Tuesday, April 15, 2008

வாழ்வு தரும் வாழ்த்து அட்டைகள்

இந்த பதிவுக்கு வித்திட்டது சகபதிவாளர் பத்ரியின் கிராமங்களை நோக்கிச் செல்லும் தொழில் முனைவோர். முதலில் சொல்ல வந்ததை சொல்லிவிடுகிறேன். பின்னர் பத்ரி அவர்களின் பதிவுக்கும் இதற்கும் உள்ள தொடர்பை பார்ப்போம்.
தில்லியில் தில்லி ஹாட் என்ற ஒரு இடம் உண்டு. அங்கே கைவினைப் பொருட்கள் கண்காட்சி அவ்வப்போது நடக்கும். பல மாநிலங்களிலிருந்து கைவினைஞர்களும் அவர்களைச் சேர்ந்த தொண்டு நிறுவனங்களும் அதில் பங்கு பெறும். அப்படி ஒரு தொண்டு விற்பனை செய்த வாழ்த்து அட்டைகள் தான் நீங்கள் இங்கே காண்பது. கண்ணை பறிக்கும் அழகழகான அட்டைகள். ஐந்து அட்டைகள் அடங்கிய ஒரு பாக்கெட் ஐம்பது ரூபாய்.


கேரளாவிலிருந்து வந்திருந்த அந்த சேவை நிறுவனத்தினர் விற்பனை முறைகளை அறியார்கள் போலும். வாழ்த்து அட்டைகளில் எங்குமே அவர்கள் பெயரையோ தொடர்பு கொள்ள வேண்டிய முகவரியோ தரவில்லை.

பொருட்கள்: பாடம் செய்யப்பட்ட அரச இலை, ஆடைகளில் பயன் படுத்தப்படும் லேஸ், மரவள்ளிக் கிழங்கின் உலர்ந்த செதில்கள், வர்ண அட்டைகள் இத்யாதி. இதே போல அரச இலையில் வாழ்த்து அட்டைகளை நானே தயாரித்து அனுப்பிய பள்ளி நாட்கள் நினைவுக்கு வந்தது.

ஐந்து அட்டைகள் ஐம்பது ரூபாய்கள் மட்டுமே !!
ஏனெனில் என் குழந்தைகள் வாங்குகின்ற அச்சடித்த ஆர்சி அல்லது ஹால்மார்க் அட்டைகள் ஒவ்வொன்றும் விலை இருபத்தியைந்திலிருந்து
நாற்பது ரூபாய் ரேஞ்சுதான். பணத்தின் அருமை தெரியாதவர்கள் என்று அலுத்துக் கொள்கின்ற நேரத்தில்தான் அந்த அழகான
அட்டைகளை காணநேர்ந்தது. இங்கே ஒரு அட்டைக்கு பத்து ரூபாய் கொடுத்தாலும் அது எங்கோ இருக்கும் ஒரு ஏழைக் குடும்பத்தை
வாழவைக்க பயன்படுகிறது என்ற எண்ணமே ஆறுதல் தருவதாக இருந்தது.

இன்று வாழ்த்து அட்டைகளின் விற்பனை வருடத்திற்கு ரூ.200லிருந்து 250 கோடி வரை. இதில் 50 சதம் Archie கார்டுகள்.
மேலும் 20 சதம் ITC இன் Expressions, பன்னாட்டு Hallmark நிறுவனைகளின் விற்பனை பங்கு ஆகும்.
தில்லி நேஹ்ரு ப்ளேஸில் அழகாக வண்ணமலர் கொத்துகள் அச்சடிக்கப்பட்ட வாழ்த்து அட்டைகளை நடைப்பாதையில் கூறு கட்டி விற்றுக்
கொண்டிருப்பார்கள். பத்து ரூபாய்க்கு ஐந்து அட்டைகள் வாங்கலாம்.ஒரு அட்டையின் விலைஇரண்டு ரூபாய். அதை வைத்துப் பார்க்கும்
போது நாம் வாங்கும் ஆர்சி அல்லது ஹால்மார்க் அட்டைகளின் காசு பெரும் டிபார்மெண்ட் ஸ்டோர் அல்லது 'மால்'களின் குளிர்பதன
செலவுக்கும் அவர்களின் இதர ஆடம்பர காட்சியமைப்புக்கும் ஈடு செய்ய கொடுக்கப்படுவதேயன்றி வாழ்த்து அட்டையின் அடக்கவிலை
விற்பனை விலையில் கால்பங்கை விட குறைவானதாகவே இருக்கும். ஹூம்...அறியா பிள்ளைகளுக்கு இது புரிவதில்லை.

சரி கை வினைஞர்களின் கதைக்கு வருவோம்.
பத்து ரூபாய் கொடுக்கப்படும் ஒரு அட்டைக்கு அதை செய்தவர்களுக்கு இரண்டரை ரூபாய்களாவது தேறாதா? சராசரியாக ஒரு குடும்பம்
வாரத்திற்கு ஒரு நூறு அட்டைகள் தயாரித்தாலும் மாதம் சுமார் ரூ.1000 கூடுதல் வருமானம் வருமே! நம்முடைய அளவில் இது ஒரு பெரிய தொகையாகத் தெரியாமலிருக்கலாம். ஆனால் மகளிர் சுய உதவி குழுக்களுடன் பழகியவர்களுக்கு தெரியும் அவர்கள் எப்படி ஒவ்வொரு
ரூபாய்க்கும் சிக்கனமாக கணக்கு பார்க்கிறார்கள் என்று.

