காலையிலிருந்து ஒலிபெருக்கி மூலம் சனீஸ்வரனை திருப்திபடுத்தும் முயற்சி நடந்து கொண்டிருக்கிறது. இன்றைய பெயர்ச்சி மூலம் என் ராசி தப்பித்துவிட்ட தைரியத்தில் இதை எழுதவில்லை. எனக்கும் சனீஸ்வரனை கண்டால் பயமும் பக்தியும் உண்டு. ஆனாலும் நம்மவர்கள் சில விஷயங்களை அளவுக்கு மீறி பெரிது படுத்தி (குட்டையை குழப்பி) வியாபாரத்தை (மீன்) பிடிக்கின்றனர். ஆடித் தள்ளுபடி, வேலன்டைன் டே போன்றே இந்த பெயர்ச்சி விவகாரமும். செல்வம் ஒரு கையிலிருந்து மற்றொரு கைக்கு மாறுவதற்கு இதுவும் ஒரு வழி போலும். இருப்பவர்கள் கொடுக்கட்டும். நமக்கென்ன ?
சில வருடங்களுக்கு முன் ஒரு ஆராய்ச்சி மாநாட்டின் இடைவேளையில் இத்தகைய நம்பிக்கைகளைப் பற்றி உரையாடலில் பங்கு கொள்ள நேரிட்டது. அப்போது சொன்ன சில கருத்துகளை வைத்து எழுதப்பட்டது.
கேள்வி- பலரும் பல நூற்றாண்டுகளாக கேட்டுக்கொண்டிருப்பது தான்- எங்கோ உள்ள கிரகங்கள் இங்குள்ள மனிதர்களை எப்படி பாதிக்க முடியும் ?
பதில் : கிரகங்கள் எதுவும் வந்து யாருக்கும் பாதிப்பு ஏற்படுத்துவதில்லை. அவை தம் வழியே தமக்கென்று வகுத்துள்ள வான வெளிப் பாதையில் சுற்றி வருகின்றன.
கேள்வி : அப்படியானால் ஜாதகம், சோதிடம் எல்லாம் பொய்யா ?
இதற்கு பதில் காண்பதற்கு முன் ஒரு பதில் கேள்வி. உங்களால் ஜப்பானில் நவம்பர் மாத தட்ப வெப்ப நிலையையும் மடகாஸ்கரில் பிப்ரவரி தட்ப வெப்ப நிலை மழை, காற்று நிலவரம் பற்றி சொல்ல முடியுமா ?
ஒரு பூகோளப் புத்தகத்தை எடுத்துப்பார்த்தால் முடியும்.
பூகோளப் பாடத்தில் அது எவ்வகையில் விளக்கப் பட்டுள்ளது ?
அவ்வூரின் தட்ப வெப்ப நிலையை அது அமைந்துள்ள அட்சரேகை, தீர்கரேகை கணக்கு கொண்டு கணிக்க முடியும்.
பூமியின் மேல் யார் அட்சரேகை தீர்கரேகை என்பதை நிர்ணயித்தது ?
பூகோள அறிஞர்கள் தான்.
போகட்டும். இந்த வருடம் மழை வந்ததே அடுத்த வருடம் அதே தேதியில் மீண்டும் வருமா?
வரலாம், வராமலும் போகலாம். அட்ச தீர்க ரேகைகள் வெறும் கணிப்பதற்கான ஒரு சாதனமே தவிர அவைகளே எல்லாவற்றையும் நிர்ணயிப்பதில்லை.
உங்களுடைய முதல் கேள்விக்கு இப்போது பதில் வந்து விட்டது.
எப்படி? புரியவில்லையே !
எப்படி அட்ச ரேகையும் தீர்க ரேகையும் ஒரு பகுதியின் பொதுப்படையான காலமாற்றங்களை குறிக்க இயலுமோ அது போலவே குறிப்பிட்ட கோள்களின் நிலையை கொண்டு பொதுவான சில விளைவுகளை கணிக்கும் முறை சாத்தியம் தானே ?
நீங்கள் சொல்வது பூகோள ரீதியாக உணரப்படுவதானால் ஏற்றுக்கொள்ள முடியும். ஆனால் தனி மனிதர்களின் வாழ்க்கையில் எப்படி தாக்கல் இருக்க முடியும்?
