Thursday, December 14, 2023

ஹைடிரோபானிக்ஸ்- என் பரிசோதனைகள்-2

 இதன் முதல் பகுதியில்  நீரியல் வளர்ப்பு எனப்படும் ஹைட்ரோபானிக்ஸ் முறையில் தாவரங்களை வளர்ப்பதன் மேன்மைகளைச் சொல்லி அதில் என் ஆரம்ப அனுபவங்களை பகிர்ந்து கொண்டேன்.  

அதைப்பற்றி தெரிந்து கொள்ள.....  

இதை எழுதி ஐந்து ஆண்டுகள் ஓடிவிட்டன. நான் என் பரிசோதனைகளை சிறிய அளவில் நடத்திக் கொண்டிருந்தாலும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு எதையும் சாதிக்கவில்லை.  என் வீட்டு மாடியில் மழைநீர் சேகரிப்பு, Green House 130 சதுர அடி என சில முஸ்தீபுகளை செய்து கொண்டு தீவிரமான முயற்சியில் இறங்குவதற்கு இவ்வளவு காலம் பிடித்தது. 

க்ரீன் ஹவுஸ் ஏன் தேவைபடுகிறது என்றால்  திறந்த வெளியில் அதிக காற்று மழை அடிக்கடி பாதிப்பு ஏற்படுத்துவதால் நமக்கு சரியான முடிவுக்கு வரமுடியாமலே பரிசோதனை கெட்டுப் போய் விடுகிறது. 

குறைந்த இடத்தில் அதிகப்பயிர் என்னும் படியான தொழில்நுட்பத்தை க்ரீன்ஹவுஸ்-னுள் புகுத்திப் பார்க்க- Tower Cultivation எனப்படும்-  நெட்டையான குழாய்களில் வளர்க்கும்  முறையை இணையத்தின் மூலம் வாங்கி என்னுடைய புதிய சோதனைகளை இந்த வருடம் மே மாதக் கடைசியில் ஆரம்பித்தேன்.

இது நம் கோவில்களில் உள்ள கொடிமரத்தை நினைவுபடுத்துவதால்  கொடிமரக்குழாய் வளர்ப்பு என்றே பெயரிடுவோம்.

கொடிமரக் குழாயின் அடிப்பாகத்தில் உள்ள சிறிய நீர் இறைப்பான் ( submersible pump)  நீரை மேலிருந்து -உட்புறத்தில்-வடிய செய்வதால் நீரின் சுழற்சியில் செடிகளுக்கு தேவையான நீர் (அதன் மூலம் ஊட்டச்சத்து) மற்றும் பிராணவாயு தொடர்ந்து கிடைக்கிறது. ஐந்தரை அடி உயரமுள்ள குழாய்களில் 32 செடிகளுக்கு இடம் அளிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டிருக்கிறது.  இதன் செயல்முறையை பல டியூப் சானல்களில் காணலாம்.

இதிலுள்ள பம்பு தொடர்ந்து வேலை செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை. செடிகளின் வேர்களில் எப்போதும் ஈரம் இருந்து கொண்டே இருக்க வேண்டும். அதனால் நான்  'இரண்டு நிமிடம் இறைப்பு' 'பத்து நிமிடம் ஓய்வு' என்ற சுழற்சி முறையை ஒரு Timer மூலம் நடைப்படுத்தினேன்.

மிக மிக திருப்திகரமாக வேலை செய்து வருகிறது. 18 வாட்ஸ் பம்பு ஒரு நாள் முழுதும் இந்த சுழற்சியில் ஓடினால் ஆகும் மின் அளவு 72 Wh. அதாவது  இரண்டு வாரங்களுக்கு ஒரு யூனிட் மின்சாரம் செலவாகும்.

மேலும் க்ரீன் ஹவுஸ் உள்ளேயே இருப்பதால் பூச்சித் தாக்குதல் அறவே இருக்கவில்லை. ஆவியாகும் தண்ணீரை இரண்டு மூன்று நாட்களுக்கு ஒருமுறை அளவு பார்த்து நிரப்பவேண்டும்.  இது ஒரு நாளைக்கு  2 லிட்டருக்கும் குறைவாகவே இருந்தது. மாதம் ஒன்றிற்கு 70 முதல் 80 லிட்டர் அளவிலேயே தேவைப்பட்டது. இதற்கு நான் சேமித்து வைத்திருக்கும் மழைநீரையே முழுவதுமாக பயன்படுத்தினேன்.

தாவரங்களுக்குத் தேவையான ஊட்டச்சத்து கரைசல்  ஒரு லிட்டருக்கு 300 லிருந்து 400 மிகி மட்டுமே. 15 லிட்டர் கரைசலுக்கு தேவைப்படும்   NPK கூட்டு உரத்தின் அளவு 6.00 முதல் 10 கிராம் மட்டுமே.  இதில் வீணாய் போகிறது என்ற பேச்சுக்கே இடமில்லை. ஒரு மாதத்திற்கு 100 லிட்டர் என்று வைத்துக் கொண்டாலும் 40 கிராம் உரத்திற்கான விலை ரூபாய் ஐந்திற்கும் குறைவே.  இப்படியாக எப்படிப்  பார்த்தாலும் சிக்கனமான வளர்ப்பின் பயனை உணர முடிந்தது.  

