைப்பது.
அதாவது அதிக சக்தி தேவைப்படும் அறைக் குளிரூட்டல்,
சுடுநீர் காய்க்கும் Geyser தவிர மற்றவை எல்லாம் இயங்கத் தேவைப்படும் சக்தி 2.0 KW
என முடிவாயிற்று. இதில் குளிர்பதனப் பெட்டி,
சலவை எந்திரம், நீர் இறைக்கும் பம்பு, அன்னம் வடிக்கும் மின்சட்டி, தொலைக்காட்சிப்
பெட்டி, அரவை எந்திரங்கள் என்று எல்லாவற்றையும் இயக்கக் கூடும் என்பதை இரண்டு மாதங்கள் மின்சார அளவை காலையிலும்
மாலையிலும் கணக்கெடுத்து பட்டியல் போட்டு காட்டிய பின் வீட்டில் “ எங்களுக்கு என்னவோ
இது வேண்டாத செலவாகத்தான் படுது. சும்மா பதினஞ்சாயிரத்துல
ஒரு UPS போட்டு மாடியிலே ஒரு ரூம் கட்டினா உபயோகமாவது இருக்கும்” என்று அரை மனதான ஒப்புதல்
கிடைத்தது. அவ்வப்போது நடந்து கொண்டிருந்த மின் துண்டிப்புக்கு அரசாங்கத்துக்கு நன்றி.
இது நடந்து கொண்டிருக்கும்
பொழுதே பல தயாரிப்பாளர்களோடு தொடர்பு கொண்டு எந்த கட்டத்திலும் கைவிட்டு விடாத தொழில்நுட்பம்
தரும் தயாரிப்பாளரைக் கண்டறிந்து 2.0 KW சூரியத் தகடுகளை நிறுவ ஆகும் செலவு சுமார்
இரண்டரை லட்சம் ரூபாய்கள் என்றறிந்தேன். ஒருவேளை வீட்டார் சொல்வதிலும் அர்த்தம் உள்ளதோ
என்று தோன்றியது. ஆனாலும் முன் வைத்த காலை பின் வைக்காத வீரத்துடன் (சிலர் இதை வீண்
பிடிவாதம் அல்லது வீம்பு என்றும் சொல்வதுண்டு) முடிவை செயல்படுத்தத் துவங்கினேன்.
“சார் வீட்டுக்கு
போடற UPS தான். பிரிட்ஜ் வாஷிங் மெஷின் எல்லாம்
வேணும்னா பாட்டரி கொஞ்சம் பெரிய சைஸ் போட்டு சோலார் பேனலோட கனெக்ட் பண்ணிக்க வேண்டியதுதான். வெறும்
UPS வைச்சிக்கிரவங்க 100 Ah பாட்டரி, 800 VA இன்வெர்டர் போட்டுக்குவாங்க. நீங்க நாலு 150 Ah பாட்டரி, 2000 VA சார்ஜர்-கம்-இன்வெர்ட்டர்
போட்டுகுங்க. நாங்க இதை பவர் கண்டிஷன் யூனிட் அப்படீன்னு சொல்வோம். பாட்டரி ஓவர் சார்ஜ்
ஆகாம இருக்க இன்-பில்ட் ப்ரொடெக்ஷன் இருக்கு. பாட்டரி டௌன் ஆயிடிச்சுன்னு வச்சுக்குங்க
– ஆகாது, அப்படி ஆச்சுன்னா-தானே EB சப்ளைக்கு மாத்திக்கும். சூரிய வெளிச்சம் இருக்கும் போது சோலாருக்குதான் பிரயாரிடி.
இதனால் எலெக்டிரிசிடி பில் குறையும். நீங்க மாசம் மினிமம் கட்டினா போதும். உங்களுக்கு
24 அவர்ஸ் கன்டினியூவஸ் பவர் சப்ளை இருக்கும்.
இதுல ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷனோட வைஃபை கனெக்ஷன் மூலமா நீங்க எங்கிருந்தாலும் பெர்ஃபார்மன்ஸ்
மானிடர் பண்ணிக்கலாம். உங்க பிரயாரிடி மாத்திகலாம். சோலார் பேனல் 20 வருஷம் கியாரண்டி.
நாலு இல்ல அஞ்சு வருஷத்துல பாட்டரி மட்டும் மாத்த வேண்டி வரும்” என்று விவரித்தார்
அந்த தொழில்நுட்பப் பொறியாளர். கேட்பதற்கு எல்லாம் மிக மிக சுவையாக இருந்தது.
‘அம்மா’ ன்னு பசுமாடு
கத்தறத கேட்டதும் SV சேகருக்கும் பாண்டியராஜுக்கும் பால் பண்ணை வச்சு ஊரெல்லாம் பால்
வினியோகம் செய்யற கற்பனை மாதிரி என் கற்பனையும் கொடிகட்டி பறந்தது. ஆனாலும் இந்த பாட்டரி
செலவு கொஞ்சம் குறைந்தால் தேவலாம் என்று தோன்றியது.
“சரி 800 VA பவருக்கு
100 Ah பாட்டரின்னா 2000 VA க்கு 250 பாட்டரி போதாதா என்ற என் கேள்விக்கு அந்த மனுஷன்
பார்த்த பார்வை இருக்கே அப்படியே வடிவேலு பார்வையை ஞாபகப்படுத்தியது. ‘ ஏண்டா! இப்படி
எத்தனை பேரு கிளம்பிட்டீங்க’ அப்படீன்னு கேட்கிற மாதிரி இருந்தது. ஆனாலும் ஒரு மாதிரி
சமாளித்து சிரித்துக் கொண்டே ” இது கரெண்ட் வைச்சு முடிவு பண்ற விஷயம் சார். நீங்க சொல்ற ஐட்டத்துல
50 % ஒரே சமயத்தில ஓடிச்சினா கூட அதுக்கு வேண்டிய கரெண்ட் நாலு மணி நேரத்துக்கு தொடர்ந்து
குடுக்கணுமின்னா இந்த கெபாஸிடிய கம்பெனி ரெகமண்ட் பண்ணுது. 250Ah பாட்டரில ஒரு மணி
நேரம் கூட சப்ளை கிடைக்காது” என்று சொல்லி
புரிய வைக்க முயற்சித்தார். ஐந்து வருடத்திற்கு
ஒரு முறை ரூபாய் அறுபதினாயிரம் செலவு. அதாவது மாதம் ரூ. ஆயிரம். என்னுடைய மாதாந்திர
பில்லே அவ்வளவுதான் என்னும் போது எதற்கு சோலார் என்ற கேள்வி பல திசைகளிலிருந்து பாய்ந்தது.
அந்த அறுபதினாயிரத்துக்கு வட்டியே மூன்று நான்கு மாதங்களுக்கு பில் கட்டுமே என்று (சரியான)
கணக்கு சொல்லினர் சகாக்கள்.
ஆனால் என் கணக்கு
வேறு விதமாக இருந்தது.