Monday, January 28, 2008

பாரதியாரின் பகல் கொள்ளை

“ஏற்பது இகழ்ச்சி” என்ற சொன்ன கையோடு “ஐயம்(பிச்சை) இட்டு உண்” என்றும் சொல்லி வைத்திருக்கிறார் ஔவைப்பாட்டி. ஏற்பவர் இருந்தால்தானே பிச்சை இடுபவர்கள் இருக்க முடியும். சோழவள நாடு சோறுடைத்து என்பதற்கு ஒப்பான வளம் நிறைந்த நாட்டில்'ஏற்பவர்'களாக துறவிகள் மட்டுமே இருந்திருக்க வேண்டும். இந்நாட்டில் மட்டும் தான் இல்லறத்தானை உய்விக்க துறவிகளுக்கு 'பிக்‌ஷா' தருமம் என்று ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால் ஏ.பி.என் படத்தை போல கல்வியா, செல்வமா, வீரமா என்கிற குழப்பம் எப்போதும் இருக்கிறது. சரஸ்வதி கடாட்சம் உள்ள இடத்தில் லட்சுமி இருப்பதில்லை என்று சொல்வதுண்டு. பிறர் விஷயத்தில் எப்படியோ பாரதியாரின் விஷயத்தில் இது நூற்றுக்கு நூறு உண்மை. அவர் வரலாற்றிலிருந்து ஒரு நிகழ்ச்சி

வெல்லச்சு செட்டியார் என்று பாரதியாரால் அன்பாக அழைக்கப்பட்ட கிருஷ்ணசாமி செட்டியார் ரொம்பக் குள்ளை.நல்ல கெட்டியான இரட்டை நாடி உடம்பு. உடலிலோ மனதிலோ சோர்வை ஒருநாளும் பார்த்ததில்லை.

நெசவு தொழிலும் துணி வியாபாரமும் செய்து வந்த அவர் அடிக்கடி பாரதியாரின் வீட்டுக்கு வந்து
விடுவார். எத்தனை நாழிகை வேண்டுமானாலும் மௌனமாய் உட்கார்ந்திருப்பார்.முதலில் பாரதியாரை 'ஸ்வாமி' என்று கும்பிடுவதோடு சரி.

பாரதியாருக்கு அவரிடம் பிரியம் அதிகம். அவரிடம் தம் பாடல்களைப் பாடிக் காண்பிப்பதில் ரொம்பத்திருப்தி. செட்டியாரின் முகத்தைப் பார்த்தால் அவர் ஒரு
இலக்கிய ரசிகரென்றே தோன்றாது. அவருக்கு வயது அப்போது சுமார் இருபது இருக்கலாம்.

“இவரிடத்தில் வீணாக பாரதியார் வாசித்துக் காண்பிக்கிறாரே !” என்று எங்களில் சிலர் எண்ணியதுண்டு.ஆனால் சிரிக்க வேண்டிய பகுதியில், எங்களுக்கு முன்னமே ‘களுக்'கென்று சிரித்துவிடுவார்.சோகரஸக் கட்டம் வந்தால் செட்டியாரின் முகத்தைக் கண் கொண்டு பார்க்க முடியாது. முகத்திலே உருக்கம் தாண்டவமாடும்.

பார்வையிலே நாம் எவ்வளவு ஏமாந்து போகிறோம் என்பதற்கு, கிருஷ்ணசாமி செட்டியாரை ஓர் உதாரணமாக பாரதியார் அடிக்கடி சொல்லுவார்.“எந்த புற்றில்
எந்த பாம்பு இருக்குமோ, யார் கண்டார்” என்று முடித்துவிடுவார்.

இம்மாதிரி சமயங்களில், பாரதியார் சில கதைகள் சொல்லுவார். செட்டியாரை குத்துகிறது போலவும் தூக்கி பேசுகின்ற மாதிரியும் ஒரு கதை சொல்லுவார்.அது பழைய கதைதான். நண்பர் செட்டியாருக்கு அதை பாரதியார் பிரயோகம் செய்ததால் அதை சொல்ல வேண்டியிருக்கிறது.

இரண்டு பேர் காட்டுப் பாதையாகப் போய்க்கொண்டிருந்தார்களாம். ஒருவர் குடியானவர். மற்றவர் செட்டியார்.காட்டுப் பாதையில் திருடர் பயம் ஜாஸ்தி.
இருட்டுக்கு முன் காட்டைக் கடந்துவிடலாம் என்று இருவரும் பயணம் புறப்பட்டார்கள். ஏதோ அவக்கேட்டால், இருட்டிப் போனபிறகுதான் அவர்கள் காட்டுக்குள் நுழைந்தார்கள்.

இந்தக் கட்டத்தில், “ஏன் செட்டியாரே! கதை சரியாகச் சொல்ல வேண்டுமானால் இந்த சமயம் திருடர்கள் வரலாமா,அல்லது கொஞ்ச தூரம் வழி நடந்து,
சிறிது நேரம் ஆன பிறகு வரலாமா?” என்று பாரதியார் கேட்பார். “எந்த சமயத்தில் வந்தாலென்ன? நான் பாரதியாரோடு வழிப் பிரயாணம் செய்கிற செட்டி. எனக்கு என்ன பயம், என்ன அவமானம்?”என்பார் செட்டியார். “அச்சா! அப்படிச் சொல்லப்பா தங்கமே!” என்று பாரதியார் விழுந்து விழுந்து சிரிப்பார்.நாங்கள் மட்டும் சிரிக்காமல் இருப்போமா ?

திருடர்கள் குடியானவனை நையப் புடைத்து,அவனிடமிருந்ததைப் பிடுங்கிக் கொண்டனர்.செட்டியார் (கதைச் செட்டியார்) பார்த்தார்.பேச்சு மூச்சு இல்லாது
படுத்துக் கொண்டார். திருடர்கள் செட்டியாரைக் கோலால் தட்டிப் பார்த்து,'கட்டை கிடக்கிறது' என்றார்கள்.“உங்கள் வீட்டுக் கட்டை பத்து ரூபாயை மடியில் கட்டிக்கொண்டிருக்குமோ? என்றார் செட்டியார்.

“என்ன செட்டியாரே, சரிதானே கதை?” என்றார் பாரதியார். “கதை எப்படி இருந்தாலும் அது இப்பொழுதுதான் முடிந்தது” என்று மடியிலிருந்து பத்து ரூபாய் நோட்டை பாரதியாரிடம் கொடுத்தார் செட்டியார். “கதையில் திருடர்கள், நான் பகல் கொள்ளைக்காரன்” என்று சொல்லி,பாரதியார் கட கடவென்று சிரிப்பார். பாரதியார் சிரித்துக் கொண்டிருப்பதைப் பார்ப்பதில் செட்டியாருக்கு பிரம்மானந்தம். கண் கொட்டமாட்டார். அத்தகைய பக்தியை செட்டியாரிடம் தவிர வேறு யாரிடமும் அவ்வளவாக நான் பார்த்ததில்லை.

என்ன ஆச்சரியம்! செட்டியாரைப் பார்த்தால் ஒன்றுமே விளங்காத அப்பாவியைப் போல இருப்பார்.ஆனால் அவர் செய்கின்ற காரியமோ, அபாரமாயிருக்கும்.
பாரதியார் சொன்ன கதையை எவ்வளவு நேர்த்தியான நகைச்சுவையுடன் முடித்தார்!விளையாட்டுக்காக பாரதியாரிடம் அந்த ரூபாய்களைக் கொடுக்கவில்லை.

பாரதியாரின் நிலைமை அறிந்தே கொடுத்தார்.


(மகா கவி பாரதியார், ஆசிரியர் :வ.ரா, பழனியப்பா பிரதர்ஸ், எட்டாம் பதிப்பு 1974- முதல் பதிப்பு 1944)

இரத்தலில் ஒரு நயம் இருக்கவேண்டும். அது போலவே ஈகையிலும் ஒரு இங்கிதம் வேண்டும். மேற்க்கண்ட நிகழ்சியைப் பற்றிப் (1910-1911) படித்த போது
மேலோர் எனப்படுவர் இரண்டு சந்தர்பங்களிலும் எப்படி நடந்து கொள்வர் என்பதை முழுவதுமாக புரிந்து கொள்ள முடிந்தது.

No comments: