Tuesday, October 2, 2018

நம்மிடையே ஒரு பழுத்த காந்தீயவாதி


காந்திஜி இரயிலில் மட்டுமே பயணம் செய்தார். அதுவும் பெரும்பாலும் மூன்றாம் வகுப்புப் பயணமாகவே இருக்கும். மக்களுடன் தன்னை அவர் இணைத்துக் கொண்ட விதம் அப்படி.

அவர் வருவதைத் தெரிந்து கொண்டு எல்லா புகை வண்டி நிலையங்களிலும்  அவருடைய தரிசனத்திற்காக கட்டுப்பாடு செய்யவே கடினமானதான மக்கள் கூட்டம் கூடி விடும்.  அப்படிப்பட்ட  ஒரு சமயத்தில் ஒரு சிறிய புகைவண்டி நிலைய அதிகாரிக்கு காந்திஜி தன்னைஅழைப்பதாகக் கேட்டதுமே தலைகால் புரியாத சந்தோஷம்.

அவரைக் கண்டதுமே காந்திஜி தன் உதவியாளர் வி.கல்யாணத்தைக் காட்டி “ இவருக்கு ஒரு பயணச்சீட்டுக்கான பணத்தைப் பெற்றுக் கொண்டு அதை வழங்கவும். என் பயணத்தை ஏற்பாடு செய்தவர்கள் அவர் உடன் வருவதை அறியார்கள்” என்று கேட்டுக் கொண்டார். அந்த அதிகாரியோ “உலகமே கொண்டாடும் உங்களிடம் பயணச்சீட்டுக் கேட்க முடியாது “என்று மறுத்தார். அதற்கு காந்திஜி “ நீங்கள் உங்கள் கடமையிலிருந்து தவறுகிறீர்கள். நான் உங்கள் மேலதிகாரிகளிடம் புகார் கொடுக்க நேரிடும்” என்று பயமுறுத்தியதும் திரு கலியாணத்திற்கான பயணச்சீட்டு வழங்கப்பட்டது.

இன்று 96 வயதாகும் திரு V கல்யாணம் காந்திஜியின் கடைசி நான்கு வருடங்கள் அவருடைய தனி உதவியாளராக இருந்தவர்.  1944 -ல்  ஆங்கில அரசாங்கத்தில் ரூ.250 மாத சம்பள வேலையை உதறிவிட்டு காந்திஜியிடம் உதவியாளராக சேர்ந்தார். “என்னால் அறுபது ரூபாய் மட்டுமே கொடுக்க முடியும்” என்று காந்திஜி சொன்னதற்கு “ ஆசிரமத்தில் எனக்கு உணவும் உடையும் மட்டும் போதும். நான் சேவையாகவே இதை செய்கிறேன்” என்று வார்தா வில் உள்ள சேவாக்கிராமத்தில் சேர்ந்து கொண்டார்.

“ அவருக்கு வரும் கடிதங்களை பிரித்து அடுக்கி வைப்பது, பின்னர் அவர்
சொல்லும் பதில்களை குறிப்பெடுத்து தட்டச்சு செய்வதே எனக்கிடப்பட்ட கடமையாக இருந்தது.  நான் எத்தனையோ முறை தவறுகள் செய்த போதிலும் அவர் ஒரு போதும் என் மீது கோபம் கொண்டது இல்லை. பொறுமையாகத் திருத்துவார். பிறர் மனம் நோகப் பேசுவதையே அஹிம்சைக்கு எதிரானது என்பதை உறுதியாக எண்ணிய மகான் அவர். நாட்கள் கூடக் கூட அவர் மேலான மதிப்பு கூடிக் கொண்டே போனது” என்கிறார் சென்னையில் வசிக்கும் திரு கல்யாணம்.

இன்றும் தனது 96 ஆவது வயதில் சுறுசுறுப்பாக தனது தேவைகளை தானே கவனித்துக் கொண்டு  துணி துவைப்பது, சமையல் செய்வது, காய்கறிகளை விளைவிப்பது மட்டுமன்றி சுற்றுச் சூழலை தூய்மையாக வைத்துக் கொள்வதில்  அவர் காட்டும் அக்கறை அவருடைய ஆசிரமப் பணியின் தொடர்ச்சிதான்.

’ஒருவன் தனது தேவைக்கு மீறி சேமிப்பது தேவையற்றது அதை பங்கிட்டு உண்ண வேண்டும்’ என்ற கொள்கையை உறுதியாகக் கடைபிடிக்கும் அவர் தனது மாதாந்திர ஓய்வு தொகையான ரூ.பத்தாயிரத்தில் ஒன்பதாயிரத்தை அனாதை இல்லங்களுக்கும் பிற சேவா காரியங்களுக்கும் நன்கொடையாகக் கொடுத்து விடுகிறார்.

எல்லோரும் திரு கல்யாணத்தை போல் வாழ்ந்து விட்டால் ஒரு பொற்காலமே மலர்ந்து விடும்.

