Monday, May 18, 2009

பறக்குது :காகிதப் பட்டங்கள்

பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம் அவர்களின் பழையத் திரைப்படப்பாடல் ஒன்று (குலதெய்வம் -1956).

கோழியெல்லாம் கூவையிலே
குறட்டை விட்டார்

வாய் கொப்பளிக்கும் முன்னே

கொஞ்சம்
காப்பியையும் குடித்து விட்டார்.

குளிக்காமல் சாப்பிட்டு ஏப்பம் விட்டார்

தன்னை குழந்தை போல் எண்ணிவிட்டார்

எங்க சின்ன மச்சான் - இப்போ

பட்டம் விட புறப்பட்டு விட்டாரைய்யா

பட்டம் விட்டாரையா -எட்டாத

உயரத்திலே விட்டாரைய்யா
பட்டம் விட்டாரைய்யா
பறக்க விட்டாரைய்யா

ஆராரோ பட்டம் விட்டு

பேராசை வட்டமிட்டு

ஆடி ஓடி போனதைப் போலே

விட்டாரையா - அணை

கட்டாத ஏரி தண்ணி
கடலோடு போனது போல
கற்றதெல்லாம் காற்றோடு

விட்டாரைய்யா


டா பட்டம், டீ பட்டம்
ஜமீன் பட்டம், சாமி பட்டம்

ஜாதி பட்டம்,பகதூர் பட்டம்
லேடி பட்டம் கேடி பட்டம்

வாலறுந்து நூலறுந்து

போன இடம் தெரியலே-இந்த

வேலையத்த மச்சான் வெறும்

காகித பட்டம் கட்டி
விட்டாரைய்யா -ஓட
விட்டாரைய்யா

பலவித பட்டங்களை பெறுவதாலேயே தங்களை அறிஞர்களாகவோ, சமூகத்தில் பெரும் புள்ளிகளாவோ காட்டிக்கொள்ளும் முயற்சி அந்த காலத்திலிருந்து இருந்து வந்திருக்கி்றது. பலர் அதையே பெரும் சாதனையாக நினைத்துக் கொள்கின்றனர். அவைகளெல்லாம் வாலறுந்து, நூலறுந்து போன கதைதான். எத்தனை திவான் பஹதூர்களை உலகம் நினைத்துப் பார்க்கிறது? மந்திரி பதவி இருந்தால் டாக்டர் ’பட்டம்’ உண்டு. பணம் (கொடை) கொடுக்கும் நடிகர்களுக்கும் தொழிலதிபர்களுக்கும் கூட அது சுலபமாக கிடைக்கும்.

இன்றைய காலத்தில் ”பத்ம“ பட்டங்கள், கலைமாமணி, இத்யாதிகளும் உண்டு. இதைத்தான் ”ஆராரோ பட்டம் விட்டு பேராசை வட்டமிட்டு ஆடி ஓடி போனதை போலே” என்று பட்டுக்கோட்டையார் கேலி செய்கிறார்.

இப்படி ஒரு வாழ்க்கை முழுவதும் போலி வெற்றிகளுக்காக போராடும் வாழ்க்கையைப் பற்றி சினா சோனா சொல்வதை பார்ப்போம்.A LONG LIFE MAY NOT BE GOOD ENOUGH
BUT A GOOD LIFE IS LONG ENOUGH

எவ்வளவு காலம் வாழ்ந்தோம் என்பதைக்காட்டிலும் எப்படி வாழ்ந்தோம் என்பதே முக்கியம்.

Good Life என்பது அணைகட்டிய நீர். ஒரு ஒழுங்குபாடு உள்ளது. அதனால் பல நன்மைகள் சமுதாயத்திற்கு உண்டு. பிறருக்கு எவ்வகையிலேனும் பயன்படாத வாழ்க்கையானால் அவர்கள் எவ்வளவு காலம் பூமியில் வாழ்ந்தென்ன ? அவர்கள் எவ்வளவு படித்திருந்தென்ன ! பட்டுக்கோட்டையார் சொல்வது போல் “கற்றதெல்லாம் காற்றோடு விட்டாரைய்யா” என்கிற நிலைதானே !

மாபெரும் சாதனையாளர்கள் எனப் போற்றப் பெறுபவர் அனவரும் பெரும்பாலும் சாதனைகளை மிக இளம் வயதிலேயே சாதித்துள்ளனர். ஆதிசங்கரர், விவேகானந்தர், ஸ்ரீனிவாஸ ராமானுஜம், பாரதியார், பட்டுக்கோட்டை கலியாண சுந்தரம் போன்றவர்கள் தமது நாற்பது வயதுக்குள்ளாகவே தத்தம் துறையில் சாதனை படைத்து அமரத்துவம் எய்திவிட்டனர்.

அவர்களால் உலகம் பயனடைந்திருப்பதனால்தான் அவர்களை இன்றளவும் நினைத்துப்பார்க்க முடிகிறது. அவர்களுடைய வாழ்க்கை உண்மையிலே Good Life.

Sunday, May 10, 2009

பிரமிட் தியான மண்டபம்- தியான முறை

ஆரோவில் பாண்டிச்சேரியில் மிகப் பெரிய தியான மண்டபத்தை 70 களில் கட்டப்பட்டு வரும் நிலையில் கண்டு அதிசயித்தது உண்டு. இனம், மொழி, மதம் வேறுபாடு இன்றி எவரும் எப்பொழுது வேண்டுமானலும் சென்று தியானம் செய்வதற்கு உதவியாக அரவிந்த ஆசிரமத்தின் அன்னையின் விருப்பப்படி கட்டப்பட்டது.

