Showing posts with label சினா சோனா. Show all posts
Showing posts with label சினா சோனா. Show all posts

Thursday, March 31, 2011

பாதாளம் போகும் சூதாடி மாந்தர்

சமீபத்தில் பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம் அவர்களுடைய ஒரு பாடலை படிக்க நேர்ந்தது. சூதாடிகள் படும் துன்பம் பற்றியது. அதைக் கண்டதும் சினா சோனா வின் ஒரு கார்ட்டூன் நினைவுக்கு வந்தது.

”துண்டக் காணோம் துணியக் காணோம் என்று ஓடினான்” என வேடிக்கையாகக் குறிப்பிடுவது போல இருக்கும் உடமையெல்லாம் சூதாட்டத்தில் இழந்து ஓட்டைப் பீப்பாயை அரைக்கு அசைத்து போகும் சினா-சோனா ஏறக்குறைய பாண்டவர்களின் கதியை அடைந்து விட்டான்.



எல்லோரையும் எல்லாக் காலத்திலேயும் வெற்றி பெற முடியாது என்பதை உணர்த்தும் நல்ல கருத்து உள்ள நகைச் சித்திரம் இது.

சூதாடி மாந்தர்களின் சுக வாழ்வும் ஒரு நாளில்
பாதாளம் போகுமெனல் பாரறிந்த உண்மையன்றோ

சொல்ல முடியா துன்பக்கதை சூதாடி மனிதரின் சோகக்கதை
நல்ல மனிதரும் வஞ்சகராகை கள்ள வேலைகள் செய்த கதை
சிலர் கொள்ளை லாபத்தில் கொண்ட மோகத்தால்
உள்ளதும் இழந்து உருக்குலைந்த கதை

அந்த நாளிலே பஞ்ச பாண்டவர் அரசு உரிமை இழந்ததும்
அழகு பாஞ்சாலி அம்மையாருடன் அனைவரும் காட்டில் அலைந்ததும்
அன்பு மேலிடும் நளன் தமயந்தி அல்லல் சுமந்து வருந்தியதும்
அரிய காதலை பிரிய நேர்ந்ததும் ஆதாரம் இழந்ததும் சூதாட்டத்தாலே

( படம் : உலகம் சிரிக்கிறது 1959)

Sunday, February 28, 2010

நல்லாப் பாடுறே ! கொஞ்சம் உச்சரிப்பு....

வண்ண மயமான விளக்குகள் ஒளியூட்டிய மேடையிலே உயிரைக் கொடுத்து “உயிரே உயிரே” என்று அந்த சிறுமி பாடி கொண்டிருக்கிறாள். பல லட்சம் ரூபாய் பெறுமான பரிசு என்றால் சும்மாவா!

“கேக்க சகிக்கில. சேனலை மாத்து” அப்படின்னு தம்பி. அவனுக்கு ஜேக்கி-சான் படம் பார்க்கணும்

ரிமோட்டை கையில பிடித்துக் கொண்டிருக்கும் அக்காவோ “போடா ஒனக்கு பாட்டு வராது, புரியாது....”

ஆமாமா, நீ மட்டும் பெரிசா பாடிக் கிளிச்சியாம். அந்த பாட்டு டீச்சர், ’சுருதியே சேரல உங்கப் பொண்ணுக்கு’அப்படீன்னு அம்மாகிட்ட மூஞ்சில் அடிச்ச மாதிரி சொல்லி அனுப்பிச்சாங்களே. எங்களுக்குத் தெரியாத உங்க பாட்டு லட்சணம்..

இது ஓயாத சண்டை. சண்டை நடுவில பாட்டை விட்டாச்சு, ஜட்ஜஸ் ரவுண்ட் வந்தாச்சு.

ஜட்ஜ் கள் அந்த சிறுமியை பார்த்து, ஒப்புக்காக

”நல்லா பாடினே, கொஞ்சம் மாடுலேஷன்ல கவனம் வேண்டும்”

”உன் காஸ்ட்யூம் சூபர், யூ ஹேவ் வொண்டர்புல் ப்ரஸன்ஸ். கொஞ்சம்..கொஞ்சம் உச்சரிப்பை சரியா பார்த்துகணும். வல்லினம் மெல்லினம் எல்லாம் தெளிவா இருக்கணும்.”

இத்யாதி இத்யாதி..

”தேங்க்யூ மேடம்.... ஓகே ஸர்... என்று சொல்லிக் கொண்டு வந்த டென்ஷன் சிறுமிக்கு தான் தேர்ந்தெடுக்கப் படவில்லை என்றதுமே அழுகை பொத்துக் கொண்டு வந்தது. அவளை விட அவள் தாயாருக்கு கோபம் அதிகமாயிற்று. அங்கேயே விவாதம் சூடு பரக்க ஆரம்பித்தது. சஸ்பென்ஸை தொடர்வதற்காக சேனல் தயாரிப்பாளர் பிரேக் கொடுத்தாரோ நாம பிழச்சோமோ :)))

இந்த மாதிரி நேரத்துலதான் நினைவுக்கு வருவார் சினா-சோனா.


IT IS DIFFICULT TO
ESTEEM A MAN
AS HIGHLY AS
HE WOULD
WISH

யாவருமே அவரவர் நினைப்பில் பெரிய ஆர்டிஸ்ட்தான், படிப்பாளிதான். ஆனால் பிறர் அதை அவ்வளவு சுலபமாக ஏற்றுக் கொண்டு விடுகிறார்களா என்ன ?

அதற்கான தகுதி, உழைப்பு, பொறுமை இவற்றை வளர்த்துக் கொள்ளாமல் அங்கீகாரத்திற்காக அவசரப்படும் போது பிறருடைய நகைப்பு ஆளாகி விடுகிறார்கள்.

இதைதான் ஆங்கிலத்தில் “sitting in his own ivory tower" என்கின்றனரோ! அப்போது வளர்ச்சி நின்று போகிறது.

Tuesday, June 16, 2009

32 கேள்வி கேட்டாரு கே.ஆர்.எஸ்-ஸு

அண்ணன் பேச்சை தம்பி தட்டக்கூடாது .
கபீரண்ணன் ரவிசங்கர் கூப்பிட்ட பிறகு தம்பி கபீரன்பன் தட்ட முடியுமா?

என்னங்க இது? அவரு எப்படி அண்ணனாக முடியும் அப்படீன்னு என்னைத் தெரிஞ்சவங்க கேக்கிறது ஞாயந்தான். வலையுலகிலே, என்னையும் சேர்த்து, அவரு பலருக்கும் சீனியர்தான் பிரவேச காலத்தை வச்சுப்பார்த்தா!

