Saturday, December 17, 2011

பூர்வ ஜென்ம வாசனை பீடிக்குமா ?

நம் அன்றாட வாழ்க்கையில் சில வேண்டாத விஷயங்களை விட்டு ஒதுக்குவோம் என்றாலும் நம் சந்தர்பங்கள் அதை விட்டு வெளியேற முடியாத வகையில் பெரும்பாலும் நம்மைப் பிணைத்து வைக்கிறது. புகைப் பிடிக்கும் பழக்கம் உடைய ஒருவர் “ஏதோ வெளயாட்டா ஆரம்பிச்சேன். கொஞ்சம் கொஞ்சமா ஒரு நாளக்கு மூணு பாக்கெட் வரைக்கும் போயிடுச்சு. இப்போ கண்ட்ரோல் பண்ணலாம்னு நெனச்சு சும்மா இருந்தாலும் எதிரிலே இருக்கிறவன் தனக்கு ஒண்ணை வாயில் வைத்துக் கொண்டு பெட்டியை நீட்டறான். அவனுக்கு கம்பெனி கொடுக்கலாம்-னு நானும் ஒண்ணை பத்த வைக்கிறேன். எப்படி விடறது ?” என்று தம் இயலாமையை சொல்லிக் கொள்வார்.

எந்த ஒரு நிகழ்ச்சிக்குப் பின்னும் ஒரு காரணம் இருந்திருக்க வேண்டும் என்பது வினை விதி. இது மிகவும் குழப்பமானதும் தீர்க்க முடியாததுமாகத் தோன்றுகிறது. ஆங்கிலத்தில் chicken and egg syndrome என்று சொல்லப்படும் முட்டை முதலா கோழி முதலா என்ற கேள்வி போன்றது இது.

இதைப் பற்றிய DVG யின் சிந்தனையை அவரது மக்குத்திம்மன் பாடல் வழியாகக் காண்போம்.

வீசாமல், சாம்பல் மூடிய பொறி எரியுமா?
கைகள் சேராமல் கைத்தட்டல் ஆகிடுமா ?
(பூர்வ) வாசனைகள் தாயாம் ஆசைக்கு, தந்தை சந்தர்ப்பமாம்
குற்றம் உள்ளேயோ வெளியேயோ- மன்குதிம்மா


புகைபிடிக்கும் அன்பர் இதில்குற்றத்தை வெளி சந்தர்ப்பத்திற்கு காரணமாக்குகிறார். அடிப்படையில் தமக்கு உள்ள பலவீனத்தை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார். ஆனால் இரண்டிலும் சரிபாதி உண்மையுள்ளது. எனவேதான் தாய்-தந்தை மற்றும் இரண்டு கைகள் போன்ற உதாரணங்களுடன் DVG இதை அழகாக விளக்கியுள்ளார்.

என் சிறிய அறிவுக்கு எட்டியதில் நாம் செய்ய வேண்டியது என்னவென்றால், வெளியிலிருந்து சந்தர்ப்பம் ஒரு குறிப்பிட்ட ஆசையைக் குறித்து வரும் போது அதன் நல்லது கெட்டதை உள்ளிருந்து யோசித்து விவேகத்துடன் செயல்பட்டால் அல்லாதனவற்றை விலக்கலாம்.

இதற்கு நல்ல உதாரணம் மணிமேகலை. உதயகுமாரனிடத்து தனக்கு எழுந்த விருப்பை ஒதுக்கி தள்ள முடிவு செய்கிறாள்.

புதுவோன் பின்றைப் போனது என் நெஞ்சம்
இதுவோ அன்னாய் காமத்து இயற்கை
இதுவே ஆயின் கெடுகதன் திறம்...
(மணிமேகலா தெய்வம் தோன்றிய காதை 89-91)

பிந்தைய பிறவியில் இராகுவன் என்ற பெயரில் தன் கணவனாக இருந்தவனே இப்பிறவியில் உதயகுமாரனாக பிறந்துள்ளான் என்பததையும் அதனால் தன் மனம் தடுமாறுவதையும் மணிமேகலா தெய்வத்தின் மூலம் அறிந்து கொள்கிறாள்.

