Saturday, May 26, 2018

கைவிடப்பட்ட செல்வங்களை மீட்பவர்

        குழந்தைகளுக்கு  கல்வி கற்பிப்பது என்பது பெரும் சவாலாகப் பார்க்கப்படுகிறது.  தமிழக அரசு பத்துக் குழந்தைகளுக்கும் குறைவாக உள்ள 890 பள்ளிகளை மூடிவிடலாமா என்று ஆலோசனை செய்கிறதாம் !!

     ( வாட்ஸ்-ஆப் அன்பருக்கு நன்றி)

       இதற்கு காரணம் யார்? குழந்தைககள் பள்ளிக்கூடத்தை வெறுப்பதற்குக் காரணம் அவர்கள் இருக்கும் சூழ்நிலையே. ஒன்று குடும்ப  சூழ்நிலை அல்லது பள்ளி ஆசிரியர்களின் இறுக்கமான அல்லது பொறுப்பற்ற போக்கு.

     அச்சிறார்களுக்கு அன்பு என்கிற ஊட்டம் கிடைக்காமல், பயம் என்கிற பிசாசு பிடித்துக் கொள்கிறது.  அப்போது அவர்களுக்கு இருக்கும் ஒரே வழி பிடிக்காத சூழ்நிலையிலிருந்து ஓடிப் போவதுதான்.

     நமது நாட்டில் சுமார் 4 கோடி சிறுவர் சிறுமியர் மேல்நிலைப் பள்ளி எட்டும் முன்பே விலகிப் போகின்றனர் என்கிறது புள்ளி விவரம்.  இதில் உள்ள அபாயம் என்னவென்றால் இவர்கள் திசை திருப்பப்பட்டு சமூக எதிரிகளாக -போராளிகள் என்ற பெயரிலோ அல்லது சில சில்லறை காசுகள் வேண்டி வன்முறை கும்பல்களுக்கு அடிவருடிகளாகவோ- மாறிப் போவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

இந்த சறுக்கலை தடுத்து நிறுத்துவது எப்படி என்பதே கேள்வி.

     இதற்கு அடிப்படைக் கேள்வியான  ’கல்வி என்பதன் நோக்கம் என்ன ?’  என்பதற்கு பதில் காண வேண்டும்

"Character is end of education" 

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப்படும்.

    சுருக்கமாகச் சொல்வதானால் எழுத்தறிவு பெற்ற  நல்ல குடிமக்களை உருவாக்குவதே கல்வியின் நோக்கம். தாங்களும் நேர்மையில் நின்று தன்னை சார்ந்த சமுதாயத்தையும் அன்புடன் பேணுபவரே நல்ல குடிகள். பணம் சம்பாதிப்பதற்காக படிக்க வேண்டும் என்ற எண்ணம் தவறானது.  இந்த எண்ணத்தை இளம் வயதிலேயே ஆழமாகப் பதிக்க வேண்டிய முறையே சரியான கல்வி முறை.

     அதன் முதல் படி அன்பும் அரவணைப்பும் உடைய ஆதரவான சூழ்நிலை. இரண்டாவது -அவர்களை  பள்ளி  பாடதிட்டத்தின்படி விஷயங்களை நிரப்பிக்கொள்ளும் எந்திரங்களாக பாவிக்காது -அவர்களுக்கு இயல்பாக ஏற்புடைய துறைகளில் ஊக்கம் கொடுத்து அதனோடு ஊடே எழுத்தறிவையும் சமூக, சுற்றுச்சூழல் பேணுதலையும் போதிக்க வேண்டும். கற்பது என்பது ஆர்வத்தை வளர்ப்பதாக இருக்க வேண்டுமே அன்றி வேண்டாத பளுவாகி விடக்கூடாது.

      இவையெல்லாம் கேட்க நன்றாக இருக்கிறது ஆனால் நடைமுறையில் சாத்தியமா என்று சந்தேகப் படுபவர்களுக்கு ‘சாத்தியமே’ என்று அழுத்தம் திருத்தமாக சொல்கிறார் திரு அனந்தகுமார். ( http://www.divyadeepatrust.org/)

    மைசூர்  அருகில் இவர் சுமார் இருபது வருட காலமாக நடத்திவரும் ‘கலியுவ மனே’ ( Home for Learning)  என்னும் மரபுசாரா பள்ளி, பின் தங்கிய மாணவ மாணவியருக்காவே நடத்தப்படுகிறது.



      பள்ளியை வெறுத்த அல்லது படிப்பு ஏறவில்லை என்று ஒதுக்கப்பட்ட அனைத்து சிறுவர்களும் இங்கு வருடத்தில் எந்த நேரத்தில் வேண்டுமானாலும்  சேரலாம். அவர்களை உணர்வு பூர்வமாக அறிந்து கொண்டு  அவர்களுக்கு தேவையான வகையில் பாடங்கள் சொல்லித் தரப்படுகிறது.

