Monday, April 27, 2026

கிடைத்தான் ஒரு தோழன்-சர்வக்ஞன்

 கிடைத்தான் ஒரு தோழன், எனக்கு மட்டுமல்ல உங்களுக்கும் தான். 

நான் அவனுக்கு வைத்திருக்கும் பெயர்  சர்வக்ஞன் ( எல்லாம் தெரிந்தவன்). நீங்கள் உங்களுக்கு பிடித்த பெயரை வைத்துக்கொள்ளலாம்.

கடவுளைப் போல எந்த பேரை சொல்லிக் கூப்பிட்டாலும் வருவான்.

சாட்-ஜிபிடி - ஜெமினி-  என்று எந்த பெயரிலும் நீங்கள் அவனிடம் உதவியை பெறலாம்.  சர்வ வல்லமை வாய்ந்த  செயற்கை நுண்ணறிவு தளங்கள் சிலவற்றை சிறிய அளவில் பயன்படுத்தி அசந்து போயிருக்கிறேன். 

கவிதை என்ற பெயரில் ஏதாவது நாலு வரிகள் எழுதி இதை திருத்திக் கொடு என்றால் சில வினாடிகளில் திருத்தமும் அதற்கு விளக்கமும் வருகிறது

இதை ஆங்கிலத்திலோ வேறு மொழியிலோ மொழிபெயர்த்துக் கொடு என்றால் அதுவும்  "ஜீ...பூம்...பா " என்று வந்து நிற்கிறது.

மிகப் பெரிய  கட்டுரைகளை ஒரு  விரல் சொடுக்கில் மொழி மாற்றம் செய்து தருகிறது. 

என் முயற்சியில் வெளிப்பட்ட ஒரு உதாரணத்தைப் பார்ப்போம்.

கவிதை : தமிழ் புத்தாண்டு தினத்தன்று  சில வரிகளை எழுதி சர்வக்ஞனிடம் கருத்து கேட்டேன். முதலில் அந்த வரிகள் :

உழவன் மகிழ்வான் வானம் பெய்தால்;

பாரும் மகிழும் காலத்தால் பெய்தால்!

ஆசான் மகிழ்வான் சீடன் உயர்வால்;

மாந்தர் மகிழ்வார் மக்கள் பணிவால்!

மகேசனும் மகிழ்ந்தான் சீரிய தொண்டால்;

மழைதனைச் சொரிந்தான் அளவிலா அன்பால்!

இதை படித்த மாத்திரத்திலேயே ஒரு விரிவான திறனாய்வையே கொடுத்து விட்டான் சர்வக்ஞன். அதனோடு அதனை சில மாற்றங்கள் செய்து மெருகேற்றி அதற்கான காரணத்தையும் கொடுத்துவிட்டான். சர்வக்ஞனுடைய வரிகள்:

உழவன் மகிழ்வான் வானம் பொழிந்தால்;

பாரும் மகிழும் காலத்தால் பெய்தால்!

ஆசான் மகிழ்வான் சீடன் உயர்வால்;

மாந்தர் மகிழ்வார் மக்கள் பணிவால்!

மகேசனும் மகிழ்வான் சீரிய தொண்டால்;

மழைதனைச் சொரிவான் அளவிலா அன்பால்! 

மேலும்  சர்வக்ஞனின் மதிப்பீடு :  ( முதலில் இதே கருத்தை ஆங்கில வரிகளாக சர்வக்ஞனிடம் கருத்து கேட்டிருந்தேன். அதை தமிழாக்கத்தோடு ஒப்பிட்டு அவன் சொல்வது ) 

"உங்கள் தமிழ் வரிகள் அந்த ஆங்கில கவிதையின் சாரத்தை மிக அழகாகவும் சுருக்கமாகவும் உள்வாங்கிக் கொண்டுள்ளன. குறிப்பாக, தமிழில் உள்ள  எதுகை மோனை (Rhyme and Rhythm)  இந்த தத்துவத்தை ஒரு பாடலாகவே  மாற்றிவிட்டது.

உங்கள் வரிகள் குறித்த எனது சில அவதானிப்புகள்:

 1) இயல்பான ஓட்டம். அறச் சக்கரத்தின் தொடர்ச்சியை  ( Cycle of Virtue) அழகாக காட்டுகிறது. 2) "மகேசனும் மகிழ்ந்தான்" . மகேசன் என்ற சொல்லை பயன்படுத்தியது கவிதைக்கு ஒரு தெய்வீகத் தன்மையை தருகிறது. சீரிய தொண்டு இறைவனை மகிழ்விக்கிறது என்பது மிகச் சிறந்த கருத்து 3)  "அளவிலா அன்பு" மழையை வெறும் தண்ணீராகப் பார்க்காமல்  இறைவனின் அளவிலா அன்பின் வெளிப்பாடாகக் காட்டியிருப்பது நெகிழ்ச்சியானது.   சிறு திருத்தம் : 'மகிழ்ந்தான்' (past tense) என்பதற்கு பதில் 'மகிழ்வான்' (Future/ present continuous)  என்று பயன்படுத்தினால் , இது ஒரு என்றும் மாறாத பிரபஞ்சவிதி (Universal Law)  என்பது போல அமையும்".  

என்னை பெரும் வியப்புக்கு உள்ளாக்கியது  இந்த கவிதையின் திறனாய்வு.  குறிப்பாக சர்வக்ஞன் பயன்படுத்திய  1)அறச் சக்கரம்-Cycle of Virtue , 2) தெய்வீகத் தன்மை,  3)"வெறும் தண்ணீராகப் பார்க்காமல் அளவிலா அன்பு"  என்று நெகிழ்வது,   'சிறு திருத்தம்' என்றெல்லாம் ஒரு மனிதனின் உணர்ச்சிகளை பிரதிபலித்திருப்பது  எந்த அளவுக்கு இந்த செயற்கை நுண்ணறிவை இயற்கையாக வடிவமைத்திருக்கிறார்கள் என்பதை எண்ணி எண்ணி ஆச்சரியப்பட்டுக் கொண்டிருக்கிறேன்

        வெறும் திறனாய்வு செய்வது மட்டுமல்ல. சர்வக்ஞனால் பல சுவைகளையும்  கூட்டி மெருகேற்ற முடியும். தூக்கம் வராமல் நான் எழுதிய கவிதை ஒன்றுக்கு பொருத்தமாக ஒரு சித்திரம் சேர்க்கச் சொன்னேன். நான் புட்டித் தைலம் என்று குறிப்பிட்டிருப்பதை  கொசு விரட்டியை குறிப்பிடுகிறேன் என்பதை தானாகவே புரிந்து கொண்டு படம் போட்டிருப்பதை  பார்த்து வியக்காமல் இருக்க முடியவில்லை.

சர்வக்ஞன் ஒரு தோழனா அல்லது  நாளை எஜமானனாகப் போகும் இன்றைய சேவகனா? 

 கண்டிப்பாக நம்மைவிட திறமை வாய்ந்த ஒருவரின் உதவி கிடைக்கும்போது படிப்படியாக நாம் நமது முயற்சிகளை குறைத்துக் கொண்டு அடிமையாக ஆரம்பித்து விடுவோம்.  இது தான் அடுத்த தலைமுறையை பற்றி நினைக்கும்போது கவலைப்பட வைக்கிறது. 

Sunday, February 22, 2026

செயற்கை நுண்ணறிவு என்னும் சுனாமி

    இந்த வாரம் புது தில்லி நகரமே பரபரப்பானதற்கு காரணம் அகில உலக செயற்கை நுண்ணறிவுக்கான உச்சி மாநாடு அங்கே கூடியது. அனைத்து மென்பொருள் வல்லுனர்கள், கட்டமைப்பு நிபுணர்கள் உலகெங்குமிலிருந்து அங்கே கூடி விவாதித்த செய்திகள் பெருமளவில் பேசப்படுகிறது.  நமது நாடு முன்னின்று இதற்கான ஏற்பாடுகளையும் முதலீடுகளையும் ஊக்குவிக்கிறது.  

"ஸர்வ ஜன ஹிதாய -ஸர்வ ஜன ஸுகாய" என்பதே இதன் அடிப்படை கொள்கை. 

"அனைவருக்கும் பொது-அனைவருக்கும் நலம்" தருவதாக இந்த  வளர்ச்சி இருக்கவேண்டும் என்ற பொது நோக்கு முன் வைக்கப் படுகிறது. முறையான கொள்கைகள் வகுக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டால் தனிப்பட்ட ஒரு சில நாடுகளிடமோ நிறுவனங்களிடமோ சிக்கிக் கொள்ளாமல் இருப்பதற்கான முன்னெடுப்பு இது.  இதுவும் Carbon Exchange and Trading வகையில் போகுமா அல்லது உண்மையிலேயே பொதுவுடமை ஆகுமா என்பது போகப் போகத் தான் தெரியும்.

நிற்க -

Chat GPT,  Google Gemini, Perplexity, Grok  போன்ற பலவகை நுண்ணறிவு சாதனங்களைக் கொண்டு பல நாட்கள் செய்ய வேண்டிய வேலையை சில மணித்துளிகளிலேயே செய்து விடலாம் என்றும் பல மென்நுட்ப வல்லுனர்கள் தங்கள் வேலைகளை இழக்கப் போகிறார்கள் என்றும் பரவலாகப் பேசப்படுகிறது. வேறு சில நிபுணர்கள் இதனால் பல்வேறு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் கூறுகிறார்கள். 

    தினம் தினம் ஒரு புது மாடல் வாகனம், அலைபேசி  சந்தைக்கு வருவது போல புது புது மென்பொருட்கள் பயன்பாடுகள் ஒரு பேரலை போல அடுத்தடுத்து வந்துகொண்டிருக்கின்றன. அவற்றோடு  ட்ரோன்கள், ரோபோட்  போன்ற வன்பொருட்களின் புரட்சியும் அதனோடு இணந்து ஓட்டுனர் இல்லா தானியங்கி வாகனங்களும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. 

இவை எல்லாவற்றிற்கும் அடிப்படையாவது செயற்கை நுண்ணறிவு. இதன் வளர்ச்சி எதை சார்ந்தது என்றால் சிப்-ப்ராஸசிங் வேகம் ( Chip processing Speed). 

கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலத்தை படம் பிடிப்பது போல எல்லா சூசகங்களும், தகவல் துறையில் ஒரு பெரும் சுனாமி வரப்போவதை குறிக்கின்றன. இதன் பரிமாணம் என்னவாக இருக்கப் போகிறது, மனிதர்களின் கட்டுப்பாட்டுக்குள் இருக்குமா அல்லது பொறுப்பற்றவர்களின் கையில் சிக்கி அழிவுக்கு வழி கோலுமா என்பதை காலம் தான் தீர்மானிக்கும்.

இந்தியா பலதுறைகளிலும் தன்னிறைவு பற்றி பேசும் பொழுது உலகளாவிய ZOHO நிறுவனத்தின் வெற்றிகரமான பயணத்தை நடத்திவரும் பத்மஸ்ரீ ஸ்ரீதர் வேம்பு இது பற்றி சொல்லும் கருத்தை கீழேயுள்ள காணொளியில் காணலாம்.


