Thursday, September 15, 2011

வலி தந்த கவிதை

காலையிலிருந்து ஒரு வலி. வாழ்க்கையில் நமக்குள்ள வலிகளை நினைத்து மன வலி. எத்தனைப் பிறவிகளை இப்படியே கழிக்கப் போகிறோம் என்ற தவிப்பு. அலுவலகம் போகும் வழியில் இரயிலில் பலர் ஜெபம் செய்து கொண்டு வருவதைக் கண்கூடாகக் கண்டும் அதில் மனம் ஈடுபாடு கொள்ளாமல் திரிகின்றதே என்னும் ஏக்கம். எப்படியானால் என்ன பிறர்க்கு நம்மால் துன்பம் ஏற்படாத வகையில் பிறவி அமைந்தால் அதுவே பெரும் பேறாகும் என்கிற எண்ணம் தோன்றி சற்று ஆறுதலைத் தந்தது. அதைத் தொடர்ந்து சில வரிகள் மனதில் எழுந்ததை அலுவலகம் சேர்ந்த உடனே ஒரு தாளில் எழுதி வைத்தேன்.

வலியிலா பிரசவம் தாய்க்கு
வலியிலா வளர்ப்பு தாதைக்கு
வலியிலா வார்த்தைகள் பிறர்க்கு
வலிமிகும் ஆர்வமுன் தாளுக்கு

…………………
…………………………………….
போன்றவற்றை 'நீ கொடுத்தால் பிறவிகளைப் பற்றி நான் ஏன் கவலைப்பட வேண்டும்' என்று முடிக்கத் தோன்றியது.

வலிவலம் என்ற ஊரிலிருந்து சில மாணவர்கள் திருத்துறைப்பூண்டி பள்ளியில் உடன் படித்த நினைவு வந்தது. உடனே கூகிளார் துணைக் கொண்டு தேடியதில் அத்தலத்தைப் பற்றிய களஞ்சியமே கிடைத்தது . ஆஹா! அப்பர் சம்பந்தர் சுந்தரர் மூவரும் பதிகம் பாடியத் தலம் என்பதை அறிந்து அவனிடத்தே என் முறையீட்டை வைக்கலாம் என்று பாடலை எனக்குத் தெரிந்த வகையில் நிறைவு செய்தேன்.

இறைவன்: மனத்துணை நாதன். இறைவி : அங்கையற்கண்ணி

(மேலுள்ள இணைப்பைச் சுட்டி shaivam.org-ல் மேலும் அறிக)

வலியிலா பிரசவம் தாய்க்கு
வலியிலா வளர்ப்பு தாதைக்கு
வலியிலா வார்த்தைகள் பிறர்க்கு
வலிதரா சுற்றம் எனக்கு
வலிமிகும் ஆர்வமுன் தாளுக்கு
வலியிலா மரணம் என் அந்திக்கு
வலிந்து அருளாய் பெருமானே
கலிதனில் பிறவி அனந்தம்
வரினும் கலங்குவெனோ
வலிவலம் மனத்துணை நாதனே !


என்னைப் பிரசவிக்கையில் தாய்க்கு வலிதராமலும், வளர்க்கையில் தந்தைக்கு கஷ்டங்கள் கொடுக்காதவனாகவும் பிறரோடு உரையாடும் போது அவர்கள் மனம் புண்படும்படியாக பேசாதவனாகவும், உன் இணையடியில் மிகுந்த ஆர்வம் உடையவனாகவும், என் மனைவி மக்கள் சுற்றத்தால் எனக்கு மனத்துன்பம் இல்லாமலும்,மரணிக்கும் தருவாயில் நோய் நொடிகளால் வருந்தாதவனாகவும் அருள் செய்வதானால் எத்தனை பிறவி நீ கொடுத்தாலும் நான் கலங்க மாட்டேன் - வலிவலம் என்ற ஊரில் குடியிருக்கும் மனத்துணை நாதரே

மன வலி தந்த கவிதையை நிறைவு செய்ய மனத்துணை நாதன் துணை வந்ததே அவனருள்.