இது ரேடியோ சாயி-ல் இன்று வெளியான ஒரு கட்டுரையின் சிறு பகுதியே. முழுக் கட்டுரையையும் படிக்க “ Story of Gandhiji;s Secretary -Mr V Kalyanam...."
[Pics : Thanks to Radiosai] 

-------------------------------------------------------------------
இன்று காந்தி ஜெயந்தி . இந்திய வரலாற்றை மாற்றியமைத்த  அந்த மகானுக்கு  அர்ப்பணம்

Sunday, July 29, 2018

ஹைட்ரோபானிக்ஸ்-ஸில் என் பரிசோதனைகள்-1

மாடித் தோட்டம் என்பதை சற்று புதுமையாக செய்ய வேண்டும்  பலருக்கும் பலனளிக்கும் வகையில் செய்ய வேண்டும் என்கிற ஆர்வம் உந்த பலருடைய அனுபவங்களை யூட்யூப் வீடியோக்களில் பார்த்த வண்ணம் இருந்தேன்.

என்னைக் கவர்ந்தது நீரியல் வளர்ப்பு என்றழைக்கப் பெறும் ஹைட்ரோபானிக்ஸ் முறையில் செடிகளை வளர்க்கும் முறைதான்.

இம்முறையில் நீரின் தேவை மிகக் குறைவு. அதாவது 10% மட்டுமே !!!

மேலும் இது மண்ணில்லா வளர்ப்பு முறை.  செடியின் வேர்கள் நேரடியாக நீருக்குள் சென்று வளர்ச்சியை கொடுக்கிறது.

ஆனால் என் தேடலில் இதை வெற்றிகரமாக தமிழகத்தில் செய்து வருபவர்கள் அதி நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்துகின்றனர். இதைத் தொழில் ரீதியாகத் தான் செய்யவேண்டுமே ஒழிய பொழுது போக்காக செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு முதலீடு செய்து கட்டுபடியாகாது.

எனவே இதனை எளிமைப்படுத்த வேண்டியது என் முதல் முயற்சியாக இருக்க வேண்டும் என்று தோன்றியது.  இனி படிப்பதற்கு சுலபமாக கேள்வி-பதில் பாணியில் தருகிறேன்.

1)  எளிமை படுத்த முடிந்ததா?

பரிசோதனையின் முதல் படியிலேயே வெற்றியை எதிர்பார்க்கக் கூடாது. யூடியூபில் தேடியதில் சிலர் Kratky  முறையில் சிறிய தொட்டிகளில் அல்லது பாட்டில்களில்  ஊட்டக் கரைசலை விட்டு கீரை, காய்கறிகள் போன்றவற்றில் அதிக விளைச்சலை காண முடிவதாக கூறப்பட்டிருந்தது. ஆனால் இவை அத்தனையும் செயற்கை இரசாயன உரமாகக் காணப்பட்டது. என்னுடைய குறிக்கோள் இயற்கை உரங்களால் வளர்க்கப் படவேண்டும் என்பதாக இருந்தது. இது பரிசோதனைக்கு இரண்டாம் கட்டமாயிற்று.

2) முதல் கட்டத்தை தாண்டினீர்களா?

ஓரளவு ஆம் என்றே சொல்லலாம். கீழே உள்ள படங்களைப் பாருங்கள். எப்படி உபயோகமற்றது என்று தூக்கிப் போடும் தண்ணீர் பாட்டில்களை செடி வளர்ப்புக்காக பயன்படுத்தப் படுகிறது என்பதைக் காணலாம்.நீரியல் முறையில் வளர்ப்பதற்காக வலை போன்ற சிறிய கிண்ணங்கள் விற்கப்படுகின்றன. மூன்று அங்குலம் உள்ள கிண்ணம் ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டிலுக்கு பொருத்தமாக இருக்கிறது.   விதைகள் இளம் செடிகளாக  இந்த வலைக்கிண்ணத்தில் வேர் விட்டதும் அவற்றை நீருள்ள பாட்டிலுக்கு மேலே அமர்த்தி விடலாம். எல்லா உயிர்கட்கும் இறைவன் கொடுத்திருக்கும் அதிசய ஆற்றல்  காரணமாக வேர்கள் கீழறங்கி நீரை எட்டி விடுகின்றன. இதன் பின்னர் நாம் பாட்டிலில் நீரின் அளவை கவனித்து குறையாமல் இருக்கும்படி பார்த்துக் கொள்ளவேண்டும். வாரம் ஒரு முறை பார்த்துக் கொண்டால் போதும்.


( படத்தை சொடுக்கி பெரிதாக்கி படிக்கலாம்)


 3) ஆம் வேர் அடர்த்தியாக வெளிப்பட்டிருக்கிறது. ஆனால்  படத்தில் எல்லாம் கீரை வகைகளாகவே உள்ளனவே?

கீரைகள் வேகமாக வளரும் என்பதால் முதலில் அவற்றை முயற்சித்தேன்.  இவை எனது நம்பிக்கையை பலப்படுத்த பெருமளவு உதவி செய்தன. ஒரு வகையில் உற்சாகம் ஊட்டுவதாகவும் இருந்தது.  அதனால் தக்காளிச் செடியையும்  “கிராட்கி” முறையில்  வளர்த்துப் பார்த்தேன்.சில நாட்களிலேயே இரண்டிற்கும் வித்தியாசம் புலப்படத் தொடங்கியது. தொட்டி மற்றும் பைகளில் வளர்ச்சி வேகம் அதிகமாகவும் நீரியல்-கிராட்கி முறையில் குறைவாகவும் காணப்பட்டது.  ஊட்டச் சத்துக் குறைவாகிக் கூடாதென்று தினமும் கம்போஸ்ட் டீ எனப்படும் இயற்கை உரத்தை காலையிலும் மாலையிலும் நீரியல் பாட்டில்களுக்குக் கொடுத்தாலும் அதிக முன்னேற்றம் காணப்படவில்லை.

