Wednesday, March 9, 2016

மின் அழுத்தம் கூட குறையும் மன அழுத்தம்

கற்கை நன்றே-வில் பதிவு எழுதி பல நாட்களாகி விட்டனவே ஏதேனும் உபயோகமாக எழுதுவோமே என்று நினைத்தபோது மனதிற்கு வந்தது கர்நாடக அரசின் மூலம் மான்ய விலையில் விற்கப்படும்  எல்.இ.டி விளக்குகள் தான். கர்நாடகத்தில் வசிக்கும் பதிவர்கள் உடனடியாக இதன் மூலம் பயன்பெறலாமே என்ற எண்ணத்தில் எழுந்ததுதான் இந்த பதிவு.

வெயில் காலம் வந்தாலே மின் அழுத்தக் குறைவால் குறிப்பிட்ட நேரங்களில் பவர் கட் என்பது பெங்களூரில் சர்வ சாதாரணம். அது அரைமணியாக இருக்கலாம் அல்லது ஒரு மணி நேரம் கூட ஆகலாம். ஆனால் உத்திர பிரதேசத்தை போல இன்வேர்டர் சார்ஜ் செய்யக் கூட நேரம் இல்லாமல் 12, 15 மணி நேரம் போகாது. அது வரையில் அதிருஷ்டசாலிகள்.


மின் அழுத்தம் ஏன் குறைகிறது? உற்பத்தியை விட நுகர்தல் கூடும் பொழுது அதிக கரெண்ட் தேவைப் படுகிறது. மின்சக்தி ஒரு குறிப்பிட்ட அளவே உற்பத்தி ஆகும் பொழுது 220 வோல்ட் அழுத்தத்தில் குறிப்பிட்ட கரெண்ட் மட்டுமே நுகரப்பட வேண்டும். நாம் எத்தனைக்கு எத்தனை சாதனங்களை பயன்படுத்துகிறோமோ அவை ஒவ்வொன்றும் அதற்கென்று குறிப்பிட்ட கரெண்டை உபயோகிக்கத் தொடங்கும். இதனால் கரெண்ட் தேவையை பூர்த்தி செய்ய டிரான்ஸ்போர்மர் வோல்டேஜை குறைத்துக் கொள்கிறது. அதன் காரணமாக மின் அழுத்தக் குறைவு ஏற்படுகிறது. அப்படி குறைந்த அழுத்தத்தில் வேலை செய்தால் நம் உபகரணங்கள் முழுவதுமாக பழுதடைய வாய்ப்புகள் இருப்பதால் மின் வாரியமே மின் வினியோகத்தை கட்டுப்படுத்துகிறது. பவர்கட்டை தவிர்க்க வேண்டுமானால் ஒன்று நாம் சுயக் கட்டுபாட்டுடன் நம் தேவைகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும் அல்லது உபகரணங்களை மேம்படுத்தி குறைந்த சக்தியில் (அதாவது குறைந்த கரெண்ட்-ல்) இயங்குபவனாக வடிவமைக்க வேண்டும்.

இரண்டாவதைத்தான் இப்போது கர்நாடக அரசு எல்.இ.டி பல்பு வினியோகத்தின் மூலம் செய்ய முற்பட்டிருக்கிறது.

சுமார் ரூ.350 விலையாகும் பல்பு ரூ.100 க்கு விற்கப்படுகிறது. கள்ள சந்தையை தவிர்க்க நமது நுகர்வோர் எண்ணை பதிந்து கொண்டு ஒரு குடியிருப்புக்கு 10 பல்புகள் மட்டுமே கொடுக்கப் படுகின்றன. ஆனால் இதனால் ஏற்படும் மின்சக்தி சேமிப்பு மிகக் கணிசமானது.  
உதாரணத்திற்கு 60 வாட் உள்ள சாதாரண பல்பின் வெளிச்சத்தை 9 வாட் திறனுள்ள எல்.இ.டி விளக்கு தரும். அதாவது ஆறு மடங்குக்கும் குறைவான சக்தியே தேவைப்படுகிறது. ஸி.எஃப்.எல். குழல் விளக்கை விட 1.6 மடங்கு திறன் வாய்ந்தது.  
ஆனால் இதன் விலையோ சாதாரண விளக்கை விட 30 மடங்கும் ஸி.எப்.எல் விளக்கை விட 3 மடங்கும் அதிகம் என்று சொல்பவர்களுக்கு இதன்  ஆதரவாளர்கள் கூறும் பதில் இதன் பயனளிக்கும் நேரக்கணக்கே. ஒரு நாளைக்கு நான்கிலிருந்து ஐந்து மணி நேரம் உபயோகிப்போம் என்று வைத்துக் கொண்டால் பதினைந்து வருடங்களுக்கும் மேலாக உழைக்கும் என்று சொல்கின்றனர். இதை மணிக்கணக்கில் சொல்வதானால் 25000 மணி துளிகள் எல்.இ.டி க்கும் 5000 மணித்துளிகள் ஸி.எப்.எல் க்கும்   1000 மணித்துளிகள் சாதாரண விளக்குக்கும் சொல்லப்படும் வாழ்வு காலமாகும்.
ஆகையால் எல்.இ.டி விளக்குக்கு கொடுக்கும் அதிக விலை உண்மையிலேயே ஒரு நல்ல முதலீடு போலவே அன்றி ஒரு தொடர் செலவு அல்ல. இதனால் தனிப்பட்ட சேமிப்பு மற்றும் அன்றி நாட்டிற்கும் பெருமளவு மின்சக்தி மிச்சப்படுகிறது. ஒரு  பல்பு ஒரு வருடத்தில் ரூ.118 சேமிக்கும் என கர்நாடக அரசின் பிரசுரம் அறிவிக்கிறது ஆகையால்தான்  இதை ரூ.நூறுக்கு விற்பனை செய்ய முன் வந்துள்ளார்கள்.
  மேலும் அதிக விவரங்களுக்கு பல்பின் அட்டைப் பெட்டியில் காணப்படும் தகவல்களையே படம் பிடித்து போட்டு விடுகிறேன்.
ஒரு சந்தோஷமான சமாசாரம். இது MADE IN INDIA ( சீனா அல்ல ) 