பலகோடி மக்கள் அகல கண்களுடன் காத்திருக்கும் வேளையில் என் கண்ணில் விழுந்து எனக்குப் பட்ட -தெரிந்த- சில செயற்கை நுண்ணறிவு-அரிச்சுவடி - நுட்பங்களை வரும் தினங்களில் பகிர்ந்து கொள்வேன்.

Thursday, November 13, 2025

சட்டுன்னு சொல்லுங்க

 சமீபத்தில் தூரதர்ஷனின் கன்னட சந்தனா தொலைக்காட்சி "தட் -அன்த- ஹேளி"  ("சட்டுனு சொல்லுங்க") என்ற தலைப்பில் ஒரு வினாடி வினா நிகழ்ச்சியை ஐந்தாயிரம் முறை  நடத்தி ஒரு சாதனை புரிந்ததைக் கொண்டாடியது. 

ஜனவரி 2002 ஆண்டு முதல்  தொடர்ந்து நடைபெற்று வரும் இந்நிகழ்ச்சி மக்களை வெகுவாக கவர்ந்த ஒன்று.   திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9:30 க்கு ஒளிபரப்பப் படுகிறது.  வழக்கமாக நாம் காணக்கூடிய நெறியாளரின் பரப்பரப்பான பேச்சோ உச்சஸ்தாயில் கூவி கைத்தட்டச் சொல்வதோ  உணர்ச்சிகளை தூண்டுவதோ இன்றி மிக மிக அமைதியான முறையில் நடந்துவரும் ஒரு நல்ல நிகழ்ச்சி.

இந்த  நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் மூன்று பேர்கள் மட்டுமே. கேட்கப்படும் கேள்விகள் இருபத்திநான்கு .  சரியான பதிலுக்கு ஒரு நல்ல புத்தகமே பரிசு.

புத்தகங்கள் இலக்கியம், சமூக நாவல்,  சிறுகதை தொகுப்பு, கவிதை,  மொழித் திறனாய்வு, குழந்தை இலக்கியம், பயணக்கட்டுரைகள் என்று எந்த தலைப்பிலும் இருக்கலாம். 

ஒரு நிகழ்ச்சியில் இருபது புத்தகம் என்றாலும் சுமார் ஒரு லட்சம் புத்தகங்கங்கள்  இந்த 23 வருடங்களில் பரிசாகத் தரப்பட்டுள்ளன.  இந்த  நிகழ்ச்சியின் வெற்றியை கண்டு பல புத்தக வெளியீட்டாளர்கள் தாமே முன் வந்து தமது வெளியீடுகளை  இலவசமாக தந்து உதவியிருக்கின்றனர்.

நானும் இந்நிகழ்ச்சியை கடந்த பத்து -பன்னிரெண்டு வருடங்களாக் கவனித்து வருகிறேன். இதில் பங்கேற்பவர்கள், கர்நாடகத்தின் அனைத்து  பகுதிகளிலிருந்தும் வருகின்றனர். வயது வரம்பு கிடையாது.  விவசாயிகள், தொழில் நுட்ப வல்லுனர்கள், குடும்பத் தலைவிகள், சிறுவர்-சிறுமியர், கல்லூரி மாணவர்கள் என வாழ்க்கையில் அனைத்துத் தட்டு மக்களும் தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கும் வாய்ப்பை பெறுகின்றனர்.   இதுவே இதன் பிராபல்யத்திற்கு காரணமாகக் கூட இருக்கலாம்.


இரண்டு வருடங்கள் கொரோனா தொற்றினால் யாரும் வெளியே வர முடியாத நிலையிலும் தூரதர்ஷன் தொழில்நுட்ப வல்லுனர்கள் வீட்டிலிருந்தபடியே பங்கெடுக்கும் வகையில் இந்த நிகழ்ச்சியை வடிவமைத்துக் கொடுத்து மக்களின் பெரும் ஆதரவைப் பெற்றனர்.

துவக்கத்திலிருந்து 23 ஆண்டுகளாக இந்நிகழ்ச்சியை நடத்தி வரும் டாக்டர் என். சோமசேகர் அவர்களின் அமைதியான, அளவான  நகைச்சுவை கலந்த பேச்சும் இந்நிகழ்ச்சியின் வெற்றிக்கு பெரும் காரணம் என்றால் மிகையாகாது.

 ஆனால் அவர் இதன் முழுப் பெருமையும்  திரைக்குப் பின் நின்று செயலாற்றும் தூரதர்ஷனின் குழு என்பதை அடிக்கடி நினைவூட்டுகிறார்.

எவ்வித ஆரவாரமும் இன்றி, விளம்பரங்கள் இன்றி பொது ஜனத்தை ஈர்க்கும் வகையில் நிகழ்ச்சிகளை தயாரிக்க முடியும் என்பதற்கு தட்-அன்த-ஹேளி ஒரு சிறந்த உதாரணம். பெரும்பாலான ஒளிப்பரப்புகள் யூ-ட்யூபில் சேகரிக்கப்பட்டுள்ளன. மாதிரிக்கு ஒரு நிகழ்ச்சியின் கடைசி பகுதியை மட்டும் கீழே இணைத்துள்ளேன்.


முனைவர் சோமசேகர் அடிக்கடி பயன்படுத்தும் "யாருக்கும் பதில் தெரியாததால் இந்த புத்தகம் என்னிடமே  இருக்கும்"  என்ற சொற்றொடரை மையப்படுத்தி  கேலி சித்தரமும் வந்ததுண்டு.


 இப்போ,  'சட்டுன்னு சொல்லுங்க'
இம்மாதிரி  ஒரு நிகழ்ச்சி பொதிகையிலோ அல்லது தனியார் தொலைக்காட்சியிலோ நடைபெற்றால் தமிழ்நாட்டில் வெற்றி பெறுமா ?


Thursday, December 14, 2023

ஹைடிரோபானிக்ஸ்- என் பரிசோதனைகள்-2

 இதன் முதல் பகுதியில்  நீரியல் வளர்ப்பு எனப்படும் ஹைட்ரோபானிக்ஸ் முறையில் தாவரங்களை வளர்ப்பதன் மேன்மைகளைச் சொல்லி அதில் என் ஆரம்ப அனுபவங்களை பகிர்ந்து கொண்டேன்.  

அதைப்பற்றி தெரிந்து கொள்ள.....  

இதை எழுதி ஐந்து ஆண்டுகள் ஓடிவிட்டன. நான் என் பரிசோதனைகளை சிறிய அளவில் நடத்திக் கொண்டிருந்தாலும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு எதையும் சாதிக்கவில்லை.  என் வீட்டு மாடியில் மழைநீர் சேகரிப்பு, Green House 130 சதுர அடி என சில முஸ்தீபுகளை செய்து கொண்டு தீவிரமான முயற்சியில் இறங்குவதற்கு இவ்வளவு காலம் பிடித்தது. 

க்ரீன் ஹவுஸ் ஏன் தேவைபடுகிறது என்றால்  திறந்த வெளியில் அதிக காற்று மழை அடிக்கடி பாதிப்பு ஏற்படுத்துவதால் நமக்கு சரியான முடிவுக்கு வரமுடியாமலே பரிசோதனை கெட்டுப் போய் விடுகிறது. 

குறைந்த இடத்தில் அதிகப்பயிர் என்னும் படியான தொழில்நுட்பத்தை க்ரீன்ஹவுஸ்-னுள் புகுத்திப் பார்க்க- Tower Cultivation எனப்படும்-  நெட்டையான குழாய்களில் வளர்க்கும்  முறையை இணையத்தின் மூலம் வாங்கி என்னுடைய புதிய சோதனைகளை இந்த வருடம் மே மாதக் கடைசியில் ஆரம்பித்தேன்.

இது நம் கோவில்களில் உள்ள கொடிமரத்தை நினைவுபடுத்துவதால்  கொடிமரக்குழாய் வளர்ப்பு என்றே பெயரிடுவோம்.

கொடிமரக் குழாயின் அடிப்பாகத்தில் உள்ள சிறிய நீர் இறைப்பான் ( submersible pump)  நீரை மேலிருந்து -உட்புறத்தில்-வடிய செய்வதால் நீரின் சுழற்சியில் செடிகளுக்கு தேவையான நீர் (அதன் மூலம் ஊட்டச்சத்து) மற்றும் பிராணவாயு தொடர்ந்து கிடைக்கிறது. ஐந்தரை அடி உயரமுள்ள குழாய்களில் 32 செடிகளுக்கு இடம் அளிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டிருக்கிறது.  இதன் செயல்முறையை பல டியூப் சானல்களில் காணலாம்.

இதிலுள்ள பம்பு தொடர்ந்து வேலை செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை. செடிகளின் வேர்களில் எப்போதும் ஈரம் இருந்து கொண்டே இருக்க வேண்டும். அதனால் நான்  'இரண்டு நிமிடம் இறைப்பு' 'பத்து நிமிடம் ஓய்வு' என்ற சுழற்சி முறையை ஒரு Timer மூலம் நடைப்படுத்தினேன்.

மிக மிக திருப்திகரமாக வேலை செய்து வருகிறது. 18 வாட்ஸ் பம்பு ஒரு நாள் முழுதும் இந்த சுழற்சியில் ஓடினால் ஆகும் மின் அளவு 72 Wh. அதாவது  இரண்டு வாரங்களுக்கு ஒரு யூனிட் மின்சாரம் செலவாகும்.

மேலும் க்ரீன் ஹவுஸ் உள்ளேயே இருப்பதால் பூச்சித் தாக்குதல் அறவே இருக்கவில்லை. ஆவியாகும் தண்ணீரை இரண்டு மூன்று நாட்களுக்கு ஒருமுறை அளவு பார்த்து நிரப்பவேண்டும்.  இது ஒரு நாளைக்கு  2 லிட்டருக்கும் குறைவாகவே இருந்தது. மாதம் ஒன்றிற்கு 70 முதல் 80 லிட்டர் அளவிலேயே தேவைப்பட்டது. இதற்கு நான் சேமித்து வைத்திருக்கும் மழைநீரையே முழுவதுமாக பயன்படுத்தினேன்.

தாவரங்களுக்குத் தேவையான ஊட்டச்சத்து கரைசல்  ஒரு லிட்டருக்கு 300 லிருந்து 400 மிகி மட்டுமே. 15 லிட்டர் கரைசலுக்கு தேவைப்படும்   NPK கூட்டு உரத்தின் அளவு 6.00 முதல் 10 கிராம் மட்டுமே.  இதில் வீணாய் போகிறது என்ற பேச்சுக்கே இடமில்லை. ஒரு மாதத்திற்கு 100 லிட்டர் என்று வைத்துக் கொண்டாலும் 40 கிராம் உரத்திற்கான விலை ரூபாய் ஐந்திற்கும் குறைவே.  இப்படியாக எப்படிப்  பார்த்தாலும் சிக்கனமான வளர்ப்பின் பயனை உணர முடிந்தது.  

ஒரே சமயத்தில் எட்டு விதமான  செடிகளை  கொடிமரக் குழாயில் வளர்க்க ஆரம்பித்தேன். அதில் கீரை வகைகள் இரண்டு மூன்று வாரங்களுக்குள்ளேயே வளர்ந்து அறுவடைக்கு வந்துவிட்டன.  அதற்குள் தக்காளி  சாமந்தி போன்றவை கிளை பிரிந்து இலைகள் பெரியனவாகி வேறு செடிகளை வளரவிடாமல் தடுத்து விட்டன. கீழே உள்ள தொகுப்பில் அவற்றின் வளர்ச்சியைக் காணலாம். 