                                                                                                                                                                    4) இதற்கான காரணம் என்ன ?                                       

எனக்குத் தோன்றுவது செடியின் வேர் இயற்கையாக வளர வேண்டிய விட்டம்  8 அல்லது 10 அங்குலமாக இருந்து அதை மூன்று அங்குல அளவிலே குறுக்குவது ஒரு காரணமாக இருக்கலாம் எனத் தோன்றியது. இது ஒரு பெரிய மரத்தை போன்சாய் தொட்டிக்குள் வளர்ப்பது போல எனலாம். ஆனால் செயற்கை இராசயன கரைசல்களில் இந்த பிரச்சனை இருப்பதாக யாரும் தெரிவிக்கவில்லை.  ஆகையால் அதிக அளவு (இயற்கை) ஊட்டச்சத்து பெரிய பைகளில் கிடைப்பதாலும் இருக்கலாம் என்றும் தோன்றியது.

5) அப்படியானால் கிராட்கி முறை எதிர்பார்த்த பலனை தரவில்லை எனச் சொல்லலாமா ?

இப்போதே அதை முடிவு கட்டமுடியாது. அடுத்ததாக, வலைக்கிண்ணத்தின் விட்டத்தை தொட்டியின் அளவுக்கு (8 அங்குல அளவிற்கு) பெரிதாக்கி முயற்சிக்க இருக்கிறேன்.

6) அதனால் என்ன பயன்? கிண்ணம் பெரிதானால் அதில் நிரப்ப வேண்டிய தேங்காய் நார்கழிவும் அதிகம் தேவைப்படுமே ?

அதிகம் தேவைப்படினும் ஒரு தொட்டியில் இடப்படும் மண் (அல்லது நார்கழிவை) ஐந்தாறு பெரிய கிண்ணங்களின் தேவையை பூர்த்தி செய்ய முடியும்.  அடிப்படை நோக்கம் என்னவென்றால் பராமரிப்புத் தேவையை குறைத்துக் கொள்வதே.  வேர்கள் நேராக நீரின் தொடர்பில் இருக்கும் போது நமக்கு நீர் மேலாண்மை சுலபமாகிறது.

7) இந்த குறைபாடு தக்காளிக்கு மட்டுமா ? கீரைகளில் வளர்ச்சி வித்தியாசப்படவில்லையா ?

கீரைகளிலும் வித்தியாசம் அதிகமாகவே இருந்தது. உதாரணமாக தொட்டியில் பசலைக் கீரை (spinach) காட்டிய வளர்ச்சி வேகம்   நீரியல் முறையை விட அதிகமாகவே இருந்தது.

8) இதில் நீர் மேலாண்மை நிலவரம் எப்படியிருந்தது ?

கண்டிப்பாக  நீர் மிச்சப்படுகிறது. தெர்மோகோல் பெட்டியுள் நீர்  3 லிருந்து 4 அங்குல உயரம் எப்போதும் இருப்பதால்  அதில்  தினமும் நீர் ஊற்றத் தேவை இல்லை. ஆனால் தொட்டி வளர்ப்பில் மிக வேகமாக நீர் ஆவியாகி உலர்ந்து போவதால் காலையும் மாலையும் குறைந்தது அரை லிட்டர் முதல் ஒரு லிட்டர் வரை ஊற்ற வேண்டி இருந்தது. அந்த வகையில் நீரியல் வளர்ப்பில் கண்டிப்பாக சேமிப்பு  இருக்கிறது.

9) வேறு ஏதாவது பயன் காணப்பட்டதா?

வளர்ச்சி சற்றுக் குறைவாக காணப்பட்டாலும்  இலைகள் மிக ஆரோக்கியமாக வளர்கின்றன. எதிலும் பூச்சித் தாக்குதலோ வேறெந்த வகையான நோய் அறிகுறியோ தென்படவில்லை.  வெயில் கடுமையாக இருந்தால் எடுத்து நிழலில் வைப்பது அல்லது  மழை நேரத்தில் இடம் மாற்றுவது என்பது சுலபமாக இருந்தது.

10) நீரியல் வளர்ப்பு முறையில் எதிர் கொள்ளும் பிரச்சனைகள் என்னென்ன ?

வலைக்கிண்ணத்தில் உள்ள நார்கழிவுக்கு - மண்ணைப் போலல்லாமல் -திடத்தன்மை குறைவாக இருப்பதால்  வேர்களுக்கு பிடிமானம் ஆரம்பநிலையில்  போதுமானதாக இருப்பதில்லை. அதிகக் காற்று செடியின் நாற்றுகளை நிலைகுலையச் செய்கின்றன. அடுத்ததாக  இதில் தரப்படும் ஊட்டச் சத்தின் அளவை நிர்ணயிக்க கடினமானதாக இருக்கிறது. நீரிலேயே இயற்கை உரங்களை கரைத்து கொடுக்கும் முயற்சியும் நம்பிக்கைத் தரவில்லை. அந்த கலங்கிய நீரில் பிராணவாயு குறைந்து செடிகள் வேர் அழுகல் நோயினால் தாக்கபட்டன. இதனால் எப்போதும் சுத்தமான நீரையே வேர்களுக்கு கொடுக்க வேண்டியதாகிறது. அப்போது தினசரி ஊட்டக் கரைசல் சொட்டு சொட்டாக கொடுக்கும் அவசியம் ஏற்படுகிறது.  சற்று பெரிய அளவில் செய்யும் போது இதை சொட்டு நீர் முறைக்கு மாற்றி  நார்கழிவில் உறிஞ்சப்பட்டு செடிகளுக்கு சேரும் வகையில் வடிவமைக்க வேண்டும்.வாசகர்களுக்கு  நீரியலில் அனுபவங்கள் இருப்பின் அவசியம் பகிரவும். இது பலருக்கும் பயன்படும். அடுத்தக்கட்ட  பரிசோதனைகளுக்குப் பின்னர்  இதன் அடுத்த பகுதி வெளியாகும்.

Saturday, May 26, 2018

கைவிடப்பட்ட செல்வங்களை மீட்பவர்

        குழந்தைகளுக்கு  கல்வி கற்பிப்பது என்பது பெரும் சவாலாகப் பார்க்கப்படுகிறது.  தமிழக அரசு பத்துக் குழந்தைகளுக்கும் குறைவாக உள்ள 890 பள்ளிகளை மூடிவிடலாமா என்று ஆலோசனை செய்கிறதாம் !!

     ( வாட்ஸ்-ஆப் அன்பருக்கு நன்றி)

       இதற்கு காரணம் யார்? குழந்தைககள் பள்ளிக்கூடத்தை வெறுப்பதற்குக் காரணம் அவர்கள் இருக்கும் சூழ்நிலையே. ஒன்று குடும்ப  சூழ்நிலை அல்லது பள்ளி ஆசிரியர்களின் இறுக்கமான அல்லது பொறுப்பற்ற போக்கு.

     அச்சிறார்களுக்கு அன்பு என்கிற ஊட்டம் கிடைக்காமல், பயம் என்கிற பிசாசு பிடித்துக் கொள்கிறது.  அப்போது அவர்களுக்கு இருக்கும் ஒரே வழி பிடிக்காத சூழ்நிலையிலிருந்து ஓடிப் போவதுதான்.

     நமது நாட்டில் சுமார் 4 கோடி சிறுவர் சிறுமியர் மேல்நிலைப் பள்ளி எட்டும் முன்பே விலகிப் போகின்றனர் என்கிறது புள்ளி விவரம்.  இதில் உள்ள அபாயம் என்னவென்றால் இவர்கள் திசை திருப்பப்பட்டு சமூக எதிரிகளாக -போராளிகள் என்ற பெயரிலோ அல்லது சில சில்லறை காசுகள் வேண்டி வன்முறை கும்பல்களுக்கு அடிவருடிகளாகவோ- மாறிப் போவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

இந்த சறுக்கலை தடுத்து நிறுத்துவது எப்படி என்பதே கேள்வி.

     இதற்கு அடிப்படைக் கேள்வியான  ’கல்வி என்பதன் நோக்கம் என்ன ?’  என்பதற்கு பதில் காண வேண்டும்

"Character is end of education" 

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப்படும்.

    சுருக்கமாகச் சொல்வதானால் எழுத்தறிவு பெற்ற  நல்ல குடிமக்களை உருவாக்குவதே கல்வியின் நோக்கம். தாங்களும் நேர்மையில் நின்று தன்னை சார்ந்த சமுதாயத்தையும் அன்புடன் பேணுபவரே நல்ல குடிகள். பணம் சம்பாதிப்பதற்காக படிக்க வேண்டும் என்ற எண்ணம் தவறானது.  இந்த எண்ணத்தை இளம் வயதிலேயே ஆழமாகப் பதிக்க வேண்டிய முறையே சரியான கல்வி முறை.

     அதன் முதல் படி அன்பும் அரவணைப்பும் உடைய ஆதரவான சூழ்நிலை. இரண்டாவது -அவர்களை  பள்ளி  பாடதிட்டத்தின்படி விஷயங்களை நிரப்பிக்கொள்ளும் எந்திரங்களாக பாவிக்காது -அவர்களுக்கு இயல்பாக ஏற்புடைய துறைகளில் ஊக்கம் கொடுத்து அதனோடு ஊடே எழுத்தறிவையும் சமூக, சுற்றுச்சூழல் பேணுதலையும் போதிக்க வேண்டும். கற்பது என்பது ஆர்வத்தை வளர்ப்பதாக இருக்க வேண்டுமே அன்றி வேண்டாத பளுவாகி விடக்கூடாது.

      இவையெல்லாம் கேட்க நன்றாக இருக்கிறது ஆனால் நடைமுறையில் சாத்தியமா என்று சந்தேகப் படுபவர்களுக்கு ‘சாத்தியமே’ என்று அழுத்தம் திருத்தமாக சொல்கிறார் திரு அனந்தகுமார். ( http://www.divyadeepatrust.org/)

    மைசூர்  அருகில் இவர் சுமார் இருபது வருட காலமாக நடத்திவரும் ‘கலியுவ மனே’ ( Home for Learning)  என்னும் மரபுசாரா பள்ளி, பின் தங்கிய மாணவ மாணவியருக்காவே நடத்தப்படுகிறது.      பள்ளியை வெறுத்த அல்லது படிப்பு ஏறவில்லை என்று ஒதுக்கப்பட்ட அனைத்து சிறுவர்களும் இங்கு வருடத்தில் எந்த நேரத்தில் வேண்டுமானாலும்  சேரலாம். அவர்களை உணர்வு பூர்வமாக அறிந்து கொண்டு  அவர்களுக்கு தேவையான வகையில் பாடங்கள் சொல்லித் தரப்படுகிறது.