ஆனா அது ஒண்ணுமாத்திரமில்ல நான் சொன்னதுக்கு காரணம் அவரே தன் பெயருக்குள்ள அதை ஒளிச்சு வச்சிருக்கிறார் பாருங்க. அவரு பேரு Kannabiran Ravishankar. கொஞ்சம் மாத்தி போட்டு படியுங்க Kabirannan Ravishankar :)))))

32 விளையாட்டில் அவரு என்னை இழுத்து விட்டப்புறம் எல்லாமே வெளையாட்டுதான்.

_______________________________________________________________________

1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?

எனக்கு கபீர்தாஸ் என்றே வைத்துக்கொள்ள ஆசை. ஆனால் மூலவர் பெயரும் கபீர்தாஸ் ஆகிவிட்டதால் சிறிது தமிழ்மணம் கமழட்டுமே என்று கபீரின் ’அன்பன்’ ஆகிவிட்டேன். நானே வைத்துக் கொண்டதால் பிடிக்காமலா போகும் !!

2. கடைசியாக அழுதது எப்பொழுது?

ரயிலில் பத்து அல்லது பன்னிரெண்டு வயதுடைய சிறுவன் அவன் இரு தங்கைகளுடன் ஒரு ஆர்மோனிய பெட்டியை வைத்துக் கொண்டு ‘ஏனேனோ ஆசே’ என்ற புகழ்பெற்ற கன்னடப் பாடலை பாடிக்கொண்டு வந்தான். அவனுடைய எட்டு வயது தங்கை அப்பாடலுக்கு அபிநயம் பிடித்தாள். மூன்றாவது குட்டி ஏதும் புரியாமல் அண்ணனுடைய சட்டையைப் பிடித்துக் கொண்டே மலங்க மலங்க விழித்துக் கொண்டிருந்தது. அவர்களுக்கு என்னென்ன ஆசைகள் இருக்கும்?

தினமும் ஐந்தாறு ஸ்டேஷன்கள் முன்னும் பின்னுமாக போய்வருவார்கள் போலும். அவர்கள் தாய் தந்தையர் எங்கோ! வறுமை எப்படியெல்லாம் மனிதனை விரட்டுகிறது. இப்படி இன்னும் எத்தனை லட்சக்கணக்கான ஜீவன்களோ அவர்களுடைய ஆசைகளும் கனவுகளும் அந்த மிகக் குறுகிய வட்டத்திலேயே முடங்கி விடுமோ? வழிக்காக கொடுக்கப்பட்டிருந்த தின்பண்ட பொட்டலத்தை அப்படியே அவர்களிடம் கொடுத்துவிட்டேன். நான் கொடுத்ததை அவர்கள் ஆசையாக தின்ற போது என்னையறியாமல் கண்களில் நீர் நிறைந்தது.

இன்னொரு முறை டயோடா-க்வாலிஸ் ஒன்றில் ஊரிலிருந்து வந்திருந்த தமிழறியாத அன்பர்களுடன் முண்ணாறு போய்க் கொண்டிருந்தோம். கெஸட்டிலிருந்து ‘உன்னையே கதியென்றடைந்தேன் தாயே’ என்று ஜெயஸ்ரீயின் அமுதமான குரலில் பாடல் வந்த போது அதன் பொருளை கேட்டார் உடன் வந்திருந்த அம்மையார். வரிக்கு வரி அதன் பொருளை கன்னடத்தில் சொல்ல ஆரம்பித்தேன். ’சின்னதனம் செய்து சித்தம் மிக வாடி’ என்பதன் பொருள் சொன்னவுடனயே அவர் கண்களில் குபுக் என்று நீர் வந்துவிட்டது. அதைக் கண்டதும் என் கண்களிலும் நீர் வந்து தொண்டை கம்மி மேலே பேச முடியாமல் போனது. உண்மையில் அந்த ராகமும் பாவக்குழைவும் ஏற்கனவே மனதை கரைத்து விட்டிருந்தது. பொருள் சொன்னதும் அவரால் மனநெகிழ்ச்சியைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

[என்ன இது ! ரெண்டாவது கேள்வியிலேயே அழுகையா? எப்போ சந்தோஷமா இருந்தே அப்படீன்னு ஒரு நல்ல கேள்வி கிடைக்கலையா. கேக்காத கேள்விக்கு பதில் எழுதினாலும் மார்க் போட மாட்டாங்க துளசி டீச்சர், கீதா மேடம். சரி ஒண்ணு என்ன ரெண்டு அழுகை கதையே சொல்லிட்டேன். பாத்து செய்யுங்க ]

3. உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

பிரமாத பீத்திக்கிற மாதிரியெல்லாம் இல்லை! தலையெழுத்து மாதிரி அதுவும் ரொம்ப சாதாரணம், மோசமில்லை.
கடைசி கேள்விக்கான பதிலில் சாம்பிள் கையெழுத்து இருக்கு !:)))

4. பிடித்த மதிய உணவு என்ன?


சுத்த சைவம் எதுவாயினும் சரி.

5. நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

வேறு யாருடனாவது ??? அப்படீன்னா. புது ஆளுங்கள சொல்றீங்களா ? நான் ரிசர்வ்ட்-டும் இல்லை; அதுக்குன்னு யாரு மேலேயும் விழுந்து ஃப்ரண்ட்ஷிப் தேடறதும் இல்லை. விரும்பி பேசறவங்ககிட்ட ரொம்ப ஆர்வமா இணக்கமா பேசுவேன். அதுக்கப்புறம் நட்பை தொடர்வது அவர்களைப் பொறுத்தது.

6. கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

அருவிதான். கடல்ல குளிச்சு ரொம்ப வருஷமாயிடுச்சு

7. முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

என் மனதில் படிவது அவங்க பாடி லாங்க்வேஜ்

8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?

a)எதையாவது உருப்படியா செய்யணும்-ன்னு விடாம- இருக்கிறத வச்சுகிட்டு -எதையாவது செஞ்சுக்கிட்டு இருக்கிறது. இது பிடிச்சது.

[உதாரணம் பக்கத்தில (side Bar)இருக்கிற உலகநீதி கேட்ஜட் -ஐ விழுந்து எழுந்து எப்படியோ ஒரு வழியா இப்பதான் செஞ்சு முடிச்சேன். பிடிச்சிருந்தா இருந்தா உங்க வலைப் பக்கத்திலேயோ igoogle பக்கத்திலோ நீங்களும் பொருத்திக்கலாம்]


b) பிடிக்காததுன்னு கேட்டா ’என் உலகத்திலேயே’ இருந்துகொண்டு பல விஷயங்களை கவனிக்காம விட்டுடறது

9. உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

பாவங்க! அவங்க அப்பாவி. அவங்களை நம்ம வம்புல ஏன் இழுக்கணும் :))

10. யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?