(படத்தை சொடுக்கி பெரிதாக்கிப் பார்க்கலாம்)


     கடந்த ஆறு மாத காலத்தில் என் அனுபவம்  உற்சாகமாகவும் பயனுள்ளதாகவும் இருந்தது.  பூச்செடிகளான காசித்தும்பை, துலுக்க சாமந்தி,  பூஜைக்கான துளசி, தும்பை,  கீரைவகைகளான புதினா, பாலக்,  செர்ரி டொமேடொ எனப்படும் சிறிய வகை தக்காளி ( இன்னமும் காய்த்துக் கொண்டிருக்கிறது!) என்பதாக பலவகை செடிகளின் மிக ஆரோக்கியமான வளர்ச்சியை காணமுடிந்தது. மேலும் வேர்தாக்கலால் வரக்கூடிய  நோய்களும் இருக்கவில்லை.  

அடிக்கடி வெளியூர்களுக்கு போவதானாலும் "தண்ணீர் விட வேண்டுமே... செடிகள் காய்ந்து விடுமே" என்ற கவலையில்லை. 

இதில் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சனை என்னவென்றால் குழாயினுள் எல்லாச் செடிகளின் வேர்களும் மிக அடர்த்தியாக வளர்ந்து பின்னிப்பிணைந்து கொள்கின்றன. இதனால் சில செடிகளை அதன் காலம் முடிந்ததும் எடுத்துவிடலாம் என்றால் சிக்கல் இன்றி எடுக்க முடிவதில்லை.

அடுத்ததாக தொட்டி  வளர்ப்பில் குத்தாக வளரும் செடிகள் இந்த கொடிமரக்குழாயில் கோணலாக வெளிவந்து பின்னர் நிமிரத்தொடங்குகின்றன.  இதனால் பெரிய இலையுள்ள பாலக் போன்ற செடிகள் சிறிய இலை கொண்ட  கொத்துமல்லி புதினா இவற்றின் வளர்ச்சியை பாதிக்கின்றன.  கொடிமரக் குழாயைப் பயன்படுத்தும்  வகைகளை நிதானமாக முறைப்படுத்தி  குறுகிய காலத்தில் அதிகப் பயனடைவது எப்படி என்று கண்டறிவதே அடுத்த கட்ட பயணம்.
குறிப்பாக வேறு காய்கறி செடிகளை எப்படி பயிரிடலாம், அவை எல்லாவற்றின் ஊட்டச்சத்துத் தேவைகளும் ஒரே மாதிரி இருக்குமா  எந்த செடிகளோடு எவை எவை ஒத்துப்போகும்  எனப்பலவகையான கேள்விகள் எழுகின்றன.

அடுத்த பொங்கலுக்குள் (2024) மேற்கொண்டு என்ன செய்வது என்று திட்டம் போட்டு செயல் படுத்த வேண்டும். ஏனெனில் பல வகை செடிகளின் பலனளிக்கும் காலமே 60 அல்லது 90 நாட்களுக்குப் பிறகு தான் தொடங்குகிறது. அதுவரை புசு புசு என்று அடர்த்தியாக வளரும் இலைகளை பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். அவைகளை கத்தரிக்கலாமா வேண்டாமா என்ற கவலை என்போன்ற அனுபவமில்லாதவர்களுக்கு ஏற்படும்.

எல்லாமே ஒரு நல்ல படிப்பினைதான். 

Wednesday, December 6, 2023

காணறியா இறைவன் சூது

 அந்த காலத்தில் 16 m.m.   திரையில் எங்கள் காலனியில் கறுப்பு வெள்ளை திரைப்படங்களை  திறந்த வெளியில் திரையிடும் போது பல வேடிக்கைகள் நடக்கும். அடிக்கடி ரீல் அறுந்து போகும்.  ஏற்கனவே படம் பார்த்திருப்பவர்கள் அதற்கான உரையாடல்களை கூடவே சொல்லிக் கொண்டு போவார்கள். படத்தை விட பார்க்க வந்திருப்பவர்களின் வைபோகமே அதிகம்.

 ஒரு முறை நான்கு வயது சிறுவன் சுற்றியிருந்த இருளும் திரையில் படமும்  புரியாததாலோ என்னமோ திரும்பி நின்று கொண்டு "அம்மா லைட்'  'அம்மா லைட்" ப்ரொஜக்டரைக் காட்டிக் கொண்டு சத்தம் போட்டு கொண்டிருந்தான்.   (அந்த வெளிச்சம் பரவாமல் ஏன் யாவரும் இருட்டில் அமர்ந்திருக்கிறார்கள் என்ற கேள்வியே அவனுள்ளத்தில்  இருந்திருக்குமோ ?) சிறிய துவாரத்தின் மூலம் வெளியான அவ்வெளிச்சம் தான் திரையில் காணும் காட்சிகளுக்கு காரணம் என்பது அவனுக்கு புரியவில்லை.  "ஆமா ஆமா லைட் தான் படுத்து தூங்கு" என்று சிரமப்பட்டு அவனை தூங்க வைக்க முயன்று கொண்டிருந்தாள் அவனுடைய தாயார். 

"Go to the source "  என்பது ஆன்மவிசாரம் செய்பவர்களுக்கு சொல்லப்படும் அறிவுரை.  ஆன்மாவின் ஒளிதான் தேகம் மற்றும் உலகத்தின் இயக்கத்திற்கே அடிப்படை. அதை கவனிக்க ஆரம்பித்தால்  உலகம் என்ற திரை நம் முதுகு பக்கமாகி நம்மை பாதிக்காது. இதையே அந்தர்முகம் என்று தியானவகுப்பில் சொல்கின்றனர்.  

அந்த கவனிப்பு நீளும் அளவு மனம் கொந்தளிப்புகள் அடங்கி குளிர்ந்து இருக்கும்.  இதன் அவசியத்தை டி.வி.ஜி. அவர்கள் மக்குத் திம்மன் கவிதை ஒன்றில் அழகாக உரைக்கிறார்.

இனியென்ன மற்றென்ன, கதி ஏது எனப் பதறினும்  

விதியதன் எழுது கோலும் உளதோ உன் கையில் ?  

கண்களுக்கு எட்டாது அவன் நடத்தும் சூது

குளிர்ந்திருப்பாய் உன் ஆன்மாவிலே- மன்கு திம்மா.

திரையில் ஓடும் காட்சிகளோடு மனம் ஒன்றியிருக்கும் போது கதையின் போக்கு திகிலூட்டக்கூடும். ஆனால் அதிலிருந்து விலகிடும் போது மனதை திரைக்கதை பாதிப்பதில்லை.  

உலக விசாரங்களில் நம் மனதின்படி முடிவுகள் வராமல் போய்விட்டால் அதை சுலபமாக மனம் ஏற்றுக் கொள்ளாமல் தவிப்பை அதிகமாக்கிக் கொள்கிறது.  இறைவனின் இச்சைப்படிதான்  இந்த உலகில் எல்லாம் நடக்கிறது என்ற போக்கை கடைபிடித்தால் மனமும் போராட்டங்கள் இல்லாமல் குளிந்திருக்கும். அதற்கான வழிதான் ஆன்மாவில் கவனம் செலுத்துவது என்கிறார் திரு குண்டப்பா அவர்கள்.

இதே உண்மையை  ஜென் கருத்தும் எவ்வளவு பொருத்தமாக எடுத்து சொல்கிறது !!   'நாம் முடிவு செய்பவர் அல்லர்' என்பதை புரிந்து கொண்டால்

"....your struggles with life will end " 

பாடலின் மூலமும்,  தமிழில் முயற்சியும் :

கதியிதுவோ மற்றெதுவோ எனப் பதைப்பதும் ஏன்?
விதியதன் கோலும்  உன் கையில் உளதோ?
பதியவன் காணறியா சூதின் வழி நடக்கும் உலகு 
மதியும் குளிரட்டும் ஆத்மனிலே-மக்குத் திம்மா  (# 360)

(பதி =இறைவன்; காணறியா சூது = கற்பனைக்கெட்டாத வழி முறை )

பின் குறிப்பு :

 ( தபாலில் வந்த ஒரு உறை மேல் கிறுக்கிய  இந்த படத்திற்கு டிஜிடல் வர்ணம் பூசி, ஜென் ஞானத்துடன்  வாட்ஸப்பில் சிலருடன் பகிர்ந்து கொண்டேன். சில நாட்களுக்குப் பிறகு அது எனக்கே வேறொருவர் மூலமாக வந்தது ... இப்போது டிவிஜி கவிதைக்கு துணையாகிறது. ) 



Saturday, July 8, 2023

ஆறு மனமே ஆறு ....

"ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு "  என்பது ஆண்டவன் கட்டளை என்கிற திரைப்படத்தில் இடம் பெற்ற மிகவும் புகழ் பெற்றப்  பாடல்.

இதில்  கவிஞர் கண்ணதாசன் ஆறு குணங்களை  மனிதரின் மன ஆறுதலுக்காகப் பட்டியலிடுகிறார். அவை  1) ஒன்றே சொல், அதையே செய்  2) இன்பமும் துன்பமும் இறைவன் வகுத்த நியதி 3) உண்மையை சொல்லி நன்மையை செய் 4) நிலை உயரும் போது பணிவு கொள் 5) ஆசை, கோபம் களவு மிருக குணங்கள் 6) அன்பு கருணை நன்றி -தெய்வ குணங்கள்.
அற்புதமான இசையமைப்புடன் கூடிய அந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது.

மேற்கண்ட குணங்களை பலவேறு கோணங்களில் மக்குதிம்மன் மூலமாக  குண்டப்பா அவர்களும் பல பாடல்களில் சொல்லியிருக்கிறார். இந்த பதிவில்
மனிதரின்  முன்னேற்றத்திற்கென அவர் சொல்லும் மூன்று குணங்களை பார்ப்போம். முதலில் பாடலும் அதன் மொழிபெயர்ப்பும்:   

ಚಾರುದೃಶ್ಯಂಗಳಿಂ ಪ್ರೀತಿ ಹೃದಯವಿಕಾಸ|
ಕ್ರೂರದೌಷ್ಟ್ಯಯಂಗಳಿಂ ವೀರಾನುಕಂಪ ||
ಭೈರವಾದ್ಧುತಗಳಿಂ ಮೌನದಂತರ್ಮನನ |
ದಾರಿಯುದ್ಧಾರಕಿವು- ಮಂಕುತಿಮ್ಮ || 457 ||


மன விகாசம் தரும் இயற்கையின் காட்சி
வன்மையைக் காணில் வெகுளும் மற நெகிழ்ச்சி
மோனத்தில் வியந்திரு பிரளயங் காட்டும் மிரட்சி
மேன்மைக்கு வழியிதுவே- மக்குத் திம்மா

( விகசித்தல் = மலர்தல்; பிரளயங் காட்டும் மிரட்சி= பயந்தரும் இயற்கையின் சீற்றம் ;  மற  நெகிழ்ச்சி =  வீரத்தின் பின்புலத்தில்  இரக்கம்  -வீர அனுகம்பம்  )
 
முதலாவது இயற்கையோடு இயைந்திருப்பது.    
 இரண்டாவது தர்மத்தோடு  இயைந்திருப்பது . 
மூன்றாவதாக எல்லாம் வல்ல இறைசக்தியின் முன் தலை வணங்கி நிற்பது.    