தென்னாட்டுடைய சிவனே போற்றி

6 comments:

வல்லிசிம்ஹன் said...

அன்பு கயல் ஒவ்வொரு மனமும் இதைத்தான் வேண்டுகிறது.அதுவும் வலியில்லா வார்த்தைகள் வேண்டும், வலியில்லா
மரணம் வேண்டும் என்ற வார்த்தைகள் என்னக் காங்க வைத்து விட்டன மிகவும் நன்றி ம்மா.

KABEER ANBAN said...

நன்றி வல்லி மேடம்.

//...வலியில்லா வார்த்தைகள் வேண்டும், வலியில்லா
மரணம் வேண்டும் என்ற வார்த்தைகள் என்னக் காங்க வைத்து விட்டன...//

பாராட்டுக்கு மிக்க நன்றி.

கோமதி அரசு said...

என்னைப் பிரசவிக்கையில் தாய்க்கு வலிதராமலும், வளர்க்கையில் தந்தைக்கு கஷ்டங்கள் கொடுக்காதவனாகவும் பிறரோடு உரையாடும் போது அவர்கள் மனம் புண்படும்படியாக பேசாதவனாகவும், உன் இணையடியில் மிகுந்த ஆர்வம் உடையவனாகவும், என் மனைவி மக்கள் சுற்றத்தால் எனக்கு மனத்துன்பம் இல்லாமலும்,மரணிக்கும் தருவாயில் நோய் நொடிகளால் வருந்தாதவனாகவும் அருள் செய்வதானால் எத்தனை பிறவி நீ கொடுத்தாலும் நான் கலங்க மாட்டேன் - வலிவலம் என்ற ஊரில் குடியிருக்கும் மனத்துணை நாதரே//

கபீரன்பன் உங்கள் கவிதையும் விளக்கமும் அருமை.

நிச்சியம் இந்த மாதிரி பிறவி கிடைத்தால் யாரும் அடுத்தபிறவிப் பற்றி கவலைப் படமாட்டார்கள் நிச்சியம்.

ஒரு சந்தேகம் கபீரன்பன், வல்லி அக்கா கயல் என்று என் மகள் பேரை தவறுதலாய் குறிப்பிட்டு விட்டார்களா?
உங்கள் பெயருக்கு பதிலாய்?

சுந்தரருக்கு அடி எடுத்து கொடுத்தவர் உங்களுக்கு கவிதையை முடிக்க வழித் துணையாக வந்தார் போலும்.

கோமதி அரசு said...

திருவலிவலத்தை வலம் வந்தேன் நன்றி
கபீரன்பன்.

KABEER ANBAN said...

நல்வரவு கோமதி மேடம்.

//'' வல்லி அக்கா கயல் என்று என் மகள் பேரை தவறுதலாய் குறிப்பிட்டு விட்டார்களா? //

ஒரே சமயத்தில் பல விண்டோக்களைத் திறந்து படித்தால் சற்று குழப்பம் வர வாய்ப்புண்டு என்று கருதுகிறேன். அதனால் என்ன வாசகர்க்கு பிடித்திருக்கிறதா என்பது தானே முக்கியம். :))

//சுந்தரருக்கு அடி எடுத்து கொடுத்தவர் உங்களுக்கு கவிதையை முடிக்க வழித் துணையாக வந்தார் போலும் //

சரியாக சொன்னிர்கள். எல்லாமே அவன் தந்து சொல்லப்படுபவைதானே!

தங்களுக்கு கவிதை பிடித்திருப்பது கண்டு மகிழ்ச்சி. நன்றி

Geetha Sambasivam said...

வலியிலா மரணம் என் அந்திக்கு
வலிந்து அருளாய் பெருமானே//

இதுவே என் பிரார்த்தனையும்.