Saturday, April 21, 2018

புதிய படைவீரர் திரள்கின்றனர் ! பராக் பராக்

   நமக்கு எல்லாம்  BSF பற்றித்  தெரிந்திருக்கும். குறைந்த பட்சம் கேள்விப் பட்டிருப்போம், Border Security Force.

 இப்போது நீங்கள் பொதுவாக கேள்விப் படாத BSF பற்றி  சொல்லப்போகிறேன்.  இது Black Soldier Fly.

முன்னது தேசம் காப்பது, பின்னது சுற்றுச் சூழல் காப்பது.

தமிழ் விக்கி பீடியா இதை ”படைவீரன் ஈக்கள்” என்று குறிப்பு தருகிறது.

இது குப்பை கழிவுகளில் ஈக்கள் பெருகாமல்-அதன் மூலம் நோய் பரவலை -தடுக்கிறது. இதனால் இதனை நன்மை பயக்கும் பூச்சி இனமாகக் கருதுகின்றனர்.   இதைப் பற்றி ஏன் எழுத ஆரம்பித்தேன் என்பதை சொல்கிறேன்.

சிறிது காலமாக, மாடித்தோட்டம் போட வேண்டும் என்ற ஆவல் உந்த பல யூ-ட்யூப் சலனப் படங்களைப் பார்த்து சிறிது சிறிதாக ஆர்வத்தை வளர்த்துக் கொண்டேன். அப்போது கண்டது தான் வீட்டில்  சமயலறைக் கழிவுகளைக் கொண்டு ‘கம்போஸ்ட்’ செய்வதன் மூலம் நாமே இயற்கை உரம் தயாரிக்கலாம் என்பது அரிச்சுவடி பாடமானது. “சமயலறையில் அதற்கு இடம் கிடையாது அதோட அழுகிப் போகிற நாத்தத்தையெல்லாம் இங்கே கொண்டு வரக்கூடாது” என்ற ஆணைக்குப் பணிந்து அதை காற்றோட்டமான கூடைகளில் சேமிக்கத் தொடங்கி மொட்டை மாடியின் ஒரு மூலையில் வைத்தேன்.


சுமார் ஒரு மாதத்தில் கூடை நிறைந்து அடுத்த கூடையை ஆரம்பித்தாயிற்று. பொதுவான பரிந்துரைகளின்படி பழைய கூடையை அவ்வப்போது கிளரி, தண்ணீர் தெளித்து கீழே அதன் கறுப்பான டிகாக்ஷனைப் பிடித்து பத்திரப் படுத்திக் கொண்டேன். இன்னமும் சீரியஸாக தோட்டம் எதுவும் ஆரம்பிக்கவில்லை. இருக்கின்ற இரண்டு மூன்று -துளசி, செம்பரத்தை, காசித்தும்பை -தொட்டிகளுக்கு அதை கரைத்து ஊற்றினேன். 

இப்போது தான் ஒரு விசித்திரமான காட்சி தெரிய ஆரம்பித்தது. திடீர் திடீரென்று  இரண்டு மூன்று நாட்களுக்கு ஒரு முறை எங்கு பார்த்தாலும் கருப்பு வர்ண புழுக்கள் ஊர்ந்து போவதை மாடி முழுவதும் அங்கங்கே காணமுடிந்தது.  முதலில் அருகிலிருக்கும் பூவரசம் மரங்களிலிருந்து வருவதாக நினைத்தேன்.

“ஆமா ! இத்தனை வருஷமா இல்லாதது இந்த வருஷந்தான் புதுசா வருதாக்கும் !! எல்லாம் உங்க கம்போஸ்ட்தான்” என்கிற விசாரணை கமிஷன் முடிவுக்குப் பின்னர் இதை பற்றிய விவரத்தை கூகிளாரிடம் கேட்டேன்.



”ஓ இதுவா ! இது Black Soldier Fly -ன் கூட்டுப்புழு நிலைக்கு முந்தய நிலை. ” என்று பதில் சொல்லியது. 

அதன் பின்னர் தீவிரமாகத்தேடியதில் தான் தெரிந்தது இது பெரிய அளவில் ஆராயப்பட்டுவரும் ஒரு ஈ வகை பூச்சி,  Hermetia illucens. அதை ஓரளவு பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவு

  இது ஈ வகையைச் சேர்ந்தாலும் ஈக்களைப் போல நோயைப் பரப்புவன அல்ல.  ஏனெனில் எதையும் உண்பதற்கு வாயமைப்பு கிடையாது. அவைகளின் ஆயுட்காலமே 5 முதல் 8 நாட்கள் மட்டுமே. இந்த காலத்தில் அவற்றின் ஒரே தொழில் இனப் பெருக்கம் மட்டுமே.

