சமீபத்தில் தூரதர்ஷனின் கன்னட சந்தனா தொலைக்காட்சி "தட் -அன்த- ஹேளி" ("சட்டுனு சொல்லுங்க") என்ற தலைப்பில் ஒரு வினாடி வினா நிகழ்ச்சியை ஐந்தாயிரம் முறை நடத்தி ஒரு சாதனை புரிந்ததைக் கொண்டாடியது.
ஜனவரி 2002 ஆண்டு முதல் தொடர்ந்து நடைபெற்று வரும் இந்நிகழ்ச்சி மக்களை வெகுவாக கவர்ந்த ஒன்று. திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9:30 க்கு ஒளிபரப்பப் படுகிறது. வழக்கமாக நாம் காணக்கூடிய நெறியாளரின் பரப்பரப்பான பேச்சோ உச்சஸ்தாயில் கூவி கைத்தட்டச் சொல்வதோ உணர்ச்சிகளை தூண்டுவதோ இன்றி மிக மிக அமைதியான முறையில் நடந்துவரும் ஒரு நல்ல நிகழ்ச்சி.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் மூன்று பேர்கள் மட்டுமே. கேட்கப்படும் கேள்விகள் இருபத்திநான்கு . சரியான பதிலுக்கு ஒரு நல்ல புத்தகமே பரிசு.
புத்தகங்கள் இலக்கியம், சமூக நாவல், சிறுகதை தொகுப்பு, கவிதை, மொழித் திறனாய்வு, குழந்தை இலக்கியம், பயணக்கட்டுரைகள் என்று எந்த தலைப்பிலும் இருக்கலாம்.
ஒரு நிகழ்ச்சியில் இருபது புத்தகம் என்றாலும் சுமார் ஒரு லட்சம் புத்தகங்கங்கள் இந்த 23 வருடங்களில் பரிசாகத் தரப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சியின் வெற்றியை கண்டு பல புத்தக வெளியீட்டாளர்கள் தாமே முன் வந்து தமது வெளியீடுகளை இலவசமாக தந்து உதவியிருக்கின்றனர்.
நானும் இந்நிகழ்ச்சியை கடந்த பத்து -பன்னிரெண்டு வருடங்களாக் கவனித்து வருகிறேன். இதில் பங்கேற்பவர்கள், கர்நாடகத்தின் அனைத்து பகுதிகளிலிருந்தும் வருகின்றனர். வயது வரம்பு கிடையாது. விவசாயிகள், தொழில் நுட்ப வல்லுனர்கள், குடும்பத் தலைவிகள், சிறுவர்-சிறுமியர், கல்லூரி மாணவர்கள் என வாழ்க்கையில் அனைத்துத் தட்டு மக்களும் தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கும் வாய்ப்பை பெறுகின்றனர். இதுவே இதன் பிராபல்யத்திற்கு காரணமாகக் கூட இருக்கலாம்.