பல வருடங்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சி.
அமீரகத்திலிருந்து ஒரு எதிர்பாராத தரைவழி அஞ்சல் (மின்னஞ்சல்கள் இல்லாத காலம்) அலுவலக முகவரிக்கு வந்தபோது பெரும் சந்தோஷப்பட்டேன். எழுதியிருந்தது என் நெருங்கிய பள்ளித்தோழன். தொடர்பு விட்டுப்போய் பத்து வருடங்களுக்கு மேல் ஆகி விட்டிருந்தது. எனக்கு கிடைத்திருந்த ஒரு விருதை பத்திரிக்கையில் படித்து மகிழ்ச்சியுடன் பாராட்டி (தனக்கு மகன் பிறந்த சந்தோஷத்தையும் சொல்லி) அரைகுறை விலாசத்துடன் அவன் எழுதிய கடிதத்தை இன்னமும் பத்திரப் படுத்தி வைத்திருக்கிறேன். அடுத்த முறை சென்னை வரும் போது கண்டிப்பாக சந்திக்கலாம் என்று எழுதியவனை சந்திக்க முடியாமலே போய்விட்டது. அவன் போய் மூன்று வருடங்களுக்கு பின்னரே எனக்கு விஷயம் தெரிய வந்தது.

இப்போது அவன் பக்கத்துல வரவே முடியாது என்ற நினைவு அடிக்கடி என் நெஞ்சை பாரமாக்கும்.

11. இதை எழுதும் போது என்ன வண்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?

வெள்ளை

12. என்ன பார்த்து//கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

தொலைக்காட்சியில் ஏதோ எம்.ஜியார் படம் ஓடிக்கொண்டிருக்கிறது. மனதில் ஒட்டவில்லை.
நடிகர் அசோகன் எம்.ஜி.யாருக்கு எலிப்பாஷாணம் பற்றி ஏதோ விளக்கிக் கொண்டிருக்கிறார்

13. வண்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
பிடிச்ச வர்ணம் அப்படீன்னே கேட்டிருக்கலாமே ! நான் ஏன் பேனாவா மாறணும்.
எனக்குப் பிடிச்ச வர்ணம் நீலப்பச்சை (Bluegreen).

14. பிடித்த மணம்?
பெங்களூருக்கே உரிய சம்பகா . இப்போதெல்லாம் மரங்கள் குறைந்துவிட்டன. நான் சிறுவனாக இருந்த போது சாலையில் நடக்கும்போதே நம்மை பற்றிக்கொள்ளும் அந்த மணம்.

15. நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?

அவர்கள் தொந்தரவு என்று நினைக்காத பட்சத்தில்

நினைவின் விளிம்பில் - கவிநயா : குழந்தைகளுக்கான பாடலாகட்டும், அம்மன் கவிதைகளாகட்டும் மிக எளிய வார்த்தைகளில் மனம் கவரும் வண்ணம் எழுதும் திறமை படைத்தவர். நல்ல சிறுகதைகள் படைக்கும் ஆற்றல் உள்ளவர்.

பக்தியே பிரதானமாகக் கொண்டு மிகுந்த சிறப்பான இடுகைகளை இட்டு வருபவர் மதுரையம்பதி. இவருக்கும் அம்மனை ரொம்ப பிடிக்கும் போலிருக்கிறது. பல ஆசாரியர்கள் மற்றும் ஞானிகளைப் பற்றிய இவரது இடுகைகளும் மனம் தொடுபவையாக இருக்கும்.

முகமூடிக் கவிதைகள் என்று ஒரு theme based approach-ல் வடிகால் வலைப்பூவில் கிருத்திக்கா அவர்கள் நன்றாக செய்து வருகிறார். அப்படி மையக் கருத்தை வைத்து எழுதுபவர்கள் மிகவும் குறைவு. இவருடைய கதைகளும் அனுபவங்களும் கூட நல்ல நடையில் யதார்த்தமாக சொல்லப்பட்டிருக்கும்.

ஜீவாவுக்கு அறிமுகம் தேவையில்லை. இசையின்பத்திலும் ஆத்ம போதத்திலும் வாசகர்களை முக்கி தோய்த்து எடுப்பவர். இவருடைய இடுகைகளில் மொக்கை ரகமே இருக்காது. அவருடைய உழைப்பு அவர் சொல்ல வரும் கருத்துகளில் நன்கு புலனாகும்.

16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு?

கே.ஆர்.எஸ் எதை எழுதினாலும் அக்குவேறு ஆணிவேறாய் பிரிச்சுப் பார்த்துட்டுதான் மறு வேலை பார்ப்பார் என்பது அவருடைய காரைக்கால் அம்மையார் மற்றும் ஆண்டாள் பதிவுகளை படித்தாலே புரியும்.

காரைக்கால் அம்மையார் பதிவுக்கு தமிழ்மணம் விருது கிடைத்ததில் ஆச்சரியம் ஏதுமில்லை.

17. பிடித்த விளையாட்டு?

கொஞ்சம் சதுரங்கம், கொஞ்சம் பாட்மிண்டன். கூடைப்பந்து ஆடுபவர்களின் லாவகத்தையும் வேகத்தையும் ரசித்துப் பார்ப்பேன்

18. கண்ணாடி அணிபவரா?
ஆமாம், 16 வயதிலிருந்து. பொன்னியின் செல்வனை ஒரே மூச்சில் படித்ததால் வந்ததென்று திட்டு வாங்கியிருக்கிறேன் !

19. எப்படிப் பட்ட திரைப்படம் பிடிக்கும்?

பொதுவாக நகைச்சுவை படங்கள்.

20. கடைசியாகப் பார்த்த படம்?
குடும்பத்துடன் திரையரங்கில் பார்த்தது ‘தாரே ஜமீன் பர்’

21. பிடித்த பருவ காலம் எது?

காலங்களில் அது வசந்தம்

22. என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?

கொஞ்ச நாளா Power of Now என்ற புத்தகத்தை வைத்துக்கொண்டு இங்குமங்குமாக பக்கங்களை புரட்டிக் கொண்டிருக்கிறேன்

23. உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
எதுவும் வச்சுகிறது கிடையாது. ஹெச்.பி கொடுத்த ஒரிஜினல் செட்டிங் அப்படியே இருக்கு

24. பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?
பறவைகளின் கீச்சு மூச்சு சத்தம் பிடிக்கும்.
பிடிக்காதது மிக்ஸி

25. வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

பெங்களூருக்கு ஹாங்காங் தூரமா ஜெனிவா தூரமா ?

26. உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

தனித் திறமை என்று என்னத்தை சொல்றது, நான் செய்யிற எல்லாத்தையும் மிக மிக சிறப்பா செய்யிறவங்க நிறைய பேர் இருக்காங்களே !!

27. உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

என்னைப் பார்த்து யாராவது பயப்படுவது.

28. உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

கார் ஓட்டிக் கொண்டிருக்கும் போது ஏதாவது சாலை நிகழ்வோ,தொலைபேசியோ அல்லது சகப் பிரயாணிகளின் பேச்சோ எரிச்சலடைய வைத்தால் உடனே வண்டியின் வேகம் கூடி விடும். தேவையில்லாமல் முன்னே போகும் வண்டிகளை முந்திக் கொண்டு போக முனைவேன். இது ஏனென்று புரியவில்லை. சொன்ன மாதிரி ஏதோ சாத்தானாயிருக்குமோ !

29. உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

இனிமேலத் தான் கண்டுபிடிக்கணும்

30. எப்படி இருக்கணும்னு ஆசை?

பெரிய ஆசை எல்லாம் ஒண்ணும் இல்லை. உள்ளதே போதும்

31. மனைவி இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?
விரும்பி செய்வது என்று இல்லை. நிர்பந்தத்தால் செய்வது சமையலறை பிரவேசம்.

32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?

Life should be like a snow flake. Leave a mark but not a stain.

நான் சொல்லவில்லை சினா-சோனா தான் சொல்றாரு.
[கையெழுத்து நிபுணர்கள் பெரிசு பண்ணி பார்த்து என்னைப் பற்றி
எனக்கு தெரியாத விஷயங்கள் இருந்தால் சொல்லவும் :)))) ]


________________________________________________________________________
பொறுமையா படிச்சதற்கு நன்றி

ரவியண்ணன் கொடுத்த பொறுப்பு நிறைவேறியது. சுபம்

Monday, May 18, 2009

பறக்குது :காகிதப் பட்டங்கள்

பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம் அவர்களின் பழையத் திரைப்படப்பாடல் ஒன்று (குலதெய்வம் -1956).

கோழியெல்லாம் கூவையிலே
குறட்டை விட்டார்

வாய் கொப்பளிக்கும் முன்னே

கொஞ்சம்
காப்பியையும் குடித்து விட்டார்.

குளிக்காமல் சாப்பிட்டு ஏப்பம் விட்டார்

தன்னை குழந்தை போல் எண்ணிவிட்டார்

எங்க சின்ன மச்சான் - இப்போ

பட்டம் விட புறப்பட்டு விட்டாரைய்யா

பட்டம் விட்டாரையா -எட்டாத

உயரத்திலே விட்டாரைய்யா
பட்டம் விட்டாரைய்யா
பறக்க விட்டாரைய்யா

ஆராரோ பட்டம் விட்டு

பேராசை வட்டமிட்டு

ஆடி ஓடி போனதைப் போலே

விட்டாரையா - அணை

கட்டாத ஏரி தண்ணி
கடலோடு போனது போல
கற்றதெல்லாம் காற்றோடு

விட்டாரைய்யா


டா பட்டம், டீ பட்டம்
ஜமீன் பட்டம், சாமி பட்டம்

ஜாதி பட்டம்,பகதூர் பட்டம்
லேடி பட்டம் கேடி பட்டம்

வாலறுந்து நூலறுந்து

போன இடம் தெரியலே-இந்த

வேலையத்த மச்சான் வெறும்

காகித பட்டம் கட்டி
விட்டாரைய்யா -ஓட
விட்டாரைய்யா

பலவித பட்டங்களை பெறுவதாலேயே தங்களை அறிஞர்களாகவோ, சமூகத்தில் பெரும் புள்ளிகளாவோ காட்டிக்கொள்ளும் முயற்சி அந்த காலத்திலிருந்து இருந்து வந்திருக்கி்றது. பலர் அதையே பெரும் சாதனையாக நினைத்துக் கொள்கின்றனர். அவைகளெல்லாம் வாலறுந்து, நூலறுந்து போன கதைதான். எத்தனை திவான் பஹதூர்களை உலகம் நினைத்துப் பார்க்கிறது? மந்திரி பதவி இருந்தால் டாக்டர் ’பட்டம்’ உண்டு. பணம் (கொடை) கொடுக்கும் நடிகர்களுக்கும் தொழிலதிபர்களுக்கும் கூட அது சுலபமாக கிடைக்கும்.

இன்றைய காலத்தில் ”பத்ம“ பட்டங்கள், கலைமாமணி, இத்யாதிகளும் உண்டு. இதைத்தான் ”ஆராரோ பட்டம் விட்டு பேராசை வட்டமிட்டு ஆடி ஓடி போனதை போலே” என்று பட்டுக்கோட்டையார் கேலி செய்கிறார்.

இப்படி ஒரு வாழ்க்கை முழுவதும் போலி வெற்றிகளுக்காக போராடும் வாழ்க்கையைப் பற்றி சினா சோனா சொல்வதை பார்ப்போம்.



A LONG LIFE MAY NOT BE GOOD ENOUGH
BUT A GOOD LIFE IS LONG ENOUGH

எவ்வளவு காலம் வாழ்ந்தோம் என்பதைக்காட்டிலும் எப்படி வாழ்ந்தோம் என்பதே முக்கியம்.

Good Life என்பது அணைகட்டிய நீர். ஒரு ஒழுங்குபாடு உள்ளது. அதனால் பல நன்மைகள் சமுதாயத்திற்கு உண்டு. பிறருக்கு எவ்வகையிலேனும் பயன்படாத வாழ்க்கையானால் அவர்கள் எவ்வளவு காலம் பூமியில் வாழ்ந்தென்ன ? அவர்கள் எவ்வளவு படித்திருந்தென்ன ! பட்டுக்கோட்டையார் சொல்வது போல் “கற்றதெல்லாம் காற்றோடு விட்டாரைய்யா” என்கிற நிலைதானே !

மாபெரும் சாதனையாளர்கள் எனப் போற்றப் பெறுபவர் அனவரும் பெரும்பாலும் சாதனைகளை மிக இளம் வயதிலேயே சாதித்துள்ளனர். ஆதிசங்கரர், விவேகானந்தர், ஸ்ரீனிவாஸ ராமானுஜம், பாரதியார், பட்டுக்கோட்டை கலியாண சுந்தரம் போன்றவர்கள் தமது நாற்பது வயதுக்குள்ளாகவே தத்தம் துறையில் சாதனை படைத்து அமரத்துவம் எய்திவிட்டனர்.

அவர்களால் உலகம் பயனடைந்திருப்பதனால்தான் அவர்களை இன்றளவும் நினைத்துப்பார்க்க முடிகிறது. அவர்களுடைய வாழ்க்கை உண்மையிலே Good Life.

Sunday, August 31, 2008

தேயீயீயீ....இன்னும் தேய்- : சினா சோனா(6)

ஆத்து வெள்ளம் காத்திருக்கு அழுக்கு துணியும் நெறஞ்சிருக்கு” அப்படீன்னு ஒரு பாட்டு திருவருட் செல்வர் படத்துல வரும். பாட்டு நடுவில வார்த்தைகளோட அழகை கவனிங்க.


மனசு போல வெளுத்து வைச்சு
உறவு போல அடுக்கிவைச்சு
வரவு போல மூட்டைகட்டி- வெள்ளையப்பா
நாம வரவு வைக்கும் நாணயம் தான்
வெள்ளையப்பா


“ மனசு, துணிய விட சுத்தமா இருக்கு”.

