Thursday, July 29, 2010

கறையான் புற்றில் பாம்பு


(Thanks :photo courtesy :http://www.johnbutlerart.com)

மக்குத்திம்மன் கவிதைகள் # 302

இயற்கையின் விந்தைகளை எழுதித் தீராது.

கறையான்கள் கட்டும் புற்றுகள் பெரும் மழையிலும் காற்றிலும் எப்படிக் கரையாமல் உறுதியாக நிற்கின்றன ? அவைகளின் உமிழ்நீரில் வரும் அந்த பசைக்கு மண்ணை உறுதியாக பிணைக்கும் சக்திதான் என்ன !! அடிப்பக்கம் பெரிதாகவும் மேலே செல்லச் செல்ல குறுகியும், எத்தனை வருடங்கள் ஆயின்ம் நிலைபெயராத வகையில் அமைக்கும் கட்டிட வல்லமையை எப்படிப் பெற்றன? மனிதர்களை வெட்கப்படச் செய்யும் இணைந்து தொழிலாற்றும் ஒற்றுமையை எப்படிக் கற்றுக்கொண்டன ? கேள்விகள் நீண்டு கொண்டே போகின்றன.

அதே படைப்பில் காக்கையின் கூட்டில் முட்டையிடும் குயிலையும், கறையான் கட்டிய புற்றில் பாம்புகள் குடி போவதையும் காண்கிறோம். ஒரு சில ஜீவன்களுக்கு கொடுக்கப்பட்டத் திறமை ஏன் எல்லா ஜீவன்களுக்கும் ஒரே அளவில் கொடுக்கப்படவில்லை?

இப்படி ஏகப்பட்ட கேள்விகளுக்கு விடைகிடைக்காது. அப்படியே மனிதர்களிடையே உள்ள வேறுபாடுகளுக்கும் யாரும் விடைகாண முடியாது என்பதை மக்கு திம்மனின் இந்த பாடலில் காணலாம்.

சிறுசிறுத் துகளாய் கறையான் மண்சுமக்கும்
பெரு முனைப்புடனே அவைதம் புற்றமைக்கும்
கருநாக மொன்று அதிலே குடியேறும் -உழைப்போர்
பெருவாரி கதையிதுவே -மக்குத் திம்மா


இந்த பாடலின் உட்கருத்தாக DVG என்ன சொல்ல விழைகிறார் என்ற கேள்வி எழலாம். எனக்கு புரிந்த வகையில் சொல்வதனால்

உன் கடமை ஆற்றிக்கொண்டு இரு; பலன்களை கணக்குப் பார்க்காதே. ஏதோ ஒரு பெரிய காரணத்தால் நமக்கு விளங்காத வகையில் தெய்வம் தன் விருப்பத்தை நடத்திக் கொண்டு செல்கிறது. அப்படிப்பட்ட முரண்பாடுகள் கறையான் - பாம்பு போன்று இயற்கையிலும் உண்டு. எனவே ஒருவர் தன் உழைப்புக்கேற்ற பலன் கிடைக்கவில்லை என்றோ அடுத்தவன் தன் உழைப்பைத் திருடிவிட்டான் என்றோ புலம்பிக் கொண்டிருப்பதில் பயனில்லை என்ற உண்மை புரிந்தால் மகிழ்ச்சியை இழக்காமல் இருக்கலாம்”

என்பதே ஆகும்.

மொழியாக்க முயற்சி 2


துகள்துகளாய் கறையான் எறும்புகள் மண்ணைச் சுமக்கும்
பகலிரவாய் பூசி உழைத்துத் தம்கூடு சமைக்கும்
புகுமொரு விடசர்ப்பம் தன் புற்றாய் அதைக் கொள்ளும்
வெகுமனிதர் உழைப்பின் கதையிது -மக்குத் திம்மா