இதில் கவிஞர் கண்ணதாசன் ஆறு குணங்களை மனிதரின் மன ஆறுதலுக்காகப் பட்டியலிடுகிறார். அவை 1) ஒன்றே சொல், அதையே செய் 2) இன்பமும் துன்பமும் இறைவன் வகுத்த நியதி 3) உண்மையை சொல்லி நன்மையை செய் 4) நிலை உயரும் போது பணிவு கொள் 5) ஆசை, கோபம் களவு மிருக குணங்கள் 6) அன்பு கருணை நன்றி -தெய்வ குணங்கள்.
அற்புதமான இசையமைப்புடன் கூடிய அந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது.
மேற்கண்ட குணங்களை பலவேறு கோணங்களில் மக்குதிம்மன் மூலமாக குண்டப்பா அவர்களும் பல பாடல்களில் சொல்லியிருக்கிறார். இந்த பதிவில்
மனிதரின் முன்னேற்றத்திற்கென அவர் சொல்லும் மூன்று குணங்களை பார்ப்போம். முதலில் பாடலும் அதன் மொழிபெயர்ப்பும்:
ಚಾರುದೃಶ್ಯಂಗಳಿಂ ಪ್ರೀತಿ ಹೃದಯವಿಕಾಸ|
ಕ್ರೂರದೌಷ್ಟ್ಯಯಂಗಳಿಂ ವೀರಾನುಕಂಪ ||
ಭೈರವಾದ್ಧುತಗಳಿಂ ಮೌನದಂತರ್ಮನನ |
ದಾರಿಯುದ್ಧಾರಕಿವು- ಮಂಕುತಿಮ್ಮ || 457 ||
மன விகாசம் தரும் இயற்கையின் காட்சி
ಚಾರುದೃಶ್ಯಂಗಳಿಂ ಪ್ರೀತಿ ಹೃದಯವಿಕಾಸ|
ಕ್ರೂರದೌಷ್ಟ್ಯಯಂಗಳಿಂ ವೀರಾನುಕಂಪ ||
ಭೈರವಾದ್ಧುತಗಳಿಂ ಮೌನದಂತರ್ಮನನ |
ದಾರಿಯುದ್ಧಾರಕಿವು- ಮಂಕುತಿಮ್ಮ || 457 ||
வன்மையைக் காணில் வெகுளும் மற நெகிழ்ச்சி
மோனத்தில் வியந்திரு பிரளயங் காட்டும் மிரட்சி
மேன்மைக்கு வழியிதுவே- மக்குத் திம்மா
( விகசித்தல் = மலர்தல்; பிரளயங் காட்டும் மிரட்சி= பயந்தரும் இயற்கையின் சீற்றம் ; மற நெகிழ்ச்சி = வீரத்தின் பின்புலத்தில் இரக்கம் -வீர அனுகம்பம் )
முதலாவது இயற்கையோடு இயைந்திருப்பது.
இரண்டாவது தர்மத்தோடு இயைந்திருப்பது .
மூன்றாவதாக எல்லாம் வல்ல இறைசக்தியின் முன் தலை வணங்கி நிற்பது.
முதல் வரியில் இயற்கையோடு இயைந்திருப்பதின் ரகசியத்தை சொல்கிறார்.
மன விகாசம் தரும் இயற்கைக் காட்சி
நாம் பார்க்கின்ற ஒரு காட்சி நம்முடைய மனதை கொள்ளைகொள்ளும் போது நமது மனம் மிகவும் மென்மையானதாகிறது . குழந்தையின் சிரிப்பிலாகட்டும், மலர்களின் மலர்ச்சியாகட்டும் அக்கணங்களில் மனம் லேசாவதை உணரலாம். அதை இறையோடு ஒன்றிய நிலை என்றும் கூறலாம்.
காட்டின் வழியில் முல்லைக் கொடிக்கு தேர் ஈந்தான் பாரி மன்னன் என்றும் அழகிய தோகை விரித்தாடும் மயிலைக் கண்டு குளிரால் நடுங்கியது என்று விலையுர்ந்த போர்வையை போர்த்தினான் மன்னன் பேகன் என்றும் அறியும் போது அவர்களது மனம் எந்த அளவிற்கு மென்மை அடைந்திருந்தது என்பதை புரிந்து கொள்ளலாம். மனதின் அந்த நெகிழ்ச்சியே அவர்களை மிக உயர்ந்த நிலைக்கு உயர்த்தியது.
ஆனால் இந்த மென்மை சமூக வாழ்க்கையில் பயன்தருமா? மனம் மென்மையானாலும் வீரம் குறையக் கூடாது. அநீதிக்கு எதிராக எழ வேண்டும். அதை இரண்டாவது வரியில் குறிப்பிடுகிறார்.