       IQ அடிப்படையில் பல குழுக்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு குழுவுக்கும் ஏற்றவகையில் பாடதிட்டம் மேற்கொள்ளப்படுகிறது. இதன்படி ஒரு குழுவில் எட்டு வயது சிறுமியும்  பன்னிரண்டு வயது பாலகனும் ஏன் பதினைந்து வயது எட்டிய சிறுவனோ சிறுமியோ கூட ஒன்றாகப் படித்து கொண்டிருப்பார்கள்.  ஒவ்வொருவரின் வளர்ச்சி வேகமும் வேறு வேறாக இருக்கும். அதன்படி குழு உறுப்பினர்கள் மாற்றப்பட்டு சரியான முறையில்  அவர்களின் அறிவு வளர்ச்சியை தூண்டி விடுகின்றனர்.

       அவர்களுக்கு பரீட்சை பயமோ அடுத்த வகுப்புக்கு செல்வோமோ இல்லையோ என்ற பயங்கள் இல்லாத வண்ணம் அவர்களுடைய முன்னேற்றம் கண்டறியப்படுகிறது.

      ஒரு சிறுவனோ சிறுமியோ குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட நிலையை கடக்கவேண்டும் என்ற கட்டாயம் எதுவும் கிடையாது.

       பத்தாம் வகுப்பு தகுதியை அவர்கள் எட்டும் போது அம்மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி கொடுக்கப்பட்டு மாநில தேர்வில்  தன்னிசை (private candidate)யாகத் தேர்வு எழுதி தகுதி பெற வழி செய்கின்றனர். அதன் பின்னர் அவர்களின் தேர்ச்சியைப் பொறுத்து மேற்படிப்புக்கு வழி செய்வதோ தொழிற்கல்வி பயில்வதற்கோ பரிந்துரைக்கப்படுகின்றனர்.

இனி அனந்தகுமாரே அவருடைய பயணத்தை சொல்லட்டும்.


     சமீபத்தில் அவரை சந்தித்துப் பேசிக் கொண்டிருந்த போது இந்த மரபுசாரா கல்வி முறைக்கு இன்னும் கல்வித்துறையிலிருந்து தக்க அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று சொல்லினார்.  இவருடைய கல்வி முறைப் பற்றி மத்திய அரசு நடத்திவரும் ஆசிரிய பணிக்கான பயிற்சிகூடமான Regional college of  Education Mysore  மாணவி ஒருவர் ஆராய்ச்சிக் கட்டுரை தயாரித்து அதன் சிறப்பு அம்சங்களை வெளியிட்டிருக்கிறார்.

      ஆர்வம் உள்ளவர்களுக்கு இவர் நாடெங்கிலும் இப்படிப்பட்ட பள்ளிகளை நடத்த விரும்புவோருக்கு பயிற்சி அளிக்கத் தயார் என்பதையும் தெரிவித்தார்.

       எனக்கென்னமோ இந்த முறையை  ஒரு கூடுதல் பிரிவாக ஒவ்வொரு பள்ளியிலுமே இயக்கலாம் என்றே தோன்றுகிறது.  ஏனென்றால் இன்றைய வசதியுடைய நகர்புற  குழந்தைகளிடையேயும் இத்தகைய பிரச்சனைகள் உண்டு. தனியாக இதற்கெனப் பள்ளி என்னும் போது அவர்கள் தனிமை படுத்தப்படுகின்றனர். மேலும், பின் தங்கிய மாணவர்களின் பெற்றோர்கள் “ உங்கள் பிள்ளையை  வேறு பள்ளியில் சேர்த்து விடுங்கள்” என்கிற பேச்சை கேட்க வேண்டியிருக்காது.

      RTE ( right to education) சட்டத்தில் மாணவர்களை தகுதி இருப்பினும் இல்லாவிடினும் அடுத்த வகுப்புக்கு அனுப்ப வேண்டும். இதனால்தான் தரம் தாழ்ந்து விடுகிறது. ஆகையால் ’வகுப்பு முறை இல்லாத’ தகுதி மற்றும் வயது அடிப்படையில் மட்டும் இறுதி தேர்வு எழுத அனுமதிக்கப்படும் பொழுது வெற்றிக்கான வாய்ப்பும் மாணவர்களின் தகுதியும் மேம்படுகிறது.

       பள்ளி மற்றும் ஆசிரியருடைய வேலை ஒரு தோட்டக்காரனைப் போன்றது. செடிக்கு உரமிட்டு, நீர் ஊற்றி, களையெடுத்து, பாதுகாக்க வேண்டியது அவர்களின் கடமை. விதையின் வீர்யத்திற்குத் தக்கவாறு வளர்ச்சி இருக்கும்.  அதில் குற்றம் காண வேண்டிய அவசியமில்லை.