மணிமேகலையின் பூர்வ சென்ம வாசனையும் அடுத்த சென்ம சந்தர்ப்பமும் எப்படி இணைந்து வலை விரித்தன என்பது DVG -ன் வரிகளுக்கு நல்ல உதாரணம். சத்கருமங்களுக்கான சந்தர்பங்களானால் நெருப்பை ஊதி பெரிதாக்க வேண்டும். அல்லாது போனால் சந்தர்ப்பத்தை ஒதுக்கி தள்ளி மணிமேகலை போல் விவேகமாக செயல்பட வேண்டும்.

கவிதை வடிவில் மொழியாக்க முயற்சி
நீறான் கவிந்த பொறியும் வீசாமலே எரியுமோ
சேராமலே கைகளும் ஒலிதனை எழுப்புமோ
வாசனைகளே தாயாம் சந்தர்ப்பமே பிதாவாம்
தோசம் உள்ளோ வெளியோ- மக்குத் திம்மா

(நீறு =சாம்பல் ; வாசனை = பூர்வ ஜென்ம தொடர்ச்சி ; தோசம் =குற்றம்)

மக்குத்திம்மன் கவிதைகள் # 291

6 comments:

கோமதி அரசு said...

வெளியிலிருந்து சந்தர்ப்பம் ஒரு குறிப்பிட்ட ஆசையைக் குறித்து வரும் போது அதன் நல்லது கெட்டதை உள்ளிருந்து யோசித்து விவேகத்துடன் செயல்பட்டால் அல்லாதனவற்றை விலக்கலாம்.//

காரணம் விளைவுகள் கண்டு செயலாற்றுவான் ஞானி என்பார்கள் நீங்கள் அந்தவகையை சேர்ந்தவர் நீங்கள்.

நல்லதை நினைத்தால் அல்லாதன தானாய் மறையும்.

மக்குத்திம்மன் கவிதைகள் மிகவும் நன்றாக இருக்கிறது .

பகிர்வுக்கு நன்றி.

KABEER ANBAN said...

நல்வரவு கோமதி மேடம்.

//.....நீங்கள் அந்தவகையை சேர்ந்தவர் நீங்கள் //

உள்ளிருந்து யோசித்து விவேகத்துடன் செயல்பட்டால்தானே அது பொருந்தும். நான் இன்னும் விவேகி என்ற நிலையையே அடையவில்லை. தாங்கள் இன்னும் மேலே தூக்கி உட்கார வைத்துவிட்டீர்கள். அந்த அன்புக்குத் தலை வணங்குகிறேன்.

DVG -ன் மக்குதிம்மன் கவிதை பிடித்திருப்பது கண்டு மிக்க மகிழ்ச்சி.
வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி.

Geetha Sambasivam said...

விளைவுகளை யோசித்துச் செயலாற்றுவது சரியே. ஆனாலும் மணிமேகலை உதாரணம் இங்கே பொருந்துமா? அவளுக்குப் பூர்வஜன்மம் குறித்தத் தெளிந்த அறிவு கிடைத்தது. எல்லாருக்கும் கிடைக்காது!

ஆகையால் நீண்டகால விளைவுகளைக் குறித்து அலசி ஆராய்வது என்பது சரியே. சந்தர்ப்பம் நல்ல சந்தர்ப்பமாக அமையவும் பிரார்த்திக்கவேண்டும். விதி கண்ணை மறைத்தது என்பார்களே! அப்படியும் நடக்கலாம்.

பாலில் இருந்து நீரைப் பிரிக்கவேண்டும். அருமையான பதிவு.