அதுவும் கணிப்பிற்கு உரியதுதான். சற்று அதிகமான விவரங்கள் தேவைப்படுகின்றன. பிறந்த இடம், நேரம், நட்சத்திரம் போன்ற கூடுதல் விவரங்களை வைத்து கணிக்கும் முறையை ஏற்படுத்தியுள்ளனர்.
அப்படியானால் ஒரே தேதியில் ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் பிறந்த இருவரின் வாழ்க்கையும் ஒரே மாதிரி இருக்குமா?
இருக்கவேண்டிய அவசியமில்லை. வினைப்பயன் என்ற முக்கியமான இன்னொரு விவரம் நம் எல்லோரிடத்தும் மறைக்கப்பட்டுள்ளது. கணிக்கப்படும் எல்லா பலன்களையும் ஒரு அளவுக்குத்தான் புரிந்து கொள்ள முடியுமே தவிர உண்மையான பரிமாணம் அந்த காலக்கட்டத்தில் அனுபவிக்கும் பொழுதுதான் புரியும். ஏனெனில் பலன்களும் யாவும் அவரவர் வினைப்பயன் பொறுத்ததே. நீங்கள் குறிப்பிட்ட இருவருக்கும் முப்பது வயதிற்கு மேல் கஷ்டங்கள் (ஏழரை சனி) வருமென்றால் ஒருவர் செய்யும் தொழிலில் பெரிய கஷ்டங்களை சந்திக்கலாம். இன்னொருவர் உடல் நல ரீதியான பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கலாம்.
எல்லாம் வினைப்பயன் என்றால் கோள் பெயர்ச்சிகளை நம்பி ஆவதென்ன ?
தேவையில்லை. நாம் நம்பினாலும் நம்பாவிட்டாலும் நடப்பது நடக்கத்தான் போகிறது.
பின் எதற்காக இந்த வழிபாடு என்ற கூத்து ?
நமக்கு வீட்டை விட்டு வெளியே போக வேண்டிய கட்டாயம். முக்கியமான ஒரு வேலை; உடனே செய்தாகவேண்டும். ஆனால் பலத்த மழை வந்து கொண்டிருக்கிறது. கையிலே ஒரு குடை எடுத்துச் செல்லுகிறோம். கஷ்ட காலம் என்கிற மழைக்காலத்தில் நம்பிக்கை என்பதான குடை சிலருக்கு பயன்படுகிறது. அவர்கள் அதை பிறர் கண்களைக் குத்துவது போல் பிடித்துச் செல்லாமலிருந்தால் போதும்.
ஆனாலும் இதை ஒரு விஞ்ஞானம் என்று ஒப்புக்கொள்ள முடியவில்லையே ?
விஜய் தொலைக்காட்சியில் Grand Master G.S.Pradeep இருபத்தியொரு கேள்விகளுக்குள்ளாக நாம் நினைத்துக்கொள்ளும் ஒரு பிரபலமான நபரையோ, இடத்தையோ அல்லது வரலாற்று நிகழ்சியையோ சொல்லி விடுவதை பார்க்கிறோம். அதற்கு பிண்ணணி அவர் தெரிந்து வைத்திருக்கும் விஷயஞானமும் கேள்விகளை கொண்டு செல்லும் விதமும்தான். அது போல ஒவ்வொரு கிரகத்தின் குணங்களும், பன்னிரெண்டு ராசிகளில் அவைகளின் நிலைப்பாட்டின் விளைவுகளும் புத்தகங்களிலே கிடைக்கப்பெற்றாலும் சேர்க்கை விளைவுகளை (Combined effect) கணிக்கும் பொழுது அதற்கு தனித்திறமை தேவைப்படுகிறது, இது பிரதீப்பின் திறமை போன்றது. அவரவர் திறமைக்கு ஏற்றார் போல் பலன்கள் கணிக்கப்படுகின்றன. கேட்டுச் சென்றவர் அனுபவத்திற்கு ஏற்ப நம்பிக்கையோ அவநம்பிக்கையோ எழுகிறது.
( இது போல் விவாதங்களில் நடுநிலை வகிக்க விழைவோரின் பயனுக்காக எழுதப்பட்டது.)