Thursday, July 24, 2008

தண்ணீர்... தண்ணீர்


(படத்தை சொடுக்கி முழு செய்தியும் படிக்கலாம்)

சுமார் இருபது வருடங்களுக்கு முன் முதன் முதலாக செட்டிநாட்டில் கால் வைத்தேன். புதிதாக தொடங்க வேண்டிய ப்ராஜெக்ட் ஒன்றிற்காக ஊர் ஊராக நிலம் தேடி சுற்றி வந்தோம். அப்போது சவேரியார்புரத்தில் ஒரு மதியம், பள்ளத்தூர் செல்ல, பேருந்துக்காக காத்திருந்த வேளை. ஆள் நடமாட்டமே இல்லாத கிராமம்.

உடனிருந்த அன்பர்களில் ஒருவர் குடிப்பதற்கு அருகிலிருந்த வீட்டிற்கு சென்று தண்ணீர் கேட்டார். ஒரு வயதான பெண்மணி ஒரு சொம்பு நிறைய தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தார். கையில் வாங்கிய அன்பர் அதைப் பார்த்துவிட்டு இன்னொருவரிடம் கொடுத்தார். அவரும் பார்த்து விட்டு என்னிடம் கொடுத்தார். எனக்கு அதைப் பார்த்த உடனே பகீரென்றது. மண்வாசனை கூடிய கலங்கலான மஞ்சள் நிறத் தண்ணீர். ஒருவரை ஒருவர் பார்த்து முழிப்பதைக் கண்ட பெண்மணிக்கு புரிந்து விட்டது.

“அது ஒண்ணும் பண்ணாதுங்க. ஊரணித் தண்ணிதான். நாங்க எல்லாம் குடிக்கிறோமில்ல !” என்று தைரியம் கொடுத்தார். பசித்தவனுக்கு எட்டிக்காயும் தித்திக்குமாம். தவிப்பவன் தாகசாந்திக்கு ஊரணி நீரே அமிர்தம் என்று குடித்து வைத்தோம். ஆயினும் சென்னை திரும்பும் வரை சற்று கவலையாகவே இருந்தது. யாருக்கும் ஒரு தொந்தரவும் வரவில்லை. அதன் பிறகு எட்டு ஆண்டுகள் செட்டிநாடு வாசமும் ஆரோக்கியமாகவே இருந்தது.

எதற்கு சொல்லவந்தேன் என்றால் இப்போதெல்லாம் பாக்டீரியா, காலரா, ஜாண்டீஸ் என்றெல்லாம் அளவுக்கு அதிகமாக பயமுறுத்தி வீட்டுக்கு வீடு தண்ணீர் சுத்திகரிப்பு கருவிகளை பெரிய அளவில் விற்பனை செய்வது வேடிக்கையாகவும் வேதனையாகவும் இருக்கிறது.

அதி சுத்தமான நீரை குடித்து வளர்பவர்களுக்குள் ஒருவருக்கு இயல்பாக இருக்க வேண்டிய நோய் எதிர்ப்புத் திறனை வளரவிடாமல் தடுக்கின்ற அபாயம்தான் இதில் அதிகம்.

இதை என் அனுபவத்திலேயே உணர்ந்துள்ளேன். 1991-ல் ஆறு வாரகாலம் இஸ்ரேலுக்கு போக வேண்டியிருந்தது. பம்பாய்க்கு இரண்டு தினங்கள் முன்பே சென்று, சகோதரனுடன் தங்கி விசா, அன்னிய செலாவணி இத்யாதி எல்லாம் முடித்துக்கொண்டு பயணமானேன். அங்கே விருந்தினரகத்தில் வழங்கப்பட்ட நீரில் ஒரு வித மருந்து வாடை அதிகமாகவே இருந்தது. விசாரித்ததில் நீரை காய்ச்சி விட்டால் அந்த வாடை போய்விடும் என்றும் அது பொது வினியோகத்திற்கு முன் கலக்கப்படும் கிருமி நாசினியினால் வருவது என்றும் தெரிந்தது. மற்றபடி பிரச்சனை ஏதுமின்றி கழிந்தது.

திரும்பவும் மும்பையில் இறங்கி சகோதரன் வீட்டை அடைந்து உணவு உட்கொண்டு நீர் அருந்தினேன். அடுத்த அரை மணிக்குள் பேசக்கூட இயலாத அளவுக்கு தொண்டை கட்டி விட்டது !!

“ஓ! அங்க ட்ரீடெட் வாட்டர். அதனாலத்தான் இங்க வந்ததும் உனக்கு ஒத்துக்கல” என்றான் சகோதரன். பயணத்திற்கு முன்பு ஏற்புடையதாக இருந்த அதே நீர் ஆறு வாரங்களில் ஏற்பில்லாததாகி விடுகிறதென்றால் என் உடலில் ஏதோ ஒரு தடுப்பு சக்தி குறைந்து விட்டதாகத்தானே பொருள்.

நோய் கிருமிகளால் வரக்கூடிய அபாயத்தை காய்ச்சி ஆறிய நீரே தடுக்க முடியும். எளிதும் கூட. ஆனால் காலராவோ ஜாண்டீஸோ எப்போதுமே தலைமேல் தொங்கும் கத்தி (Damocle's sword) போல் கொல்வதற்கு காத்திருப்பதில்லை. சுத்திக்கரிக்கப் படாத நீரினால் எப்போதாகிலும் சிறு அசௌகரியங்கள் உண்டாகலாம். அதற்காக அளவுக்கு மீறி பயமுறுத்துவது வெறும் சந்தைப் படுத்தும் போக்கையே காட்டுகிறது.

எனது முந்தைய தலைமுறையை விட என் தலைமுறை, நோய் எதிர்ப்பு விஷயத்தில், சற்றே பலவீனமானதுதான். அதை விட அடுத்த தலைமுறை இன்னும் பலவீனமாவதைக் காண்கிறேன். இதன் முக்கிய காரணம்
இயற்கையோடு ஒன்றி வாழ்வது குறைந்து கொண்டே வருவதால் தானோ என்று தோன்றுகிறது.

சலனப் படத்தில் ஒரு Reverse Osmosis முறை சுத்திகரிப்பு கருவியில் சுத்திகரிக்கப் பட்ட நீரின் தன்மையை காணலாம்.

No comments: