Sunday, April 1, 2012

Gmail Tap -எடுபடுமா ?

கைப்பேசி யுகம் வந்ததிலிருந்து கடிதம் எழுதுவது என்பதே மறந்து போய்விட்டது. பெரும்பாலனவர்களின் வசிக்கும் இடம் தெரியும் ஆனால் விலாசம் தெரியாது. விசேஷத்திற்கு நேராக சென்று அழைக்க முடியாமல் போகும் போது மட்டும் “.....கண்டிப்பா எல்லாரும் வந்துடுங்க. இன்விடேஷனை தபால்-ல போடறேன். கொஞ்சம் அட்ரஸ் சொல்றியா ?” என்று அன்பாகக் கேட்டு அழைப்பிதழை அனுப்பிய கையோடு விலாசத்தை மறந்து விடுவது வழக்கமாகி விட்டது. அதுதான் செல்போன் இருக்கே. எப்போது வேண்டுமானாலும் கேட்டுக் கொள்ளலாம் :))

பள்ளிக்கூடத்தில் படிக்கும் பொழுது தந்தி வழி செய்தி அனுப்பும் முறைக்கு அடிப்படை மோர்ஸ் கோடு ( Morse code)என்று படித்திருக்கிறோம். மின்னஞ்சல், FAX என்கிற முறைகள் வந்ததும் இந்த தந்தி அனுப்பும் தொழிலும் படுத்து விட்டது. இந்திய தபால்துறை பெரும்பாலான இடங்களில் தந்தி அலுவலகங்களுக்கு மூடுவிழா நடத்தி வருகின்றனர். கப்பல் வழி வணிகத்திற்கும் உலகப்போரின் போதும் உயிர் நாடியாக விளங்கிய மோர்ஸ்-குறிமுறை இனி வரலாற்றில் படிக்க வேண்டிய ஒன்று என்று நினைத்தால் அது தவறாகும்.

கூகுள் இப்போது அதற்கு மீண்டும் உயிர் கொடுக்க முனைந்திருக்கிறது. அவர்களது நோக்கம், கைப்பேசியில் இருக்கும் ஆங்கில எழுத்துகளுக்கான பொத்தான்களைத் தேடித் தேடி இயக்குவதற்கு பதிலாக dot & dash முறையில் இரண்டு பொத்தான்களின் துணையோடு space bar யும் பயன்படுத்தி வேகமாக தட்டச்சு செய்யமுடியும் என்கிறது.



இதற்கான மென்பொருளை ஆண்ட்ராய்ட் பயன்படுத்தும் கைபேசிகளில் தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம் என்றும் கூறுகிறது கூகிள்.
ஆனால் அந்த மோர்ஸ்-குறிமுறை யைப் பார்க்கும் போது உண்மையிலேயே அவர்கள் குறிப்பிடுவது போல் சுலபமாக இருக்க முடியுமா என்கிற சந்தேகமே அதிகமாகிறது. படத்தைப் பார்த்தாலே மலைக்க வைக்கிறது. DAD என்கிற மூன்றெழுத்துக்கு எட்டு முறை பொத்தானை அழுத்த வேண்டும் !! பின் வேகம் எப்படிக் கூடும் ?

எலக்டரானிக் டிஜிடல் கடியாரங்கள் வந்த புதிதில் நகரும் முட்கடியாரங்கள் செத்து ஒழிந்து விடும் என்று நம்பியவர்களில் நானும் ஒருவன். ஆனால் அந்த முட்கள் இல்லாமல் காலமே நகராது என்று நம்பும் அளவுக்கு அவை இன்னும் நிலைத்து நிற்கின்றன. சாவி கொடுக்கும் தொந்திரவு,பாட்டரி இயக்கத்தால் ஒழிக்கப்பட்டதலோ என்னவோ பொதுவாக இக்காலத்து முட்கடியாரங்கள் மிகவும் தரமானவைகளாக இருப்பதாலும், வெகுநாட்கள் பழுது இல்லாமல் செயல்படுவதாலும் இருக்கலாம். ஆனால் எளிமையாக எண்களைப் பார்த்தே நேரம் அறிந்து கொள்ள வசதி வந்தும் ஏன் முட்கடியாரங்களை துறக்க மனிதர்களுக்கு மனம் வரவில்லை ?

புதிதாக ஒன்றைக் கற்றுக் கொண்டு செயல்படுத்த வேண்டுமென்றால் கற்றுக் கொள்வதற்கான நேரம், எளிமை இரண்டும் மிகவும் பொருந்தி வரவேண்டும். மோர்ஸ்-குறிமுறை இந்த இரண்டு விஷயத்திலும் நம்பிக்கை அளிப்பதாக இல்லை.
எனவே எத்தனை நுகர்வோர்கள் மோர்ஸ் முறைக்கு மாறுவார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Saturday, December 17, 2011

பூர்வ ஜென்ம வாசனை பீடிக்குமா ?

நம் அன்றாட வாழ்க்கையில் சில வேண்டாத விஷயங்களை விட்டு ஒதுக்குவோம் என்றாலும் நம் சந்தர்பங்கள் அதை விட்டு வெளியேற முடியாத வகையில் பெரும்பாலும் நம்மைப் பிணைத்து வைக்கிறது. புகைப் பிடிக்கும் பழக்கம் உடைய ஒருவர் “ஏதோ வெளயாட்டா ஆரம்பிச்சேன். கொஞ்சம் கொஞ்சமா ஒரு நாளக்கு மூணு பாக்கெட் வரைக்கும் போயிடுச்சு. இப்போ கண்ட்ரோல் பண்ணலாம்னு நெனச்சு சும்மா இருந்தாலும் எதிரிலே இருக்கிறவன் தனக்கு ஒண்ணை வாயில் வைத்துக் கொண்டு பெட்டியை நீட்டறான். அவனுக்கு கம்பெனி கொடுக்கலாம்-னு நானும் ஒண்ணை பத்த வைக்கிறேன். எப்படி விடறது ?” என்று தம் இயலாமையை சொல்லிக் கொள்வார்.

எந்த ஒரு நிகழ்ச்சிக்குப் பின்னும் ஒரு காரணம் இருந்திருக்க வேண்டும் என்பது வினை விதி. இது மிகவும் குழப்பமானதும் தீர்க்க முடியாததுமாகத் தோன்றுகிறது. ஆங்கிலத்தில் chicken and egg syndrome என்று சொல்லப்படும் முட்டை முதலா கோழி முதலா என்ற கேள்வி போன்றது இது.

இதைப் பற்றிய DVG யின் சிந்தனையை அவரது மக்குத்திம்மன் பாடல் வழியாகக் காண்போம்.

வீசாமல், சாம்பல் மூடிய பொறி எரியுமா?
கைகள் சேராமல் கைத்தட்டல் ஆகிடுமா ?
(பூர்வ) வாசனைகள் தாயாம் ஆசைக்கு, தந்தை சந்தர்ப்பமாம்
குற்றம் உள்ளேயோ வெளியேயோ- மன்குதிம்மா


புகைபிடிக்கும் அன்பர் இதில்குற்றத்தை வெளி சந்தர்ப்பத்திற்கு காரணமாக்குகிறார். அடிப்படையில் தமக்கு உள்ள பலவீனத்தை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார். ஆனால் இரண்டிலும் சரிபாதி உண்மையுள்ளது. எனவேதான் தாய்-தந்தை மற்றும் இரண்டு கைகள் போன்ற உதாரணங்களுடன் DVG இதை அழகாக விளக்கியுள்ளார்.

என் சிறிய அறிவுக்கு எட்டியதில் நாம் செய்ய வேண்டியது என்னவென்றால், வெளியிலிருந்து சந்தர்ப்பம் ஒரு குறிப்பிட்ட ஆசையைக் குறித்து வரும் போது அதன் நல்லது கெட்டதை உள்ளிருந்து யோசித்து விவேகத்துடன் செயல்பட்டால் அல்லாதனவற்றை விலக்கலாம்.

இதற்கு நல்ல உதாரணம் மணிமேகலை. உதயகுமாரனிடத்து தனக்கு எழுந்த விருப்பை ஒதுக்கி தள்ள முடிவு செய்கிறாள்.

புதுவோன் பின்றைப் போனது என் நெஞ்சம்
இதுவோ அன்னாய் காமத்து இயற்கை
இதுவே ஆயின் கெடுகதன் திறம்...
(மணிமேகலா தெய்வம் தோன்றிய காதை 89-91)

பிந்தைய பிறவியில் இராகுவன் என்ற பெயரில் தன் கணவனாக இருந்தவனே இப்பிறவியில் உதயகுமாரனாக பிறந்துள்ளான் என்பததையும் அதனால் தன் மனம் தடுமாறுவதையும் மணிமேகலா தெய்வத்தின் மூலம் அறிந்து கொள்கிறாள்.

மணிமேகலையின் பூர்வ சென்ம வாசனையும் அடுத்த சென்ம சந்தர்ப்பமும் எப்படி இணைந்து வலை விரித்தன என்பது DVG -ன் வரிகளுக்கு நல்ல உதாரணம். சத்கருமங்களுக்கான சந்தர்பங்களானால் நெருப்பை ஊதி பெரிதாக்க வேண்டும். அல்லாது போனால் சந்தர்ப்பத்தை ஒதுக்கி தள்ளி மணிமேகலை போல் விவேகமாக செயல்பட வேண்டும்.

கவிதை வடிவில் மொழியாக்க முயற்சி
நீறான் கவிந்த பொறியும் வீசாமலே எரியுமோ
சேராமலே கைகளும் ஒலிதனை எழுப்புமோ
வாசனைகளே தாயாம் சந்தர்ப்பமே பிதாவாம்
தோசம் உள்ளோ வெளியோ- மக்குத் திம்மா

(நீறு =சாம்பல் ; வாசனை = பூர்வ ஜென்ம தொடர்ச்சி ; தோசம் =குற்றம்)

மக்குத்திம்மன் கவிதைகள் # 291