Tuesday, March 10, 2009

...புதுப் புது உலகமும் அவரவர் உள்ளங்களே

சுமார் இருபத்தியைந்து வருடங்களுக்கு முன் ஒரு அனுபவம்.
திருவள்ளுவர் பேருந்தில் திருச்சி செல்வதற்காக இரவு ஒன்பதரை மணியளவில் வண்டியேறி அமர்ந்தேன்.
சென்னையின் வியர்வை கசகசப்பு எப்போதடா வண்டி கிளம்பும் என்று நினைக்கத் தோன்றியது. ஒருவழியாக நடத்துனர் வண்டியிலேறினார்.சரி பேருந்து கிளம்பப் போகிறது என்று நினைத்தால் அவர் மையப் பகுதியில் நின்று பேச ஆரம்பித்தார்.

மாலை வணக்கங்கள்.பயணிகள் கவனத்திற்கு.

தாம்பரம்,செங்கல்பட்டு,மதுராந்தகம்,திண்டிவனம், விழுப்புரம் உளுந்தூர்பேட்டை, சமயபுரம், மார்க்கமாக திருச்சி செல்லும் பேருந்து சில நிமிடங்களில் புறப்படவிருக்கிறது. ஓட்டுனர் பெயர் xxxx, பத்திரமாக பேருந்தை ஓட்டிச்செல்வதில் அனுபவம் மிக்கவர். நடத்துனராகிய என் பெயர் XXXX. பயண தூரம் 310 கிமீ.பயண நேரம் எட்டு மணி நேரம். திருச்சி சேரும் நேரம் காலை 6மணி .


பயணச்சீட்டு இல்லாத பயணம் சட்டப்படி குற்றம். அபராதம் ரூபாய் 500-ம் புறப்பட்ட இடத்திலிருந்து சேரும் இடத்திற்கான கட்டணமும் வசூலிக்கப்படும்.


பயணிகள் வசதிக்காக பேருந்தில் சுகாதாரமான குடிநீர் வைக்கப்பட்டுள்ளது.

பயணிகள் தம் உடமைகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டுகிறோம். தங்கள் கவனக்குறைவால் ஏற்படும் இழப்புகளுக்கு நிர்வாகமோ ஊழியர்களோ பொறுப்பாக மாட்டார்கள்.

தங்கள் பயணம் இனிதாகட்டும். நன்றி


கணீரென்ற குரலில் ஆரம்பித்து கடைசிவரையில் ஒரு நிரடலும் இல்லாமல் தேவைக்கேற்ற ஏற்ற இறக்கங்களுடன் அந்த நடத்துனர் அறிவிப்பை முடித்தவுடன் கடமையில் அவர் காட்டிய உற்சாகத்தை கைத்தட்டி சிலர் பாராட்டினர்.

விமானங்களில் வரும் அறிவிப்பை போல-சொல்லப்போனால் -இன்னும் சிறப்பாகவே செய்த அந்த நடத்துனருக்கு கண்டிப்பாக ஏதும் அதிக ஊதியம் கொடுத்திருக்க மாட்டார்கள்.அப்படி ஒரு அறிவிப்பை செய்ய வேண்டும் என்ற அவசியமும் அவருக்கு இருக்கவில்லை.

அவர் அறிவிப்பை செய்த விதம் பலவருடங்களாகவே அவர் இதை ஒரு கடமையாகவே செய்து வருகிறார் என்பது தெரிந்தது. அப்பேற்பட்ட ஊழியர்கள் கிடைப்பது அரிது,கிடைத்தாலும் அவர்களுக்குரிய திறமையை சரியாக பயன்படுத்திக்கொள்ளும் நிர்வாகங்களும் அரிது.

நாம் வேலையில் காட்டும் உற்சாகம்தான் பலரையும் கவர்கிறது.நாம் முழுமனதுடன் உற்சாகத்துடன் செய்யும் எந்த வேலையும் மிகச் சிறப்பாக அமைகிறது. அதை குறிப்பிடுவது தான் இந்த இடுகையின் சினா-சோனா
"OUR BEST WORK IS THAT WHICH WE DO EASILY AND JOYFULLY"

நமக்க அளிக்கப்பட்ட வேலை மிகவும் சாதாரணமானதாக இருப்பினும் அதை மேற்கொள்வதில் பல வழிகள் இருக்கும். ஒருவரது பர்ஸனாலிடி எனப்படும் தனித்தன்மையை அவர் வேலையை அணுகும் விதத்தை வைத்தே அறிந்து விடலாம்.

சந்தோஷத்துடன் நாம் மேற்கொள்ளும் எந்த வேலையும் சிறப்பானதாகவே அமையும். அதற்கு, என் நினைவில் நிற்கும்- மறக்கமுடியாத - அந்த நடத்துனரே உதாரணம்.
................
போய்வரும் உயரமும்
புதுப்புது உலகமும்
அவரவர் உள்ளங்களே!
நெஞ்சினில் துணிவிருந்தால்
நிலவுக்கும் போய்வரலாம் !!

2 comments:

சொல்லரசன் said...

//சுமார் இருபத்தியைந்து வருடங்களுக்கு முன் ஒரு அனுபவம்.
பயணச்சீட்டு இல்லாத பயணம் சட்டப்படி குற்றம். அபராதம் ரூபாய் 500-ம் புறப்பட்ட இடத்திலிருந்து சேரும் இடத்திற்கான கட்டணமும் வசூலிக்கப்படும்.//

இருபத்தியைந்து ஆண்டுக்குமுன் 500 அபராதமா?

KABEER ANBAN said...

வாங்க சொல்லரசன்.
//இருபத்தியைந்து ஆண்டுக்குமுன் 500 அபராதமா? //

எல்லாம் காலத்தின் கொடுமைதான் ! நான் மறதியை பற்றி சொன்னேன் :))).

அந்த நடத்துனர் வேறு பல சுவையான தகவல்களும் சொன்னார்.மறதியினால் அதுவும் நினைவுக்கு வரமாட்டேங்குது :(

அப்போது, வலைப்பூ எல்லாம் வரும் அதில நாம எழுதப் போறோங்கறது எதுவும் தெரியாம போச்சே :)