     கழிவு சார்ந்த ஈரப்பதம் மிக்க இடங்களில் இந்த ஈ  முட்டையிடும் ( 600 முதல் 800 வரை) . இவைகளுக்கு பறக்கும் நிலை வந்தவுடன் ஆகாரம் எதுவும் தேவைப்படாது. ஏனெனில் புழு நிலையிலேயே அவற்றை கொழுப்பாகவும் புரதமாகவும் மாற்றி சேமித்துக் கொள்ளும். முட்டைப் பொரிந்து புழுக்கள் வெளியே வந்ததும் பெருந்தீனி தின்பவைகளாகி விடுகின்றன.  இவைகளின் எடை 9000 மடங்கு 12 நாட்களில் கூடிவிடும் என்கின்றனர்.  

  ஆஸ்திரேலியாவில் ஒரு நிறுவனம்  இந்த புழு வளர்ப்பையே தொழில் ரீதியாகத் தொடங்கியுள்ளது. 432 மணி நேரத்தில் ஒரு கிராம் (45000) முட்டைகள் சுமார் 2.5 கிலோ புரதம்  கொடுக்கும் என்று  விஞ்ஞான ரீதியாக கண்டறிந்து தமது நிறுவனத்தின் பெயரையே ' Farm 432' என்று பெயரிட்டுள்ளனர்.  இதை விட வேகமாக கழிவுகளிலிருந்து புரதம் தயாரிக்க முடியுமா என்பது சந்தேகமே. 

  இதனால் இதைக் கொண்டு மீன் கழிவினால் கிடைக்கும் புரத ஆகாரத்திற்கு ( Fish Protein) மாற்றாக பயன்படுத்தமுடியுமா என்கிற ஆராய்ச்சி வேகமாக நடைபெற்று வருகிறது.

BSFL ( Black Soldier Fly Larve)  என்றழைக்கப்படும் இந்த புழுக்கள் வர்த்தக ரீதியாக எதிர்காலத்தில்  மண்புழுவைக் காட்டிலும் அதிகப் பயனைத் தரலாம். ஏனெனில் மண்புழுக்கள் ஓரளவு மக்கிய இலை, தழை, சாணக் கரைசல்களையே பெரிதும் விரும்பும். பழத் தோல் மற்றும் புளிப்பு உடைய உணவுப் பொருட்களின் அமிலத் தன்மையால் அவைகளை ஜீரணிக்க முடிவதில்லை. அவை அந்த நிலைகளில் உயிர் வாழ்வதும் அரிது. ஆனால் BSFL- படை வீரர்களைப் போலவே - எந்த விதக் கழிவையும் ஜீரணித்து மண்ணிற்கு ஏற்றதாக மாற்றி விடுகிறது. 

  நான் கம்போஸ்ட் செய்ய ஆரம்பித்த போது சில மண்புழுக்களை அதனுள் விட்டுப்பார்த்தேன். அடுத்த நாளே அவை வெளியே வந்து, வெயில் சூடு தாங்க முடியாமல் இறந்து போயின.  இருட்டை விழையும் புழுக்கள் எதற்காக வெளியே வந்தன என்று ஆச்சரியப்பட்டேன். ஒரு வேளை பாக்டீரியாக்களினால் அமிலத்தன்மை காரணமாக இருக்கலாம் என்று ஊகித்தேன்.  BSFL  பற்றி தெரிந்து கொண்ட பின்னர் அது உறுதியாயிற்று. 

இன்னொன்றும் புரிந்தது. நான் காற்றோட்டமாக இருக்கட்டும் என்று வலைக் கூடையை பயன்படுத்துவதும் BSFL பெருகுவதற்குக் காரணமாக இருக்கலாம். இதையே காற்றுப் புகாத குழிகளிலோ டிரம்களிலோ கம்போஸ்ட் செய்தால் இவை வளருமா என்பது கேள்விக்குரியது

புதுமையான தொழில்  ஏதேனும் தொடங்க வேண்டும் என்று ஆசைப்படுவோர்க்கு பட்டாளத்து வீரன் போல கண்டிப்பாக BSFL   தீவன தயாரிப்பில் பெரிதும்  உதவக்கூடும். 


Saturday, March 3, 2018

உலகுக்கு ஆன்மாவின் கடன்

      இன்று (மார்ச் 3, 2018)   நயீப் சுபேதார்  சஞ்சய் குமார் க்கு பிறந்த நாள். அவருடைய சிறப்பு ,பரமவீர் சக்ரா விருது படைத்து உயிர் வாழும் மூன்று வீரர்களில் அவரும் ஒருவர்.  அவர் புரிந்த வீரச் செயல் ‘கார்கில்’ போரில் மிகவும் அடிபட்டு ரத்தம் ஒழுகிய போதும் மூன்று எதிரிகளை ஓட ஓட விரட்டி அவர்களை கொன்று  தம்முடைய போர் நிலையை காப்பாற்றினார்.

உயிரைப் பயணம் வைத்து நாட்டுக்காகப் போராடும் வீரர்களுக்கு அளிக்கப்படும் மிகப் பெரிய விருது அது. அவருடைய வீரத்திற்கும் தியாகத்திற்கும் தலை வணங்குவோம்.




டிவிட்டரில் இப்படிப்பட்ட தியாகிகளின் Remember and Never Forget   @FlagsofHonour  என்ற முகவரியில் பெறலாம்.


