Tuesday, June 16, 2009

32 கேள்வி கேட்டாரு கே.ஆர்.எஸ்-ஸு

அண்ணன் பேச்சை தம்பி தட்டக்கூடாது .
கபீரண்ணன் ரவிசங்கர் கூப்பிட்ட பிறகு தம்பி கபீரன்பன் தட்ட முடியுமா?

என்னங்க இது? அவரு எப்படி அண்ணனாக முடியும் அப்படீன்னு என்னைத் தெரிஞ்சவங்க கேக்கிறது ஞாயந்தான். வலையுலகிலே, என்னையும் சேர்த்து, அவரு பலருக்கும் சீனியர்தான் பிரவேச காலத்தை வச்சுப்பார்த்தா!

ஆனா அது ஒண்ணுமாத்திரமில்ல நான் சொன்னதுக்கு காரணம் அவரே தன் பெயருக்குள்ள அதை ஒளிச்சு வச்சிருக்கிறார் பாருங்க. அவரு பேரு Kannabiran Ravishankar. கொஞ்சம் மாத்தி போட்டு படியுங்க Kabirannan Ravishankar :)))))

32 விளையாட்டில் அவரு என்னை இழுத்து விட்டப்புறம் எல்லாமே வெளையாட்டுதான்.

_______________________________________________________________________

1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?

எனக்கு கபீர்தாஸ் என்றே வைத்துக்கொள்ள ஆசை. ஆனால் மூலவர் பெயரும் கபீர்தாஸ் ஆகிவிட்டதால் சிறிது தமிழ்மணம் கமழட்டுமே என்று கபீரின் ’அன்பன்’ ஆகிவிட்டேன். நானே வைத்துக் கொண்டதால் பிடிக்காமலா போகும் !!

2. கடைசியாக அழுதது எப்பொழுது?

ரயிலில் பத்து அல்லது பன்னிரெண்டு வயதுடைய சிறுவன் அவன் இரு தங்கைகளுடன் ஒரு ஆர்மோனிய பெட்டியை வைத்துக் கொண்டு ‘ஏனேனோ ஆசே’ என்ற புகழ்பெற்ற கன்னடப் பாடலை பாடிக்கொண்டு வந்தான். அவனுடைய எட்டு வயது தங்கை அப்பாடலுக்கு அபிநயம் பிடித்தாள். மூன்றாவது குட்டி ஏதும் புரியாமல் அண்ணனுடைய சட்டையைப் பிடித்துக் கொண்டே மலங்க மலங்க விழித்துக் கொண்டிருந்தது. அவர்களுக்கு என்னென்ன ஆசைகள் இருக்கும்?

தினமும் ஐந்தாறு ஸ்டேஷன்கள் முன்னும் பின்னுமாக போய்வருவார்கள் போலும். அவர்கள் தாய் தந்தையர் எங்கோ! வறுமை எப்படியெல்லாம் மனிதனை விரட்டுகிறது. இப்படி இன்னும் எத்தனை லட்சக்கணக்கான ஜீவன்களோ அவர்களுடைய ஆசைகளும் கனவுகளும் அந்த மிகக் குறுகிய வட்டத்திலேயே முடங்கி விடுமோ? வழிக்காக கொடுக்கப்பட்டிருந்த தின்பண்ட பொட்டலத்தை அப்படியே அவர்களிடம் கொடுத்துவிட்டேன். நான் கொடுத்ததை அவர்கள் ஆசையாக தின்ற போது என்னையறியாமல் கண்களில் நீர் நிறைந்தது.