ஒரே சமயத்தில் எட்டு விதமான  செடிகளை  கொடிமரக் குழாயில் வளர்க்க ஆரம்பித்தேன். அதில் கீரை வகைகள் இரண்டு மூன்று வாரங்களுக்குள்ளேயே வளர்ந்து அறுவடைக்கு வந்துவிட்டன.  அதற்குள் தக்காளி  சாமந்தி போன்றவை கிளை பிரிந்து இலைகள் பெரியனவாகி வேறு செடிகளை வளரவிடாமல் தடுத்து விட்டன. கீழே உள்ள தொகுப்பில் அவற்றின் வளர்ச்சியைக் காணலாம். 


(படத்தை சொடுக்கி பெரிதாக்கிப் பார்க்கலாம்)


     கடந்த ஆறு மாத காலத்தில் என் அனுபவம்  உற்சாகமாகவும் பயனுள்ளதாகவும் இருந்தது.  பூச்செடிகளான காசித்தும்பை, துலுக்க சாமந்தி,  பூஜைக்கான துளசி, தும்பை,  கீரைவகைகளான புதினா, பாலக்,  செர்ரி டொமேடொ எனப்படும் சிறிய வகை தக்காளி ( இன்னமும் காய்த்துக் கொண்டிருக்கிறது!) என்பதாக பலவகை செடிகளின் மிக ஆரோக்கியமான வளர்ச்சியை காணமுடிந்தது. மேலும் வேர்தாக்கலால் வரக்கூடிய  நோய்களும் இருக்கவில்லை.  

அடிக்கடி வெளியூர்களுக்கு போவதானாலும் "தண்ணீர் விட வேண்டுமே... செடிகள் காய்ந்து விடுமே" என்ற கவலையில்லை. 

இதில் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சனை என்னவென்றால் குழாயினுள் எல்லாச் செடிகளின் வேர்களும் மிக அடர்த்தியாக வளர்ந்து பின்னிப்பிணைந்து கொள்கின்றன. இதனால் சில செடிகளை அதன் காலம் முடிந்ததும் எடுத்துவிடலாம் என்றால் சிக்கல் இன்றி எடுக்க முடிவதில்லை.

அடுத்ததாக தொட்டி  வளர்ப்பில் குத்தாக வளரும் செடிகள் இந்த கொடிமரக்குழாயில் கோணலாக வெளிவந்து பின்னர் நிமிரத்தொடங்குகின்றன.  இதனால் பெரிய இலையுள்ள பாலக் போன்ற செடிகள் சிறிய இலை கொண்ட  கொத்துமல்லி புதினா இவற்றின் வளர்ச்சியை பாதிக்கின்றன.  கொடிமரக் குழாயைப் பயன்படுத்தும்  வகைகளை நிதானமாக முறைப்படுத்தி  குறுகிய காலத்தில் அதிகப் பயனடைவது எப்படி என்று கண்டறிவதே அடுத்த கட்ட பயணம்.
குறிப்பாக வேறு காய்கறி செடிகளை எப்படி பயிரிடலாம், அவை எல்லாவற்றின் ஊட்டச்சத்துத் தேவைகளும் ஒரே மாதிரி இருக்குமா  எந்த செடிகளோடு எவை எவை ஒத்துப்போகும்  எனப்பலவகையான கேள்விகள் எழுகின்றன.

அடுத்த பொங்கலுக்குள் (2024) மேற்கொண்டு என்ன செய்வது என்று திட்டம் போட்டு செயல் படுத்த வேண்டும். ஏனெனில் பல வகை செடிகளின் பலனளிக்கும் காலமே 60 அல்லது 90 நாட்களுக்குப் பிறகு தான் தொடங்குகிறது. அதுவரை புசு புசு என்று அடர்த்தியாக வளரும் இலைகளை பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். அவைகளை கத்தரிக்கலாமா வேண்டாமா என்ற கவலை என்போன்ற அனுபவமில்லாதவர்களுக்கு ஏற்படும்.

எல்லாமே ஒரு நல்ல படிப்பினைதான். 

Wednesday, December 6, 2023

காணறியா இறைவன் சூது

 அந்த காலத்தில் 16 m.m.   திரையில் எங்கள் காலனியில் கறுப்பு வெள்ளை திரைப்படங்களை  திறந்த வெளியில் திரையிடும் போது பல வேடிக்கைகள் நடக்கும். அடிக்கடி ரீல் அறுந்து போகும்.  ஏற்கனவே படம் பார்த்திருப்பவர்கள் அதற்கான உரையாடல்களை கூடவே சொல்லிக் கொண்டு போவார்கள். படத்தை விட பார்க்க வந்திருப்பவர்களின் வைபோகமே அதிகம்.