      திரு அனந்தகுமார் அவர்களுடன் பேசிக்கொண்டிருந்ததில் தற்காலத்தில் குருகுல முறை என்பதை நடைமுறைபடுத்த வேண்டுமானால் அதற்கு ஒரு மாதிரி பள்ளியை தன் உழைப்பினால் உருவாக்கியிருக்கிறார் என்பது புரிந்தது. ஏனெனில் அந்த கால குருவும் மாணவனின் தகுதியையும் குணநலன்களையும் மனதில் கொண்டே அவர்களின் திறமையை வெளிக் கொண்டுவரும் வகையில் பாடங்களை சொல்லிக் கொடுத்தனர் என்று படித்திருக்கிறோம்.

இவரை "Redeemer of the forgotten" என்றால் மிகையாகாது.


Saturday, April 21, 2018

புதிய படைவீரர் திரள்கின்றனர் ! பராக் பராக்

   நமக்கு எல்லாம்  BSF பற்றித்  தெரிந்திருக்கும். குறைந்த பட்சம் கேள்விப் பட்டிருப்போம், Border Security Force.

 இப்போது நீங்கள் பொதுவாக கேள்விப் படாத BSF பற்றி  சொல்லப்போகிறேன்.  இது Black Soldier Fly.

முன்னது தேசம் காப்பது, பின்னது சுற்றுச் சூழல் காப்பது.

தமிழ் விக்கி பீடியா இதை ”படைவீரன் ஈக்கள்” என்று குறிப்பு தருகிறது.

இது குப்பை கழிவுகளில் ஈக்கள் பெருகாமல்-அதன் மூலம் நோய் பரவலை -தடுக்கிறது. இதனால் இதனை நன்மை பயக்கும் பூச்சி இனமாகக் கருதுகின்றனர்.   இதைப் பற்றி ஏன் எழுத ஆரம்பித்தேன் என்பதை சொல்கிறேன்.

சிறிது காலமாக, மாடித்தோட்டம் போட வேண்டும் என்ற ஆவல் உந்த பல யூ-ட்யூப் சலனப் படங்களைப் பார்த்து சிறிது சிறிதாக ஆர்வத்தை வளர்த்துக் கொண்டேன். அப்போது கண்டது தான் வீட்டில்  சமயலறைக் கழிவுகளைக் கொண்டு ‘கம்போஸ்ட்’ செய்வதன் மூலம் நாமே இயற்கை உரம் தயாரிக்கலாம் என்பது அரிச்சுவடி பாடமானது. “சமயலறையில் அதற்கு இடம் கிடையாது அதோட அழுகிப் போகிற நாத்தத்தையெல்லாம் இங்கே கொண்டு வரக்கூடாது” என்ற ஆணைக்குப் பணிந்து அதை காற்றோட்டமான கூடைகளில் சேமிக்கத் தொடங்கி மொட்டை மாடியின் ஒரு மூலையில் வைத்தேன்.


சுமார் ஒரு மாதத்தில் கூடை நிறைந்து அடுத்த கூடையை ஆரம்பித்தாயிற்று. பொதுவான பரிந்துரைகளின்படி பழைய கூடையை அவ்வப்போது கிளரி, தண்ணீர் தெளித்து கீழே அதன் கறுப்பான டிகாக்ஷனைப் பிடித்து பத்திரப் படுத்திக் கொண்டேன். இன்னமும் சீரியஸாக தோட்டம் எதுவும் ஆரம்பிக்கவில்லை. இருக்கின்ற இரண்டு மூன்று -துளசி, செம்பரத்தை, காசித்தும்பை -தொட்டிகளுக்கு அதை கரைத்து ஊற்றினேன். 

இப்போது தான் ஒரு விசித்திரமான காட்சி தெரிய ஆரம்பித்தது. திடீர் திடீரென்று  இரண்டு மூன்று நாட்களுக்கு ஒரு முறை எங்கு பார்த்தாலும் கருப்பு வர்ண புழுக்கள் ஊர்ந்து போவதை மாடி முழுவதும் அங்கங்கே காணமுடிந்தது.  முதலில் அருகிலிருக்கும் பூவரசம் மரங்களிலிருந்து வருவதாக நினைத்தேன்.

“ஆமா ! இத்தனை வருஷமா இல்லாதது இந்த வருஷந்தான் புதுசா வருதாக்கும் !! எல்லாம் உங்க கம்போஸ்ட்தான்” என்கிற விசாரணை கமிஷன் முடிவுக்குப் பின்னர் இதை பற்றிய விவரத்தை கூகிளாரிடம் கேட்டேன்.”ஓ இதுவா ! இது Black Soldier Fly -ன் கூட்டுப்புழு நிலைக்கு முந்தய நிலை. ” என்று பதில் சொல்லியது. 

அதன் பின்னர் தீவிரமாகத்தேடியதில் தான் தெரிந்தது இது பெரிய அளவில் ஆராயப்பட்டுவரும் ஒரு ஈ வகை பூச்சி,  Hermetia illucens. அதை ஓரளவு பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவு

  இது ஈ வகையைச் சேர்ந்தாலும் ஈக்களைப் போல நோயைப் பரப்புவன அல்ல.  ஏனெனில் எதையும் உண்பதற்கு வாயமைப்பு கிடையாது. அவைகளின் ஆயுட்காலமே 5 முதல் 8 நாட்கள் மட்டுமே. இந்த காலத்தில் அவற்றின் ஒரே தொழில் இனப் பெருக்கம் மட்டுமே.