       IQ அடிப்படையில் பல குழுக்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு குழுவுக்கும் ஏற்றவகையில் பாடதிட்டம் மேற்கொள்ளப்படுகிறது. இதன்படி ஒரு குழுவில் எட்டு வயது சிறுமியும்  பன்னிரண்டு வயது பாலகனும் ஏன் பதினைந்து வயது எட்டிய சிறுவனோ சிறுமியோ கூட ஒன்றாகப் படித்து கொண்டிருப்பார்கள்.  ஒவ்வொருவரின் வளர்ச்சி வேகமும் வேறு வேறாக இருக்கும். அதன்படி குழு உறுப்பினர்கள் மாற்றப்பட்டு சரியான முறையில்  அவர்களின் அறிவு வளர்ச்சியை தூண்டி விடுகின்றனர்.

       அவர்களுக்கு பரீட்சை பயமோ அடுத்த வகுப்புக்கு செல்வோமோ இல்லையோ என்ற பயங்கள் இல்லாத வண்ணம் அவர்களுடைய முன்னேற்றம் கண்டறியப்படுகிறது.

      ஒரு சிறுவனோ சிறுமியோ குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட நிலையை கடக்கவேண்டும் என்ற கட்டாயம் எதுவும் கிடையாது.

       பத்தாம் வகுப்பு தகுதியை அவர்கள் எட்டும் போது அம்மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி கொடுக்கப்பட்டு மாநில தேர்வில்  தன்னிசை (private candidate)யாகத் தேர்வு எழுதி தகுதி பெற வழி செய்கின்றனர். அதன் பின்னர் அவர்களின் தேர்ச்சியைப் பொறுத்து மேற்படிப்புக்கு வழி செய்வதோ தொழிற்கல்வி பயில்வதற்கோ பரிந்துரைக்கப்படுகின்றனர்.

இனி அனந்தகுமாரே அவருடைய பயணத்தை சொல்லட்டும்.


     சமீபத்தில் அவரை சந்தித்துப் பேசிக் கொண்டிருந்த போது இந்த மரபுசாரா கல்வி முறைக்கு இன்னும் கல்வித்துறையிலிருந்து தக்க அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று சொல்லினார்.  இவருடைய கல்வி முறைப் பற்றி மத்திய அரசு நடத்திவரும் ஆசிரிய பணிக்கான பயிற்சிகூடமான Regional college of  Education Mysore  மாணவி ஒருவர் ஆராய்ச்சிக் கட்டுரை தயாரித்து அதன் சிறப்பு அம்சங்களை வெளியிட்டிருக்கிறார்.

      ஆர்வம் உள்ளவர்களுக்கு இவர் நாடெங்கிலும் இப்படிப்பட்ட பள்ளிகளை நடத்த விரும்புவோருக்கு பயிற்சி அளிக்கத் தயார் என்பதையும் தெரிவித்தார்.

       எனக்கென்னமோ இந்த முறையை  ஒரு கூடுதல் பிரிவாக ஒவ்வொரு பள்ளியிலுமே இயக்கலாம் என்றே தோன்றுகிறது.  ஏனென்றால் இன்றைய வசதியுடைய நகர்புற  குழந்தைகளிடையேயும் இத்தகைய பிரச்சனைகள் உண்டு. தனியாக இதற்கெனப் பள்ளி என்னும் போது அவர்கள் தனிமை படுத்தப்படுகின்றனர். மேலும், பின் தங்கிய மாணவர்களின் பெற்றோர்கள் “ உங்கள் பிள்ளையை  வேறு பள்ளியில் சேர்த்து விடுங்கள்” என்கிற பேச்சை கேட்க வேண்டியிருக்காது.

      RTE ( right to education) சட்டத்தில் மாணவர்களை தகுதி இருப்பினும் இல்லாவிடினும் அடுத்த வகுப்புக்கு அனுப்ப வேண்டும். இதனால்தான் தரம் தாழ்ந்து விடுகிறது. ஆகையால் ’வகுப்பு முறை இல்லாத’ தகுதி மற்றும் வயது அடிப்படையில் மட்டும் இறுதி தேர்வு எழுத அனுமதிக்கப்படும் பொழுது வெற்றிக்கான வாய்ப்பும் மாணவர்களின் தகுதியும் மேம்படுகிறது.

       பள்ளி மற்றும் ஆசிரியருடைய வேலை ஒரு தோட்டக்காரனைப் போன்றது. செடிக்கு உரமிட்டு, நீர் ஊற்றி, களையெடுத்து, பாதுகாக்க வேண்டியது அவர்களின் கடமை. விதையின் வீர்யத்திற்குத் தக்கவாறு வளர்ச்சி இருக்கும்.  அதில் குற்றம் காண வேண்டிய அவசியமில்லை.

      திரு அனந்தகுமார் அவர்களுடன் பேசிக்கொண்டிருந்ததில் தற்காலத்தில் குருகுல முறை என்பதை நடைமுறைபடுத்த வேண்டுமானால் அதற்கு ஒரு மாதிரி பள்ளியை தன் உழைப்பினால் உருவாக்கியிருக்கிறார் என்பது புரிந்தது. ஏனெனில் அந்த கால குருவும் மாணவனின் தகுதியையும் குணநலன்களையும் மனதில் கொண்டே அவர்களின் திறமையை வெளிக் கொண்டுவரும் வகையில் பாடங்களை சொல்லிக் கொடுத்தனர் என்று படித்திருக்கிறோம்.

இவரை "Redeemer of the forgotten" என்றால் மிகையாகாது.