 ஒரு முறை நான்கு வயது சிறுவன் சுற்றியிருந்த இருளும் திரையில் படமும்  புரியாததாலோ என்னமோ திரும்பி நின்று கொண்டு "அம்மா லைட்'  'அம்மா லைட்" ப்ரொஜக்டரைக் காட்டிக் கொண்டு சத்தம் போட்டு கொண்டிருந்தான்.   (அந்த வெளிச்சம் பரவாமல் ஏன் யாவரும் இருட்டில் அமர்ந்திருக்கிறார்கள் என்ற கேள்வியே அவனுள்ளத்தில்  இருந்திருக்குமோ ?) சிறிய துவாரத்தின் மூலம் வெளியான அவ்வெளிச்சம் தான் திரையில் காணும் காட்சிகளுக்கு காரணம் என்பது அவனுக்கு புரியவில்லை.  "ஆமா ஆமா லைட் தான் படுத்து தூங்கு" என்று சிரமப்பட்டு அவனை தூங்க வைக்க முயன்று கொண்டிருந்தாள் அவனுடைய தாயார். 

"Go to the source "  என்பது ஆன்மவிசாரம் செய்பவர்களுக்கு சொல்லப்படும் அறிவுரை.  ஆன்மாவின் ஒளிதான் தேகம் மற்றும் உலகத்தின் இயக்கத்திற்கே அடிப்படை. அதை கவனிக்க ஆரம்பித்தால்  உலகம் என்ற திரை நம் முதுகு பக்கமாகி நம்மை பாதிக்காது. இதையே அந்தர்முகம் என்று தியானவகுப்பில் சொல்கின்றனர்.  

அந்த கவனிப்பு நீளும் அளவு மனம் கொந்தளிப்புகள் அடங்கி குளிர்ந்து இருக்கும்.  இதன் அவசியத்தை டி.வி.ஜி. அவர்கள் மக்குத் திம்மன் கவிதை ஒன்றில் அழகாக உரைக்கிறார்.

இனியென்ன மற்றென்ன, கதி ஏது எனப் பதறினும்  

விதியதன் எழுது கோலும் உளதோ உன் கையில் ?  

கண்களுக்கு எட்டாது அவன் நடத்தும் சூது

குளிர்ந்திருப்பாய் உன் ஆன்மாவிலே- மன்கு திம்மா.

திரையில் ஓடும் காட்சிகளோடு மனம் ஒன்றியிருக்கும் போது கதையின் போக்கு திகிலூட்டக்கூடும். ஆனால் அதிலிருந்து விலகிடும் போது மனதை திரைக்கதை பாதிப்பதில்லை.  

உலக விசாரங்களில் நம் மனதின்படி முடிவுகள் வராமல் போய்விட்டால் அதை சுலபமாக மனம் ஏற்றுக் கொள்ளாமல் தவிப்பை அதிகமாக்கிக் கொள்கிறது.  இறைவனின் இச்சைப்படிதான்  இந்த உலகில் எல்லாம் நடக்கிறது என்ற போக்கை கடைபிடித்தால் மனமும் போராட்டங்கள் இல்லாமல் குளிந்திருக்கும். அதற்கான வழிதான் ஆன்மாவில் கவனம் செலுத்துவது என்கிறார் திரு குண்டப்பா அவர்கள்.

இதே உண்மையை  ஜென் கருத்தும் எவ்வளவு பொருத்தமாக எடுத்து சொல்கிறது !!   'நாம் முடிவு செய்பவர் அல்லர்' என்பதை புரிந்து கொண்டால்

"....your struggles with life will end " 

பாடலின் மூலமும்,  தமிழில் முயற்சியும் :

கதியிதுவோ மற்றெதுவோ எனப் பதைப்பதும் ஏன்?
விதியதன் கோலும்  உன் கையில் உளதோ?
பதியவன் காணறியா சூதின் வழி நடக்கும் உலகு 
மதியும் குளிரட்டும் ஆத்மனிலே-மக்குத் திம்மா  (# 360)

(பதி =இறைவன்; காணறியா சூது = கற்பனைக்கெட்டாத வழி முறை )

பின் குறிப்பு :

 ( தபாலில் வந்த ஒரு உறை மேல் கிறுக்கிய  இந்த படத்திற்கு டிஜிடல் வர்ணம் பூசி, ஜென் ஞானத்துடன்  வாட்ஸப்பில் சிலருடன் பகிர்ந்து கொண்டேன். சில நாட்களுக்குப் பிறகு அது எனக்கே வேறொருவர் மூலமாக வந்தது ... இப்போது டிவிஜி கவிதைக்கு துணையாகிறது. )