Tuesday, October 12, 2010

ஆப்பிரிக்க ஆக்கிரமணம்


[picture courtesy en-wikipedia ]

பெங்களூரில் இப்போது எங்கு பார்த்தாலும் இந்த ஆரஞ்சு வர்ணப்பூக்கள் இறைந்து கிடக்கின்றது. சாலை ஓரங்களில் நிழலுக்காகவும் அழகுக்காகவும் நடப்பட்ட இம்மரங்கள் துப்புறவுத் தொழிலாளர்களுக்கும் பல இல்லத்தரசிகளுக்கும் பெரும் தலைவேதனை.

வருடத்திற்கு இருமுறை பூக்கும், ஜனவரி -மார்ச்; செப்டம்பர்- நவம்பெர். இம்மரத்தின் பூக்கள் அளவில் செம்பருத்திப்பூ போல பெரிதாக இருக்கும்.

மரம் முப்பது அடிக்கும் மேல் உயரம் எட்டுவதால் பல வீட்டு மாடிகளிலும் இதன் பூக்கள் கொட்டிக்கிடக்கும். அதை கவனிக்காமல் விட்டால் மழைநீர் குழாய்களை அடைத்துக் கொண்டு மாடியில் நீர் தேங்க ஆரம்பித்துவிடும். இதனால் சுவரில் நீர் கசிந்து உட்சுவர்களில் ஈரம் படர ஆரம்பிக்கும்.
Madeira 2004 SPATHODEA CAMPANULATA

சரி வாசனையாவது உண்டா என்றால் அதுவும் இல்லை. பூஜைக்கும் பயன்படுவதில்லை. இது என்ன மரம் என்ற தேடலில் ஈடுபட்ட போது கிடைத்த சில தகவல்கள்.

இதன் பெயர் ஆப்பிரிக்கன் டூலிப் (African tulip ; spathodea campanulata). கன்னடத்தில் இதை "நீர்காயி மர" என்றும் சொல்வார்கள். மொட்டுகளுக்குள் நீர் நிரம்பி அதை அழுத்தினால் பீச்சியடிக்கும் குணம் உடையதால் அந்த பெயர். தமிழில் பட்டாடி (patadi) என்பதாகக் கண்டேன்

மரத்தின் விதைகள் அளவில் மிகச் சிறியன. ஒரு கிலோ விதையில் 129000 லிருந்து 300000 விதைகள் வரை இருக்கக்கூடுமாம். காற்றின் மூலம் விதைகள் எளிதாக பரவி விடும். இதில் உள்ள தேனை தேன் சிட்டு, எறும்புகள், தேனீக்கள் தேடி வருமாம். இதன் மகரந்தத்தில் உள்ள நச்சுத்தன்மையால் சில பூச்சிகள் மடிந்து போகுமாம்.

ஆப்பிரிக்காவில் இதன் விதைகளை உணவாகப் பயன் படுத்துகின்றனராம். அதேசமயம் அதில் உள்ள ஒரு நச்சுத்தன்மையை வெந்நீரில் கொதிக்க வைத்துப் பிரித்து மிருகங்களை வேட்டையாட அம்பின் நுனியில் காயவைத்து பயன்படுத்துவது உண்டு.

ஆப்பிரிக்க பழங்குடியினர் இதை மருந்தாகவும் பயன்படுத்துகின்றனராம். காய்ச்சல், நீரிழிவு நோய்களுக்கு மரத்தின் பட்டையை கொதிக்க வைத்து பயன்படுத்தலாம். தற்போது இதன் இலைகளிலிருந்தும் பூக்களிலிருந்தும் பிரிக்கப்படும் சில மூலக்கூறுகளுக்கு சரும வியாதிகளையும் புண்களையும் ஆற்றும் சக்தி உண்டு என்று கண்டறிந்துள்ளனர். ஆரம்ப நிலை மலேரியாவைத் தடுக்க மரப்பட்டையின் கஷாயம் வெகுவாக உதவுகிறது சமீபத்திய விஞ்ஞான சோதனைகள் தெரிவிக்கின்றன.

இந்த மரம் மிகவும் எளிதாக முறிந்து விழக்கூடியது. அதிகக் காற்றால் முறிந்து விழும் இதன் கிளைகள் பெங்களூர் வாகன நெரிசலில் நொந்து கிடக்கும் மக்களை மேலும் நோகச் செய்கிறது. அது அடுப்பெரிக்கக் கூட பயன் படுவதில்லை. எளிதில் தீப்பிடிக்காது.

ஆப்பிரிக்கன் டுலிப் என்ற இந்த மரத்தைக் கண்டு பல நாடுகள் மிகவும் பயப்படுகின்றன. வேகமாக பரவக்கூடிய தன்மையால் பிற மர வளங்களை அழித்து விடும் அபாயம் உண்டு என்று ஆஸ்திரேலியா, ஃபிஜி, ஹவாய், பிரேஜில் போன்ற நாடுகளில் இதன் பரவலைத் தடுக்க முன்னேற்பாடுகள் செய்து வருகின்றனர்.

நம்மவர்கள் என்ன செய்யப் போகிறார்கள்?. அதன் பயன்களை எண்ணிப்பார்த்து முறையாக பயன்படுத்திக் கொள்ள திட்டங்கள் வகுப்பார்களா அல்லது பிற மரங்களை அழிக்கும் வரை வேடிக்கைப் பார்ப்பார்களா ?