Sunday, May 25, 2008

தூசி மூடிய வைரங்கள்

”எத்தனை பெரிய மனிதனுக்கு எத்தனை சிறிய குணமிருக்கு” என்பது ஒரு திரைப்படப் பாடலின் முதல் வரி. இரண்டாவது வரி நினைவிருக்கா ?

சமீபத்தில் படித்த ஒரு உண்மை நிகழ்ச்சி எனக்கு அந்த இரண்டாவது வரியை நினைவூட்டியது. நிகழ்ச்சியைச் சொன்னவர் யாரென்பதை நீங்களே கண்டுபிடித்து விடுவீர்கள். எனினும் கட்டுரையின் கடைசியில் விவரத்தை தந்து விடுகிறேன். இப்போது அந்த உண்மை நிகழ்ச்சி, சொன்னவருடைய மொழியில்.
_____________________________________________________

பெங்களுர் குடிசைப் பகுதி குழந்தைகளுக்கென தேவைப்பட்ட பாட புத்தகங்களை ஷேக் முகமதுவின் கடையில்தான் வாங்குவது வழக்கம். அவருடையது மிகச் சிறிய கடை. எங்கள் அலுவலகத்தின் அருகிலேயே இருந்தது. அவர் மொத்ததில் கொடுத்த புத்தகங்களுக்கான காசோலை தயாரானதும் அவருக்கு விவரம் தெரிவிப்போம். அவர் வந்து வாங்கிச் செல்வார். அதுவே அவருடன் எனக்கிருந்த தொடர்பு.

ஒருமுறை அவ்ர் காசோலை வாங்கிச்செல்ல வந்த போது அலுவலகத்தில் ஒரு கொண்டாட்டம் நடந்து கொண்டிருந்த்தது. எல்லோருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. அவருடையதை அவர் பையில் பத்திரப்படுத்திக் கொண்டார்.

“என்ன ஷேக் ! நீங்க சாப்பிடமாட்டீங்களா? சர்க்கரை தொந்தரவா?” என்று கேட்டேன்.
ஷேக் சொன்ன பதில் சற்றே மகிழ்ச்சிக்குரிய ஆச்சரியமாயிருந்தது.

”இல்லை மேடம், வீட்டில் குழந்தைகளுக்கு இனிப்பு பிடிக்கும்”.
ஷேக் மிகவும் கூச்ச சுபாவம் உடையவராதலால் அவரைப் பற்றிய குடும்ப விவரங்கள் எனக்கு எதுவும் தெரியாதிருந்தது.
“உங்களுக்கு எத்தனைக் குழந்தைகள்”
“எனக்கு ஒரு மகள். அப்புறம் என் தங்கையின் மகள். ஆக இரண்டு குழந்தைகள்”
“தங்கையின் பெண் ஏன் உங்களோடு இருக்கிறாள்?”
“தங்கை சுபைதா கணவனை இழந்த பின் இருவரும் என்னோடு தான் இருக்கிறார்கள்”
அவ்வளவு சிறிய கடை வைத்திருக்கும் ஷேக்கிற்கு இது உண்மையிலே பெரிய பொறுப்புதான். சமாளிப்பது கடினம் என்று தோன்றியது.


“சுபைதா ஏதாவது வேலை பார்க்கிறாளா ?” என்று கேட்டேன்.


“ ஓ தையல் வேலை நன்றாகத் தெரியும். அவளும் என் மனைவியுமாக வீட்டிலிருந்தே துணி தைத்துக் கொடுத்து சம்பாதிக்கிறார்கள். கூடவே கடையிலிருந்து என் வருமானம். எல்லாம் சேர்ந்து நல்ல முறையில் போய்க் கொண்டிருக்கிறது. எங்களுக்கு போதுமானதாக உள்ளது.”

அவருடைய எளிமை என் மனதைத் தொட்டது. எத்தனைப் பேர் இன்றைய உலகில் போதும் என்ற மனதோடு வாழ்க்கை நடத்துகின்றனர். அதன் பிறகு பல மாதங்கள் சென்று விட்டன.


ஒருநாள் ஷேக் என்னிடம், 'வழக்கத்தை விட முன்னதாகவே காசோலை தர முடியுமா' என்று தொலைப் பேசியில் வேண்டுகோள் விடுத்தார். ”என்ன ஷேக் ? ஏதும் அவசர தேவையா?” என வினவினேன்.