எளிமையான மக்களுக்கு அப்படிதாங்க. கவிஞர் வார்த்தையிலேயே படம் புடிச்சிட்டாரு. அப்படி ஒரு சுத்தம் வரணுமின்னா என்ன செய்யணும். சினா சோனா சொல்றாரு பாருங்க
(படம் பெரிதாகத் தெரிய அதன் மேல் சுட்டவும்)


"It wisely put, better to rub it out, than to rub it in "

மனைவிக்கு பயந்த கணவனாக இருக்கும் சினா-சோனா வுக்கு துணி துவைக்கும் வேலை வந்து சேருது. அவங்க ஊர்ல துணிய தேய்க்கிறப் பலகை, தொட்டிக்கு செங்குத்தாகத்தான் இருக்கும் போலிருக்கு. அது மேல அழுக்கு துணிய தேய்க்கும் போது முதலில் அவருக்கு தன்னுடைய நிலைமைய நினைச்சு மனம் கஷ்டப் படுது. ( அதை படத்துல அவரு மூஞ்சியப் பார்த்து புரிஞ்சிக்கணும்). சுய பச்சாதாபம்.

அதன் பிறகு அழுக்கைப் போக்கத் தேய்த்துக் கொண்டிருக்கும் (rub it out ) செய்கையாலே ஞானோதயம் வருது. கோபத்தையோ கஷ்டத்தையோ மனசிலேயே போட்டு உழப்பிக் கிட்டு (rub it in ) இருக்கிறத விட 'அழுக்கை வெளிய தள்ளுற மாதிரி, எதிர்மறை எண்ணங்களை தள்ளிடணும்' ன்னு சொல்றார்.

குள்ளச்சாமியை பார்த்து பாரதியார் ‘ஏனய்யா அழுக்கு மூட்டை சுமக்கிறீர்' ன்னு கேட்டதுக்கு அவரு என்ன சொன்னாரு?

“புறத்தே நான் சுமக்கின்றேன், அகத்தினுள்ளே
இன்னொரு பழங்குப்பை சுமக்கிறாய் நீ ”

அப்படீன்னு பதில் வந்திச்சு. சினா சோனா சொல்ற "rub it in " ங்கறது பழங்குப்பை சேர்ப்பதற்கான வழி. மனசுக்கு எது உற்சாகம் கொடுக்குமோ அந்த விஷயங்களை மாத்திரம் நெனச்சு பார்க்கணும். அப்போ தானாகவே வேண்டாத எண்ணங்களெல்லாம் தூர ஓடிப்போயிடும்.

ரொம்ப சிம்பிளா கவிஞர் rub-it out வழியும் சொல்லிட்டாரு பாருங்க.
கந்தையிலே அழுக்கிருந்தா கசக்கி எடுத்துவிடு வெள்ளையப்பா - உன்
சிந்தையிலே அழுக்கிருந்தா சிவனடியை நாடிவிடு வெள்ளையப்பா

சினா சோனா, சொன்னா சரிதான் !

Saturday, May 17, 2008

சர்வர் சுந்தரமும் சினா-சோனா வும்

ஓடியோடி உழைக்கணும்
ஊருக்கெல்லாம் கொடுக்கணும்

அப்படிங்கற சினிமா பாட்டு கேக்கறதுக்கு ரொம்ப நல்லாத்தான் இருக்கு. முதல் வரி சரிதான். எல்லோரும் ஆலா பறந்து நாலு காசு சேர்க்கறதுக்கு ரொம்பதான் கஷ்டப் படுறோம்.

ஆனால் அடுத்த வரி... அதுதாங்க அந்தகாலத்துலேந்து இடிக்குது.
சரி சம்பாதிச்சா சந்தோஷமா செலவாவது பண்ணத் தெரியுதா? அதுவும் கிடையாது.

பணத்தை சம்பாதிக்கிறதுக்கும் அதுக்கப்புறம் உள்ள கஷ்டத்தையும் இந்த பழைய தமிழ் பாட்டுல சொல்றத பாருங்க :

ஈட்டலும் துன்பம், ஈட்டிய ஒண் பொருளைக்
காத்தலும் ஆங்கே கடும் துன்பம் - காத்தல்
குறைபடில் துன்பம், கெடில் துன்பம் துன்பக்கு
உறைபதி மற்றைப் பொருள். (நாலடியார் -280)

செல்வத்தைச் சம்பாதித்தல் ஒருவகை துன்பம்.
தேடிச் சேர்த்த அப்பொருளை காப்பாற்றுவதும் துன்பம்.
காத்த அச்செல்வம் குறைந்தால் துன்பம்
காணாமல் போய்விட்டாலோ துன்பமே
இப்படி எல்லாவிதத்திலும் துன்பத்துக்கே உறைவிடம் ஆகும் (நாம் ஈட்டும்) செல்வம்


இதையே சினா-சோனாவும் நச்சுன்னு சொல்லியிருக்காரு பாருங்க.



"Riches are Gotten with Pain, Kept with Care and lost with Grief"

சர்வர் சுந்தரம் படத்துல நாகேஷ் நல்லா சாப்பாட்டுட்டு, காசில்லாம ஓட்டல் முதலாளி சுந்தரராஜன் முன்னாடி நின்னு சர்ட் பாக்கெட்-ல இருக்கிற ஓட்டையில விரல விட்டு ஆட்டி காட்டுவாறே !! அந்த சீன் ஞாபகத்துக்கு வருது இல்ல !

படத்துக்கு மேலே இருக்கிற “சிந்திக்க ஒரு நொடி” சமாச்சாரத்துல, ஹென்றி டெய்லர், ஒரு நெஜத்தை எவ்வளவு நக்கலா சொல்யிருக்காரு பாருங்க :))

Sunday, April 20, 2008

அநுமனும் சினா-சோனா வும்

'ஊக்கமது கைவிடேல்' என்பது பாட்டியின் முது மொழி. மேற்கொண்ட செயல் எதிலும் வெற்றி பெற வேண்டுமாயின் மன ஊக்கம் கொள்ள வேண்டும். எப்படியாவது ஒருவனது முயற்சியை நகைப்புக்கு இடமாக்கி தோல்விபெறச் செய்வதில் பலருக்கு திருப்தி. 'அப்பவே சொன்னேன், டேய் இதெல்லாம் வேண்டாம்-னு, கேட்டாத்தானே' என்று புத்திசாலிகளாகி வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுபவர் மிக உண்டு.

இத்தகைய எதிர்மறை எண்ணங்களை எதிர் கொள்வது எப்படி ? தன்னம்பிக்கை உடையோருக்கு எதிர்மறை எண்ணங்கள் எழாது. எழுந்தாலும் விரைவிலேயே அதை தம் அனுபவத்தாலோ அறிவினாலோ அழித்து வெற்றி கொள்வர்.