இப்படி  தம் உயிரைப் பணயம் வைத்துப்  போரிடும் தியாகிகளின் மனநிலைப் பற்றி டி.வி.ஜி. என்ன சொல்கிறார் பார்ப்போம்.

ಹತ್ಯೆಯೋ ಹನ್ಯತೆಯೊ ವಿಜಯವೋ ಪರಿಭವವೊ ।
ಕ್ಷತ್ರಿಯಂ ಸ್ವಾರ್ಥಮಂ ಗಣಿಸುವನೆ ರಣದೊಳ್ ।।
ಕೃತ್ಯನಿರ್ಣಯ ಬಾಹ್ಯಲಾಭನಷ್ಟದಿನಲ್ಲ ।
ಆತ್ಮಋಣವದು ಜಗಕೆ ಮಂಕುತಿಮ್ಮ ।।

(ஹத்யெயோ ஹன்யத்யெயோ விஜயவோ பரிபவவோ
க்ஷத்ரியம் ஸ்வாதர்மம் கணிசுவனே ரணதொள்||
கிருத்ய நிர்ணய பாஹ்ய லாபனஷ்டதினல்ல|
ஆத்மருணவது ஜககே மன்குதிம்மா|| )

கொல்வதோ கொல்லப்படலோ, வெற்றியோ தோல்வியோ |
வீரனும் சுயநலத்தைக் கணிப்பதில்லை போரிலே ||
கர்ம நிர்ணயம் புற லாப நட்டத்திலில்லை |
ஆன்மாவின் கடனது உலகுக்கு -மக்குத் திம்மா||

தான் வாழும் சமூகத்திற்காக தன்னையே மறக்கிறான் வீரன். போராடும் நேரத்தில் லாப நஷ்ட கணக்கில்லை.  வெற்றி பெறுவோமோ இல்லையோ எனக்கிடப்பட்ட கட்டளையை செவ்வனே செய்ய வேண்டும் என்ற குறிக்கோள் ஒன்றே முன் நிற்கிறது

  ஆன்மா என்ற சொல்லை டி.வி. ஜி. ஏன் கையாண்டார் என்கிற கேள்வி மனதில் எழுந்தது.  ஆன்மீகத்தில் சொல்லப்படுவது,  மனது ஆன்மாவில் லயக்கும் பொழுது  தூல உடலை  மறக்கும் நிலையை எய்துகிறது.  அனைத்து உயிருள்ளும் ஒளிரும் ஆன்மா ஒன்றே என்பது அத்வைத சித்தாந்தம். அதனால் எல்லா ஆன்மாக்களும் ஏதோ ஒரு வகையில் ஒன்றுக்கொன்று  கடன்பட்டவையே.

அதனால்தானோ என்னவோ திருவள்ளுவரும்,  “அஞ்சாது போராடும் செயல் பேராற்றலே ஆயினும் பகைவர்களுக்கு ஏதேனும் இடையூறு நேர்ந்தால் அவருக்கு உதவிசெய்தல் அதைக்காட்டிலும் கூர்மையுடையது ”(773)  என்பதாக ஆன்ம ஒற்றுமையை வலியுறுத்துவது போல் சொல்லியிருக்கிறார்.

பேராண்மை என்பதறுகண், ஒன்றுற்றக்கால் 
ஊராண்மை மற்றதன் எஃகு

அட்ரினல் சுரப்பி அதிகமாக அட்ரினல் ஹார்மோனை சுரப்பதால்  அந்த கண நேர வீரத்தை உடல் தோற்றுவிக்கிறது என்பது மருத்துவ விஞ்ஞானிகளின் கூற்று.  ஆனால் மனதிற்கு உடல் மேல் உள்ள ஆதிக்கத்தையே இதுவும் குறிக்கிறது.

ஒரு சமுதாயக் கூட்டமாக மக்கள் வாழத் தொடங்கும் போதே ஒருவரை சார்ந்து மற்றவர் இருக்க வேண்டிய கட்டாயம் உருவாகி இந்த ‘ருண பந்தம்’ ஆரம்பிக்கிறது. அதையே உலகிற்கு நாம் படும் கடனாக கொள்ளலாம்.

போர் முனைக்கு செல்லாத குடிமக்கள்,  இந்தக் கடனை பிறருக்கு சேவை செய்வதன் மூலம் தீர்க்கலாம். பசி பிணி போக்குவது, கல்வி அளிப்பது என்று எவ்வளவோ வாய்ப்புகள் உண்டு. 

அது சரி,  பகல் கொள்ளையாக வங்கிகளை ஏமாற்றி கோடிக் கணக்கில் கடன் பெற்றவர் எப்படி தீர்க்கப் போகிறார்கள் என்று கேட்கிறீர்களா !

“தன் வினை தன்னைச் சுடும்” என்பதையும் சொல்லி வைத்திருக்கிறார்கள்.  நாம் நம் தியாகிகளைப் போற்றக் கற்றுக் கொடுத்தால் வரும் தலைமுறைகளாவது நல்ல முறையில் வர வாய்ப்புண்டு.