இன்னொரு முறை டயோடா-க்வாலிஸ் ஒன்றில் ஊரிலிருந்து வந்திருந்த தமிழறியாத அன்பர்களுடன் முண்ணாறு போய்க் கொண்டிருந்தோம். கெஸட்டிலிருந்து ‘உன்னையே கதியென்றடைந்தேன் தாயே’ என்று ஜெயஸ்ரீயின் அமுதமான குரலில் பாடல் வந்த போது அதன் பொருளை கேட்டார் உடன் வந்திருந்த அம்மையார். வரிக்கு வரி அதன் பொருளை கன்னடத்தில் சொல்ல ஆரம்பித்தேன். ’சின்னதனம் செய்து சித்தம் மிக வாடி’ என்பதன் பொருள் சொன்னவுடனயே அவர் கண்களில் குபுக் என்று நீர் வந்துவிட்டது. அதைக் கண்டதும் என் கண்களிலும் நீர் வந்து தொண்டை கம்மி மேலே பேச முடியாமல் போனது. உண்மையில் அந்த ராகமும் பாவக்குழைவும் ஏற்கனவே மனதை கரைத்து விட்டிருந்தது. பொருள் சொன்னதும் அவரால் மனநெகிழ்ச்சியைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

[என்ன இது ! ரெண்டாவது கேள்வியிலேயே அழுகையா? எப்போ சந்தோஷமா இருந்தே அப்படீன்னு ஒரு நல்ல கேள்வி கிடைக்கலையா. கேக்காத கேள்விக்கு பதில் எழுதினாலும் மார்க் போட மாட்டாங்க துளசி டீச்சர், கீதா மேடம். சரி ஒண்ணு என்ன ரெண்டு அழுகை கதையே சொல்லிட்டேன். பாத்து செய்யுங்க ]

3. உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

பிரமாத பீத்திக்கிற மாதிரியெல்லாம் இல்லை! தலையெழுத்து மாதிரி அதுவும் ரொம்ப சாதாரணம், மோசமில்லை.
கடைசி கேள்விக்கான பதிலில் சாம்பிள் கையெழுத்து இருக்கு !:)))

4. பிடித்த மதிய உணவு என்ன?


சுத்த சைவம் எதுவாயினும் சரி.

5. நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

வேறு யாருடனாவது ??? அப்படீன்னா. புது ஆளுங்கள சொல்றீங்களா ? நான் ரிசர்வ்ட்-டும் இல்லை; அதுக்குன்னு யாரு மேலேயும் விழுந்து ஃப்ரண்ட்ஷிப் தேடறதும் இல்லை. விரும்பி பேசறவங்ககிட்ட ரொம்ப ஆர்வமா இணக்கமா பேசுவேன். அதுக்கப்புறம் நட்பை தொடர்வது அவர்களைப் பொறுத்தது.

6. கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

அருவிதான். கடல்ல குளிச்சு ரொம்ப வருஷமாயிடுச்சு

7. முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

என் மனதில் படிவது அவங்க பாடி லாங்க்வேஜ்

8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?

a)எதையாவது உருப்படியா செய்யணும்-ன்னு விடாம- இருக்கிறத வச்சுகிட்டு -எதையாவது செஞ்சுக்கிட்டு இருக்கிறது. இது பிடிச்சது.

[உதாரணம் பக்கத்தில (side Bar)இருக்கிற உலகநீதி கேட்ஜட் -ஐ விழுந்து எழுந்து எப்படியோ ஒரு வழியா இப்பதான் செஞ்சு முடிச்சேன். பிடிச்சிருந்தா இருந்தா உங்க வலைப் பக்கத்திலேயோ igoogle பக்கத்திலோ நீங்களும் பொருத்திக்கலாம்]


b) பிடிக்காததுன்னு கேட்டா ’என் உலகத்திலேயே’ இருந்துகொண்டு பல விஷயங்களை கவனிக்காம விட்டுடறது

9. உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

பாவங்க! அவங்க அப்பாவி. அவங்களை நம்ம வம்புல ஏன் இழுக்கணும் :))

10. யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?