ஒரு சிறிய கணக்கு போட்டுப் பார்த்தேன். ரூ.250 கோடி ரூபாயில் 5 சதம் இந்த கை-வினைஞர்களின் அட்டைகளை விற்பனை செய்யமுடியும் என்றால் அவர்களின் விற்பனை மட்டும் 12.5 கோடியை எட்டும். அதில் கால்பங்கு அவர்களின் உழைப்புக்கான கூலி என்றால் சுமார் மூன்று கோடி ரூபாய்கள் ஏழைகளை அடையும் (நடு தரகர்களை விலக்க முடிந்தால் இன்னும் அதிகமாகவே அடையும் என் கருத்து). வருடத்திற்கு ஒரு குடும்பம் ரூ 12000 சம்பாதிக்க முடியுமானால் மூன்று கோடி ரூபாய்கள், 2500 குடும்பங்களுக்கு உபரி வருமானம் தர முடியும்.
தினம் தினம் வறுமையால் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளின் எண்ணிக்கை காணும்போது பொருளாதார விரிசல் மனதை உறுத்துகிறது. அந்த விரிசலை மூடுவதற்கு ஒரே வழி அவர்களுக்கு உள்ள, இறைவன் தந்த,செல்வமான நேரத்தையும் உழைப்பையும் பயன்படுத்திக் கொள்ளுதலும் அதற்கு ஏற்ற ஊதியம் தருதலுமே ஆகும். அவர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பை கொடுத்து சந்தை படுத்தி மேன்மேலும் அவர்களுக்கான வாய்ப்பை பெருக்க வேண்டும். இதற்கு தொண்டு நிறுவனங்கள் மட்டும் போதாது. ஏனெனில் அவர்கள் முயற்சியெல்லாம் ஒரு குறுகிய வட்டத்துள் தான் இருக்கும்.

இதை எப்படி நடைமுறை படுத்துவது என்பதை பற்றி எண்ணும் போது மேலே சொன்ன திரு பத்ரியின் கட்டுரை அதை ஓரளவு கோடிட்டு காட்டுகிறது. அதில் கூறியுள்ளவற்றை நடத்திக்காட்ட தேவை சமுதாய விழிப்புணர்ச்சியும் பொறுப்புணர்வுடன் கூடிய முனைப்பும்.

பெரிய தொழில் நிறுவனங்கள் கொள்கை ரீதியாக இத்தகைய கைவினைப் பொருட்களை பரவலாக தொடர்ந்து பயன் படுத்த முன்வரவேண்டும். CRY, SOS, Unicef போன்ற சேவை நிறுவனங்கள் 'வாழ்த்து அட்டை' விற்பனையை கையால் தயாரிக்கப்பட்ட அட்டைகளைக் கொண்டே மேற்கொள்வது என்று முடிவெடுத்தால் அவர்களின் சேவை இரண்டு விதத்தில் பயன்படும். முதலாவதாக கொள்முதல் செய்யும் போது ஏழை தொழிலாளர்களுக்கு வருவாய் அளிக்கிறது. இரண்டாவதாக விற்று வரும் இலாபம் அனாதை
குழந்தைகளின் நல்வாழ்வுக்குப் பயன்படுகிறது. ஒரு காலத்தில் தீப்பெட்டி தயாரிப்பை இப்படி குடிசைத் தொழிலுக்கென ஒதுக்கி வைத்திருந்தனர். தாராளமாக்கப்பட்ட பொருளாதாரம் வந்த பின்னால் அது போய் விட்டது என கருதுகிறேன்.

நேரடியாக தம்முடைய செல்வத்தை பகிர்ந்து கொள்ள யாருக்கும் மனம் வராது. ஆனால் உழைப்பை பகிர்ந்து கொள்வதன் மூலம் செல்வமும் பகிர்ந்தளிக்கப் படுகிறது. அதைத்தானே ராட்டை மூலம் காந்தியும் செய்து காண்பித்தார். லல்லு பிரசாத் ப்ளாஸ்டிக் கப்புகளுக்கு பதிலாக மண்குடுவைகளை சதாப்தி மற்றும் ராஜ்தானி ரயில்களில் பயன் படுத்த முன் வந்த போது அதை மனமார வரவேற்கத் தோன்றியதும் இந்த காரணத்தினால் தான்.

எல்லா நேரத்திலும்,இடத்திலும் தரமும் விலையும் போட்டி போட வேண்டும் என்ற அவசியம் இல்லை. வாழ்த்து அட்டைகளும் பிற கைவினைப் பொருட்களும் அந்த வகையை சேர்ந்த ஒரு சாதனம். அதை சிறப்பாக ஊக்குவிக்க முடிந்தால் பல ஆயிரம் குடும்பங்கள் வாழ்வு பெறும்.

1 comment:

கோமதி அரசு said...

எல்லா நேரத்திலும்,இடத்திலும் தரமும் விலையும் போட்டி போட வேண்டும் என்ற அவசியம் இல்லை. வாழ்த்து அட்டைகளும் பிற கைவினைப் பொருட்களும் அந்த வகையை சேர்ந்த ஒரு சாதனம். அதை சிறப்பாக ஊக்குவிக்க முடிந்தால் பல ஆயிரம் குடும்பங்கள் வாழ்வு பெறும்.//

அருமை.

விவசாயிகள் வானம் பொய்த்து போகும் போது, மற்றும் அறுவடை காலம் முடித்து தொழில் இல்லாத போது, இது போன்ற இயற்கை பொருட்களை வைத்து கைவினை பொருட்கள் செய்து பிழைக்கலாம், அவர்களுக்கு அரசு உதவிகள் செய்யலாம். அருமையான கட்டுரை.