இத்தனை வருடங்களாக இதைக் குறித்துச் சொல்லவே இல்லை! :((((

KABEER ANBAN said...

//விதி கண்ணை மறைத்தது என்பார்களே! அப்படியும் நடக்கலாம்.//

உண்மைதான். கைகேயின் வரம் ராமாயணத்துக்கே காரணமாகவில்லையா !
நன்றி கீதா மேடம்

Geetha Sambasivam said...

வெளியிலிருந்து சந்தர்ப்பம் ஒரு குறிப்பிட்ட ஆசையைக் குறித்து வரும் போது அதன் நல்லது கெட்டதை உள்ளிருந்து யோசித்து விவேகத்துடன் செயல்பட்டால் அல்லாதனவற்றை விலக்கலாம்.//

இன்று மறுபடியும் வேறொரு பதிவு எழுதுவதற்காக இதைப் படித்தேன். வெளியிலிருந்து சந்தர்ப்பம் வருகையில் அதன் பலாபலன்களைக் குறித்து ஆலோசிப்பது அந்த நேரத்து உணர்வுகள், சூழ்நிலைகள், நேரம் எல்லாவற்றையும் பொறுத்து இருக்கும் என நினைக்கிறேன். நழுவவிட்ட சந்தர்ப்பம் பின்னர் வராது என்பதைப் புரிந்து கொள்வோர் சிலரே.

ஆனால் அதற்கும் காரணம் இருக்கும் என்பதையும் புரிந்து கொள்தலே விவேகம் என நம்புகிறேன். இது என்னோட புரிதல் மட்டுமே. ஏனெனில் சந்தர்ப்பங்களை நழுவ விட்டிருக்கிறேன். பின்னால் ஏன் என யோசித்தபோது இன்னாருக்கு இன்னபடி விதித்துவிட்டான் அன்றே என்பது புரிந்தது.

KABEER ANBAN said...

மீள் வருகைக்கு நன்றி கீதா மேடம்.
//வெளியிலிருந்து சந்தர்ப்பம் வருகையில் அதன் பலாபலன்களைக் குறித்து ஆலோசிப்பது அந்த நேரத்து உணர்வுகள், சூழ்நிலைகள், நேரம் எல்லாவற்றையும் பொறுத்து இருக்கும் என நினைக்கிறேன் ..//

இது சரியென்றே தோன்றுகிறது

///நழுவவிட்ட சந்தர்ப்பம் பின்னர் வராது என்பதைப் புரிந்து கொள்வோர் சிலரே. ///

இப்படி சொன்னால், பின்னொரு நாளில் தன்னுடைய கணிப்பு தவறு என்று நினைப்பதாக முடியும். அதை விவேகம் என்று சொல்ல முடியாது. விவேகமான முடிவு என்றால் எக்காலத்தும் அந்த முடிவு எடுத்ததற்காக ஒருவர் வருத்தப்படக்கூடாது.

///ஆனால் அதற்கும் காரணம் இருக்கும் என்பதையும் புரிந்து கொள்தலே விவேகம் என நம்புகிறேன் ///

இதை ‘விதிப்படி நடந்தது’ என்று ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் என்று வேண்டுமானால் வைத்துக்கொள்ளலாம். நேரம் கடந்த விவேகம் என்றும் சொல்லலாம்.

என்னுடைய புரிதல் : ஒருவர் தான் ஆலோசித்து எடுத்த முடிவுக்கு பிற்காலத்தில் வருத்தப்படாத வரையில் அது விவேகமாக செயல்பட்டதாக ஆகும். அது ஆசை விரித்த வலைக்கு எதிரானதாகக் கூட இருக்கலாம்.

வினோபா பாவே போன்ற பலர் மிகப் பெரிய பதவிகள் தம்மைத் தேடி வந்தும் மறுப்பு தெரிவித்து மக்கள் சேவைக்கெனவே தம்மை அர்ப்பணித்துக் கொண்டதை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.