அது போல இப்பொழுது நம் நாட்டிலும் ஒரு ஆயிரம் வருட கோவில் புனர் நிர்மாணம் பெற்று வருகிறது.

கிருஷ்ணராஜ சாகரம் எனப்படும் கே.ஆர்.எஸ் அணை 1920-ல் கட்டப்பட்டப் பொழுது ஹொய்சளர் காலத்திய (1100 AD ) வேணு கோபாலசுவாமி கோவில் ஒன்று கண்ணம்பாடி ஊரில் நீரில் மூழ்கியது. அணைக்கு நீர் விடுவதற்கு முன் ஆராதனைக்குட்பட்டிருந்த சில விக்கிரகங்களை மட்டுமே அருகில் சிறிய கோவில் கட்டி பிரதிஷ்டை செய்து மீதமுள்ள கட்டிடங்களை கைவிட்டனர்.
மொத்தம் 32 கிராமங்கள் அச்சமயம் நீர் தேக்கத்தில் மூழ்கின. அணையின் உயரம் 125 அடிகள். எப்பொழுதெல்லாம் எண்பது அடிக்கும் குறைவாக நீர் மட்டம் குன்றுமோ அப்பொழுதெல்லாம் அந்த கோவிலின் மேற்புரப் பகுதிகள் பார்வைக்கு தென்பட்டது. பலரும் பரிசலில் சென்று கோவிலை சுற்றிப் பார்பது வழக்கமாக இருந்தது.



1957 லும் 1982 லும் நீர்மட்டம் 60 அடிக்கு குறைந்து முழுக் கோவிலும் பார்வைக்கு வந்தது. அப்பொழுதே பலர் கோவிலை இடம்பெயர்தல் பற்றிய பிரஸ்தாபம் செய்தனர். ஆனால் முடிவெடுக்கும் முன்பே காவிரியில் நீர் வரவு அதிகரித்ததால் எதுவும் செய்ய இயலவில்லை. 2001 ல் மீண்டும் வாய்ப்பு வந்தது.
இம்முறை ஹரி கோடே (Khoday distilleries) என்ற தொழிலதிபரின் ஆர்வத்தால் மொத்த கோவிலும் இடம் பெயர்க்கப்பட்டு அருகிலேயே சற்று மேட்டுபாங்கான இடத்தில் நிறுவப்பட்டு வருகிறது.
இதற்கான கோவிலின் பிரத்யேக கட்டுமான வரைபடங்களை இடிபாடுகளுக்கிடையே தயார் செய்யப்பட்டு புனர் நிர்மாணப்பணி சுற்றியிருக்கும் வண்டல் சகதியின் ஊடே துவங்கப்பட்டது. தென்மேற்கு பருவமழை ஜூன் மாதத்தில் துவங்கிவிட்டால் நீர் மட்டம் அதிகரிக்கத் துவங்கிவிடும். எனவே இரவு பகலாக நூற்றுக் கணக்கானோர் கிராமத்தினர் உட்பட சேர்ந்து வேலை செய்தனர்.
பின்னர் குறியீட்டின்படி சேகரிக்கப்பட்டு, வகைப் படுத்தப்பட்ட கட்டிட பகுதிகள் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு நிர்மாணம் செய்யப்பட்டு வருகிறது.
கொடிமரம் (த்வஜஸ்தம்பம்) மட்டும் முழுக்க புதிதாக செய்யப்பட்டது. இதற்கெனவும், பிற சேதமடைந்திருந்த பகுதிகளை புதிதாக செய்யவும் தமிழ் நாட்டு சிற்பவல்லுனர்கள் உதவி பெறப்பட்டதாக தெரிகிறது.
இந்த கோவிலை காண்பதற்கு கே.ஆர்.எஸ் அணையிலிருந்து 8 கி.மீ தூரத்தில் வடக்கு திசையில் கண்ணம்பாடி கிராமத்தினுள் புகுந்து செல்ல வேண்டும். புதிதாகக் கட்டப்பட்டு வரும் கோவிலில் மீண்டும் பழைய ஆராதனைக்குரிய விக்கிரகங்களே வருமா என்பது கேள்விக்குரியதாக இருக்கிறது.
கொடிமரத்தில் காணப்படும் முருகனும் நந்தியும் இதை சிவ ஆலயமாக குறிப்பனவாக இருக்கின்றன.
மூல விக்கிரகங்களான வேணுகோபாலரும் பூவராகனும், தனியார் மேற்பார்வையில் கட்டப்பெறும் ஆலயத்திற்கு தரப்பட மாட்டாது என்று சிலர் சொல்வதை இது உறுதி படுத்துவது போல் உள்ளது.
ஏனெனில் வேணுகோபால சுவாமியை பூசிக்கும் கோவில் கொடிமரத்தில் நந்திக்கும் முருகனுக்கும் இடம் ஏது?
(நன்றி : 2001 மூலக் கோவில் படங்கள் உதவி, திரு கணபதி, KRS )