Showing posts with label விளம்பரப்படம்.Fevicol. Show all posts
Showing posts with label விளம்பரப்படம்.Fevicol. Show all posts

Tuesday, August 27, 2019

ஜோடி சோபா Fevicol கதையும் என் கதையும்.

Great minds think alike !

  ஒரு ஜோடி நாற்காலியின் கதை என்று நான் எழுதிய கதை ஒன்றை  வருத்தப் படாத வாலிபர் சங்கம் இரண்டாம் ஆண்டு வலைப்பூ போட்டிக்கு அனுப்பி வைத்தேன்.  போட்டியின் முக்கியமான கண்டிப்பு ‘ஜோடி’ என்ற வார்த்தை அடிக்கடி பயன்படுத்தப் படவேண்டும். அது எந்த ஜோடியாக வேண்டுமானாலும் இருக்கலாம்...காதல்ஜோடி, செருப்பு ஜோடி இத்யாதி.

     பரிசு எதுவும் கிடைக்கவில்லை. போகட்டும், அதை பரிசுக்காக நான் எழுதவும் இல்லை. வெறும் என் கற்பனைத் திறனுக்கு ஒரு பயிற்சியாக எடுத்துக் கொண்டேன்.

இது நடந்தது 2008 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம்.  பதினொரு ஆண்டுகளுக்குப்பின்......

நேற்று ஒரு தொலைக்காட்சி சானல் ஒன்றில்  Pidilite-Fevicol  நிறுவனத்தின் புதிய  விளம்பர படம் ஒன்றைப் பார்த்த போது ஆச்சரியம் மேலிட்டது.

ஏனெனில் அவர்கள் எடுத்துக் கொண்ட கருவும் ஜோடி சோபா-தான். பல தலைமுறைகளுக்கு உழைக்கும் வகையில் ’பிடிலைட்’  சோபாவை உறுதியாக வைத்திருக்கிறது என்ற கண்ணோட்டத்தில் சொல்லப்பட்டுள்ளது.

அவர்கள் படத்தில் காட்டுவது போல் என் கதையிலும் குழந்தைகள் சோபாவில் ஏறி விளையாடுவதைச் சொல்லியிருந்தேன்.

ஏன் அவர்கள் ஜோடி சோபாவை தேர்ந்தெடுக்க வேண்டும்?  அதை அவர்கள் திருமண சீதனமாகக் காட்டியிருக்கிறார்கள்.

என் கதையிலும் அது  திருமண வரவேற்புகளில் அதிகம் பயன்பட்டதாகச் சொல்லியிருந்தேன்.

என் மனதில் அந்த விளம்பரத்தைப் பார்த்த போது சந்தோஷம் கலந்த ஆர்வம். அருமையான படபிடிப்பு, பாடல் இசையமைப்பு. யூட்யூபில் நான்கு நாட்களிலேயே 66000க்கும் அதிகமான பார்வையாளர்கள் 113 க்கும் அதிகமான பாராட்டுகள்.  நீங்களும் கண்டு மகிழுங்கள்.


    இதிலிருந்து ஒன்று புரிகிறது. நமது எண்ண அலைகள் என்றும் மடிவதில்லை. நாம் வெளிப்படுத்தும் ஒவ்வொரு எண்ணமும் அதற்கேற்ற ஒரு கருவியை கண்டால் வெளிப்படுகிறது. எனக்குத் தோன்றிய கதைக் கருவும் யாரால் எப்போது எங்கே வெளிப்பட்டதோ தெரியாது.

    ஆனால் நான் என் கற்பனையில் எழுதியதாக நினைத்தேன்.  அதே போல் இந்த படம் எடுத்தவர்களும் நினைத்துக் கொண்டிருப்பார்கள்.

இதைத் தான் சுவாமி விவேகானந்தர் “பெரும் தவசிகள் யாரும் காணாத குகைகளில் அமர்ந்து கொண்டு சமுதாயத்திற்குத் தேவையான ஆழமான சிந்தனைகளை தமக்கேற்ற கருவிகள் மூலம் வெளிப்படுத்துவார்கள்” என்று சொல்கிறாரோ என்னமோ ! இதற்கிடையில் மனிதர்கள் வெளிப்படுத்தும் நல்ல தீய எண்ணங்களும் அவைகளுக்கேற்ற திறனுக்கேற்ப பலன்களை விளைவித்துக் கொண்டிருக்கும்.

எண்ணங்களின் வலிமை அபாரம். நல்லனவற்றையே சிந்திப்போம், வெளிப்படுத்துவோம்.