Sunday, December 22, 2013

இப்படியும் சிலர் !- மக்குத்திம்மன்

தில்லியில் சாமானியனின் கட்சி  [ஆம் ஆத்மி பார்ட்டி] பதவியேற்குமா இல்லையா என்பது நாளைக்கு தெரிய வருமாம் !
நம்பிக்கை அளித்து பதவிக்கு வந்த பல புதிய கட்சிகளும் அரசியல் விளையாட்டில் புகுந்த பின் பெருங்கடலில் கலந்து வித்தியாசம் இல்லாமல்  போகும் நதிகளை போலே தமது தூய்மையை இழந்து போய்விடுவதை  கடந்த நாற்பது ஐம்பது வருடங்களாக இந்திய அரசியலில் கண்டாயிற்று.
பதவி அல்லது அதிகாரம் தரும் மோகம், கடமை என்ற பொறுப்புணர்வை தூக்கி சாப்பிட்டு விடுகிறது.

சோ அவர்களின் முகமது பின் துக்ளக் நாடகம் சாகாவரம் பெற்று விட்டது

இதோ இப்படியும் ஒரு மனிதர்.


“ ஏழை ஜனாதிபதி என அழைக்கப்படுகிறேன். ஆனால் நான் என்னை ஒரு ஏழை எனக் கருதவில்லை. ஏழை என்பவன் யாரெனில் ஒரு படாடோபமான வாழக்கை முறையை நடத்துவதற்காக  முயன்று கொண்டிருப்பவனே ஆவான். அவனுக்கு எப்போதும் ஏதாவது தேவைகள் இருந்து கொண்டே இருக்கும்.”
                                                 --- ஜோஸ் முஜிகா -உருகுவே நாட்டின் ஜனாதிபதி

ஆம். தேவைகளைப் பெருக்கிக் கொள்ளுமளவும் நாம் ஏழைகளே. அதனால்தான் மக்குத் திம்மனும் இதற்கு முடிவு என்பது ஏது என்று வினவுகிறான்.

தேவை தேவை;அதுதேவை இது தேவை;எனக்கின் னொன்றும்
தேவை; என்று  கொந்தளித்து இருக்கும்  இப்பானை தனையே
தேவையென ஏனோ படைத்தான் பிரம்மனும்? போதும் இத்
தேவை செபம் என்பதும் எப்போதோ -மக்குத் திம்மா

சோற்றுப் பானையில் அரிசி வேகும் பொழுது தள தள என்று கொதிப்பது போல் மனம் எப்போதும் ஏதேனும் தேவைகளை நினைந்து கொந்தளிக்கும் இந்த உடல் என்னும் பானையை படைப்பதற்கான தேவை பிரம்மனுக்கு ஏன் ஏற்பட்டது என்று வேடிக்கையாக வினவுகிறார் கவிஞர்  DVG.

Wednesday, August 7, 2013

எழுத்து எரியை விழுங்கிய புதிய நெருப்பு நரி

New Firefox swallows Scribe Fire


 ஒவ்வொரு முறை நெருப்பு நரி உலாவியை கணினியில் திறக்கும் போதும் புதிய நரி வந்தாச்சு உள்ளே விடு உள்ளே விடு என்று விடாமல் தொந்தரவு செய்ததால் ஒரு வழியாக வேண்டா வெறுப்பாய் அதை உள்ளே விட்டேன். அதாவது அப்டேட் செய்தேன்

பதிவு உலகு எட்டிப்பார்த்து பலமாதங்கள் ஆகி விட்டபடியால் பல விஷயங்கள் கவனத்துக்கு வராமலே போய்விட்டன. அதில் ஒன்று புதிய நரி விழுங்கி இருக்கும் எழுத்து எரி. கடந்த நான்கு வருடங்களாக scribe fire உதவியுடன் தான் பதிவுகள் எழுதி வந்தேன்.

இன்று அதிசயமாய் சில படங்களை வலையேற்றலாம் அன்று அமர்ந்து scribe fire-க்கான பொத்தானை அழுத்தினால் உலாவி அமைதியாக இருக்கிறது. உலாவியை புதிதாக நிறுவி இருப்பதால் பிரச்சனை போல இருக்கிறது, சரி எதற்கும் மீண்டும் ஒரு முறை நிறுவி விடுவோம் என்று அவர்கள் வலைப்பக்கம் போனால் Scribe fire -4 available -download என்ற அறிவிப்பைப் பார்த்து அதையும் தரவிறக்கம் செய்து நிறுவிக் கொண்டாயிற்று.Installation complete- restartஎன்று எல்லா சம்பிரதாயங்களும் கடைபிடித்தாயிற்று. அப்படியும் ஏதும் மாற்றம் இல்லை. சரி அங்கேயே ஏதாவது துப்பு கிடைக்குமா என்று scribe Fire வலைதளத்துக்கு மீண்டும் சென்ற பார்த்தபோது அது வேலை செய்வதில்லை என்று பலரும் வைது கொண்டிருப்பது தெரிய வந்ததது.


என்னுடைய வயிற்றெரிச்சல் என்னவென்றால் நான் எழுவதற்காக எடுத்து வைத்திருந்த குறிப்புப் பக்கங்கள் நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகள் எல்லாவற்றையும்  ஒரு சேர ஏப்பம் விட்டிருக்கிறது  :(

உன்னைச் சொல்லிக் குற்றமில்லை என்னைச் சொல்லிக் குற்றமில்லை காலம் செய்த கோலமடி ........கோடு (code) செய்யும் குற்றமடி
என்று நம்முடைய விதியை நொந்து கொள்ள வேண்டியது தான்.