இது தமிழ் நாட்டிலும் செயல்படுத்தப்பட்டுள்ளதா என்பதை விவரம் அறிந்தவர்கள் தெரிவிக்கலாம். சற்றே பொறும்  பிள்ளாய், யார் கண்டார்கள், இலவசமாகவே கூட கிடைக்கலாம்.

Thursday, January 7, 2016

கதரில் சூரிய ஒளி

 நேற்று மைசூரில் நடைபெற்ற அகில இந்திய விஞ்ஞான கண்காட்சிக்கு சென்றிருந்தேன். பிரதமர் மோடி அதை திறந்து வைக்கும் போதுகிராம மக்களும் சிறு தொழில்களும் முன்னேறும் வகையில் புதிய கண்டுபிடிப்புகள் அவசியம் என்பதை விஞ்ஞானிகளுக்கு வேண்டுகோள்  விடுத்ததை தொலைக்காட்சியில் இரண்டு நாட்களுக்கு முன் கண்டிருந்தேன். வழக்கமான அரசியல்வாதிகளின் பேச்சு என்ற எண்ணமே தோன்றியது.
ஆனால் அங்கே சென்ற போது உண்மையில் அப்படி ஒரு கண்டுபிடிப்புக்கான முயற்சியை கண்டு மனம் மிக்க மகிழ்ச்சி அடைந்தது.

கதர் கிராம தொழில் வாரியத்தினர் சூரிய ஒளியில் இயங்கக்கூடிய ராட்டினம் ஒன்றை தயாரித்து உள்ளனர். இது ஒரு நாளில் உற்பத்தியை இரட்டிப்பாக்கும் என்றும் அதனால் மாத வருமானம் ரூ.6000 வரை உயரும் என்று அங்கிருந்தவர் கூறினர். முழுக்க முழுக்க சூரிய சக்தியில் இயங்குவதால் இதை எந்த நேரத்திலும் எந்த ஊரிலும் சிறுதொழிலாக கைகொள்ளலாம். இதற்கான முதலீடு ரூ 35000லிருந்து ரூ.  40000  வரையே. தற்போது எட்டு spindles (இதற்கான தமிழ் வார்த்தை தெரியவில்லை) உள்ளதை இருபத்திநான்காக மாற்றினால் இன்னமும் பயனுள்ளதாக இருக்கும் என்ற கருத்தை இணையத்தில் கண்டேன். ஆனால் அரசாங்க ஆவணங்களில் ரூ.150000 வரை சிறு தொழிலாகக்( குடிசைத் தொழில்? ) கருதப்படுவதால் இதன் முக்கியத்துவவம் பிடிபடவில்லை. செய்யப்படும் முதலீடு ஒரு வருடத்துக்குள்ளேயே திரும்பி விடுவதாலும் சூரிய தகடுகள் இருபத்தைந்து ஆண்டுகள் பயனளிக்க வல்லன என்பதாலும் இது எவ்வளவு தூரம் உண்மை என்று புரியவில்லை.

அந்த கண்காட்சியிலே கடல் பாசியிலிருந்து எரி எண்ணெய் தயாரிக்கும் ஆராயிச்சி பற்றிய முயற்சிகள் கோடிக் கணக்கில் முதலீடு செய்வது பற்றியும் விரிவான விளக்கங்கள் கண்டேன்.  அதன் வெற்றி செல்வம் உடையவர்களிடம் மேலும் செல்வம் சேர்க்கப் பயன்படுமே அன்றி ஏழைக் குடும்பங்களில் ஒளியேற்றுமா என்பது சந்தேகமே.




அவ்வளவு கோடிகளில் எவ்வளவு ஏழை குடும்பங்களுக்கு சூரிய ராட்டினங்களை தயாரித்து கொடுக்க முடியும் என்று மனம் கணக்கு போட்டது.
செல்வத்தை பகிர்ந்து கொள்ள மானுட மனம் சுலபத்தில் ஒப்புவதில்லை. அதனால் உழைப்பை பகிர்வதன் மூலம் பலருக்கும் வாய்ப்பளித்து தொடர் வருவாய்க்கு   வழி செய்கிறது. இதனால்தான் காந்திஜி அந்த காலத்திலிருந்து இயந்திர மயமாக்குதலை ஆதரிக்கவில்லை.

அரசியலைத் தாண்டி நமது விஞ்ஞானிகள் மக்கள் சேவையில் உள்ளனர் என்பதைக் கண்டு மனம் ஆறுதல் அடைகிறது.