பல வருடங்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சி.
அமீரகத்திலிருந்து ஒரு எதிர்பாராத தரைவழி அஞ்சல் (மின்னஞ்சல்கள் இல்லாத காலம்) அலுவலக முகவரிக்கு வந்தபோது பெரும் சந்தோஷப்பட்டேன். எழுதியிருந்தது என் நெருங்கிய பள்ளித்தோழன். தொடர்பு விட்டுப்போய் பத்து வருடங்களுக்கு மேல் ஆகி விட்டிருந்தது. எனக்கு கிடைத்திருந்த ஒரு விருதை பத்திரிக்கையில் படித்து மகிழ்ச்சியுடன் பாராட்டி (தனக்கு மகன் பிறந்த சந்தோஷத்தையும் சொல்லி) அரைகுறை விலாசத்துடன் அவன் எழுதிய கடிதத்தை இன்னமும் பத்திரப் படுத்தி வைத்திருக்கிறேன். அடுத்த முறை சென்னை வரும் போது கண்டிப்பாக சந்திக்கலாம் என்று எழுதியவனை சந்திக்க முடியாமலே போய்விட்டது. அவன் போய் மூன்று வருடங்களுக்கு பின்னரே எனக்கு விஷயம் தெரிய வந்தது.

இப்போது அவன் பக்கத்துல வரவே முடியாது என்ற நினைவு அடிக்கடி என் நெஞ்சை பாரமாக்கும்.

11. இதை எழுதும் போது என்ன வண்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?

வெள்ளை

12. என்ன பார்த்து//கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

தொலைக்காட்சியில் ஏதோ எம்.ஜியார் படம் ஓடிக்கொண்டிருக்கிறது. மனதில் ஒட்டவில்லை.
நடிகர் அசோகன் எம்.ஜி.யாருக்கு எலிப்பாஷாணம் பற்றி ஏதோ விளக்கிக் கொண்டிருக்கிறார்

13. வண்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
பிடிச்ச வர்ணம் அப்படீன்னே கேட்டிருக்கலாமே ! நான் ஏன் பேனாவா மாறணும்.
எனக்குப் பிடிச்ச வர்ணம் நீலப்பச்சை (Bluegreen).

14. பிடித்த மணம்?
பெங்களூருக்கே உரிய சம்பகா . இப்போதெல்லாம் மரங்கள் குறைந்துவிட்டன. நான் சிறுவனாக இருந்த போது சாலையில் நடக்கும்போதே நம்மை பற்றிக்கொள்ளும் அந்த மணம்.

15. நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?

அவர்கள் தொந்தரவு என்று நினைக்காத பட்சத்தில்

நினைவின் விளிம்பில் - கவிநயா : குழந்தைகளுக்கான பாடலாகட்டும், அம்மன் கவிதைகளாகட்டும் மிக எளிய வார்த்தைகளில் மனம் கவரும் வண்ணம் எழுதும் திறமை படைத்தவர். நல்ல சிறுகதைகள் படைக்கும் ஆற்றல் உள்ளவர்.

பக்தியே பிரதானமாகக் கொண்டு மிகுந்த சிறப்பான இடுகைகளை இட்டு வருபவர் மதுரையம்பதி. இவருக்கும் அம்மனை ரொம்ப பிடிக்கும் போலிருக்கிறது. பல ஆசாரியர்கள் மற்றும் ஞானிகளைப் பற்றிய இவரது இடுகைகளும் மனம் தொடுபவையாக இருக்கும்.

முகமூடிக் கவிதைகள் என்று ஒரு theme based approach-ல் வடிகால் வலைப்பூவில் கிருத்திக்கா அவர்கள் நன்றாக செய்து வருகிறார். அப்படி மையக் கருத்தை வைத்து எழுதுபவர்கள் மிகவும் குறைவு. இவருடைய கதைகளும் அனுபவங்களும் கூட நல்ல நடையில் யதார்த்தமாக சொல்லப்பட்டிருக்கும்.

ஜீவாவுக்கு அறிமுகம் தேவையில்லை. இசையின்பத்திலும் ஆத்ம போதத்திலும் வாசகர்களை முக்கி தோய்த்து எடுப்பவர். இவருடைய இடுகைகளில் மொக்கை ரகமே இருக்காது. அவருடைய உழைப்பு அவர் சொல்ல வரும் கருத்துகளில் நன்கு புலனாகும்.

16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு?