வன்மையைக் காணில் வெகுளும் மற நெகிழ்ச்சி
வீர அனுகம்பம் என்று ஒரு வார்த்தையை கையாளுகிறார் டி.வி.ஜி. அதாவது இரக்கத்தினால் வெளிப்படும் வீரத்தன்மை. தமிழ் அகராதியில் அனுகம்பம் என்கிற வார்த்தைக்கு இரக்கம் என்ற பொருள் கொடுக்கப்பட்டிருக்கிறது. அது வடமொழியிலிருந்து வந்திருக்கும் சொல். கன்னடம் தமிழ் இரண்டிலும் புழக்கம் உண்டு.
யாருக்கேனும் ஏற்படும் குரூரமான துன்பத்தைக் கண்டு, மனமிரங்கி , அதைக் களைய வேண்டி ஒருவருக்கு ஏற்படும் மனநிலையை குறிக்க வந்தது இது.
மாற்று : ( கொள்ளை என்ற சொல்லை பல பொருளில் பயன்படுத்த ஒரு சோதனை முயற்சி. )
யாருக்கேனும் ஏற்படும் குரூரமான துன்பத்தைக் கண்டு, மனமிரங்கி , அதைக் களைய வேண்டி ஒருவருக்கு ஏற்படும் மனநிலையை குறிக்க வந்தது இது.
இதை நிறைவேற்ற ஒருவர் இரத்தம் சிந்தவோ உயிரை விடவோ கூட நேரலாம். ஆனால் அது பிற உயிர் மேல் கொண்டுள்ள இரக்கத்தின் காரணமாக எழும் உணர்ச்சி.
அப்போது மனதின் மென்மைத்தன்மை மறைந்து வீரத்தின் அறிகுறியான மறத் தன்மை வெளிப்படுகிறது. அதை 'வீர அனுக்கம்பம் என்கிறார் டி .வி.ஜி.
உதாரணமாக தன்னுடைய தசையை அறுத்து எடைக்கு எடை கொடுத்து ஒரு புறாவைக் காப்பாற்ற முன்வந்த சிபி சக்ரவர்த்தியாகட்டும், கன்றை இழந்து தவித்த பசுவிற்கு ஏற்பட்ட அநீதிக்கு காரணமான தன் மகனை தேரடியில் கிடத்திய மனுநீதி சோழன் போன்றவர்களின் மனநிலையை சொல்லலாம். இங்கே பெரும்பாலும் தியாக குணம் இருக்கும். தன்னலத்திற்கு இல்லாமல் பிறர் நலனுக்காக போராடும் குணம் வெளிப்படும். அதனால் இதையும் மனமுயர்த்தும் வழி என்கிறார் டி.வி.ஜி.
மூன்றாவதாக சர்வ வல்லமை வாய்ந்த இயற்கையின் கோர சக்தியை கண்டு அதன் முன் எப்படி மனிதனின் ஆற்றல்கள் யாவும் ஒரு துரும்பு போன்றது என்பதை நினைக்கும் போது ஆணவம் அடங்கி மன அடக்கம் ஓங்குகிறது. அப்போது மனிதனால் அந்த சக்தியை மௌனமாக வியக்க முடியுமே அன்றி வேறெதுவும் செய்ய இயலாதவன் ஆகிறான். இந்தப் புரிதலும் மனிதரின் முன்னேற்றத்திற்கு ஒரு தேவையே!
மோனத்தில் வியந்திரு பிரளயங் காட்டும் மிரட்சி
இந்தப் பாடல், சத்சங்கத்தில் இருக்கும் சாதகர்களுக்கு என்பதாக வைத்துக் கொள்ளலாம். அவர்களுக்கு அடிப்படை நல்லொழுக்க நெறிகளை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் சாதனையில் அடுத்த கட்டத்திற்கு நகருவதற்காக அமைத்துக் கொள்ள வேண்டிய வாழ்க்கை முறை என்று கொள்ளலாம். அதற்கான வழி சொல்லும் பாடல் இது.
கொள்ளை அழகில் விகசிக்கும் மனம் - abundance
கொள்ளை கொலை கண்டு வீறும் மறம் - robbery
கொள்ளை வியப்பு ஊழிதன் நர்த்தனம் - plenty
கொள்ளை யுண்டு மனிதருக்கே மக்குத் திம்மா - profit
Tamil Lexicon :
[கொள்ளை koḷḷai , n. < கொள்- . 1. [T. kolla, K. koḷḷe, M. koḷḷa.] Robbery, plunder, pillage; சூறைகொள்ளுகை . 2. [T. kolla.] Excess, abundance, copiousness, plenty; மிகுதி. கொள்ளைமா மதத்த நால்வாய்க் குஞ்சரம் (பாகவ . 1, 5, 14). 3. Crowd, throng; கூட்டம். கொள்ளையிற் பலர் கூறலும் (கந்தபு. விண்குடி . 14). 4. Plague, pestilence, epidemic; பெருவாரிநோய் . 5. Hindrance, obstacle, difficulty; தடை. அதைச்செய்ய உனக்கு என்ன கொள்ளை ? 6. Price; விலை. சில்பத வுணவின் கொள்ளை சாற்றி (பெரும்பாண் . 64). 7. Use, profit; பயன். நானிருந்தென்ன கொள்ளை (இராமநா. பால கா . 9).]