Friday, August 14, 2009

சுதந்திர தின விருது: மூன்று பதிவர்களுக்கு

இன்று சுதந்திர தினம். பத்ம விருதுகள் பற்றி பத்திரிக்கைகளில் விவரங்கள் வந்திருக்கும். அவர்களுக்கெல்லாம் ஒரு பாராட்டு.

நம் வலையுலகம் பெரிது. அதில் நாம் புழங்கும் வட்டமோ சிறிது. அந்த சிறிய வட்டத்திற்குள்ளே நாமறிந்த ஒரு சிலருக்கு விருது அளித்து சந்தோஷப் படுவோமே !

கவிநயா அவர்கள் எனக்கு இந்த விருது கொடுத்தாங்க. அதை சித்திரமும் கைப்பழக்கம் வலைப்பூவில் பொருத்தி விட்டேன். நமக்கு கொடுத்ததை நாலு பேரோட பகிர்ந்து கொள்ளணும். ஆனா இது தீபாவளி ஸ்வீட் மாதிரி. நாம் கொடு்க்கத் தயாரானாலும் வாங்க ஆளு கெடையாது. ஏற்கனவே ஆணியில நெறைய தொங்கிக்கிட்டு இருக்கு. மாட்ட எடம் இல்லைன்னு சொல்றவங்க நெறைய பேர்.

என்ன பண்ண? எப்படியோ மூணு பேரை கண்டு பிடிச்சிட்டேன். அவர்கள் எல்லோருமே Interesting Bloggers தான். மிகவும் பயனுள்ள தகவல்களை சுவையாக தருபவர்கள். அவர்கள் மறுக்காமல் என் விண்ணப்பத்தை ஏற்று கௌரவிக்க வேணுமாறு கேட்டுக் கொள்கிறேன்.




முதலாவதாக வின்சென்ட் ஐயா அவர்கள். அவருடைய ”மண் மரம் மழை மனிதன்” பலரும் அறிந்ததே. அவருக்கோ அவரது அருமையான பணிக்கோ அறிமுகம் தேவையில்லை. மிக அற்புதமான பல நல்ல தகவல்களை மேலும் தாங்கி வரவேண்டும் என்பது என் விருப்பம்.

வடுவூர் குமார் அவர்களின் கட்டுமானத்துறை பதிவுகள் நான் தொடர்ந்து படித்து வரும் ஒரு வலைப்பூ. அவருடைய கட்டுமானத்துறை இடுகைகள் யாவும் short & sweet. தொழில் நுட்பம் பற்றிய விவரங்கள் மட்டுமல்லாது தன்னைக் கவர்ந்த பல்சுவை தகவல்களையும் அவர் எந்த அலட்டலும் இல்லாமல் தருவது மிகவும் பிடிக்கும். சந்தேகம் இல்லாமல் இவரும் ஒரு Interesting Blogger தான்.

இன்னொரு சுவையான வலைப்பூ தர்ஷிணி அவர்களின் ”இன்று முதல்” . இவருடைய செயல்முறை விளக்கங்களுடன் கூடிய வண்ண வண்ண கைவினை கலைப் படைப்புகள் யாவும் மிகவும் மனதை ஈர்ப்பவை. அவை ஒவ்வொன்றின் பின்னும் இருக்கும் உழைப்பும் உற்சாகமும் போற்றப்பட வேண்டிய ஒன்று. எனவே இந்த விருது அவருக்கும் சாலப் பொருந்தும்.

இன்னும் சிலருக்குக் கொடுக்க விருப்பந்தான். ஆனால் என் வட்டம் மிகச்சிறியது ஆதலின் சிறிது காலம் பொறுத்திருந்து கொடுக்கலாம் என்று நினைக்கிறேன். குடியரசு தினம் ?

விருது பெற்றவர்கள் இந்த விருதை தமக்கு பிடித்தவர்களுக்கு அணிவித்து மகிழலாம்.

அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள்

Tuesday, July 21, 2009

கங்குபாய் :கர்நாடகத்தின் பட்டம்மாள்

இசை உலக ரசிகர்களுக்கு கர்நாடக இசையில் சமீபத்தில் ஒரு பட்டம்மாள் இழந்த துயரம் நீங்கும் முன்பே ஹிந்துஸ்தானி இசை உலகமும் ஒரு பட்டம்மாளை இழந்து விட்டது. அவர் பெயர் கங்குபாய் ஹனகல்.

கர்நாடக மாநிலம் இரண்டு இசை உலகிலும் கொடி கட்டி பறக்கிறது. தெற்கில் மைசூர் சமஸ்தானம் கர்நாடக இசையை ஊட்டி வளர்க்கையில் வட கர்நாடகத்தினர் ஹிந்துஸ்தானி இசையைப் பற்றிக் கொண்டனர். பண்டிட் பீம்சேன் ஜோஷி, கங்குபாய் ஹனகல், ஷோபா முத்கல், ப்ரவீண் கோர்கண்டி (குழல்) போன்றோர் கர்நாடக மாநிலத்திற்கு ஹிந்துஸ்தானி துறையில் பெருமை சேர்ப்பவர்கள்.

இன்று கங்குபாய் ஹனகல் காலமானார். அவருக்கு வயது 97. ஐந்தாம் வகுப்பு வரையிலேயே பள்ளிக்குச் சென்ற இவருக்கு சரஸ்வதி கடாக்ஷம் பூரணமாக இருந்தது. இவரை கௌரவிக்கும் ஐம்பதிற்கும் மேற்பட்ட விருதுகளில் பாரத அரசாங்கத்தால் பத்ம பூஷண் மற்றும் பத்ம விபூஷண் விருதுகளும் அடங்கும். ஒன்பது பிரதம மந்திரிகள், ஐந்து ஜனாதிபதிகளால் கௌரவிக்கப்பட்ட ஒரே இசைக் கலைஞர் என்ற பெருமையும் உண்டு.

எளிய விவசாயக் குடியை சேர்ந்த இவர் இசைத்துறையில் ஆரம்பகாலங்களில் பல பெரும் எதிர்ப்புகளை சந்திக்க வேண்டியிருந்தது. இளம் தலைமுறையினரிடையே சங்கீதக் கலை நன்முறையில் தழைக்க வேண்டும் என்பதற்காக இவர் எடுத்துக் கொண்ட முயற்சிகள் பெரும் பாராட்டுதல்களைப் பெற்றிருக்கிறது.

இவரது மறைவு குறித்து கர்நாடக அரசு இரண்டு நாள் துக்கம் அறிவித்திருக்கிறது. எல்லா அரசு விழாக்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. (தமிழ் நாட்டில் நம் இசைக் கலைஞர்களுக்கு இவ்வித அஞ்சலி செலுத்தினார்களா என்பது தெரியவில்லை). இறுதி சடங்குகள் முழு அரசு மரியாதையுடன் நாளை (22-07-09) அன்று நடைபெறும்.

அவரது விருப்பப்படி அவரது கண்கள் தானம் செய்யப்பட்டன.

அவர் எவ்வளவு எளிமையானவர் என்பது இந்த படத்தைப்பார்த்தாலே விளங்கும். இதுதான் இந்த அஞ்சலிப் பதிவை எழுதுவதற்கும் தூண்டுகோ்லாயிற்று.

அவரது குரலைக் கேட்டறியாதவர்களுக்காக இதோ ஒரு இசை இணைப்பு.

Get this widget | Track details | eSnips Social DNA