“ஆமாம் மேடம். சுபைதாவுக்கு புற்றுநோய் என்று தெரிய வந்தது. அதற்கான அறுவை சிகிச்சை நாளை ஏற்பாடு ஆகியிருக்கிறது. அதனால்தான் பணத்திற்கு சற்று அவசரம்.” காசோலையை அன்றே வந்து பெற்றுக்கொள்ளும்படி கூறினேன். அவருடைய நிலைக்கு இத்தகைய அறுவை சிகிச்சை செலவுகள் மிகவும் அதிகப்படியாகத்தான் இருக்கும். இருந்தும் அவர் தனக்கு சேர வேண்டிய தொகையை மட்டுமே கேட்டுக்கொண்டார்.

இன்ஃபோஸிஸ் பவுண்டேஷன் துவங்கியதிலிருந்து நான் பலவித மனிதர்களை சந்தித்திருக்கிறேன். வைரக்கம்மல்களை கைப்பையில் வைத்துக்கொண்டு ஏழைகள் உதவிக்கென பணம் திரட்டுபவர்கள், வசதியிருந்தும் குழந்தைகள் படிப்பிற்கென உதவி தொகை வேண்டி விண்ணப்பிபவர்கள், பெற்ற தந்தையையே அனாதை என்று முதியோர் விடுதியில் சேர்க்க உதவி கோருபவர்கள் இப்படி பலப்பல.

நான் ஷேக்குடன் மீண்டும் பேசினேன். “ஷேக், உங்களுக்கு அறுவை சிகிச்சைக்கான பணம் முழுவதும் ஏற்பாடு ஆகிவிட்டதா ?”

”சுபைதா மற்றும் என் மனைவியின் நகைகளை விற்றுவிட்டேன். சிறிது வங்கி மூலமும் கடன் கிடைத்துள்ளது”


“ஷேக் ! எங்களிடம் கேட்டிருக்கலாமே?”


“ மேடம், ஏதோ இந்த சக்தியாவது எங்களுக்கு இருக்கிறது. என்னளவுக்குக் கூட வசதியில்லாதவர்களுக்கு உங்கள் உதவி சேர வேண்டியதுதான் முறை என்று நினைக்கிறேன்”

அவரது பதில் என் உள்ளத்தைத் தொட்டது அடுத்த நாளே காலையில் சிகிச்சைக்கான பத்திரங்கள் எல்லாவற்றையும் எடுத்து வரச் சொன்னேன். காலையில் முதல் வேலையாக அவருக்கு ஐம்பதாயிரம் ரூபாய்களுக்கான காசோலை ஏற்பாடு செய்தேன். அதை மிகுந்த தயக்கத்துடன் பெற்றுக்கொண்ட ஷேக், “ இது மிகவும் பெரிய தொகை....... நான் எதிர்பாராத உதவி. நீங்கள் ஆசீர்வாதிக்கப் படுவீர்களாக” என்று சொல்லி விடை பெற்றுக்கொண்டார்.

சிலதினங்களுக்குப் பிறகு அறுவை சிகிச்சை நல்ல முறையில் நடை பெற்றதாக ஷேக்கிடமிருந்து தகவல் வந்தது. அதன் பிறகு வெகு நாட்களுக்கு வேறெதுவும் தகவல் இருக்கவில்லை.

ஒருநாள் அலுவலகத்தில் நுழையும் போது வரவேற்பு நாற்காலியில் நான்கு வயது மதிக்கத்தக்க ஒரு சிறுமியுடன் ஷேக் எனக்காக காத்திருப்பதைக் கண்டேன். அச்சிறுமி தலைக்கு எண்ணெய் தடவி சீவி 'போனி டெயில்' கட்டப்பட்டு எளிமையான பருத்தி ஆடையில் காட்சியளித்தாள்.


“எப்படி இருக்கீங்க ஷேக் ? சுபைதா எப்படி இருக்காங்க” என்று விசாரித்தேன் நான். ஷேக்கின் முகம் களையிழந்தது. “ எவ்வளவோ வைத்தியம் பாத்தும் உங்க உதவிக்கப்பறமும், சுபைதா பிழைக்கவில்லை. சுமார் பதினைந்து நாள் முன்பு தான் தவறி விட்டாள். அது அல்லாவுடைய விருப்பம். இது அவளுடைய மகள் தபஸ்ஸும்” என்று அந்த சிறுமியை அறிமுகம் செய்தார் ஷேக்.

நான் தபஸ்ஸும் பக்கம் பார்த்தேன். அவளிடம் ஒரு மிரட்சி தெரிந்தது. தனக்கு பழக்கமில்லா ஒரு சூழ்நிலையில் பலரும் வருவதும் போவதுமாக இருந்த அலுவலகம் சற்றே விநோதமாயிருந்திருக்க வேண்டும். அவளுடைய தயக்கத்தைப் போக்க பிஸ்க்கோத்து தட்டை நீட்டினேன்.