     கழிவு சார்ந்த ஈரப்பதம் மிக்க இடங்களில் இந்த ஈ  முட்டையிடும் ( 600 முதல் 800 வரை) . இவைகளுக்கு பறக்கும் நிலை வந்தவுடன் ஆகாரம் எதுவும் தேவைப்படாது. ஏனெனில் புழு நிலையிலேயே அவற்றை கொழுப்பாகவும் புரதமாகவும் மாற்றி சேமித்துக் கொள்ளும். முட்டைப் பொரிந்து புழுக்கள் வெளியே வந்ததும் பெருந்தீனி தின்பவைகளாகி விடுகின்றன.  இவைகளின் எடை 9000 மடங்கு 12 நாட்களில் கூடிவிடும் என்கின்றனர்.  

  ஆஸ்திரேலியாவில் ஒரு நிறுவனம்  இந்த புழு வளர்ப்பையே தொழில் ரீதியாகத் தொடங்கியுள்ளது. 432 மணி நேரத்தில் ஒரு கிராம் (45000) முட்டைகள் சுமார் 2.5 கிலோ புரதம்  கொடுக்கும் என்று  விஞ்ஞான ரீதியாக கண்டறிந்து தமது நிறுவனத்தின் பெயரையே ' Farm 432' என்று பெயரிட்டுள்ளனர்.  இதை விட வேகமாக கழிவுகளிலிருந்து புரதம் தயாரிக்க முடியுமா என்பது சந்தேகமே. 

  இதனால் இதைக் கொண்டு மீன் கழிவினால் கிடைக்கும் புரத ஆகாரத்திற்கு ( Fish Protein) மாற்றாக பயன்படுத்தமுடியுமா என்கிற ஆராய்ச்சி வேகமாக நடைபெற்று வருகிறது.

BSFL ( Black Soldier Fly Larve)  என்றழைக்கப்படும் இந்த புழுக்கள் வர்த்தக ரீதியாக எதிர்காலத்தில்  மண்புழுவைக் காட்டிலும் அதிகப் பயனைத் தரலாம். ஏனெனில் மண்புழுக்கள் ஓரளவு மக்கிய இலை, தழை, சாணக் கரைசல்களையே பெரிதும் விரும்பும். பழத் தோல் மற்றும் புளிப்பு உடைய உணவுப் பொருட்களின் அமிலத் தன்மையால் அவைகளை ஜீரணிக்க முடிவதில்லை. அவை அந்த நிலைகளில் உயிர் வாழ்வதும் அரிது. ஆனால் BSFL- படை வீரர்களைப் போலவே - எந்த விதக் கழிவையும் ஜீரணித்து மண்ணிற்கு ஏற்றதாக மாற்றி விடுகிறது. 

  நான் கம்போஸ்ட் செய்ய ஆரம்பித்த போது சில மண்புழுக்களை அதனுள் விட்டுப்பார்த்தேன். அடுத்த நாளே அவை வெளியே வந்து, வெயில் சூடு தாங்க முடியாமல் இறந்து போயின.  இருட்டை விழையும் புழுக்கள் எதற்காக வெளியே வந்தன என்று ஆச்சரியப்பட்டேன். ஒரு வேளை பாக்டீரியாக்களினால் அமிலத்தன்மை காரணமாக இருக்கலாம் என்று ஊகித்தேன்.  BSFL  பற்றி தெரிந்து கொண்ட பின்னர் அது உறுதியாயிற்று. 

இன்னொன்றும் புரிந்தது. நான் காற்றோட்டமாக இருக்கட்டும் என்று வலைக் கூடையை பயன்படுத்துவதும் BSFL பெருகுவதற்குக் காரணமாக இருக்கலாம். இதையே காற்றுப் புகாத குழிகளிலோ டிரம்களிலோ கம்போஸ்ட் செய்தால் இவை வளருமா என்பது கேள்விக்குரியது

புதுமையான தொழில்  ஏதேனும் தொடங்க வேண்டும் என்று ஆசைப்படுவோர்க்கு பட்டாளத்து வீரன் போல கண்டிப்பாக BSFL   தீவன தயாரிப்பில் பெரிதும்  உதவக்கூடும். 


Saturday, March 3, 2018

உலகுக்கு ஆன்மாவின் கடன்

      இன்று (மார்ச் 3, 2018)   நயீப் சுபேதார்  சஞ்சய் குமார் க்கு பிறந்த நாள். அவருடைய சிறப்பு ,பரமவீர் சக்ரா விருது படைத்து உயிர் வாழும் மூன்று வீரர்களில் அவரும் ஒருவர்.  அவர் புரிந்த வீரச் செயல் ‘கார்கில்’ போரில் மிகவும் அடிபட்டு ரத்தம் ஒழுகிய போதும் மூன்று எதிரிகளை ஓட ஓட விரட்டி அவர்களை கொன்று  தம்முடைய போர் நிலையை காப்பாற்றினார்.