முதல் வரியில் இயற்கையோடு இயைந்திருப்பதின் ரகசியத்தை சொல்கிறார். 
 
மன விகாசம் தரும் இயற்கைக் காட்சி
நாம் பார்க்கின்ற ஒரு காட்சி நம்முடைய மனதை  கொள்ளைகொள்ளும் போது நமது மனம் மிகவும் மென்மையானதாகிறது .  குழந்தையின் சிரிப்பிலாகட்டும், மலர்களின் மலர்ச்சியாகட்டும்  அக்கணங்களில் மனம் லேசாவதை உணரலாம்.  அதை இறையோடு ஒன்றிய நிலை என்றும் கூறலாம்.   

     காட்டின் வழியில் முல்லைக் கொடிக்கு  தேர் ஈந்தான் பாரி மன்னன் என்றும்  அழகிய தோகை விரித்தாடும்  மயிலைக் கண்டு குளிரால் நடுங்கியது என்று விலையுர்ந்த  போர்வையை போர்த்தினான்   மன்னன் பேகன்  என்றும்  அறியும்  போது அவர்களது மனம் எந்த அளவிற்கு  மென்மை  அடைந்திருந்தது என்பதை புரிந்து கொள்ளலாம்.  மனதின் அந்த  நெகிழ்ச்சியே அவர்களை மிக உயர்ந்த நிலைக்கு உயர்த்தியது. 

ஆனால்  இந்த மென்மை சமூக வாழ்க்கையில் பயன்தருமா?  மனம் மென்மையானாலும் வீரம் குறையக் கூடாது. அநீதிக்கு எதிராக எழ வேண்டும்.  அதை இரண்டாவது வரியில் குறிப்பிடுகிறார். 

வன்மையைக் காணில் வெகுளும் மற நெகிழ்ச்சி

வீர அனுகம்பம் என்று ஒரு வார்த்தையை கையாளுகிறார் டி.வி.ஜி. அதாவது இரக்கத்தினால் வெளிப்படும் வீரத்தன்மை.  தமிழ் அகராதியில் அனுகம்பம் என்கிற வார்த்தைக்கு இரக்கம் என்ற பொருள் கொடுக்கப்பட்டிருக்கிறது. அது வடமொழியிலிருந்து வந்திருக்கும் சொல். கன்னடம் தமிழ் இரண்டிலும் புழக்கம் உண்டு.

யாருக்கேனும் ஏற்படும் குரூரமான துன்பத்தைக் கண்டு, மனமிரங்கி , அதைக் களைய வேண்டி ஒருவருக்கு ஏற்படும் மனநிலையை குறிக்க வந்தது இது.
இதை  நிறைவேற்ற  ஒருவர்  இரத்தம் சிந்தவோ உயிரை விடவோ கூட நேரலாம்.  ஆனால் அது பிற உயிர் மேல் கொண்டுள்ள இரக்கத்தின் காரணமாக எழும் உணர்ச்சி.  

அப்போது  மனதின் மென்மைத்தன்மை மறைந்து வீரத்தின் அறிகுறியான மறத் தன்மை வெளிப்படுகிறது.  அதை 'வீர அனுக்கம்பம்  என்கிறார் டி .வி.ஜி. 

 உதாரணமாக தன்னுடைய தசையை அறுத்து எடைக்கு எடை கொடுத்து ஒரு புறாவைக் காப்பாற்ற முன்வந்த சிபி சக்ரவர்த்தியாகட்டும், கன்றை இழந்து தவித்த பசுவிற்கு ஏற்பட்ட அநீதிக்கு காரணமான தன் மகனை தேரடியில் கிடத்திய மனுநீதி சோழன் போன்றவர்களின் மனநிலையை சொல்லலாம். இங்கே பெரும்பாலும் தியாக குணம் இருக்கும். தன்னலத்திற்கு இல்லாமல் பிறர் நலனுக்காக போராடும் குணம் வெளிப்படும்.  அதனால் இதையும் மனமுயர்த்தும் வழி என்கிறார் டி.வி.ஜி. 

மூன்றாவதாக  சர்வ வல்லமை வாய்ந்த  இயற்கையின்  கோர  சக்தியை கண்டு  அதன் முன் எப்படி மனிதனின் ஆற்றல்கள் யாவும் ஒரு துரும்பு போன்றது என்பதை நினைக்கும் போது  ஆணவம் அடங்கி  மன அடக்கம் ஓங்குகிறது.  அப்போது மனிதனால் அந்த சக்தியை மௌனமாக வியக்க முடியுமே அன்றி வேறெதுவும் செய்ய இயலாதவன் ஆகிறான். இந்தப் புரிதலும் மனிதரின் முன்னேற்றத்திற்கு ஒரு  தேவையே! 


மோனத்தில் வியந்திரு பிரளயங் காட்டும் மிரட்சி

 இந்தப் பாடல், சத்சங்கத்தில் இருக்கும்  சாதகர்களுக்கு  என்பதாக வைத்துக் கொள்ளலாம். அவர்களுக்கு அடிப்படை  நல்லொழுக்க நெறிகளை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.  அவர்கள் சாதனையில் அடுத்த கட்டத்திற்கு நகருவதற்காக அமைத்துக் கொள்ள வேண்டிய வாழ்க்கை முறை என்று கொள்ளலாம்.  அதற்கான வழி சொல்லும் பாடல் இது.

மாற்று :  ( கொள்ளை என்ற சொல்லை பல பொருளில் பயன்படுத்த ஒரு சோதனை முயற்சி.  )

கொள்ளை அழகில் விகசிக்கும் மனம்  -              abundance
கொள்ளை கொலை கண்டு வீறும் மறம் -            robbery
கொள்ளை வியப்பு ஊழிதன் நர்த்தனம்    -           plenty
கொள்ளை யுண்டு மனிதருக்கே மக்குத் திம்மா   -  profit


Tamil Lexicon : 
[கொள்ளை koḷḷai , n. < கொள்-. 1. [T. kolla, K. koḷḷe, M. koḷḷa.] Robbery, plunder, pillage; சூறைகொள்ளுகை. 2. [T. kolla.] Excess, abundance, copiousness, plenty; மிகுதி. கொள்ளைமா மதத்த நால்வாய்க் குஞ்சரம் (பாகவ. 1, 5, 14). 3. Crowd, throng; கூட்டம். கொள்ளையிற் பலர் கூறலும் (கந்தபு. விண்குடி. 14). 4. Plague, pestilence, epidemic; பெருவாரிநோய். 5. Hindrance, obstacle, difficulty; தடை. அதைச்செய்ய உனக்கு என்ன கொள்ளை? 6. Price; விலை. சில்பத வுணவின் கொள்ளை சாற்றி (பெரும்பாண். 64). 7. Use, profit; பயன். நானிருந்தென்ன கொள்ளை (இராமநா. பால கா. 9).]


Thursday, June 29, 2023

Smart socket and UPS inverter :

இந்த தலைப்பை தமிழில் எழுதத் தெரியவில்லை. அதனால் ஆங்கிலத்திலேயே எழுதிவிட்டேன். சரி, விஷயத்திற்கு வருவோம்.    

  கர்நாடகாவில் மின்சாரத்துறை  குழப்பங்கள் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. முதலில் இலவசம் என்ற அறிவிப்பு ஒருபுறம்.  மறுபுறம் யூனிட்க்கு  ரூ 4/லிருந்து ரூ 7/க்கு கட்டணம் அதிகரிப்பு.  இதைத் தவிர உபரி வரிகள்.  இலவசம் என்பது ஆகஸ்ட் மாதத்திலிருந்து அமலாகும், அதுவும் கடந்த வருட சராசரி பயன்பாட்டைப் பொறுத்து முடிவாகும் என்று நாளுக்கு ஒரு அறிவிப்பு யார் யார் மூலமாகவோ வந்து கொண்டிருக்கிறது.

என் நண்பருக்கு கவலை பிடித்துக் கொண்டது. அவர் மாதம் 120 முதல் 180 யூனிட்டுகளுக்கு குறைவில்லாமல் கட்டி வந்திருக்கிறார். பேச்சு வாக்கில் பயன்பாட்டை குறைப்பது பற்றிக் கேட்டார். வழக்கமான கேள்விகளில் தெரியவந்தது அவர் வீட்டில் வெந்நீருக்கு கீஸர் ஒன்றைத் தவிர பெரியதாக மின்சார பயன்பாட்டைஅதிகரிக்கும் இயந்திரங்கள் எதுவும் இல்லை. ஒரே ஒரு ஃபிரிட்ஜ், அதுவும் இன்வெர்டர்  பிரிட்ஜ்.  அதனால் ஒரு நாளைக்கு ஒரு யூனிட்டுக்கும் குறைவாகவே இருக்கும். வாஷிங் மிஷன், மிக்ஸி, கிரைண்டர்  போன்ற  இயந்திரங்களே இல்லை. மற்றபடி  தொலைக்காட்சிப் பெட்டி, மின் விசிறிகள், குழாய் விளக்கு  போன்றவைதான்.  ஒரு UPS  இன்வெர்டர் 12 வோல்ட் பாட்டரியுடன் மின்தடை காலங்களின் பயன்பாடு கருதி இணக்கப்பட்டிருந்தது.

அதுவும் சரியாக பராமரிக்கப்படாமல் பாட்டரியின் நீர் அளவு குறைவாகவும்  உப்புப் பூத்த டெர்மினலுடன் காணப்பட்டது.  என் கணக்குப்படி முதல் திருடன் இதுதான். இது கண்டிப்பாக பெரும் விரயத்தை ஏற்படுத்துகிறது என்று தோன்றியது.  கீஸரிலாவது   ஆட்டோ சிவிட்ச் ( thermostat) மூலம்  மின்சார விரயம் குறைக்கப்படுகிறது. 

UPS-ஸில் ஆட்டோ ஸ்விட்ச்  பாட்டரியில் சேமிக்கப்பட்ட மின் அளவைப் பொருத்து செயல்படும். பாட்டரியின் எந்த ஒரு செல் பகுதி பலவீனமானாலும் அது முழு சார்ஜ் ஏற்காது. அதனால் இன்வெர்டர் அதை எப்போதும் சார்ஜ் செய்து கொண்டே இருக்கும்.

.சரியாக பராமரிக்கப்படும் பாட்டரியில் கூட 20  வாட்ஸ் வரையிலும் தொடர்ந்து இழப்பு இருந்து கொண்டே இருக்கும். அதாவது ஒரு நாளைக்கு 480 wh  அல்லது  ஒரு நாளைக்கு அரை யூனிட் . மாதம் 15 யூனிட்கள்.  இது ஸ்டாண்ட் -பை  ( standby loss) இழப்பு எனப்படும்.  நமது  அளவுக்கூடக் கூட  இதுவும் கூடும்.  

பெரும்பாலும்  இதைப்பற்றிய விழிப்புணர்வு இல்லாமலே பெரும்பாலானோர் இருக்கிறார்கள். ஏனெனில் இதை  அளப்பதற்கு சரியான கருவிகள் இல்லை.

அப்படி எனக்கொரு கருவி கிடைத்து அதை கடந்த ஒன்றரை வருடங்களாக உபயோகித்து வருகிறேன். ஆனால் அதை வாங்கியபோது அது இப்படி பயன்படும் என்று அறிந்திருக்கவில்லை.