கே.ஆர்.எஸ் எதை எழுதினாலும் அக்குவேறு ஆணிவேறாய் பிரிச்சுப் பார்த்துட்டுதான் மறு வேலை பார்ப்பார் என்பது அவருடைய காரைக்கால் அம்மையார் மற்றும் ஆண்டாள் பதிவுகளை படித்தாலே புரியும்.

காரைக்கால் அம்மையார் பதிவுக்கு தமிழ்மணம் விருது கிடைத்ததில் ஆச்சரியம் ஏதுமில்லை.

17. பிடித்த விளையாட்டு?

கொஞ்சம் சதுரங்கம், கொஞ்சம் பாட்மிண்டன். கூடைப்பந்து ஆடுபவர்களின் லாவகத்தையும் வேகத்தையும் ரசித்துப் பார்ப்பேன்

18. கண்ணாடி அணிபவரா?
ஆமாம், 16 வயதிலிருந்து. பொன்னியின் செல்வனை ஒரே மூச்சில் படித்ததால் வந்ததென்று திட்டு வாங்கியிருக்கிறேன் !

19. எப்படிப் பட்ட திரைப்படம் பிடிக்கும்?

பொதுவாக நகைச்சுவை படங்கள்.

20. கடைசியாகப் பார்த்த படம்?
குடும்பத்துடன் திரையரங்கில் பார்த்தது ‘தாரே ஜமீன் பர்’

21. பிடித்த பருவ காலம் எது?

காலங்களில் அது வசந்தம்

22. என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?

கொஞ்ச நாளா Power of Now என்ற புத்தகத்தை வைத்துக்கொண்டு இங்குமங்குமாக பக்கங்களை புரட்டிக் கொண்டிருக்கிறேன்

23. உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
எதுவும் வச்சுகிறது கிடையாது. ஹெச்.பி கொடுத்த ஒரிஜினல் செட்டிங் அப்படியே இருக்கு

24. பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?
பறவைகளின் கீச்சு மூச்சு சத்தம் பிடிக்கும்.
பிடிக்காதது மிக்ஸி

25. வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

பெங்களூருக்கு ஹாங்காங் தூரமா ஜெனிவா தூரமா ?

26. உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

தனித் திறமை என்று என்னத்தை சொல்றது, நான் செய்யிற எல்லாத்தையும் மிக மிக சிறப்பா செய்யிறவங்க நிறைய பேர் இருக்காங்களே !!

27. உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

என்னைப் பார்த்து யாராவது பயப்படுவது.

28. உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

கார் ஓட்டிக் கொண்டிருக்கும் போது ஏதாவது சாலை நிகழ்வோ,தொலைபேசியோ அல்லது சகப் பிரயாணிகளின் பேச்சோ எரிச்சலடைய வைத்தால் உடனே வண்டியின் வேகம் கூடி விடும். தேவையில்லாமல் முன்னே போகும் வண்டிகளை முந்திக் கொண்டு போக முனைவேன். இது ஏனென்று புரியவில்லை. சொன்ன மாதிரி ஏதோ சாத்தானாயிருக்குமோ !

29. உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

இனிமேலத் தான் கண்டுபிடிக்கணும்

30. எப்படி இருக்கணும்னு ஆசை?

பெரிய ஆசை எல்லாம் ஒண்ணும் இல்லை. உள்ளதே போதும்

31. மனைவி இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?
விரும்பி செய்வது என்று இல்லை. நிர்பந்தத்தால் செய்வது சமையலறை பிரவேசம்.

32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?

Life should be like a snow flake. Leave a mark but not a stain.

நான் சொல்லவில்லை சினா-சோனா தான் சொல்றாரு.
[கையெழுத்து நிபுணர்கள் பெரிசு பண்ணி பார்த்து என்னைப் பற்றி
எனக்கு தெரியாத விஷயங்கள் இருந்தால் சொல்லவும் :)))) ]


________________________________________________________________________
பொறுமையா படிச்சதற்கு நன்றி

ரவியண்ணன் கொடுத்த பொறுப்பு நிறைவேறியது. சுபம்