Tuesday, October 14, 2008

ஒரு பர்ஸெண்ட் பகவத்கீதை- சப்த ஸ்லோகி கீதா

குமுதம் ஆசிரியர் எஸ் ஏ பி அண்ணாமலை சாமான்யர்களோடு பஸ்ஸில் பயணம் செய்வார்.திரைப்படம் பார்ப்பார்.எப்போதும் திரைமறைவிலிருந்து வந்தார். இவைகள் அவருடைய அரசு கேள்வி பதில் பகுதியை மிக சுவாரசியமாக்கியது. அவர் அதே அளவு ஆர்வத்துடன் பகவத் கீதை படித்ததை அவருடைய ஆசிரியர் குழுவில் ஒருவர் பின்னாளில் நினவு கூர்ந்திருந்தார். எனக்கு இதை படித்த போது ஆச்சரியமாயிருந்தது. என் கணிப்பில் வெகு ஜன ரசனைக்காக வெளிவந்த பத்திரிக்கை குமுதம் என்பதே. அதில் பலமுறை மலின ரசனைக் கதைகளையும் துணுக்குகளையும் கண்டு அதை படிப்பதையே நிறுத்திவிட்டேன்.

தனி மனிதத் தேடல் வேறு (ஜீவியின் தொடரை படித்து வருகின்றீர்களா ?), வியாபாரப் போட்டி வேறு என்று அவர் நினைத்தாரோ என்னவோ! யாவருக்குள்ளும் ஆன்மீகம் என்பது நீறு பூத்த நெருப்பாக இருக்கும். நேரம் வரும் போது ‘பக்’கென்று பிடித்துக்கொள்ளும்

மஹாராஷ்ட்ராவைச் சேர்ந்த காக்டே என்பவர் ஒரு மருத்துவர். ஷிரடி சாயியின் பெரும்பக்தர். அவர் தமது வாழ்க்கையில் ஏற்பட்ட பல நிகழ்ச்சிகளையும் ஒரு ஆன்மீகக் கண்ணோட்டத்துடன் தம்முடைய சுயசரிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அதில் அவருக்கு பால்ய வயதில் ஆன்மீகத்தில் பற்று ஏற்படக் காரணமாயிருந்த ஒரு பெண்மணியைக் குறிப்பிட்டு அவர் ஊரைவிட்டு பிரியும் முன்னர் தினம் குறைந்தது ஐந்து பகவத்கீதை சுலோகங்களையாவது படிப்பேன் என்று வாக்குறுதி வாங்கிக் கொண்டார் என்று சொல்கிறார். பின்னர் வாழ்நாள் முழுவதும் அதை விடாமல் காப்பாற்றி வந்ததாகவும் அதுவே பல சமயங்களில் தனக்கு மனவுறுதியும் உற்சாகமும் கடமையில் ஈடுபாடும் தந்ததாக விவரித்திருந்தார்.

இதை படித்த உடன் ”சப்த ஸ்லோகி கீதா” என்று கீதா ப்ரஸ் கோரக்பூர் அவர்களின் புத்தக பதிப்பில் ஒன்றை பார்த்தது நினைவுக்கு வந்தது. காக்டே அவர்கள் போல் கீதையை தொடர்ந்து படிப்போமோ இல்லையோ குறைந்தது அந்த ஏழு சுலோகங்களையாவது கற்றுக்கொள்வோமே என்ற எண்ணம் தோன்றியது. அதை எழுதி வைத்து தொடர்ந்து பலவருடங்களாக, தினம் இல்லாவிட்டாலும், வாரம் மூன்று நான்கு முறை சொல்லி வருகிறேன்.

பின்னர் பலருடன் பகிர்ந்து கொள்ளும் நோக்கத்துடன் அதை ஒலி ஒளி வடிவில் பவர் பாயிண்ட் கோப்பாகத் தயாரித்து 2003-ல் ஜியோசிடி இலவச பக்கங்களில் வலையேற்றி கொஞ்ச நாளில் அதை மறந்தும் போனேன்.

இப்போது தமிழ் வலைப்பூ அன்பர்களுடன் அதை பகிர்ந்து கொள்ளும் நோக்கத்துடன் esnip சேகரிப்பு பகுதியில் சேர்த்துவிட்டு இணப்பை இங்கே தருகிறேன். ஒரு சில கணிணிகளில் ஒலிவடிவம் வேலை செய்வதில்லை என்று கேள்விப்பட்டேன். விண்டோஸ் 98 வைத்து உருவாக்கியது. இப்போது என் விண்டோஸ் எக்ஸ்-பியிலும் ஒலி வேலை செய்யவில்லை. யாருக்காவது வேலை செய்தால் சந்தோஷம்.

ஏழு சுலோகங்களைத் தொடர்ந்து எட்டாவது சுலோகமும் ஒன்றை இணைத்திருக்கிறேன். அதை பலஸ்ருதி என்பர். படித்ததன் பலனை நினைவிலிருத்திக் கொள்ளச் சொல்லப்படுவது. இறைவனிடம் ஒரு அப்ளிகேசன் அவ்வளவுதான். கோளறு பதிகத்தின் கடைசியில் சம்பந்தர் சொல்வாரே

“தானுறு கோளு நாளும் அடியாரை வந்து நலியாத வண்ணம் உரைசெய்,
ஆன சொன் மாலை ஓதும் அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே”

என்பதும் தேவராய சுவாமிகள் சொல்லும்

.......
கந்தசஷ்டி கவசம் விரும்பிய
பாலன் தேவராயன் பகர்ந்ததை
காலையில் மாலையில் கருத்துடன் நாளும்
..............
கந்தர்சஷ்டி கவசம் இதனைச்
சிந்தைகலங்காது தியானிப்பவர்கள்
...................
திசைமன்னர் எண்மர் சேர்ந்தங் கருளுவர்
மாற்றலர் எல்லாம் வந்து வணங்குவர்
நவகோள் மகிழ்ந்து நன்மை அளித்திடும்
........

எல்லாம் பலஸ்ருதியே.

பலனைக் கருதாது கடமையைச் செய்யவேண்டும் என்றாலும் கடவுளிடம் இறைஞ்சுதலிலும் பெருமை போற்றுவதிலும் தவறில்லை போலும்!

பகவத் கீதையை படிக்க ஆர்வமிருந்தும் நேரம்,சூழ்நிலை அனுகூலமில்லாதவர்கள் குறைந்த பட்சம் இந்த ஏழு சுலோகங்களை படித்து மனநிறைவு அடையலாம். ஆன்மீகம் எனும் கனலை அணைந்து விடாமல் அது பாதுகாக்கும். இப்படி ஆர்வத்தை பாதுகாத்தால் காலம் கனியும் போது கீதை முழுவதும் படிக்க இறைவன் வழி செய்வான்.

வாழ்க வளர்க

தரவிறக்கம் செய்ய கீழுள்ள இணப்பைச் சுட்டவும்.

பகவத்கீதை  எளிமையாக