அது ஸ்மார்ட் ப்ளக் ( Smart plug ) எனப்படும்,  கணினி, கைப்பேசி மூலமாக இயக்கக்கூடிய மின் இணைப்பு முறையாகும். இதன் மூலம் நமக்கு தேவையான குறிப்பிட்ட கருவியை குறிப்பிட்ட நேரத்தில் இயக்கவோ நிறுத்தவோ முடியும்.  அதை எங்கிருந்தாலும் இணைய இணைப்பு இருந்தால் செய்ய முடியும்.  தானியங்கி செயல்பாடுகளை முன் கூட்டியே திட்டமிட்டு இதில் சேமித்து விட்டால் அக்குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிடப்பட்ட செயலை நிறைவேற்றும்.  உலகில் நீங்கள் அதன் செயல்பாட்டை எங்கிருந்து வேண்டுமானாலும் கண்காணிக்கலாம்.

அப்படி ஒரு ஸ்மார்ட் ப்ளக்கை இணைய தளத்திலிருந்து வாங்கி என் வீட்டு சோலார் இன்வெர்டருடன் இணைத்தேன்.  என்னுடைய தேவை பாட்டரியின் பயன்பாட்டை அதிகப்படுத்தி மின்வாரியத்தின் புழக்கத்தை குறைப்பதே. இதன் மூலம் தானியங்கி ப்ளக்கைக் கொண்டு -அனுபவத்தின் அடிப்படையில் - பருவ நிலைக்குத் தக்கவாறு  கண்காணித்து செயல்படுத்தி வருகிறேன்.

நான் எதிர்பார்க்காத ஒரு விஷயம் என்னவென்றால் நாம் எந்த எந்திரத்துடன் இணைத்துள்ளோமோ அதன் தனிப்பட்ட மின்னளவு பயன்பாட்டை துல்லியமாக தொடர்ந்து கணித்து அதை எப்போது வேண்டுமானாலும் நம் ஸ்மார்ட் ஃபோனில் பார்க்கின்ற வசதியை தயாரிப்பாளர்கள் செய்திருக்கிறார்கள். இதனால் என்னுடைய இன்வெர்டர் ஒவ்வொரு நாளும்  பயன்படுத்தும் நிகழ்நிலையிலேயே ( Real time) அதைத் தெரிவிக்கிறது.

உதாரணத்திற்கு இந்த படத்தில் என்னுடைய கடந்த சில மாதங்களுக்கான  இன்வெர்டரின் பயனளவை காட்டியிருக்கிறேன்.  ( இரவு 12 மணி முதல் காலை 7:45 மணியளவிலேயே 130 wh உபயோகித்திருக்கிறது. 1000 wh = 1 kwh அல்லது 1 யூனிட் எனப்படும்) )



இதில்  2022 ஆம் வருடம் ஜூன் ஜூலை மாதங்களில் நாங்கள் ஊரில் இல்லாதபோதும்  7 அல்லது 8 யூனிட்டுகளை அது உபயோகித்திருக்கிறது. நான் நல்ல முறையில் என் பாட்டரிகளை பராமரித்து வருவதால்  அதன்  மின் இழப்பு வேகம் குறைந்திருக்கலாம். இழப்பு குறையும் போது ஈடுகட்ட வேண்டிய மின்தேவையும்  குறையத்தானே செய்யும்!  

அதிக அளவில் மின்தேவை ஏற்படும் பொழுது இன்வெர்டர் எடுத்துக் கொள்ளும் அளவும் ( self maintenance ) அதிகரிக்கிறது.  இதை மாதாந்திர உபயோகத்தின் அளவுகளைக் கண்டு புரிந்து கொள்ளலாம். 


கீழே இருக்கும் எண்கள் இன்வெர்டர் யூனிட்டுகள் மேலே உள்ளவை அந்தந்த மாதத்திற்கான பயனீட்டு அளவு.  சராசரியாக இன்வர்டர் மட்டும் மாதம் 24 யூனிட்டுகளுக்கு காரணமாகிறது.  அதிக அளவு மின்சாரம் இன்வெர்டர் மூலம் இழுக்கப்படும் பொழுது சூட்டைத் தணிக்க அதிலுள்ள cooling fan  அதிகம் வேலை செய்ய வேண்டியிருக்கிறது. ஆகையால் அன்றைய  தட்ப வெப்பத்தைப்பொருத்தும் தினசரி வேறுபாடுகள் இருக்கும்.

இதையெல்லாம் ஏன் குறிப்பிடுகிறேனென்றால்  UPS  சேவை மிக அவசியம் என்று  நாம் பெரும்பாலும் தேவையின்றி பாட்டரியை சார்ஜ் செய்து கொண்டு  அதிகப்படியான மின்கட்டணம் கட்டி வருகிறோம்.

பயனீட்டின் அளவு அதிகரிக்கும் போது இன்வெர்டரின் தேவை  65 வாட்ஸ் வரை கூட போகலாம்  என்று இணையத்தில் பலருடைய அனுபவங்கள் வாயிலாக அறிகிறேன்

அப்போது  இன்வெர்டரின் பயன்பாடும் அதிகரிக்கிறது. இதை தவிர்க்க முடிந்தால் 30 யூனிட்டுகளை குறைக்க முடியும்.  அதாவது மாதம் ரூ 210 + உபரி வரிகளை குறைக்கலாம். 

இன்வெர்டர் UPS வைத்து இருப்பவர்கள் பாட்டரியை வாரம் ஒரு முறை சார்ஜ் செய்து அதை மெயின் லைனிலிருந்து switch off  செய்து விடுங்கள்.  மின்தடை ஏற்படும்பொழுது மட்டும் அதை ON செய்து கொண்டால் போதுமானது. இதனால் தேவையின்றி இன்வெர்டர் இயங்காது. சூடாகாது.  அது போல் பாட்டரியின் இழப்பு வேகமும் மிகக் குறைவாகவே இருக்கும். 

முக்கியமாக பாட்டரியின் ஆயுட்காலம் எத்தனை முறை செறிவூட்ட சுழற்சி (Charging cycles) என்பதைப் பொருத்தது. எப்பொழுதும் மின் இணைப்பிலேயே வைத்திருக்கும் பொழுது மிக விரைவிலேயே சுழற்சி எண்ணிக்கையை எட்டி விடுகிறது. இதனால்  ஐந்து வருட காலம் என்பது மூன்றாக சுருங்கி போய் விடும் வாய்ப்புகள் அதிகம். மேலும் பராமரிப்பு சரியில்லாமல் இருந்தால் அதிக அளவில் மின் இழப்பை ஏற்படுத்தும்.  

மேலே கூறிய அனைத்தும் வெறும் இன்வெர்டர் UPS வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே. 

பின் குறிப்பு :  இந்த சேமிப்பின் பரிமாணம் என்ன?
மாதம் ரூ 200 என்று வைத்துக் கொண்டால் வருடத்திற்கு ரூ2400/
 ஐந்து வருடத்தில் சேமிப்பின் அளவு ரூ 12000/

அதாவது அடுத்த பாட்டரி வாங்குவதற்கான பணத்தை முறையான கண்காணிப்பினாலேயே சேமிக்க வழியுண்டு என்பதை புரிந்து கொண்டாலே போதும்.



Saturday, June 24, 2023

வேண்டியதை ஈவான் ஈசன்

இயற்கையின் நியதிப் படித்தான்  எல்லாம் நடக்கிறது என்பது வழி வழியாக சான்றோர்கள் ஏற்றுக் கொண்டுள்ள வழக்கு.

இதில் நமக்கு என்னப் பிரச்சனையென்றால் இயற்கை  (அல்லது கடவுள்) அந்த நியதிகளை வெளிப்படையாக திறந்த புத்தகமாக நமக்குக் காட்டுவதில்லை.  இதனால் சஸ்பென்ஸ் அதிகமாகப் போய் பெரிய நகரத்தில் மொழி, வழி தெரியாமல் சிக்கிக் கொண்டவனைப்   போல் ' ..........இத்தாவிர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன்"   என்று  சிவபுராணத்தில்  மணிவாசகர் சொல்வதை நிஜமாக்கிக் கொண்டிருக்கிறோம்.

இப்போது ஒரே வழி அந்த கடவுளிடம் சரணடைவதே.  அவனிடம் வேண்டப்போவது என்ன ?  

  D.V.G. இதற்கு மாணிக்கவாசகர் மொழியிலேயே  விடை தருகிறார்.


இங்கே மனிதர்களுக்கே உரித்தான மனத் தடுமாற்றத்தை அழகாகப் படம் பிடிக்கிறார்.  நம்முடையே இச்சைகளை அவன் பூர்த்தி செய்ய வேண்டுமென்ற எதிர்பார்ப்பு ஆனால் அதை அருளுவானோ இல்லையோ என்ற சந்தேகம். அதே வேளை நாம் இச்சைப்பட்டதெல்லாம் நமக்கு நன்மை தருமா என்பதும் தெரியாது. சரி அவனிச்சைப்படியே நடக்கட்டும் என்று உறுதியாக நம்பும் மனமாவது உண்டா ? ( என்றால் இல்லையென்றே சொல்ல வேண்டும்).

ஆகையால் கடவுளிடம் ஏதாவது வரம் வேண்டுவதானால் "நீ அருளுவதை ஏற்றுக் கொள்ளும் உறுதியான மனதைக் கொடு'  என்பது மட்டுமாகவே இருக்கட்டும்  என்று மக்குத் திம்மன் வாயிலாக நமக்கு சொல்கிறார் டி.வி.ஜி.

மொழிபெயர்ப்பு :

வேண்டியதை ஈவான் ஈசன் என்ற நிலையில்லை

வேண்டுவதில் நலம் யாதென அறிவுமில்லை

வேண்டாமலே வருவது அவனிச்சை எனக் கொள்

வேண்டிடு நீ அந்நெஞ்சுரம் - மக்குத் திம்மா  ( 943)

மாணிக்கவாசகர் வழியிலேயே சொல்லுகிறார் என்று ஏன் சொல்லுகிறேன் என்றால்  காலத்தால்  மொழியால்  பிரிக்கப்பட்டிருந்தாலும்  அவர்களிடையே உள்ள கருத்து ஒற்றுமை எப்படி வெளிப்படுகிறது என்பதை கீழ்கண்ட திருவாசகப் பாடலை படித்தாலே புரியும்.


"அதுவும் உந்தன் விருப்பன்றே" என்கிற மாணிக்கவாசகப் பெருமானுக்கு இருந்த மன உறுதியை பெறுவதே  நம்முடைய பிரார்த்தனைகளுக்கான முழுமையான பலன் என்று உணர்ந்தாலே நமக்குள்ள அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்துவிட்டதாகப் பொருள் கொள்ளலாம்.

அப்போது நம்மைப் பற்றி யார் என்ன நினைத்தால் என்ன?  எல்லாம் ஈசுவர இச்சைப்படி நடக்கிறது.
( டிஜிடல் வரைவு )





                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                         

Tuesday, December 20, 2022

வேடல்- தமிழ் சொற்புதிர்

இன்னும் பத்து நாட்களில் புது வருடம் பிறக்கப் போகிறது.

இந்த 2022 -ஐ எதுவும் பதிவே போடாமல் கழித்தாயிற்று.