“Ventures Make men and ventures Break men" என்று சொல்வான் சினா.சோனா.

இதற்கு சிறந்த உதாரணம் அநுமன். சுந்தரகாண்டத்தின் நாயகன். அங்கே முழுப்பெருமையும் அவனதே.
இலங்கை அடைந்தபின் பல இடங்களிலும் தேடி சீதையை காணாமல் மனம் தளர்ந்து போன அநுமன், கம்பரின் வரிகளில்

கொன்றானோ ? கற்பு அழியாக் குலமகளைக் கொடும் தொழிலால்
தின்றானோ? எப்புறத்தே செறித்தானோ சிறை சிறியோன் ?
ஒன்றானும் உணர்கிலேன் மீண்டு போய் என் உரைக்கேன் ?
பொன்றாத பொழுது எனக்கு இக் கொடும் துயரம் போகாதால்


என்றும்
.......புண்ணியம் என்று ஒரு பொருள் என்னுழைநின்றும் போயதால்

என்றும்
..... ஆழித்தாய் இடர் ஆழி இடையே வீழ்ந்து அழிவேனோ ?

என்றும் பலவாறாக புலம்பி உயிரை அழித்துக்கொள்ள விழைகிறான். இந்த நம்பிக்கை யில்லாமையை despondency என்று ஆங்கிலத்தில் உரைப்பர்.

வால்மீகி ராமாயணத்திலும் இப்படி புலம்பினாலும் இதே கட்டத்தில் பின்னர் அநுமன் தன்னைத் தானே தேற்றிக் கொள்ள சொல்லும் இரண்டு பாடல்கள் சுந்தரகாண்டத்தில் வருகிறது. கஷ்ட காலத்தில் சுந்தர காண்டத்தை படிக்கச் சொல்வதின் நோக்கமும் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளத்தான்.

வட மொழி மனந்தளராமையை அநிர்வேதம் என்று உரைக்கிறது.
அநிர்வேத: ஷ்ரியோ மூலம், அநிர்வேத: பரம் ஸுகம் |
அநிர்வேதோ ஹி ஸததம் ஸர்வார்த்தேஷு ப்ரவர்த்தக: || (12-10)

தளராமையே செல்வத்திற்கு காரணம், தளராமையே சிறந்த சுகம். தளராமையே எப்பொழுதும் எல்லா காரியங்களிலும் ஊக்கமளிப்பது.

கரோதி ஸபலம் ஜந்தோ: கர்ம யத்தத் கரோதி ஸ:
தஸ்மாத் அநிர்வேத-க்ருதம் யத்னம் சேஷ்டே ஹமுத்தமம் |
| (12-11)
(மனம்)தளராமையே ஒரு ஜீவனின் காரியத்தை பயனுடையாதகச் செய்கிறது. ஆகையால் தளர்ச்சிக்கு இடம் கொடாமல் சிறந்த முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.
இன்று ஹனுமத் ஜெயந்தி, அவனருளால் எல்லோருக்கும் நல்ல காரியங்கள் யாவற்றிலும் வெற்றி கிட்டட்டும். இடுகம்பாளையம் ஆஞ்சநேயரை இங்கே தரிசிக்கலாம்.

Thursday, February 7, 2008

சிரித்து வாழ வேண்டும் பிறர்...சினா-சோனா-4

என்னமோ தெரியல, இப்போ எல்லாம் பதிவுக்கு தலைப்பு வைக்கணும்-னா உடனே சினிமா பாட்டுதான் ஞாபகம் வருது.அந்த அளவுக்கு இந்த பாட்டெல்லாம் நம்மோட பின்னி பிணஞ்சு போச்சுங்க. இந்த பாட்டுக்கும் சினா சோனா சொல்ல வர்றதுக்கும் என்ன சம்பந்தம்?

ரொம்ப இருக்குங்க.முதல் படம், பாட்டுல முதல் வரிக்கு பொருந்தும். இரண்டாவது வரி இரண்டாவது படத்துக்கு பொருந்தும். என்ன ரொம்ப ப்ளான் பண்ணி சினா-சோனா சொன்ன மாதிரி இருக்குல்ல!

அக்டோபர் 5 : "One cannot think ill of anyone, while one is singing "


ஜாலியா பாடிக்கிட்டு இருக்கிறவங்களுக்கு பிறத்தியாரப் பத்தி தப்பா நெனைக்க தோணாதாம். இதை முதல் முதல்ல படிச்ச போது பெரிசா ஒண்ணும் தோணலை. பின்னால என்னோட 'Boss ' ஒரு நாள் என்னப் பாத்து ஒண்ணு சொன்னதும் திரும்ப இது நெனப்புக்கு வந்துச்சு.

அப்போ (1981)வேலைக்கு சேர்ந்த புதுசு. சின்மயா நகரிலிருந்து தரமணிக்கு ஒரே பஸ் 5D. அதனோட டையத்துக்குத்தான் நாம போயாகணும். இப்படியா எட்டு மணி ஆபீசுக்கு ஏழேகாலுக்கே போய் விடுவேன். அதை விட்டா எட்டரைக்குத்தான் போகமுடியும்.

பொதுவா நான் தான் போயி கடையத் தொறக்கணும். ஒரோரு சமயம் யாராவது தொறந்து ஆபீசக் கூட்டிக்கிட்டு இருப்பாங்க. அன்னிக்கு யாராவது ஸ்பெஷல் கெஸ்ட் வர்ற நாளா இருக்கும்.

ஒருநாளைக்கு, நான் தொறந்து கெடந்த ஆபீஸுக்குள்ள ஜாலியா (கல்யாணம் ஆகவில்லை!!) பாடிக்கிட்டே உள்ளே போனேனா, எம்பேரச் சொல்லி எங்க டைரக்டர் கணீர்ன்னு கூப்புடறது கேட்டது. அவரு அப்படித்தான் வெங்கல கடையில புகுந்த யானை மாதிரி. எங்க அப்பாவோட வயசு அவருக்கு. இந்த மனுஷன் எட்டுமணிக்குத்தான வருவாரு. இப்போ எப்படிங்கற கேள்வியோட நாடியெல்லாம் ஒடுங்கி போய் அவரு ரூமுக்குள்ள எட்டிப்பாத்து 'குட்மார்னிங் சார்' அப்படீன்னேன்.

ஹிண்டு பேப்பர பிரிச்சு பாத்துக்கிட்டு இருந்தவரு தலைய வெளிய எடுக்காமெயே 'என்ன சீக்கிரம் வந்துட்டீங்களா?'ன்னு கேட்டார். அத கேக்கிறதிலேயும் ஏதோ தப்பு பண்ணியவன விசாரிக்கிற மாதிரி ஒரு தோரணை.

“ எஸ் ஸார். இதுதான் என் பஸ் டைம். அடுத்த பஸ்ஸுன்னா லேட் ஆயிடும்” அப்படீன்னு ஏதோ முணு முணுத்தேன்.