ஒன்றை எடுத்துக்கொண்டாள். பின்னர் கூச்சத்துடன் “இன்னொண்ணு எடுத்துக்கலாமா? அமீனாவுக்கு? “ என்று கேட்டாள். “கண்டிப்பா கொண்டுபோ “ என்று புன்னகையுடன் சொன்னேன்.
அமீனா ஷேக் முகமதுவின் மகள்.

“பேடி அம்மீ நே போலா தா நா? இன்கோ கோ ஸலாம் கரோ” என்றார் அவளுடைய மாமா.
(குழந்தெ ! அம்மா சொல்லியிருந்தாங்க இல்லெ இவங்களுக்கு வணக்கம் சொல்லு ) பிஸ்கத்துகளை வைத்து விட்டு மிக தெளிவான உச்சரிப்பில் “மேடம் ! அம்மீ கா ஸலாம்” என்று கூறினாள் (”மேடம் என் அம்மாவுடைய வணக்கங்கள்” ).

எனக்கு பேச வார்த்தைகள் வரவில்லை. ஷேக் தன் கண்ணீரை துடைத்துக் கொண்டார். தன்னிடமிருந்த பையிலிருந்து ஒரு உறையை எடுத்து “மன்னிக்க வேண்டும். இதை சேர்ப்பிப்பதில் சற்று தாமதமாகி விட்டது” என்று சொல்லிக் கொண்டே கொடுத்தார். பிரித்துப் பார்த்தேன். அதில் மூவாயிரம் ரூபாய்கள் இருந்தது. ஒன்றும் புரியாமல் ஷேக்கைப் பார்த்தேன்.


“ நீங்கள் கொடுத்த ஐம்பதினாயிரத்தில் நாற்பத்தியேழாயிரம் சுபைதாவின் அறுவை சிகைச்சைக்காக செலவானது. வீடு திரும்பியதுமே அவளுக்கு புரிந்து விட்டது தான் பிழைக்கப் போவதில்லை என்பது. மேலும் அந்த பணத்தை தன் வைத்தியத்திற்கு செலவு செய்வது வீண் என்று நினைத்து மீதி பணத்தை தங்களிடம் திருப்பிக் கொடுத்துவிட விருப்பப்பட்டாள். வேறு யாராவது ஏழையின் வைத்திய செலவுக்கு பயன்படட்டும் என்று மேடத்திடம் தெரிவித்து விடு என்று கூறினாள். உங்களை நேரில் சந்தித்து தன் மரியாதையை செலுத்த விருப்பப் பட்டிருந்தாள். ஆனால் அல்லாவின் விருப்பம் வேறாக இருந்தது. அவள் இறுதி விருப்பத்தை பூர்த்தி செய்வதாக வாக்களித்தேன்”.

நான் வாயடைத்து அமர்ந்திருந்தேன். சுபைதாவை நான் சந்தித்தது கிடையாது. மரணத்தின் தருவாயிலும் அவள் காட்டிய பெருந்தன்மை என்னிடமிருந்து பேசும் சக்தியை பறித்துக் கொண்டுவிட்டது.

தனது வறுமை மற்றும் நோயின் துயரத்தையும் மீறி அதைவிட அதிக அவசியமுள்ளவர்களின் நிலை குறித்து கவலைப்படும் அந்த விசால இதயம் படைத்தவளின் மேன்மையை என்ன சொல்வது. என்னை நேரில் சந்திக்க விருப்பம் இருந்தது. அது முடியாது என்று புரிந்ததும் தன் மகளை அனுப்பி வைத்திருக்கிறாள். அதன் மூலம் தன் சிறப்பான பண்பை தபஸ்ஸும் பெறுவதற்கு வழி வகுத்தாள். தபஸ்ஸும் அப்படியே சிறப்பான பண்புகளுடன் வளருவாள் என்பதில் சந்தேகம் கிடையாது.
( ”அந்த இரண்டாவது வரி : எத்தனை சிறிய பறவைக்கு எத்தனைப் பெரிய அறிவிருக்கு” . TMS பாடியது. ஏழைகளே ஆனாலும் தந்நலமில்லா வாழ்வு வாழ முடியும் என்பதற்கு சுபைதாவும், ஷேக் முகமதுவும் சான்று )

