Sunday, December 22, 2013

இப்படியும் சிலர் !- மக்குத்திம்மன்

தில்லியில் சாமானியனின் கட்சி  [ஆம் ஆத்மி பார்ட்டி] பதவியேற்குமா இல்லையா என்பது நாளைக்கு தெரிய வருமாம் !
நம்பிக்கை அளித்து பதவிக்கு வந்த பல புதிய கட்சிகளும் அரசியல் விளையாட்டில் புகுந்த பின் பெருங்கடலில் கலந்து வித்தியாசம் இல்லாமல்  போகும் நதிகளை போலே தமது தூய்மையை இழந்து போய்விடுவதை  கடந்த நாற்பது ஐம்பது வருடங்களாக இந்திய அரசியலில் கண்டாயிற்று.
பதவி அல்லது அதிகாரம் தரும் மோகம், கடமை என்ற பொறுப்புணர்வை தூக்கி சாப்பிட்டு விடுகிறது.

சோ அவர்களின் முகமது பின் துக்ளக் நாடகம் சாகாவரம் பெற்று விட்டது

இதோ இப்படியும் ஒரு மனிதர்.


“ ஏழை ஜனாதிபதி என அழைக்கப்படுகிறேன். ஆனால் நான் என்னை ஒரு ஏழை எனக் கருதவில்லை. ஏழை என்பவன் யாரெனில் ஒரு படாடோபமான வாழக்கை முறையை நடத்துவதற்காக  முயன்று கொண்டிருப்பவனே ஆவான். அவனுக்கு எப்போதும் ஏதாவது தேவைகள் இருந்து கொண்டே இருக்கும்.”
                                                 --- ஜோஸ் முஜிகா -உருகுவே நாட்டின் ஜனாதிபதி

ஆம். தேவைகளைப் பெருக்கிக் கொள்ளுமளவும் நாம் ஏழைகளே. அதனால்தான் மக்குத் திம்மனும் இதற்கு முடிவு என்பது ஏது என்று வினவுகிறான்.

தேவை தேவை;அதுதேவை இது தேவை;எனக்கின் னொன்றும்
தேவை; என்று  கொந்தளித்து இருக்கும்  இப்பானை தனையே
தேவையென ஏனோ படைத்தான் பிரம்மனும்? போதும் இத்
தேவை செபம் என்பதும் எப்போதோ -மக்குத் திம்மா

சோற்றுப் பானையில் அரிசி வேகும் பொழுது தள தள என்று கொதிப்பது போல் மனம் எப்போதும் ஏதேனும் தேவைகளை நினைந்து கொந்தளிக்கும் இந்த உடல் என்னும் பானையை படைப்பதற்கான தேவை பிரம்மனுக்கு ஏன் ஏற்பட்டது என்று வேடிக்கையாக வினவுகிறார் கவிஞர்  DVG.