'குட். நல்லா பாடுவீங்களா ?' கிண்டலா குத்தலா புரியல. 'எதுக்கு குட். சீக்கிரமா வந்ததுக்கா' அப்படீன்னு மனசுல ஒரு போராட்டம்.

”ஸாரி சார். நீங்க இருக்கீங்கன்னு தெரியல”

உடனேயே ஒண்ணும் சொல்லாம, பேப்பர மடிச்சு டேபிள் மேல தொப்புன்னு போட்டு, நாற்காலிய வேகமா பின்னுக்குத் தள்ளி என்னத் தாண்டிக்கிட்டே வெளில ஷெட் பக்கமா போனாரு. நானும் பின்னாடியே ஓடினேன். அங்கிருந்த 'புல்லட்'ட ஸ்டார்ட் செஞ்சு 'நோ,நோ. அப்படித்தான் ஜாலியா இருக்கணும். ஐ ஆம் ஹாப்பி'ன்னு சொல்லிட்டு வீட்டுக்குப் போய் விட்டார்.

அப்படியே ஸ்டன்னாயி நின்னுட்டேன். இன்னிக்கு ஏன் புல்லட்-ல இவ்வளவு சீக்கிரமா வந்தாரு? அவரோட ஜிப்ஸி எங்க போச்சு? இப்படி பல கேள்வி மனசுக்குள்ள. அதுக்கான விடையெல்லாம் இந்த பதிவுக்கு சம்பந்தம் இல்லேங்கறதுனால எழுதலை. ஆனா அவரு பெரிய விஞ்ஞானி மட்டுமல்ல பெரிய சைகாலிஜ்ஸ்ட் கூட. அவரு பெயரு Dr.C.V.சேஷாத்ரி, திவான் பகதூர் Sir C.P.ராமஸ்வாமி அய்யர் அவர்களின் பேரன்.

காலப்போக்கில புரிஞ்சிக்கிட்டேன். கள்ளம் இல்லா மனசுலதான் சந்தோஷம் இருக்கும் சந்தோஷம் இருக்கிற எடத்துலதான் பாட்டு இருக்கும். நான் சந்தோஷமாயிருக்கிறதப் பார்த்து அவரு சந்தோஷப் பட்டிருக்காரு. ரொம்ப பெரிய மனசு !

இதைத் தான் சினா சோனா கொஞ்சம் மாத்தி சொல்லியிருக்காரு. “பாட்டுப் பாடிக்கிட்டு இருக்கிற நேரத்துல கெட்ட எண்ணங்கள் வராது”. இது சாதாரண ஜனங்கள் விசயத்துல அனுபவ பூர்வமான உண்மை. அதனால எப்போவெல்லாம் மனசு தளர்ந்து பொகுமோ அப்போதெல்லாம் சத்தம் போட்டு பாடுங்க. யாரு என்ன நெனப்பாங்களோங்கற கவலையெல்லாம் வேணாம். எதிர்மறை எண்ணங்கள் ஓடிப்போயிடும். பாட்டரி சார்ஜ் ஆயிடும்.

ரெண்டாவது சினா-சோனா வும் (அக்டோபர் 6) நல்லா யோசிக்க வேண்டிய விஷயம் தான். இதுல odd even ங்கிற வார்த்தைகளை நல்லா பயன் படுத்தியிருக்காரு. At odds அப்படின்னா சரியா புரிஞ்சுக்க முடியாம சங்கடப்படுவது. get even அப்படீன்னா சரியாப் போச்சு, புரிஞ்சுக்கிட்டதா அர்த்தம். ஒரு சுய பரிசோதனை.

“ Most men remain at odds with themselves trying to get even "

“பெரும்பாலான மக்கள் தங்களை தாங்களே புரிஞ்சுக்கிறதுக்காக ரொம்ப சங்கடப்படுறாங்க”

உதாரணத்துக்கு, சிலருக்கு சட்டு புட்டுன்னு மூக்குக்கு மேல கோவம் வரும். எதிர்ல இருக்கிறவரை சரியோ தப்போ திட்டிடுவாங்க.

அப்புறம் உக்காந்துகிட்டு 'சே ஏன் தான் இப்படி இருக்கேனோ' அப்படீன்னு யோசிக்கிறாங்க பாருங்க அது தாங்க சுய பரிசோதனை. அப்படி யோசிக்கிறதே ஒரு நல்ல அறிகுறிதான். கொஞ்சம் கொஞ்சமா மாறிடுவாங்க!

ஆரம்பத்துல சினிமாப் பாட்டோட ரெண்டாம் லைன் ரெண்டாவது படத்துக்கு பொருந்தும்னு சொன்னேன். ”...பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே”

சுய சோதனை செஞ்சுகிட்டு நம்மோட தப்பு தண்டாவெல்லாம் நாமே மாத்திக்கிட்டாத்தானே இன்னொருத்தர் நம்மப் பார்த்து சிரிக்காம வாழ முடியும்.

என்ன சொல்றீங்க ? 'சினா சோனா சொன்னா சரிதான்' இல்லே !

Wednesday, January 9, 2008

உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால்.....(சினா-சோனா-3)

ஒவ்வொருவர் உள்ளும் ஒரு தனித்திறமை இருக்கும், அதை முறையாக வெளிக்கொணர்ந்தால் அவரது ஆற்றல் எல்லோருக்கும் பயனளிப்பதாக இருக்கும் என்ற சொல்லக் கேட்கிறோம். பிரச்சனையே எப்படி "முறையாக" வெளிக் கொண்டுவருவது என்பதிலே தான்.

பிறர் சொல்வதையெல்லாம் நம்புபவர்கள், தலையாட்டி பொம்மை போல ஆமாம் சாமி போடுகிறவர்கள் தலைவர்களாக முடியாது. தான் ஈடுபட்டுள்ளத் துறையிலே தன் அறிவை வளர்த்துக் கொள்ளாதவன் நிபுணனாக முடியாது. ஒருவனின் திறமை வெளிவர வேண்டுமானால் அவன் சுய சிந்தனை உடையவனாக இருக்க வேண்டும். பிறரை நம்பி இருக்காமல் தன் திறமையிலே நம்பிக்கை கொள்பவனுக்குத்தான் தன்னம்பிக்கை வளரும். தன்னம்பிக்கை உள்ள இடத்தில் ஆற்றல் வளரும்.

இதோ பாருங்கள் சினா-சோனா வும் சொல்ல வருவதும் அதைத்தான்.