பணமிருந்த உறையைப் பார்த்தேன். “இது தபஸ்ஸுவின் எதிர்காலத்திற்காக. அல்லா அவளுக்கு நல்லதே செய்வார். நன்றாகப் படிக்கட்டும். அவள் படிப்பிற்காக இன்னும் தேவைப்பட்டால் தெரிவியுங்கள். ஆனால் அவளுடைய தாயின் பெருங்குணத்தையும் அவளுக்கு நினைவூட்டிக் கொண்டிருங்கள். ஏனெனில் இந்த பூமியில் நிறைய சுபைதாக்கள் தேவை”. தன் விரிந்த விழிகளில் ஏதும் புரியாதவளாக தபஸ்ஸும் அமைதியாக அமர்ந்திருந்தாள். ஒரு நாள் தன் தாயாருடைய பெருங்குணத்தை அவளும் புரிந்து கொள்வாள் என்பதில் ஐயமில்லை.

ஆங்கில மூலம்:
நமஸ்தே -ஸலாம், பக்கம் 101, Wise & Otherwise, Sudha Murthy, Penguin Books 2006
ISBN 0-14-304222

________________________________________________________________


சுதா மூர்த்தி கணிணி துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். ஆசிரியர். ஆங்கிலத்திலும் கன்னடத்திலும் நாவல்கள், சிறுகதைகள், பயணக்கட்டுரைகள் என்று தொடர்ந்து எழுதும் எழுத்தாளர். அவருடைய புத்தகங்கள் 150000 பிரதிகளுகும் மேலாக விற்பனை ஆகியுள்ளன, பல மொழிகளிலும் வெளியிடப்பட்டுள்ளன,
இன்போஸிஸ் தொண்டு நிறுவனத்தின் தலைவர். பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டில் மிக்க அக்கறை கொண்டவர்.


இலக்கியத் தேன்

Join List Next

alt-webring.com

Saturday, May 17, 2008

சர்வர் சுந்தரமும் சினா-சோனா வும்

ஓடியோடி உழைக்கணும்
ஊருக்கெல்லாம் கொடுக்கணும்

அப்படிங்கற சினிமா பாட்டு கேக்கறதுக்கு ரொம்ப நல்லாத்தான் இருக்கு. முதல் வரி சரிதான். எல்லோரும் ஆலா பறந்து நாலு காசு சேர்க்கறதுக்கு ரொம்பதான் கஷ்டப் படுறோம்.

ஆனால் அடுத்த வரி... அதுதாங்க அந்தகாலத்துலேந்து இடிக்குது.
சரி சம்பாதிச்சா சந்தோஷமா செலவாவது பண்ணத் தெரியுதா? அதுவும் கிடையாது.

பணத்தை சம்பாதிக்கிறதுக்கும் அதுக்கப்புறம் உள்ள கஷ்டத்தையும் இந்த பழைய தமிழ் பாட்டுல சொல்றத பாருங்க :

ஈட்டலும் துன்பம், ஈட்டிய ஒண் பொருளைக்
காத்தலும் ஆங்கே கடும் துன்பம் - காத்தல்
குறைபடில் துன்பம், கெடில் துன்பம் துன்பக்கு
உறைபதி மற்றைப் பொருள். (நாலடியார் -280)

செல்வத்தைச் சம்பாதித்தல் ஒருவகை துன்பம்.
தேடிச் சேர்த்த அப்பொருளை காப்பாற்றுவதும் துன்பம்.
காத்த அச்செல்வம் குறைந்தால் துன்பம்
காணாமல் போய்விட்டாலோ துன்பமே
இப்படி எல்லாவிதத்திலும் துன்பத்துக்கே உறைவிடம் ஆகும் (நாம் ஈட்டும்) செல்வம்


இதையே சினா-சோனாவும் நச்சுன்னு சொல்லியிருக்காரு பாருங்க.



"Riches are Gotten with Pain, Kept with Care and lost with Grief"

சர்வர் சுந்தரம் படத்துல நாகேஷ் நல்லா சாப்பாட்டுட்டு, காசில்லாம ஓட்டல் முதலாளி சுந்தரராஜன் முன்னாடி நின்னு சர்ட் பாக்கெட்-ல இருக்கிற ஓட்டையில விரல விட்டு ஆட்டி காட்டுவாறே !! அந்த சீன் ஞாபகத்துக்கு வருது இல்ல !

படத்துக்கு மேலே இருக்கிற “சிந்திக்க ஒரு நொடி” சமாச்சாரத்துல, ஹென்றி டெய்லர், ஒரு நெஜத்தை எவ்வளவு நக்கலா சொல்யிருக்காரு பாருங்க :))