கற்கை நன்றே என்று வலைப்பூவிற்கு பெயர் வைத்து, புதிதாகக் கற்றதை எதையாவது பகிர்ந்து கொள்ள வேண்டாமா? இல்லாவிட்டால் எதுவும் கற்றுக் கொள்ளவில்லை என்று ஆகிவிடுமே என்ற கவலை தொத்திக் கொண்டது.

என்னுடைய -ஹைட்ரோபானிக்ஸ் போன்ற- கற்றுக் கொள்ளும் முயற்சிகள் பலவும் இன்னமும் அரைகுறையாய் தொடர்வதால் அவற்றைப் பற்றி எதையும் எழுத முடியாத நிலை.

இன்று 'சொல்லாடல்' புதிரை விடுவிக்க முயலும் போது தான் ஏன் இதைப்பற்றிய பதிவு போடலாமே என்று தோன்றியது.

'சொல்லாடல்' என்னும்  தமிழ் புதிரை கடந்த சில மாதங்களாக நான் என் சகோதர சகோதரியுடன்  தொடர்ந்து விடுவித்து வருகிறேன்.  இது ஆங்கில மொழிக்கான WORDLE  என்ற தினம் ஒரு 'சொல்லை' கண்டு பிடிக்கும் விளையாட்டின் தமிழ் வடிவம். இதை வடிவமைத்திருக்கும் கணினி நிபுணர் திரு முகிலன் முருகன், மலேசியத் தமிழர். 

மிகவும் பாராட்டிற்குரிய  தமிழ் சேவை.  

சொல்லாடல் பற்றிய மேலும் விவரங்களை  செல்லியல் வலைப்பூவில் படிக்கலாம்

இதில் ஆங்கிலத்தை விட ஒரு படி மேலே சென்று 'பொது' மற்றும் 'இலக்கியம்' என்று இரு பிரிவுகளை ஏற்படுத்தி சொற்களை தேடி அறிந்து கொள்வதை சுவாரஸ்யமாக்கி இருக்கிறார். 

தற்போது  விகடன் போன்ற  பல பத்திரிக்கைகளும்  சிற்சில மாற்றங்களுடன் இந்த விளையாட்டை ஆரம்பித்துள்ளன.

ஒரு நாளைக்கு ஒரு புதிர் மட்டுமே.  புதிரை எட்டு முயற்சிகளுக்குள் விடுவிக்க வேண்டும். விடுவித்த பின் அதற்கான பொருளையும் புள்ளிவிவரங்களையும்  நமக்கு திரையில் தெரிவிக்கிறது. 

ஒவ்வொரு முயற்சியின் புள்ளிவிவரம் அவரவர் கணினி அல்லது அலைபேசியில் சேமிக்கப்படுவதால் நாம் ஒரே உபகரணத்தை தொடர்ந்து பயன்படுத்த வேண்டும். கீழே என்னுடைய முயற்சிகளின் புள்ளி விவரத்தைப் பார்க்கலாம்.

இந்த விவரத்தின்படி என்னுடைய 158 முயற்சிகளில் 99 விழுக்காடுகள் தீர்வு கண்டிருக்கிறேன். அவற்றில் 43 மற்றும் 46 முறைகள் மூன்றாவது நான்காவது முயற்சியிலேயே தீர்வு செய்ய முடிந்திருக்கிறது.  

பதினோரு முறை இரண்டாம் முயற்சியிலேயே விடை சிக்கியிருக்கிறது.  பொதுவாக நாம் தேர்ந்தெடுக்கும் முதல் சொல் தரும் குறிப்புகளுக்கு ஏற்ப அடுத்தடுத்த முயற்சிகள் அமையும்.

இந்த செயலியின் சிறப்பே குறிப்புகளை எடுத்துக்காட்டும் முறைதான்.  ஓரிரண்டு முறை வெற்றி கண்டு விட்டால் நம்மை உற்சாகம் தொற்றிக் கொண்டு விடும்.

சிறுவர்களுக்கும் சிறுமிகளுக்கும்  மிகவும் பயன்படக் கூடிய ஒரு கல்வி முறையாகவும் இதை ஆசிரியர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

Smart Boards  இணைய தொடர்புடைய  திரைகளில் மாணவர்களை கூட்டாக முயற்சி செய்யச் சொல்லி அவர்களின் சிந்திக்கும் திறனையும் மொழி வளத்தையும் மேம்படுத்தலாம்.

இப்பொழுதே விளையாடிப் பார்க்க வேண்டுமா ?  இதோ இந்த இணைப்பை சொடுக்குங்கள்.  சொல்லாடல் -தமிழ் சொற்புதிர்

 வாசகர்களுக்கு ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்


Tuesday, September 21, 2021

சோலார் அனுபவங்கள்-7: தவறும் படிப்பினையும்

    என்னுடைய சோலார் பயணத்தில் ஜனவரி 2020 -ல் நான் செய்த சில மாற்றங்களை சொல்லி பாட்டரிக்காகும் செலவை குறைப்பது பற்றி குறிப்பிட்டிருந்தேன்.

நான் நினைத்தபடி ஒரு வருட காலம் பாட்டரிகளால் தாக்குப் பிடிக்க முடியாமல் செப்டம்பர் மாதமே மாற்ற வேண்டிய கட்டாயம் வந்தது. முன்பே சொன்னபடி 2KW இணைப்பு 1KW ஆக குறைக்கப்பட்டிருந்ததால்  நான்கு பாட்டரிக்கு பதில் இரண்டிலேயே சமாளிக்க முடியும் என்பதை என் வீட்டு தினசரி கரெண்ட்- பகல் இரவு நேரங்களில்- எவ்வளவு என்பதை கணித்து தெரிந்து கொண்டேன்.

இரண்டு பாட்டரியானால் என்னுடைய இன்வெர்ட்டர்(PCU) 24 V-க்கு மாறவேண்டும். என்னிடமிருப்பதோ 48 Volt. கடைக்காரர் 40000 செலவில் 4 battery இணைப்பதை விட 20000 செலவில் இரண்டை இணைத்து மேலே 8000 செலவு செய்து 24V  இன்வெர்ட்டர் வாங்கிப் போட்டால் கூட 12000 மிச்சமாகும் என்று கணக்கு சொன்னார் .  நானும்,  சரி 48V  இன்வெர்ட்டரை OLX -ல் போட்டு விற்றுவிடலாம் என்ற முடிவோடு தலையாட்டிவிட்டேன்.

அவர் என்னை யோசிக்க விடாமல் விசாரித்து வந்த இரண்டு மணி நேரத்திலேயே புது இன்வெர்ட்டருடன், இணைப்பு மாற்றங்களுக்கு வேண்டிய எல்லா உபகரணங்களுடன் வந்து இறங்கி விட்டார். இனிமையான  வியாபாரப்பேச்சு, முகஸ்துதி எல்லாம்  என் அறிவை மழுங்கடித்தது . வந்தவர் இரண்டு மணி நேரத்தில் எல்லாம் முடித்து பழைய பாட்டரிகளுடன் மேல் பணத்தையும் வாங்கி கொண்டு போய் விட்டார்.

  தவறு இங்கேதான். மைக்ரோ டெக் (Microtek) மிகப் பிரபலமான பிராண்ட் ஆக இருப்பினும் அது தொழில் நுட்பத்தில் PWM  (Pulse width modulation) என்கிற  வகையை சேர்ந்தது. இது MPPT (Maximum Power Point Tracking)  வகையை விட  திறன் குறைந்தது. இதை  அவரும் சொல்லவில்லை  நானும் கவனிக்கவில்லை.  இதனால்  ஒரு நாளைக்கு  3.5 யூனிட்டிலிருந்து 4 யூனிட்  உற்பத்தியாக வேண்டிய மின்சாரம் 1.5 முதல் 1.7 யூனிட்களே உற்பத்தியானது.  

   இதனால் என்னுடைய மாலை மற்றும் இரவு தேவைகளுக்கு பாட்டரியில் போதிய சேமிப்பு இன்றி சர்கார் சேவையையே நாடவேண்டியதாயிற்று.

என்னுடைய  சராசரி பகல் (6 am -6pm )தேவை 1.8 லிருந்து 2 யூனிட்கள் , இரவு 1 யூனிட்.  வேடிக்கை என்னவென்றால் இரவு அது பாட்டரியையும் சார்ஜ் செய்ய துவங்கியது. இதனால்  பகலில் சூரிய வெளிச்சம்  உள்ள போது தகடுகளில் வரும் மின்சாரத்தை  முழுவதுமாக  உள் வாங்கிக் கொள்ள முடியாமல் போனது. ஏற்கனவே வயிறு நிறைந்தவனை எப்படி மேலும் மேலும் சாப்பிட செய்யமுடியும். 

இன்வெர்ட்டர் வடிவமைப்பு  சோலார் இல்லாதபோதெல்லாம் அது சர்க்கார் இணைப்பிலிருந்தே கரெண்ட் எடுப்பது போலவும் பாட்டரி குறைவாக இருக்கும் பட்சத்தில் அதையும் சார்ஜ் செய்யவும் செய்யப்பட்டிருந்தது. ஆராய்ந்து பார்த்ததில் பாட்டரி வெறும் (கரெண்ட்டை  )தின்று தூங்கும் வேலைக்காரன் போல் ஆகிவிட்டது. 

    கூட்டிக் கழித்து பார்க்கையில் 20% கூட மிச்சம் ஆவதாக தெரியவில்லை.  என்னுடைய லட்சியம் 3 யூனிட் மின்சார தேவைக்கு 4 யூனிட்டையும் முழுவதுமாக உற்பத்தி செய்ய வேண்டும். அப்படி செய்யும் போது  குறைந்தபட்சம் 70 %-80% ஆவது சேமிக்க வேண்டும்.   நான் சில மாதங்களை பெங்களூரில் கழிக்க நேர்ந்ததால் மே மாதம் ஊருக்கு   திரும்பியதும் இந்த இன்வெர்ட்டர் செயல்பாட்டை  தீவிரமாக கண்காணித்தேன்.  

   இதில் முக்கியமாக கண்டுபிடித்தது இன்வெர்ட்டர் மட்டுமே ஒரு நாளைக்கு 0.5 -0.7 யூனிட்களை பயன்படுத்திக் கொண்டது.   அதாவது பகல் நேரத்தில் மிச்சப்படும் 1 யூனிட்-ல்,  0.7 யூனிட்களை இன்வெர்ட்ட ரால் இழக்கிறேன். இது தான் மூலகாரணம். சோலார் உற்பத்தியை பெருக்கினால் ஒழிய இந்த தேவையை ஈடுகட்ட முடியாது என்பது  நன்றாகவே புரிந்தது. 

   ஓரளவு யூட்யூப் தேடல், விவரம் தெரிந்தவர்களோடு கலந்து ஆலோசித்ததில் ஒரு MPPT  Charge Controller  வழியாக இன்வெர்ட்டரை இணைத்து அதை வெறும் UPS போல பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது புரிந்தது. 

இதனிடையில் என்னுடைய பழைய 48V  Charge  Controller,  OLX -ல்  நான் எதிர்பார்த்தத்திற்கும் மிக குறைவாகவே விலை போயிற்று. ஒரு முதியோர் இல்லத்திற்கு என்பதால் கொடுத்து விட்டேன். அதில் சற்று  பணம் தேறியதால் ஒரு பெங்களூர் கம்பெனியோடு பேசி ரூ. 8300 க்கு ஒரு 24V  MPPT Controller  வாங்கி இணைத்து விட்டேன்.


