"சீக்கிரம் சீக்கிரம்" என்றபடி வேலை துரிதமாக நடந்து கொண்டு இருந்தது.
"ராணியம்மா அவசரப்படுத்துறாங்க. சாயந்திரதுக்குள்ள முடியணுமாம். அப்புறம் மழை வந்திடுமாம்" என்ற பேச்சும் அவசரத்துக்கு காரணமாய் இருந்தது.
"பேசாம இழுத்துக்கிட்டு போயிடுவோமா. வெட்டி கூறாக்கிக் கொண்டு போணும்னா இன்னிக்கு முடியாதும்மா"
"அதென்ன இழுத்துக்கிட்டு போற மாதிரியா இருக்கு. இம்மாம் கனம் கனக்குதே! யம்மாடி" என்று ஓரிரு பெருமூச்சுக்கள்.
"இன்னும் நூறு பேர் வந்தாலும் முடியாது போலிருக்கே. அங்க பச்சபுள்ளைங்க சோத்துக்கு அழுதுகிட்டு இருக்கும்"
" ராணி என்ன சொன்னாங்க. இந்த மாதிரி சந்தர்ப்பம் ஆயுசுல எப்பனாச்சம் ஒரு வாட்டிதான் வருமாம்.அப்புறம் ஆயுளுக்கும் சோத்து பிரச்சனை இருக்காதுன்னு சொல்லிட்டாங்களே! "
"ஆமா அப்ப மாத்திரம் உக்காந்து சாப்பிட முடியுமா இந்த ஆம்பிளைங்க மாதிரி" என்று ஒரு அலுப்புக் குரல்.
சிறிது நேரம் அமைதியாக வேலை தொடர்ந்தது.
திடீரென்று "இதென்னாடி இது. இப்பவே மழ வந்துடுச்சு போல இருக்குதே. எல்லாம் அப்படியே கெடக்கட்டும். போட்டு திரும்புங்க " என்று ஒரு குரல்.
அதுவரை ஒரே சீராக போய்க்கொண்டிருந்த வேலையினிடையே ஒரு பெரும் பரபரப்பு. திசை தெரியாத ஒரு ஓட்டம்.
"அடியே ! எங்கேடி போய்டீங்க?"
"பாதி பேரக்காணோமே"
"அய்யோ இது சுனாமி. மழை இல்ல"
என்று பல விதமானக் கூக்குரல்கள்.
நான் ஒரு குற்ற உணர்வோடு குளியலறைக் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தேன்.
எப்படி இவ்வளவு அஜாக்கிரதையாகி விட்டேன்?
சிறிது நேரத்திற்கு முன் தான், முகச்சவரம் செய்து கொள்ளும் போது இந்த சிற்றெறும்புகள் செத்து போயிருந்த கரப்பான் பூச்சியைச் சுற்றி மொய்த்துக் கொண்டு நடத்திய உணவு வேட்டையை ரசித்துக் கொண்டிருந்தேன். சிறிது சிறிதாக அவைகள் தம்மிலும் பல ஆயிரம் மடங்கு பெரிய கரப்பானை நகர்த்த முயலுவது கலிவர்- லிலிபுட் கதையை ஞாபகப்படுத்தியது.
அது கடினம் என்று உணர்ந்து பின் அதையே கொஞ்சமாக கொறித்து கொறித்து வேக வேகமாக எடுத்துச் செல்வதையும் கண்டு படைப்பில் எல்லா ஜீவன்களுக்குள் இயங்கும் அந்த அபார சூட்சும அறிவை அல்லது சக்தியை எண்ணி அதிசயித்தேன்.
மனித சமுதாயமும் இவ்வெறும்புகளைப் போல் இணைந்து இயங்க கற்றுக் கொண்டால் இந்த உலகம் ஒரு அமைதி பூங்கா ஆகிவிடுமே. அவைகள் எப்படி பேசிக்கொள்ளுகின்றன ? சாலமன் கதையில் வரும் பீர்ஷீபா ராணியைப் போல் எறும்புகளின் பாஷையை தெரிந்திருந்து கொள்ளும் திறமை நமக்கும் இருந்திருந்தால்..........
இப்படி பலவகையான சிந்தைகளுக்கிடையில் ஷவரைத் திருகி குளியலை முடித்தேன். விளைவு சிற்றெறும்புகளின் சுனாமி. அவைகளின் விதியை எதிர்பாராத விதமாக நானே முடித்து விட்டேன். ஒரு சில எறும்புகள் நீர் திவலைகளுக்கிடையே திக்கித் திணறி வெளியேறும் வழி தேடிக்கொண்டிருந்தன. மனதில் குற்ற உணர்வு என்னவோ செய்தது. தினம் தினம் எத்தனை கோடிக் கணக்கான ஜீவன்கள் இப்படி பிறந்து மறைகின்றன !
இயற்கையின் பார்வையில் நாமும் வெறும் துரும்புதானே. ஒரு பூகம்பம் புயல் அல்லது சுனாமி போன்ற பெரும் அழிவு என்று நாம் வகைப்படுத்துவது இயற்கைக்கு ஒரு சிறிய அட்ஜஸ்ட்மெண்ட் தான். உட்கார்ந்திருக்கும் போது நாம் அடிக்கடி கால் மாற்றிக் கொள்வது போல. அந்நேரங்களில் கால்களின் கீழே என்ன உள்ளது என்று யோசித்திருப்போமா அல்லது யோசிக்கத்தான் போகிறோமா ?
"என்ன பாத்ரூம்ல கரப்பானெல்லம் செத்துக் கெடக்கு, கவனிக்கிறதே இல்லையா ?" என்று சொல்லியபடி என் மனசாட்சியைத் திசைத்திருப்ப சத்தம் போட்டு யாருக்கோ சொல்வது போல் சொல்லிக் கொண்டு போனேன்.
அதற்கெல்லாம் யாரும்செவி கொடுப்பது இல்லை என் வீட்டீல்.
எறும்புகளைப் பற்றி நானறிந்த குறிப்பு : தேனீக்களைப் போலவே பெண் எறும்புகள் தான் வேலை செய்யும். ஆண் எறும்புகள் சோம்பேறிகள். எறும்புகள் முட்டையை எடுத்துக் கொண்டு சுவரேறினால் அன்று மழை வரும். எறும்புகளுக்கும் ராணி எறும்புதான் தலைவி.
மேலே உள்ள உரையாடலில் "....உக்காந்து சாப்பிட முடியுமா இந்த ஆம்பிளைங்க மாதிரி" என்ற கிண்டல் வரை குளியலுக்கு முன் நான் செய்து வைத்திருந்த கற்பனை. மேலும் எப்படி கொண்டு செல்வது என்று திணறிக் கொண்டிருந்த நேரத்தில் ’உரையாடல் இப்படித்தான் இருந்திருக்க வேண்டும்’ என்பதாக நிகழ்வுகள் தாமே முடிவுக்கு கொண்டு சென்று விட்டன.