மாத்ருமந்திர் என்ற பெயரில் இப்பொழுது பொற்கோவில் போன்று ஓங்கி நிற்பதை (இணைய தளத்தில்) காணும் போது பரவசமாகிறது.

ஆனால் மாத்ருமந்திர் வெறும் பாண்டிச்சேரிக்கு மட்டுமே.

ஆந்திராவைச் சேர்ந்த பிரம்மரிஷி பத்ரிஜி (Brahmarishi Patriji) இப்போது தியான மண்டபங்களை நாட்டின் பல பாகங்களிலும் நிறுவுவதற்கு ஊக்குவித்து வருகிறார். இவர் விவசாயத்தில் முதுகலை பட்டதாரி.கிருஹஸ்தர். பலவருடங்கள் தனியார் துறையில் பணியாற்றியவர்.

இவரது தியான மண்டபம் சற்று வித்தியாசமானது. அவை பிரமிட் வடிவில் அமைக்கப்பட்டுள்ளன.

வடுவூர் குமாரின் கட்டுமானத்துறை வலைப்பக்கத்தில் பிரமிட் அதிசய சக்தியை விளக்கும் ஒரு சலனப் படத்தை கண்டபோது அதை தரவிறக்கம் செய்து பலருக்கும் காட்டி வந்தேன். அப்போது ஒருவர் பெங்களூருக்கு அருகே உள்ள பிரமிட் தியான மண்டபத்தை குறிப்பிட்டார். அது தான் மேலே குறிப்பிட்ட பத்ரிஜியின் தியான மண்டபம். சமீபத்தில் அங்கு சென்று வர ஒரு வாய்ப்பு கிடைத்தது.

கனகபுரா சாலையில் Pyramid valley என்ற பெயரில் வழிகாட்டும் பலகைகள் உள்ளன. தூரம் 35 கிமீகள் பிராதன சாலையிலிருந்து ஒரு கிமீ தூரம் கிராமபாங்கான சாலையில் உள்ளே பயணிக்க வேண்டும்.

சுமார் 160 அடி அளவுள்ள சதுர வடிவ அடிபாகத்தில் 107 அடி உயரம் உயர்ந்து இருக்கும் இந்த பிரமிட்டில் ஐந்தாயிரம் பேர்கள் ஒரே சமயத்தில் தியானம் செய்ய முடியுமாம்.

இது அல்லாமல் ஆந்திராவில் பத்து, கர்நாடகத்தில் மூன்று தமிழ்நாட்டில் இரண்டு என கிளைகள் 200 முதல் 300 பேர் வரை தியானம் செய்யக் கூடிய மண்டபங்களாக மலர்ந்து சேவை புரிந்து வருகின்றன.

சென்னை தியாகராய நகரில் சுப்ரமண்யா பிரமிட் தியான மையம் என்ற பெயரிலும், கோவை வடவள்ளியில் ஸ்ரீ சதாசிவ பிரமிட் தியான மையம் என்ற பெயரிலும் இயங்குகின்றன.

பத்ரிஜியின் முறை தியானம் மூச்சு ஓட்டத்தை கவனிப்பதையே முக்கிய அங்கமாக கொள்கிறது. இதை புத்தர் கண்ட வழி என்று சொல்லலாம். அதனால் செபிக்க மந்திரமோ ஆராதனை முறைகளோ இங்கு தேவையில்லை.
(பெரிது படுத்தி படிக்கலாம்)

தியானத்தில் மூச்சு ஒழுங்குபடுகிறது, மூச்சு ஒழுங்குப் படும் பொழுது மனம் ஒழுங்காகிறது. மனம் ஒழுங்குபட்டால் மனிதன் ஒழுங்காகிறன். மனிதன் ஒழுங்காகும் பொழுது சமுதாயமும் ஒழுங்கு படுகிறது.

எளிமையான முறைதான். ஆனால் மனிதனை இதை கைகொள்ள வைப்பதில் தான் வெற்றியின் ரகசியம் உள்ளது. அதற்கு இப்படிப்பட்ட தியான மண்டபங்கள் ஊக்குவிக்கும் புதிய ஆலயங்களாக மலருமோ என்னவோ !

தியானத்தை வீட்டிலோ நடமாற்ற வெளியிலோ அல்லது அமைதியான ஆலயத்திலோ கூட செய்ய இயலும் தான். ஆனால் ஒரு புதிய முனைப்பு கொடுக்க வேண்டுமாயின் அதற்கென பிரத்யேகமான ஏற்பாடு செய்தால் பலரையும் கவர்ந்திழுக்க முடியும்.

காலத்திற்கேற்ற உத்தியை கைகொள்வதில் தவறேதும் இல்லை என்றே தோன்றுகிறது.

சரி, நான் தியானம் செய்தேனா என்று கேட்கிறீர்களா? உம் ...செய்தேன், முதல் தளத்தில். சர்வ நிசப்தம். அசதியில் தூக்கமாய் வந்தது. எழுந்து வந்து விட்டேன்.

பாவம், பிறருக்கு ஏன் என்னால் தொந்தரவு :)))


பிரமிட் முறை தியானம் பற்றி அறிய விரும்புவர்கள் கீழ்கண்ட இணைப்புகளில் மேலும் விவரம் பெறலாம்.

http://www.pyramidspiritualsocieties.org/PSS/Home/Home1.htm

http://www.patriji.org/en/htmls/articles/pyramid_movement.html