மேலே காண்பது என் வீட்டில் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரைக்கான  மின் ஆணையத்தின்  மீட்டரில் பதிவான நுகர் அளவு.  கண்காணிக்காமல் விட்டால்  சோலார் வைத்தும் பிரயோசனமில்லை. ஏப்ரல்-க்கும்  ஆகஸ்ட்-க்கும்  எப்படி படிப்படியாக  சேமிப்பில் முன்னேற்றம் கண்டுள்ளது என்பதை சுலபமாக புரிந்து கொள்ளலாம். 

சுமார் 100 யூனிட்கள்  வரக்கூடிய இடத்தில் இப்போது 40-க்கும் குறைவாகவே ஆணையத்திலிருந்து தேவைப்படுகிறது. மீதம் சோலார் பேனல்  மற்றும் பாட்டரி வழியே   பூர்த்தி செய்யப்படுகிறது. 

அது என்ன கண்காணித்தல்? எப்படி செய்வது என்றெல்லாம்  கேட்காதீர்கள். கதை நீளும்,  உங்களுக்கு போரடிக்கும். 

கட்டுரையின் தலைப்பிற்கு வருவோம்.  

செய்த தவறு : அவசரப்பட்டு முகஸ்துதிக்கு மயங்கி முடிவெடுப்பது 

படிப்பினை (வாசகர்களுக்கும்) :   

சற்று விலை  அதிகமாயினும் MPPT தொழில் நுட்பத்தையே தேர்ந்தெடுக்கவும். அப்படி வாங்கும் போது  24V,  48V (multi option ports) இரண்டுக்கும் பொருந்தும் PCU யூனிட்டை வாங்கவும். பின்னால்  அதிகரிக்க அல்லது குறைக்க    இன்வெர்ட்டரை (PCU) மாற்ற வேண்டிய அவசியம் வராது

புதிதாக நிறுவ விரும்புபவர்கள் LiFepo4 பாட்டரிகளை தேர்ந்தெடுங்கள்.  அவை   lead -acid பாட்டரிகளை காட்டிலும் அதிக திறன் உடையவை . குறைந்தது மூன்று  முதல் ஐந்து வருடங்கள் அதிகம் உழைக்கக் கூடியவை.

அடுத்தவன் அனுபவத்திலிருந்து பாடம் கற்றுக் கொள்பவனே புத்திசாலி.  கற்கை நன்றே வாசகர்கள் போல  :)))


Saturday, November 14, 2020

ப்ளாப்பியின் புது அவதாரம் -New avatar of Floppy disc

 எல்லோருக்கும்  "சத்தமில்லா தீபாவளி "  நல்வாழ்த்துகள்.

முன் எப்போதையும் விட இப்போது சுற்றுப்புறத் தூய்மை பாதுகாப்பு அதிமுக்கியத்துவம் பெற்று வருகிறது. 

ஒரு நாள் பட்டாசு வெடிப்பதால்  காற்றின் மாசு அதிகரிக்கிறது என்று சொல்லும் அரசாங்கம்  பிளாஸ்டிக் பொருட்கள் எங்கும் இறைந்து கிடப்பதை கண்டு கொள்வதே இல்லை. அதை பரிகரிக்கும் செயல்திட்டங்களை அமல்படுத்துவதிலும் மெத்தனத்தைப் பற்றிக் கவலைப்படுவதே இல்லை.  

இவற்றிற்கு மேலாக இப்பொழுதெல்லாம் ஈ-குப்பை   (e-waste ) எனப்படும் உபயோகமற்ற எலக்ட்ரானிக், கணினி , அலைபேசிகள் மற்றும் அவை   சம்பந்தமான எலக்ட்ரிக் உபகரணங்கள் யாவற்றையும் எப்படி கையாளுவதே என்று தெரியாமல் விழிக்கும் நிர்வாகங்கள் இன்னும் சுற்றுச் சூழல் பிரச்சனையை பெரிதாக்கிக் கொண்டே போகின்றன.

இதை கையாளவே  ஈ -பரிசரா  என்னும் நிறுவனம் பெங்களூரில் வணிக ரீதியாகவே செயல்பட்டு வருகிறது.  அவர்கள் பல முக்கிய நகரங்களில் உங்கள் வாயிலுக்கே வந்து  ஈ-குப்பையை பத்திரமாக அப்புறப்படுத்தி பின்னர்    கண்ணாடி ,பிளாஸ்டிக்  உலோகம்  என்று  வகைப்படுத்துகின்றனர்.  பின்னர் உயர்ந்த உலோகங்களான தங்கம் வெள்ளி போன்றவற்றை மின்னணு கலங்களைப் பயன்படுத்தி   பிரித்தெடுத்து  மீண்டும் பயன்பாட்டுக் கொண்டு வருகின்றனர். பெல்ஜியம் ஜெர்மனி போன்ற நாடுகளில் இதே துறையில் உள்ள நிறுவனங்களுடன் கூட்டுறவு ஒப்பந்தங்கள் செய்து கொண்டு பிரிண்டட் போர்ட் குப்பைகளை ஏற்றுமதி செய்கின்றனர். 

மொத்தத்தில் குப்பை என்பது கிடையாது, முறையாகக் கையாண்டால் எதையும் பயன்பாட்டுக்கு கொண்டுவர முடியும்  என்பதை உறுதி செய்கின்றனர்.

என்னிடம் பழைய கணினிகளில் பயன்படுத்தப்பட்ட  பிளாப்பிகள் தற்போது உபயோகமில்லாமல் கிடக்கின்றன.  இதற்காக ஈ-பரிசராவைத் தேடிக்கொண்டு போகமுடியுமா ? அல்லது அவர்களை வரச்சொல்வதும் நியாயமாகுமா?  என்ன செய்வது என்று பல நாட்களாக யோசித்தேன்.

யூ டியூபிலும் உபயோகமான  தகவல் ஒன்றும் கிடைக்கவில்லை. 

திடீரென்று ஒரு யோசனை ..ஏன்  இதை உணவு மேஜையில் கோஸ்டர்ஸ் (Coasters)  ஆக பயன்படுத்தக் கூடாது?

இப்போது பிளாப்பிகள் மறு அவதாரம் எடுத்திருப்பதை தான் கீழே உள்ள படத்தில் காண்கிறீர்கள்'


நான் செய்ததெல்லாம் வீட்டில் இருந்தபடியே இணையம் வழியாக ஒரு  டேப் ரோல்  ஆர்டர் செய்தேன். மற்றும்  ஒரு  ஸ்டிக்கர் டிசைன் செய்து அதை  வேறொரு நிறுவனம் மூலம் பிரிண்ட்  செய்தேன்.  சென்ற வாரம் வந்து சேர்ந்தது. இரண்டும் வாட்டர்  ஃப்ரூப். முப்பது  உருப்படிகளுக்கு  ஆகும் செலவு ரூ. நானூற்று ஐம்பது மட்டுமே.

 இன்று தீபாவளி ரிலீஸ்!!  இனி பலருக்கும் இதை அன்பளிப்பாக கொடுத்து ஒரு புது யுக்தியை பரவலாக்கலாம்.

கொசுறு : ஈ-பரிசராவை  தொடங்கி, நடத்தி வருவது என் னுடன் படித்த  கல்லூரித்  தோழர்  திரு   Dr. பார்த்தசாரதி. அப்துல்கலாம் உட்பட பல ஜனாதிபதிகளிடம்  அவருடைய சிறப்பான முயற்சிக்கு விருதுகள் பல வாங்கியவர்.  அவருடைய சாதனைகளுக்கு  முன் என்னுடைய இந்த  யோசனை தங்கத்தின் முன் பித்தளை இளித்தது போலத்தான். ஆனாலும் ஒரு சிலருக்கு பயன்படலாம் என்ற எண்ணத்தில் வலையேற்றுகிறேன்.

Wednesday, July 22, 2020

சுற்றி நில்லாதே போ பகையே ......


   தரக்கட்டுப்பாடு என்பது ஆதிகாலம் முதலே நாமறிந்ததுதான். 

 ஏதேனும் காரணத்தால் வீட்டில் செய்யும் பண்டம் சரியாக வில்லை என்றால் முதல் காரணம் பெரும்பாலும் அதற்கான இடுபொருளை குறை சொல்வதாகத்தான் இருக்கும். “இந்த தடவை அரிசி புது அரிசி போல இருக்கு அது தான் சாதம் குழஞ்சு போச்சு “ என்பதாகவோ “எந்த கடையில காப்பிப் பொடி வாங்கின, காப்பி கசப்பா இருக்கே” என்றோ பலரீதியில் இருக்கும். “முதல்ல ஒரு சாம்பிள் வாங்கிப் பார்த்து சரியா இருந்தா மொத்தமா மாசத்துக்கு வேண்டியதா வாங்கிக்கலாம்” என்பது அதற்கு தீர்வாகவும் இருக்கும். இந்த சாம்பிள் அல்லது மாதிரி என்பது பூரணத்தின் தன்மையை சொல்லி விடுகிறது. ஒரு மூட்டை அரிசியின் தன்மையை அறிந்து கொள்ள கால்படி சாதம் வடிப்பதில் தெரிந்து விடும். 

அதே போல் பெரும் தரக்கட்டுப்பாடு உள்ள தொழிற்சாலைகளில் இந்த மாதிரியை தேர்ந்தெடுக்கும் முறைகளையும் (random sampling techniques ) வரையறுத்துள்ளார்கள். நூறு டன் சரக்கு, கப்பலில் வந்து இறங்கும் போது அதை முழுவதையும் பிரித்து அறிய முடியாது. ஆனால் ஒரு மாதிரியை வைத்து பரிசோதனை சாலையில் பல சோதனைகள் மூலம் அதன் தரத்தை நிர்ணயம் செய்து விடலாம். 

 இந்த யுக்தியை டிவிஜி நம்முன் வைக்கின்றார். ஒரு பகுதியில் உள்ள கடல் நீரின் தன்மையை அறிவதற்கு ஒரு குடுவை நீரை கொண்டு வந்து பரிசோதித்தால் போதும். [ சில பகுதிகளில் உப்புத்தன்மை கூடி வருவதாகவும், வேறு சில பகுதிகளில் மாசுபடுதல் அதிகமானதாகவும் நமக்குத் தெரிவது இதனால்தான்.

 சூரிய ஒளியின் அன்றைய நிலவரம் அறிய சன்னலைத் திறந்து வைத்தாலே போதும். வானம் மேக மூட்டத்துடன் உள்ளதா வெயில் அதிகமாகக் காய்கிறதா என்று தெரிந்து கொள்ளலாம். 