He who follows the crowd will never be followed by a crowd (Oct 11)

The wise man says to fill your job fill your mind (Oct 12)



Oct 11-ல் பிரசுரிக்கப்பட்ட Think it over... உண்மையிலே யோசிக்க வேண்டிய விஷயம் தான்.
"However brilliant an action may be it should not be accounted great when it is not the result of a great purpose"

உலகத்திலேயே மிக நீளமான தலைமுடி வைத்திருப்பவர், நகம் வளர்த்திருப்பவர், பின்பக்கமாகவே நடந்து உலகை சுற்றி வருபவர்கள் என்று பல சாதனைகள் உள்ளன. இவற்றால் உண்மையிலே ஆனது அல்லது ஆவது என்ன என பலமுறை நினைப்பதுண்டு. அதை நினவு படுத்தியது மேலே கண்ட வாசகம்.

Sunday, December 16, 2007

குட்டக் குட்ட குனிபவன் : சினா சோனா-2

குட்ட குட்ட குனிபவனும் முட்டாள் குனியகுனிய குட்டுபவனும் முட்டாள் அப்படீன்னு சொல்லுவோம் இல்லையா அதே மாதிரி

'The First faults are theirs that commit them - The second ,theirs that permit them"


முதல் தப்பு அதை செய்யறவன், இரண்டாவது தப்பு அதை விட்டு வச்சவன்

சினா-சோனா தன் வீட்டுக்காரியிடம் நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டு புலம்புவது போல் இருக்கும் இந்த சித்திரம் எல்லா இடத்துக்கும் பொருத்தம் .

சினா சோனா -சொன்னா சரிதான்

Thursday, December 13, 2007

Chiனா-Choனா சொன்னது என்னா ?

இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் பல ஆண்டுகாலம் Ching Chow என்கிற கேலிச் சித்திரத் துணுக்கு ஒன்றைப் பிரசுரித்து வந்தது. இதை Chicago Tribune என்ற அமெரிக்கப் பத்திரிக்கையினிடமிருந்து பதிப்புரிமை பெற்று வெளியிட்டது.

1927ல் ஸிட்னி ஸ்மித் என்பவரும் ஸ்டான்லி லிங்க் என்பவரும் அப்பத்திரிக்கையில் கருத்துப்படத் தொடர் ஒன்றைத் துவங்கினர். நம் தினத்தந்தியில் வரும் சாணக்கியன் சொல் போல என்று வைத்துக் கொள்ளலாம். ஆனால் ஆட்டு தாடி சாணக்கியனை போல் வெறுமனே நின்று கொண்டிருக்காமல், சீனத்துக் குடுமி வைத்த சிங்-சோவ் ஏதாவது ஒரு செயலில் ஈடுபட்டிருப்பது போலவோ அல்லது இக்கட்டில் சிக்கிக் கொண்டிருப்பது போலவோ அவர்கள் கேலிப்படம் வரைந்தனர். பிற்காலத்தில் குடுமியை மாற்றி அவனது சிகையை நவீன முறையிலேயே சித்தரிக்க ஆரம்பித்தனர்.

மேலும் விவரங்களுக்கு இங்கே சுட்டவும்.

சிங் சோவ் கேலிச் சித்திரங்களில் மெல்லிய நகைச்சுவையும் உட்கருத்தும் பொதிந்திருக்கும். ஒரு சிலவற்றில் ஆங்கில வார்த்தைகளை வைத்து சிலேடைகள் இருக்கும். பல இடங்களில் சித்திரம் இல்லாமல் புரியாது. இவை தவிர உப்பு சப்பு இல்லாமல் வந்த துணுக்குகளும் உண்டு.

கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த நாட்களில் இதனால் கவரப்பட்டு என்னிடம் காலியாக இருந்த நாட்குறிப்பேட்டில் தினமும் வரைந்து வைத்துக்கொள்ள ஆரம்பித்தேன். சிங் சோவ் மட்டுமல்லாது அன்றைய தேதியில் வெளியான Think it over யும் சேர்த்தே எழுதி வைத்துக்கொண்டேன்.

மாலையில் வீடு திரும்பியதும் காபி குடித்துக் கொண்டே முதலில் செய்யும் காரியம் இது தான். இதற்கு தேவைப்பட்ட நேரம் சுமார் பத்து நிமிடங்கள். பலரும் இதை பாராட்டவே சுமார் நான்கு வருட காலம் (1978-1982)தொடர்ந்து செய்து வந்தேன். அதாவது நான்கு டைரிகள்.தொடராததற்குக் காரணம் அந்த தொடர் நின்று போனது தான். இப்பொழுது என்னிடம் உள்ளது இரண்டு டைரிகளே. இன்னும் இரண்டு யாரிடம் உள்ளது என்று தேடிக்கொண்டிருக்கிறேன்.

பிற்காலத்தில் அவற்றை புரட்டிப் பார்க்கும் போது முன்பு புரியாதிருந்த பல கருத்துப் படங்கள் புரிந்தன. பல நிர்வாக உண்மைகள் புரிய ஆரம்பித்தன. மீண்டும் மீண்டும் புரட்டும் பொழுது என் அனுபவத்திற்கேற்ப பல புது பரிமாணங்கள் தெரிந்தன. இதில் எனக்குப் பிடித்த சிலவற்றை அவ்வப்போது நம் இணைய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்கிற எண்ணத்துடன் "சினா-சோனா சொன்னது என்னா" என்ற தலைப்பில் பதியவிருக்கிறேன்

சிங்-சோவ் (Ching Chow)என்பதை சினா சோனா என்று நாம் தமிழ் படுத்திக் கொள்வோம். அதனோடு எனக்கு தோன்றும் கருத்துகள் இருப்பின் அவற்றையும் சொல்லுவேன். படித்தபின் உங்களுக்கு தோன்றுவதை நீங்களும் சொல்லுங்கள்.

Give a big hand to Chiனா Choனா


'its wisely written
More important than seeing through things is, seeing things through

பனிமழையில் முன்னே இருப்பதை பார்க்க முடியவில்லை என்பதால் பயணத்தை ரத்து செய்யாமல் காரியமே கண்ணாக பயணத்தை தொடர வேண்டும் என்று தனக்குத் தானே சொல்லிக் கொள்வது போல் உள்ளது இந்த படம்.

சற்று யோசித்துப் பார்த்தால் seeing through things என்பது நடப்பனவற்றை கவனித்துக் கொண்டிருப்பது மட்டுமல்லாமல் நிகழ்சிகளின் உள்நோக்கங்களையும் ஆராய்வது. "Seeing things through" என்பது எடுத்த காரியத்தை வெற்றிகரமாக நடத்திச் செல்வது.

நாம் அன்றாடும் காணும் உண்மை ஒன்று.

ஒரு முக்கியமான project-ல் உள்ள உறுப்பினர்கள் அதை வெற்றிகரமாக முடிக்க செயல்படுவது seeing things through ஆகும். அங்கே உட்பூசலும் குழப்பமும் இருந்தால் ஒருவரின் செய்கையை, முடிவுகளை மற்றவர் சந்தேகக் கண்கொண்டு அணுகுவதே seeing through things. வெற்றிக்கு எது தேவை ?

சினா-சோனா சொல்வது சரிதான்!
More important than "seeing through things" is, "seeing things through