உயிரைப் பயணம் வைத்து நாட்டுக்காகப் போராடும் வீரர்களுக்கு அளிக்கப்படும் மிகப் பெரிய விருது அது. அவருடைய வீரத்திற்கும் தியாகத்திற்கும் தலை வணங்குவோம்.
டிவிட்டரில் இப்படிப்பட்ட தியாகிகளின் Remember and Never Forget   @FlagsofHonour  என்ற முகவரியில் பெறலாம்.


இப்படி  தம் உயிரைப் பணயம் வைத்துப்  போரிடும் தியாகிகளின் மனநிலைப் பற்றி டி.வி.ஜி. என்ன சொல்கிறார் பார்ப்போம்.

ಹತ್ಯೆಯೋ ಹನ್ಯತೆಯೊ ವಿಜಯವೋ ಪರಿಭವವೊ ।
ಕ್ಷತ್ರಿಯಂ ಸ್ವಾರ್ಥಮಂ ಗಣಿಸುವನೆ ರಣದೊಳ್ ।।
ಕೃತ್ಯನಿರ್ಣಯ ಬಾಹ್ಯಲಾಭನಷ್ಟದಿನಲ್ಲ ।
ಆತ್ಮಋಣವದು ಜಗಕೆ ಮಂಕುತಿಮ್ಮ ।।

(ஹத்யெயோ ஹன்யத்யெயோ விஜயவோ பரிபவவோ
க்ஷத்ரியம் ஸ்வாதர்மம் கணிசுவனே ரணதொள்||
கிருத்ய நிர்ணய பாஹ்ய லாபனஷ்டதினல்ல|
ஆத்மருணவது ஜககே மன்குதிம்மா|| )

கொல்வதோ கொல்லப்படலோ, வெற்றியோ தோல்வியோ |
வீரனும் சுயநலத்தைக் கணிப்பதில்லை போரிலே ||
கர்ம நிர்ணயம் புற லாப நட்டத்திலில்லை |
ஆன்மாவின் கடனது உலகுக்கு -மக்குத் திம்மா||

தான் வாழும் சமூகத்திற்காக தன்னையே மறக்கிறான் வீரன். போராடும் நேரத்தில் லாப நஷ்ட கணக்கில்லை.  வெற்றி பெறுவோமோ இல்லையோ எனக்கிடப்பட்ட கட்டளையை செவ்வனே செய்ய வேண்டும் என்ற குறிக்கோள் ஒன்றே முன் நிற்கிறது

  ஆன்மா என்ற சொல்லை டி.வி. ஜி. ஏன் கையாண்டார் என்கிற கேள்வி மனதில் எழுந்தது.  ஆன்மீகத்தில் சொல்லப்படுவது,  மனது ஆன்மாவில் லயக்கும் பொழுது  தூல உடலை  மறக்கும் நிலையை எய்துகிறது.  அனைத்து உயிருள்ளும் ஒளிரும் ஆன்மா ஒன்றே என்பது அத்வைத சித்தாந்தம். அதனால் எல்லா ஆன்மாக்களும் ஏதோ ஒரு வகையில் ஒன்றுக்கொன்று  கடன்பட்டவையே.

அதனால்தானோ என்னவோ திருவள்ளுவரும்,  “அஞ்சாது போராடும் செயல் பேராற்றலே ஆயினும் பகைவர்களுக்கு ஏதேனும் இடையூறு நேர்ந்தால் அவருக்கு உதவிசெய்தல் அதைக்காட்டிலும் கூர்மையுடையது ”(773)  என்பதாக ஆன்ம ஒற்றுமையை வலியுறுத்துவது போல் சொல்லியிருக்கிறார்.

பேராண்மை என்பதறுகண், ஒன்றுற்றக்கால் 
ஊராண்மை மற்றதன் எஃகு

அட்ரினல் சுரப்பி அதிகமாக அட்ரினல் ஹார்மோனை சுரப்பதால்  அந்த கண நேர வீரத்தை உடல் தோற்றுவிக்கிறது என்பது மருத்துவ விஞ்ஞானிகளின் கூற்று.  ஆனால் மனதிற்கு உடல் மேல் உள்ள ஆதிக்கத்தையே இதுவும் குறிக்கிறது.

ஒரு சமுதாயக் கூட்டமாக மக்கள் வாழத் தொடங்கும் போதே ஒருவரை சார்ந்து மற்றவர் இருக்க வேண்டிய கட்டாயம் உருவாகி இந்த ‘ருண பந்தம்’ ஆரம்பிக்கிறது. அதையே உலகிற்கு நாம் படும் கடனாக கொள்ளலாம்.

போர் முனைக்கு செல்லாத குடிமக்கள்,  இந்தக் கடனை பிறருக்கு சேவை செய்வதன் மூலம் தீர்க்கலாம். பசி பிணி போக்குவது, கல்வி அளிப்பது என்று எவ்வளவோ வாய்ப்புகள் உண்டு. 

அது சரி,  பகல் கொள்ளையாக வங்கிகளை ஏமாற்றி கோடிக் கணக்கில் கடன் பெற்றவர் எப்படி தீர்க்கப் போகிறார்கள் என்று கேட்கிறீர்களா !

“தன் வினை தன்னைச் சுடும்” என்பதையும் சொல்லி வைத்திருக்கிறார்கள்.  நாம் நம் தியாகிகளைப் போற்றக் கற்றுக் கொடுத்தால் வரும் தலைமுறைகளாவது நல்ல முறையில் வர வாய்ப்புண்டு.