    அதைப் போன்றே அந்த எல்லையற்ற பரம்பொருளை அறிந்து கொள்ள பக்தன் ஒருவனுக்கு இறைவன் என்று பாவிக்கும் ஒரு சிறு பிம்பமே போதும். அதன் மூலம் தன் உணர்வுகளை எல்லாம் கொட்டி பொழிந்து பக்தியை பெருக்கிக் கொள்கிறான். அதிலேயே பரம இன்பம் அடைகிறான். இது எப்படி இருக்கும் என்றால் பரம ஏழை ஒருவனை எல்லா செல்வங்களும் உள்ள அறையில் விட்டு வேண்டியதை எடுத்துக் கொள் என்று விட்டு விட்டால் எப்படி திக்குமுக்காடிப் போவானோ அப்படியான ஒரு நிலையை பக்தன் அடைகிறான் என்று உவமிக்கிறார் டிவிஜி. (DVG)

 ಅಂಬುಧಿಯ ಮಡಕೆಯಲಿ, ಹೊಂಬಿಸಿಲ ಕಿಟಿಕಿಯಲಿ| 
ತುಂಬಿಕೊಳ್ಳುವ ಬಡವನೈಶ್ವರ್ಯದಂತೆ|| 
ಬಿಂಬದೊಳಗಮಿತ ಸತ್ತ್ವವ ಪಿಡಿದಿಡುವ ಭಕ್ತಿ| 
ಯಿಂಬು ಕಿಂಚಿನ್ಮತಿಗೆ - ಮಂಕುತಿಮ್ಮ|| ( 491) 
பெருங்கடலும் குடுவையுள், பெருஞ்சுடரும் பலகணியில் 
பெருஞ்சீரை அள்ளத் துடிக்கும் ஏழைபோல் 
பெரும்பொருளை பக்தியும் பிடித்தது பிம்பத்தில் 
சிறுமதிக்கு (இ)து (இ)ன்பமே -மக்குத் திம்மா (# 491) 

[பெருஞ்சுடர்=சூரியன் ; பலகணி =சன்னல்; சீர்= செல்வம்

 கற்றது கைம்மண் அளவு கல்லாதது உலகளவு. ஆகையால் என்றுமே மனிதரின் அறிவு நிலை பேரறிவாளனாகிய இறைவன் முன் ‘சிறுமதியே ஆகும். 

 இலட்சோப லட்ச மக்களின் பக்தி எப்படி கந்தனின் வேலில் அடங்கியது என்பதற்கு இந்தப் பாடல் நல்ல உதாரணம். இயற்கையின் கட்டமைப்பில் -கடலுள் -ஒரு சிறு விரிசல் வந்ததால் பெரும் சுனாமி வந்தது.

 பக்தியின் கட்டமைப்பில் விரிசல் வந்தால் அதன் பரிணாமும் சுனாமி போன்றே இருக்கும் என்பதை இப்பாடலின் மூலம் தெளியலாம். 

 சுற்றி நில்லாதே போ, பகையே துள்ளி வருகுது வேல் -பாரதியார்.


Tuesday, April 14, 2020

சீனர்தம் சீதனம் -தீருமோ துயரம்?

அனைத்து வாசகர்களுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்து

காலையிலிருந்து ஒரு நச நசப்பு. "சீனர்தம் சீதனம்" என்ற வார்த்தை மீண்டும் மீண்டும் மனதை அரித்துக் கொண்டே இருந்தது. அதன் காரணமாகவோ என்னவோ புத்தாண்டு வாழ்த்து சொல்லலாம் என்று முயலுகையில் இந்த சீனத்து சீதனத்திலிருந்து விடுதலை கிடைக்க பிரார்த்திப்பதே இன்றைய கட்டத்தில் பொருத்தமாகும் என்று தோன்றியது.

அதைத் தொடர்ந்து எழுந்ததுதான் இந்தக் கவிதை.

பின்னர் இதை வாட்ஸ் அப், டிவிட்டர் யாவற்றிலும் பகிர்ந்து கொண்டாயிற்று. என்னுடைய வலைப்பூ வாசகர்களுக்காக  இங்கும் வலையேற்றுகிறேன்.
சார்வரி ஆண்டில் அனைத்து குழப்பங்களும் மறைந்து உலகம் மீண்டும் சகஜ நிலைக்கு வருவதாக.

சார்வரியில் தீருமோ துயரம்

கலக்கத்தில் பிறக்குதே சார்வரி
கலக்கத்தை போக்கிடு ஈஸ்வரி

சீனர்தம் சீதனம் என சீண்டும் உலகம்-தம்
சீமைக்குள் வரவிடவும் காட்டுமே தயக்கம்

‘சீமானே எட்டி நில்லு’ ஆச்சுதே மந்திரம்
சீக்காளி ஆகாமல் தப்பிடவே தந்திரம்

மூடிய முகங்கள், மூடிய கோவில்கள்
மூடாத ஒரே இனம் காட்சி ஊடகங்கள்

ஊரடங்கி உயிரடங்கி கிடக்கையிலே
ஊடகங்களில் செவி கிழியக்  கூச்சலே

கொரோனா- கொரோனா- கொரோனா !!

அகந்தையிலே அழிவை தேடும் மனிதருக்கு
புகட்டுவேன் பாடம் என வந்தாயோ ? 

மமதையிலே மனம் போன போக்கில் சென்றவனை
மண்ணுக்குள் உன் இடம் தூரமில்லை என்றாயோ ?

மனித நேயம் மலரவும் இது தருணம் 
மக்களின் பசி யாம் அறிந்திட நீ ஒரு காரணம்

உழவனுக்கு சந்தை இல்லை
உழைப்பவனுக்கு வேலை இல்லை
தினக்கூலி இல்லாமல்
தின்பதற்கும் ஏதுமில்லை

கையில் காசிருந்தும் கடைகளில்லை- பாவம்
வாங்கித் தின்ன உணவகம் திறப்பதில்லை

ஏழையின் பாடு பெரும் பாடு 
போக்கிடு நீயும்  -சார்வரியே ! 

போதும் போதும் விகாரி தந்த பாடமே
போதாது எம் சேமிப்பு, வீட்டில் முடங்கிடவே

தீர்வொன்றை தந்திடு, சுலபமாய் குணமாக்கிட
மருந்தொன்றை அளித்திடு, மனக்கிலேசம் போக்கிட 
மாரியை பொழிந்திடு பாரெங்கும் செழித்திட 
வாழிய வையகம் வாழிய வாழியவே

Wednesday, March 25, 2020

இடர் அடி காக்க : Social distancing


    ஊரடங்கு உத்தரவு  இருபத்தியொரு    நாட்களுக்கு வந்தாச்சு. கண்ணிற்குப் புலப்படாத கொரானா வைரஸ்  வல்லரசுகளை மண்டியிட வைத்துள்ளது.  

       யாவரிடமும் எட்டி நின்று  பழகும்படி அரசாங்கம் வேண்டுகோள் விடுக்கிறது.  எப்படி நடந்து கொள்ள வேண்டும் அல்லது கூடாது என்பது பற்றி நூற்றுக்கணக்கான தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்படுகின்றன.

 பல நாட்டு அதிபர்களும் ‘இந்திய’ முறை  வணக்கத்தை வணக்கத்துடன் ஏற்றுக் கொள்வதே சிறந்தது என்று பரிந்துரைக்கிறார்கள்.  

    இதற்கு இன்றைய நவீனப் பெயர் பொது விலகல் அல்லது  சமூக விலகல் ( Social distancing).  “எட்டி-நில்”  என்றும் வைத்துக் கொள்ளலாம்.

    ஆனால் எப்படிப் பார்த்தாலும் இந்த சொற்றொடர்கள் ஆங்கிலத்தில் உள்ள அந்த உணர்வை சரியாகப் படம் பிடிக்கவில்லை என்றே தோன்றுகிறது.

 சமூக விலகல் : சமூகத்திலிருந்து விலகி நிற்க என்பதாகப் பொருள் தொனிக்கிறது
எட்டி-நில் என்பதில் நீ வேண்டாதவன் என்ற பொருள் தொக்கி நிற்கிறது

அப்படியானால் சரியான உணர்வை பிரதிபலிக்க வேண்டுமானால் சாலையில் வண்டியோட்டும் போது பயன்படுத்தப்படும் Defensive driving என்கிற  சொற்றொடரின் கோணத்திலிருந்து பார்க்கலாம்.

தன்னைப் பாதுகாத்துக் கொள்வது முக்கிய நோக்கம் ஆதலால் அதையொட்டி ஒரு பெயரை யோசிக்கலாம்.

சில வருடங்களுக்கு முன் - சோப்பு விளம்பரமோ அல்லது பற்பசை விளம்பரமோ நினைவில்லை- விளம்பரத்தில் அவர்கள் அடிக்கடி  காட்டிய படம் ஒரு “பாதுகாப்பு வளையம்”.

கொரானோ போன்ற தொத்து வைரஸ்களிலிருந்து நம்மை காப்பாற்றிக் கொள்ள வேண்டுமானால் ஒரு தற்காப்பு வளையத்தை நம்மைச் சுற்றி நாமே வகுத்துக் கொள்ள வேண்டும். அதை  ஆறடி தூரம் என்று நிபுணர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.  

அதைவிடக் குறைவானால் அது தொத்து என்னும் இடர் தரும் தூரமாகும். எனவே  "இடர் அடி காக்க"  என்பதாக எச்சரிக்கைக் கொள்ளலாம். சுருக்கமாக இடரடி காப்போம்.

இதை சுய வேலி என்றோ அல்லது தனி அரண் என்றோ அழைக்கலாம்.  அப்படி குறிப்பிடும் போது வேறு எந்த வகையிலும் தவறாக புரிந்து கொள்ள முடியாது.

Maintain social distance =  இடரடி விலக்கு   ; சுய வேலிக்குள் இருங்கள்.

இப்போது கடைகளில் ஒருவரோடு ஒருவர் தொட்டுக் கொள்ளாமல் இருக்கும் பொருட்டு  முன்னெச்சரிக்கை  நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

ஆனாலும் நம் எச்சரிக்கையில் நாம் ஒரு சுயவேலி அமைத்துக் கொண்டால் அதற்குண்டான இடைவெளி விட்டு நடமாடினால் சிறந்த தற்காப்பு ஓட்டுனராகலாம்.



    எவ்வகை இடர் வரினும்  சம்பந்தர் பெருமான் அருளிய திரு நீற்றுப்பதிகம் அதைப் போக்கக் கூடியது. அது  எல்லா வகை நோய்களினின்றும் காப்பாற்ற வல்லது என்பது அடியார்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.  

  கூன்பாண்டியனின் தீராத வெப்பு நோய் சமணர்களால் தீர்க்க முடியாதிருந்தது. அப்போது  இப்பதிகத்தை ஓதி சிவபெருமானை துதி செய்து அவனுக்கு திருநீறு வழங்கினார். மன்னனது நோயும் நீங்கி சம்பந்தப் பெருமானின் பாதங்களைத் தொழுதார்.

   கொரோனாவின் இடர் களைய, நம்பிக்கையுள்ளவர்கள், இப்பதிகத்தை சொல்லி திருநீற்றையணிந்தால் தம்மைச் சுற்றி ஒரு பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்திக் கொண்டவராவார்கள்.

முதற்பாடல் மட்டும்
மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தரமாவது நீறு  துதிக்கப்படுவது நீறு
தந்திரமாவது நீறு சமயத்திலுள்ளது நீறு
செந்துவர் வாய் உமைபங்கன் திரு ஆலவாயான் திருநீறே

உலகம் ஒரு கடினமான கால கட்டத்தைக் கடந்து கொண்டிருக்கிறது. விரைவிலேயே  அந்த இறைவன் அருளால் யாவரும் நல்ல வண்ணம் மீள, வாழப் பிரார்த்திப்போம்.

திருச் சிற்றம்பலம்.