Sunday, January 12, 2020

சோலர் பவரும் என் அனுபவங்களும்-6

      அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்

      ஏப்ரல் 2017 க்குப் பிறகு மீண்டும் இந்த தலைப்பில் ஏதோ சொல்ல வருகிறேனென்றால் என்னுடைய (சோலார்) தேர் இன்னும் நிலைக்கு வரவில்லை என்பதை ஊகித்துக் கொள்ளலாம்.  வேறுவிதமாக சொல்வதானால் இன்னும் கற்றுக் கொள்வது (Learning curve) இருக்கிறது.  இங்கே கற்றுகொள்வது என்பது தொழில்நுட்பத்தை அல்ல.

     நம் நடைமுறை தேவைகளுக்கு முரணாகாமல், நம் முதலீடு விரையமாகாமல் எப்படி தொழில்நுட்பத்தைக்  கையாளுவது  என்பதில் தான் ’கற்பது’ அடங்கியுள்ளது.  இதில் அனைவர் அனுபவமும் ஒன்றாக இருக்கமுடியாது.  என் அணுகுமுறை வாசகர்களுக்கு உபயோகமாக இருக்கக் கூடும் என்பதால் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

 2 KW  தனி உபயோகத்திற்கென (OFF Grid)  போடப்பட்டிருந்த என் சோலார் தகடுகள் திருப்திகரமாய்  2016  ஜூன் முதல் வேலை செய்து வந்தன.  என்னுடைய (அரசாங்க) மின்சார பயன்பாடு 120 யூனிட்டிலிருந்து குறைந்து 30 யூனிட்டுக்குள் வந்துவிட்டது. மாதம் 200 யூனிட் உற்பத்தியானாலும் 85 முதல் 90 யூனிட் அளவே பயன் கிடைத்தது. 60 சதம் இழப்பு அதிகம் எனத் தோன்றியது. இதை சென்ற பதிவிலேயே குறிப்பிட்டிருந்தேன்.

      மேலும் 4 பேட்டரிகளை மாற்ற வேண்டிய அவசியம் இன்னும் இரண்டு மூன்று ஆண்டுகளில் வரும் போது சுமார் ரூ. 40000க்கு செலவு வரும் என்ற யோசனை பிடித்தாட்டியது. இதைக் குறைப்பதற்கான ஒரே வழி  மின்சார உற்பத்தியைக் கூட்டி  சர்காருக்கு விற்பதுதான் எனத் தோன்றியது. என் சுற்று வட்டாரத்திலும் இதை ஆமோதிக்கவே  அதற்கான ஏற்பாடுகளைத் துவங்கினேன்.  ஏற்கனவே இருந்த 2 KW உடன் மேலும்  2KW சேர்த்து  4 KW ஆக்கினேன். இதில் 3KW சர்காருக்கு விற்பதெனவும் 1 KW எனக்குத் தனியாக (OFF Grid)  வைத்துக் கொள்வதெனவும்  தீர்மானித்தேன். என் அதிருஷ்டத்திற்கு இதை செய்துத் தர ஒரு கம்பெனியும் முன் வந்தது. பொதுவாக ஒரு கம்பெனியின் விஷயத்தில் இன்னொரு கம்பெனி கைவைக்க முன்வராது.  இரண்டு வருட கியாரண்டி தாண்டியிருந்ததால் இதில் பிரச்சனை எதுவும் வராது என்று புரிய வைத்து ஒத்துக் கொள்ள வைத்தேன். ஆறு வாரத்தில் முடித்துக் கொடுப்போம் என்று சொல்லி ஆறு மாதங்கள்  ஆக்கி விட்டனர் என்பது வேறு விஷயம்.


எப்படியோ செப்டம்பர் 2018 ஆரம்பித்து மார்ச் 2019 க்கு செயல்படுத்தி விட்டனர்.  அன்றிலிருந்து டிசம்பர் 31 வரை அரசாங்கத்துக்கு ஏற்றுமதி செய்த மின் அளவு 3450 யூனிட்டுகள்.  அதே சமயம் என்னுடைய  தனி இணைப்பு 1 KW ஆக குறைந்து விட்டதால்  என்னுடைய பயன்பாடு 30  யூனிட்டிலிருந்து  80 யூனிட்டாக அதிகரித்து விட்டது.   இன்னமும் 40 யூனிட் அளவிற்கு தனி இணைப்பினால் மிச்சம் பிடிக்க முடிகிறது.

சரி, இதன் வரவு செலவு என்ன என்கிறீர்களா?

இந்த மாற்றத்தை மேற்கொள்ள செய்த செலவு  ரூ 185000/   ஒரு யூனிட் மின்சாரத்திற்கு கர்நாடக அரசாங்கம் கொடுப்பது ரூ 4.15/  அதன் படி மின்சாரத்தின் மதிப்பு  14317/  இது 9 மாதங்களுக்கானது. அதே விகிதத்தில் 12 மாதங்களில்  ரூ.19089 ஆகும்.   மேலும்  1 KW Off-grid லும் மாதம் சுமார் ரூ 230க் கான சேமிப்பு தெரிகிறது. அதன்படி இன்னொரு ரூ 2760/  வருடத்திற்கு மிச்சமாகிறது. இதன் மூலம் மொத்தம் 4 KW  க்கு  21850/ மதிப்பு வருகிறது.

இதில் 1 KW-ல் ஏற்பட்ட 60 % இழப்பு நேர் செய்யப்பட்டது என்பது ஒரு திருப்தி. அதாவது 2+1 -ன் முழு உற்பத்தியும் Grid க்கு அனுப்பப் படுவதால் இழப்பு எதுவும் இல்லை. பேட்டரிகளை மாற்றுகின்ற நேரம் வரும் போது இரண்டு பேட்டரிகளிலேயே சமாளிக்க முடியுமா என்பதையும் பார்க்க வேண்டும்.

  என்னுடைய எதிர்பார்ப்பு என்னவென்றால் இன்னும் ஒரு வருடத்திற்கு பேட்டரிகள் தாக்குப் பிடித்தால் புதிய பாட்டரி செலவை  இதன் மூலமாகவே ஈடுகட்ட முடியுமே என்பது தான்.  முதலீட்டிற்கு வட்டிக் கணக்கு பார்த்தாலும் 11.8 % வருகிறது. நட்டமில்லை.

     ஒரு பிரச்சனை என்னவென்றால்  அரசாங்கத்திடமிருந்து  உடனுக்குடன் பணம் வராது. எப்போதும் இரண்டு  மூன்று மாதங்கள்  கழித்தே வரும். என் வங்கிக் கணக்குக்கு  நேரடியாக கிரயம் எவ்வெப்பொழுதோ  செய்யப்படும். எதற்கும் விவரம் இருக்காது. மாதாந்திர பில் என்பது கிடையவே கிடையாது.  அரசாங்கங்களின்  திறன் மேம்பட இன்னும் பல வருடங்கள் ஆகும் போலிருக்கிறது.